எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

250909un-council.jpgஉலக மட்டத்தில் அணு ஆயுதப் பரவலை தடுக்கவும், ஆயுதக் களைவின் மூலம் அணுசக்தி சார்ந்த தீவிரவாதத்தை குறைக்கும் முகமான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு ஆயுதமற்ற ஒரு உலகை உருவாக்க அனைவரிடமும் இருக்கும் ஒரு அர்ப்பணிப்பு இந்தத் தீர்மானத்தின் மூலம் தெரிகிறது என்று இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் ஒரு பங்கிருப்பதை சுட்டிக்காட்டிய ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், தம் நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை மூன்றில் இரண்டு பங்குக்கும் கூடுதலாகக் குறைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரானின் அணுத்திட்டம் தொடர்பாக அதன் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. என்றாலும் இரான் மீது கூடுதலாக எந்த தடையையும் விதிப்பதற்கு சீனா தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்துள்ளது.

யாழ். குருநகர் – கொழும்புத்துறை வீதி போக்குவரத்துக்கு திறப்பு

epdp.jpgயாழ்.  குருநகர் – கொழும்புத்துறை கடற்கரை வீதி மக்களின் போக்குவரத்துக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் திறந்து வைத்தார். இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் படைத் தரப்பினரதும், அரச உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்த வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், மக்களின் சார்பில் ஜனாதிபதிக்கும் படைத் தரப்பினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கடற்றொழிலாளர்களுக்குத் தொழிலில் ஈடுபடுவதற்கு 24 மணி நேர அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் இவ்வாறானதொரு சூழ் நிலையை, ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் எமது மக்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 30 வருடங்களாக எங்களை நாங்களே அழித்துக்கொண்ட நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் எனில், நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசியுரை வழங்கிய வணக்கத்திற்குரிய ஜெரோ செல்வநாயகம் இன்று வீதியைத் திறந்து வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மக்களின் வாழ்வையும் மலர வைப்பார் என்பதால், அமைச்சருக்குத் தனது நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் யாழ். கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், மாநகர முதல்வர், உதவி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திறைசேரி பொறுப்பை ஜயசுந்தர மீள ஏற்க முடியுமென நீதிமன்று தீர்ப்பு

999.jpgஉச்சநீதி மன்றத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் திறைசேரி செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர சமர்ப்பித்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேநேரம், கலாநிதி ஜயசுந்தர திறை சேரி செயலாளர் பொறுப்பை மீண்டும் ஏற்க முடியுமெனவும் உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு வழங்கியது.

இவரது விண்ணப்பம் தொடர்பாக ஆராய்ந்த ஏழு பேர் கொண்ட விசேட நீதியரசர்கள் குழுமத்தில் ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்திற்கு சார்பாகவும் ஒருவர் மாறுபட்ட கருத்தையும் வழங்கியிருந்தார்.

ஆறுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உட்பட ஆறு நீதியரசர்கள் விண்ணப்பத்தி ற்கு சார்பாகத் தீர்ப்பு வழங்கினர். நீதியரசர் சிரானி திலகவர்த்தன மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். முழுமையான தீர்ப்பு வழங் குவதை நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, நீதியர சர்களான சிராணி பண்டாரநாயக்க, சிராணி திலகவர்தன, சலீம் மர்சூஃப், ஜகத் பாலபட்டபெந்தி, கே. சிறிபவன், பி. ஏ. ரத்நாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.

பீ. பி. ஜயசுந்தரவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார். நீதிமன்றத்தினால் வழங் கப்பட்ட தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு பிரதிவாதியான பீ. பி. ஜயசுந்தர ஒருபோதும் கோரவில்லை. நீதிமன்றத்திற்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியை வாபஸ் பெறுமாறே மனுதாரர் கோருகிறாரென பாயிஸ் முஸ்தபா நீதிமன்றுக்குத் தெளிவுபடுத்தினார்.

மனுதாரரான ஜயசுந்தர சுயவிருப்பத்தின் பேரில் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்கவில்லை. மாறாக முன்னாள் பிரதம நீதியரசரின் உத்தரவின் பேரிலேயே அதனை அவர் சமர்ப்பித்தாரென பாயிஸ் முஸ்தபா எடுத்துக் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

லங்கா மரைன் சேர்விஸ் லிமிட்டெட் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தியது தொடர்பான தீர்ப்பின் போது இனி மேல் எந்தவித அரச பதவிகளும் வகிப்பதில்லையென சத்தியக் கடதாசியை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் நீதியரசர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியின் நிபந்தனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கலாநிதி ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்திற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மத்திய அரசின் கீழ் மொனராகலை வைத்தியசாலை

nimalsiripaladasilva.jpgமொனரா கலை மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதாரா மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.

இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழக் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோமானின் இறுதி வாரிசு மரணம்

250909_osman.jpg1920 களில் துருக்கிய குடியரசு உருவாகியிருக்காவிட்டால் அங்கே ஒட்டோமான் பேரரசின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்திருக்கக்கூடிய நபர், தற்போது தனது தொண்ணூற்று ஏழாவது வயதில் உயிரிழந்துள்ளார்.

துருக்கியிலே கடைசி ஒட்டோமான் என்று அறியப்படுகின்ற எர்துகுருல் உஸ்மான், ஒட்டோமான் பேரரச குடும்பத்தில் பிறந்து, போஸ்போரஸ்ரில் உள்ள சுல்தான் அரண்மனையில் சிறு பிள்ளையாக விளையாடியிருந்தவர்.

ஆனால் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ஒரு சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே கழித்திருந்தார். நவீன துருக்கியின் தோற்றுநரான கெமால் அடாதுருக்கினால் ஒட்டோமான் ராஜ குடும்பம் நாட்டை விட்டு துரத்தப்பட்டிருந்தது.  அப்போது நாட்டை விட்டு வெளியேறியிருந்த உஸ்மான் 1990 களில் தனது தாத்தாவின் முந்தைய அரண்மனையை பார்க்க வந்த ஒரு சுற்றுலாக் குழுவோடு சேர்ந்துதான் மீண்டும் துருக்கிக்குள் நுழைந்திருந்தார்.

தோட்டங்கள் பற்றித் தெரிந்தவருக்கு தொழிற்சாலைகள் பற்றித் தெரியாது – லக்ஷ்மன் கிரியெல்லைக்கு அமைச்சர் யாப்பா பதிலடி

anura_priyadarshana_yapa.jpgநாட்டில் 500 ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லை தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளைத் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்  ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் உரிய முறையில் பதிவுசெய்யப்பட்ட 370 ஆடை தயாரிக்கும்  தொழிற்சாலைகளே உள்ளன. இவ்வாறான நிலையில் 500 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் எவ்வாறு கூறலாம். அவருக்கு தொழிற்சாலைகள் பற்றிய எவ்வித தகவலும் தெரியாது என்பது இதன்மூலம் புலனாகிறது.

தொழிற்சாலைகள் மூடப்படாமலும் இல்லை ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அதற்குப் பதிலாக வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் அதில் கடமையாற்றிவர்களுக்கு வேறு தெழிற்சாலைகளில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை கவனிக்க வேண்டியதில்லை. தொழில் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையையே கவனிக்க வேண்டும். அந்தவகையில் தொழில் கிடைக்கப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது. தோட்டங்கள் பற்றித் தெரிந்துள்ளவர்களுக்கு தொழிற்சாலைகள் பற்றி தெரிய வாய்பபில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மத்திய மாகாண விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி

dimujayarathna2222.jpgமத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள தொழுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹாலியத்த,  நாரங்விட்ட மற்றும் முல்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சமர்ப்பித்திருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றும் – ராவிட்

000cricket.jpgதரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.

ஐ.தே.கவின் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்

26parliament.jpgஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக திருத்தச் சட்டமூலம் திருத்தங் கள் எதுவுமின்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறை வேறியது.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகச் சட்டமூலத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் கூடியபோது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமூலத்தை சமர்ப்பிக்க முற்பட்டார். இதனைத் தடுப்பதற்காக ஐ. தே. க வினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கொன்று இருப்பதால் இதனை சமர்ப்பிக்க முடியாதென சபையில் தெரிவித்தனர். இதனால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சுமார் ஒருமணி நேரம் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. சட்டமூலத்தை சமர்ப்பிக்க இடமளிக்காதிருப்பதற்காக ஐ.தே. க எடுத்த முயற்சிகள் யாவும் வீணானதுடன் அமைச்சர் கெஹலிய திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போதும் ஐ.தே.க எம்பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, ரங்கே பண்டார ஆகியோர் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இத்திருத்தங்களை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள முடியாதென சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் திருத்தங்கள் எதுவுமின்றி ஐ.தே.க வினரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருத்தச் சட்டமூலம் சபையில் நிறைவேறியது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுப்பதற்காக ஆரம்பத்திலும் இறுதியிலும் ஐ.தே.கவினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிராகரிக் கப்பட்டுவிட்டன.

விதைகள் ஆராய்ச்சி ஆய்வு கூடம் அமைக்க உடன்படிக்கை

190909paddy.jpgபயிர்ச் செய்கைக்கான விதைகள் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவும் சார்க் நாடுகளின் திட்டத்தின் கீழ் இலங்கையிலும் ஓர் ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் 7.7 மில்லியன்  ரூபாவை இலங்கைக்கு வழங்குகிறது.