எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இரானின் இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலையை ஆய்வாளர்கள் பார்வையிடுகின்றனர்

051009nuclearsite.jpgஇரான் சமீபத்தில் அறிவித்த குவாமில் இருக்கின்ற இரண்டாவது அணு செறிவாக்கும் ஆலையை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் அக்டோபர் 25 ம் தேதி அன்று பார்வையிடுவார்கள் என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹமது எல்பராடி கூறியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கருத்து தெரிவித்த மொஹமது எல்பராடி, இரானுடனான உறவு குறித்து சாதகமாக பேசினார். தாங்கள் மோதல் நிலையில் இருந்து இப்போது ஒளிவுமறைவற்றதன்மை, புரிந்துணர்வு என்ற நிலைக்கு செல்வதாகவும், இருந்தாலும் ஒரு சில கவலைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலை குறித்த செய்தி மேற்கத்தைய நாடுகள் இடையே இரானின் அணுசக்தி குறிக்கோள்கள் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மற்ற அணுசக்தி திட்டங்களை போல இந்த ஆலையும் அமைதி பயன்பாட்டிற்கு மட்டுமே என இரான் கூறிவருகிறது.

மக்கள் வங்கியும் நீச்சல் தடாகமும் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

0501009.jpgமாத்தறை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் புதிய நீச்சல் தடாகமும் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

மாத்தறை நகரில் சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த போதே ஜனாதிபதி மேற்படி இரு நிகழ்விலும் கலந்து கொண்டு பதினேழரைகோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையையும் ஒன்றரை கோடி ரூபா செலவிலான நீச்சல் தடாகத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நேற்றுக் காலை மாத்தறை நகர புதிய மக்கள் வங்கிக் கிளைக்கு வருகை தந்த ஜனாதிபதியை மக்கள் வங்கித் தலைவர் டபிள்யூ. கருணா ஜீவ உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்றதுடன் வங்கிக் கிளையைத் திறந்து வைத்த ஜனாதிபதி வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்து அதன் நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜீவன் குமாரதுங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாயாரின் நினைவாக நேற்று மாத்தறை பாலடுவ குணரத்ன வித்தியாலயத்தில் இடம்பெற்ற புண்ணியோற்சவ நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அங்கு பிரசன்னமாகியிருந்த 600 புத்தபிக்குகளுக்கும் அன்னதானம் வழங்கிச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் வாகனமொன்றில் பெருந்தொகை ஆயுதங்கள்

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வாகனமொன்றிலி ருந்து பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிரு ப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

குருநாகல் மாஸ்பொத்த பகுதியில் வைத்து 56-9968 என்ற இலக்கம் கொண்ட வான் ஒன்றிலிருந்தே சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு, இலத்திரனியல் டெட்டனேட்டர்கள், கிரனைட்டுகள், ரவைகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறித்த வாகனத்திலிருந்து நேற்று 340 – ரி56 ரவைகளும், 5 கிலோ கிராம் நிறை கொண்ட ஆறு கிளேமோர் மைன்கள், 04 – ரி-56 தோட்டாக்களும், 100 – இலத்திரனியல் டெட்டனேட்டர்களும், 288-9 மில்லி மீற்றர் ரவைகளும், 02 – ரிமோட் கருவிகளும், 06 – 9 வோல்ற் பற்றரிகளும், 06 கிளேமோர் குண்டு பொருத்திகளும், மைக்ரோ பிஸ்டல் ஒன்றும், 50 மீற்றர் டெட்டனேட்டர் கோர்ட்டும், 06 – கிரனேற் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்

01-indonesia.jpgஇந்தோனே சியாவில் இன்று காலை 6.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 கடந்த மாதம் 30ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்நிலையி்ல் இன்று காலை சுமார் 9.06 மணிக்கு இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் மேற்கு பபூவா மாகாண தலைநகர் மனோக்வரி நகரில் இருந்து வடமேற்கே 128 கிமீ தூரத்தில், சுமார் 39 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

சேதம் குறித்து உடனடி தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரண்டு வேறு வேறு கண்ட தட்டுக்களில் உள்ளன என்றார்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை குறித்து பரிசீலனை – இந்திய உள்துறை அமைச்சர்

041009chidambaram.jpgதமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில், சிதம்பரம். தமிழக முதல்வரை சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார் 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முதல்வருடன் கலுந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் கடற்படை மீட்பு

ஆழ்கடல் படகுகளில் மீன் பிடிக் கச் சென்று மூன்று நாட்களாகக் கட லில் தத்தளித்துக்கொண்டிருந்த 11 இலங்கை மீனவர்களைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இரண்டு ஆழ்கடல் படகுகளிலிரு ந்த மீனவர்களை பருத்தித்துறையிலி ருந்து 160 கடல் மைல் தொலைவில் ஒரு கடற் பகுதியிலும் சங்கமன்கந் தையிலிருந்து 85 கடல் மைல் தொலைவில் ஓர் இடத்திலும் மீட்டதாகக் கடற்படைத் தலைமையகத்தின் ஒருங் கிணைப்பாளர் கமாண்டர் அதுல செனரத் தெரிவித்தார்.

