எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரான்ஸ் தமிழரிடம் பணம் பறித்த விடுதலைப்புலிகளுக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு ஒரு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. என BBC தெரிவித்துள்ளது

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான டாலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் நாட்டுப் பிரிவின் தலைவரான நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சி வரி என்ற பெயரில் இந்தப் பணம் அறவிடபட்டதாக அரச தரப்பு வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சவூதிஅரேபியாவில் பன்றிக்காய்ச்சல் நான்கு பேர் மரணம்; நான்கு பேர் வைத்தியசாலையில்

macca.jpgசவூதி அரேபியாவில் புனித ஹஜ்ஜுக்குச் சென்றோரில் நான்கு பேர் இன்புளுவென் சியா நோயினால் மரணமடைந்துள்ளனர். சுமார் 25 இலட்சம் மக்கள் இம்முறை ஹஜ் கடமைக்காக மக்கா, மதீனா நகரங்களில் கூடுகின்றனர்.

இவர்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மொரோக்கோ, சூடான், இந்தியா, நைஜீரியாவைச் சேர்ந்தவர்களென்று சவூதிஅரேபிய சுகாதார அமைச்சு அறிவி த்துள்ளது. 17 வயதுச் சிறுமியும் 75 வயது மிக்க முதியோருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

புனித ஹஜ்ஜுக்காக சவூதிஅரேபியா வருவோர் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவதுண்டு. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்று வந்தோரில் இருபது பேருக்கு இன்புளு வென்சியா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவர்களில் 12 பேர் தடுப்பூசி ஏற்றப்பட்டனர். நான்கு பேர் வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்ப ட்டுள்ளனர்.

நான்கு பேர் உயிரிழந்தனர்.சவூதிஅரேபியாவில் இம் முறை 25 இலட்சம் மக்கள் ஹஜ்ஜுக்காக வரவுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக மருத்துவ ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ நிலையங்களும் சேவையிலுள்ளன. மதவைபவங்களுக்காகப் இலட்சக்கணக்கானோர் கூடும் இடமாக சவூதிஅரேபியா உள்ளது.

இலங்கை விவகாரம்; மலேசிய பாராளுமன்றத்தில் கடும் விவாதம்

மலேசியப் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தவர்கள் (பெரும்பான்மையானோர் தமிழர்கள்) மத்தியில் செல்வாக்கைத் தேடுவதற்கு முயற்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராகிம், இலங்கையில் தமிழ் அகதிகள் தொடர்பாக கொழும்பு மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியதையடுத்து கடுமையான தர்க்கம் இடம் பெற்றது.  இலங்கை அரசு அகதிகளின் நலன்களை புறக்கணித்ததாக தெரிவித்ததன் மூலம் இந்திய சமூகத்தவரின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பிரதி வெளி விவகார அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டியதாக போர்னாமா செய்திச் சேவை தெரிவித்தது.

இலங்கையின் நெருக்கடியை உள்நாட்டு விவகாரமாகவே மலேசியா பார்ப்பதாகவும் மலேசிய அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் இலங்கைப் பிரச்சினை அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் கோகிலன் பிள்ளை கூறியுள்ளார்.  அகதிகளின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பாக மனித உரிமைக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படப் போவதாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாகவும் கோகிலன் பிள்ளை மலேசியப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

செனட்டர் பி.இராமசாமி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.  இலங்கையில் மோதலின் போது பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டமை மற்றும் 3 இலட்சம் அகதிகளின் அவல நிலை தொடர்பாக கொழும்பை மலேசிய அரசு ஏன் கண்டிக்கவில்லை என்று இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

மலேசியாவும் இலங்கையும் நட்பு நாடுகள் எனவும் இலங்கையின் முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவளித்ததாகவும் கூறிய கோகிலன் பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 2 வது போட்டி இன்று ஆரம்பம்

greenpark.jpgசங்கக்கார தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (24 ஆம் திகதி) தொடங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கப்டன் டோனிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. லேசான காயம்தான் பயப்படும்படி எதுவும் இல்லை.

முன் எச்சரிக்கை காரணமாக தினேஷ் கார்த்திக் அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்தார். 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு இல்லாததால் ரஞ்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தற்போது இந்திய வீரர்களோடு இணைந்து கொண்டார். டோனி உடல் தகுதி பெற்று விடுவார். அவர் ஆடாத பட்சத்தில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அகமதாபாத் ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்து வீச்சாளர்கள் சிக்கி திணறி விட்டார்கள். அகமதாபாத் டெஸ்டில் 7 வீரர்கள் சதம் அடித்தனர்.இந்திய அணியில் டிராவிட், டோனி, காம்பீர், டெண்டுல்கர் ஆகியோரும் இலங்கை அணியில் டில்சான், ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் சதம் அடித்தனர்.

அது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் முடிவு தெரியும் வகையில் “பிட்ச்” இருக்க வேண்டும் என்று இரு அணி கப்டன்களும் தெரிவித்துள்ளனர். மைதானம் முதல் 3 தினங்கள் துடுப் பாட்ட வீரர்களுக்கும் கடைசி இரண்டு தினங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. கடைசியாக கான்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் மனைவி பவுசியா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இழுத்தடித்தார் என்றும் இது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

பவுசியா, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கியில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை ஒழுங்காக செலுத்தாததால் அந்த கடன் 57 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. அதன்பிறகு வட்டியில் சலுகை காட்டினால் பணத்தை திருப்பி செலுத்துவதாக அவர் வங்கிக்கு விண்ணப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவர் 4 கோடியே 55 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டினால்போதும் என்று அதிகாரிகள் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் கிலானி மறுத்து இருக்கிறார்.