திருகோணமலை துறை முகத்திலிருந்தும், மிரிஸ்ஸ மீன்பிடித் துறை முகத்திலிருந்தும் கடந்த 28ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற 11 மீனவர்களையே கடற்படையினர் காப்பாற்றிள்ளனர்.

குருநாகல் குண்டுவெடிப்பு : சந்தேகத்தில் படைவீரர் ஒருவர் கைது

021009kurunagala.jpgகுரு நாகலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் நின்று செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் படைவீரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகிலிருந்த இராணுவ விடுதி ஒன்றில் தமது பதவியை ராஜினாமா செய்த இவர், வேனில் குண்டைப் பொருத்திவிட்டு தலைமறைவாகியிருந்தார் என விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

12 வயது சிறுமி ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் எண்மர் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். வேன் உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் வைத்தே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வேனை சாரதி செலுத்த ஆரம்பித்த வேளை, குண்டு வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த ஏனையோர் பாடசாலை செல்லும் மாணவர்களை விடுவதற்காக வேன் உரிமையாளர் வீட்டுக்கு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு உதவிகள்

040909batticaloa.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமையன்று முதற்கட்டமாக பெண்கள் உட்பட பலருக்கு சுய தொழில் வாய்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க உதவித்திட்டத்தின் கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தையல், விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உட்பட பல்வேறு வகையிலான சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைத்ததாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு மற்றும் யு.எஸ்.எயிட் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகர அபிவிருத்தி திட்ட வரைவு ஏகமனதாக ஏற்பு

வவுனியாவைப் புதிய நகரமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை தயாரித்துள்ள திட்ட நகல் வரைவு அரச அதிகாரிகளாலும் மக்கள் பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸின் வேண்டு கோளுக்கிணங்கவும், ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக் குச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமை யவும் நகர அபிவிருத்தி அதிகார சபை புதிய நகரத்திற்கான திட்ட நகல் வரைவைத் தயாரித்து வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளையும் நகர சபை பிரதிநிதிகளையும் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு அழைத்து

விளக்கமளித்தார். இதனையடுத்து திட்ட நகல் வரைவை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் சிறிய நகரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூவரசங்குளம், நெலுக்குளம், செட்டிக்குளம், நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரவில் ஒரு பகுதி, ஓமந்தை, மாமடு உள்ளிட்ட பகுதிகள் சிறிய நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படுமென அரச அதிபர் தெரிவித்தார். அவ்வப் பகுதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய நகரில் வசதிகள் ஏற்படுத்தப்படுமென அவர் கூறினார்.

வவுனியா நகரில் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் அரச திணைக்களங்களை ஒன்றிணைத்து தாண்டிக்குளத்தில் அரச திணைக்களங்களின் கட்டடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. அரச விடுதிகளை ஒன்றிணைத்து பூந்தோட்டத்தில் விடுதித் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படும்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகள், உல்லாசத் துறை உள்ளிட்ட துறைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வவுனியா குளத்தைப் புனரமைப்புச் செய்வதுடன் உல்லாச விடுதிகளின் வசதிகளும் மேம்படுத்தப்படுமென அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

புதுடில்லி இலங்கை தூதரகத்தை தாக்கியவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை

03srilankanhighcommissioninde.jpgபுதுடில்லி யிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்துக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டதுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் இலங்கை தூதரகத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று முன்தினம் பகல் சுமார் 2.30 மணியளவில் புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாயத்தின் முன்னாள் சுமார் 40, 50 பேர் கூடி நின்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறி ‘இலங்கையே கச்சதீவை விட்டு வெளியேறு, தமிழ்நாடு மீனவர்களை படுகொலை செய்யாதே’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுள் சுமார் 10 பேர் பாதுகாப்பையும் மீறி தூதரக வளவுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்த முற்பட்டனர்.

உள்ளே நுழைந்தவர்கள் தூதரக நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சிலவற்றை நிலத்தில் அடித்து நொருக்கியுள்ளதுடன் தூதரகத்திற்கும் சிறு சேதங்களை விளைவித்துள்ளனர். உடனடியாக பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களது ஜனநாயக உரிமை. எனினும் அத்துமீறி தூதரக வளவுக்குள் பிரவேசிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இது தொடர்பாக இந்திய அரசுக்கும், பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்னா தெரிவித்தார்.

இச்சம்பவத்தை அடுத்து புதுடில்லி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் வந்து தூதரகத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.