துடுப்பாட்டத்தில் மஹேல முதலிடம் பிடித்தார்

mahela-jayawardene.jpgசர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன முதலிடம் பிடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரட்டைச் சதம் மூலம், மஹேல ஜெயவர்தன, முதன் முறையாக “நம்பர் 1” இடத்தைப் பெற்றுள்ளார். இலங்கை அணிக்கப்டன் சங்ககாரா, இந்தியாவின் காம்பிர் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

இதில் இந்தியாவின் சச்சின், இலங்கைக்கு எதிரான சதத்தினால் ஒரு இடம் முன்னேறி, 15 ஆவது இடத்தை இங்கிலாந்து வீரர் பீற்றர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐந்த இடங்கள் முன்னேறிய ட்ராவிட் 25 ஆவது இடத்திலும், சேவாக் 21 ஆவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சுத் தரவரிசையில் தென்னாபிரிக்காவின் ஸ்டைன், இலங்கையின் முரளிதரன், அவுஸ்திரேலியாவின் மைக்கேல் ஜோன்சன் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். இந்தியாவின் ஹர்பஜன்சிங், ஒரு இடம் பின்தங்கி 6 ஆவது இடத்திலும், சகிர்கான் 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி பிரேஸில் பயணம்: இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று திங்கட்கிழமை பிரேஸில் பயணமானார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரேஸில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளார். பிரதான வர்த்தக உடன்படிக்கையில் இருதலைவர்களும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஈரான் தலைவர் பங்கேற்கவுள்ளார்.

பிரேஸில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் பிரேஸில் காங்கிரஸில் உரையாற்றவும் ஈரான் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படவுள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரேஸிலுடனான உறவை வளர்ப்பதில் ஈரான் அக்கறை செலுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அண்மையில் பிரேஸில் சென்ற வேளை இவரது விஜயத்தை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈரான் யுரேனியத்தை மின்சாரத் தேவைக்காகவும் அமைதியான முறையிலும் கையாள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு பிரேஸில் ஜனாதிபதி தெரிவித்தார். இதிலிருந்து இவ்விரு நாடுகளினதும் உறவுகள் விரிவடைய ஆரம்பித்துள்ளன.

பிரேஸில் பயணம் குறித்து ஈரான் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை கூறியபோது இருநாடுகளினதும் பல்வேறுபட்டதுறைகளுக்கு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேற்கத்தேய நாடுகள் ஏனைய நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சியைத் துண்டிக்க முயற்சிப்பதாகவும் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார்.

பிரேஸில் மக்கள் உள்ள பக்கம் ஈரான் மக்கள் உள்ளனர். அப்பாவிப் பொது மக்களுக்கெதிரான ஷியோனிஸவாதிகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விடயத்தில் பிரேஸிலியர்களும் ஈரானியர்களும் ஒற்றுமையுடனுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஈரான் ஜனாதிபதி தென்னமெரிக்க நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அக்கறையுடனுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் சந்தேகிக்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரேஸில் ஈரானுடன் உறவு கொள்வதை அந்நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்புப் பெற பிரேஸில் ஈரானுடன் தொடர்புகளைப் புதுப்பிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 2010 ல் ஈரானுக்கு வருமாறு பிரேஸில் ஜனாதிபதியை அஹ்மெதி நெஜாத் அழைப்புவிடுப்பார்

யாழில் கல்வி வெளியீட்டு திணைக்கள கிளை

260909srilanka.jpgயாழ். கல்விச் சமூகத்தின் நன்மை கருதி கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளை யொன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைப்பதற்கு நட வடிக்கை எடுத்துள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

மேற்படி கிளைமூலம் பாரிய சேவையை வழங்க முடிவதுடன் மாண வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை திறம் பட மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படு மென தாம் நம்புவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் தீவு தாக்குதலில் சம்பந்தப்பட்டோர் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படலாம் அவுஸ்திரேலியா எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோருக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் இவான் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடிகள், தும்புக்கட்டைகளால் தடுப்பு நிலையத்திலுள்ள இரு நாட்டவர்களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். “இந்த விடயங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருடன் நாம் ஆராய்ந்து வருகிறோம். ஆனால், புகலிடம் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அது தொடர்பாக ஆட்கள் கவலையடைவார்கள். அவர்கள் அகதிகளென அடையாளம் கண்டு கொள்ளப்பட்டால் எமது பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படும்.

இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கிறிஸ் இவான்ஸ் கூறியுள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் வன்முறைக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தில் 975 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தமது விரக்தியை அங்குள்ளோர் தெரிவித்திருப்பதாக அகதி செயல்பாட்டு முன்னணியின் பேச்சாளர் அயன் ரின்ரவுல் ஏ. பி. சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். இதேவேளை, சில அகதி விண்ணப்பங்கள் தொடர்பான பெறுபேறுகளை அடுத்து ஏற்பட்ட தப்பபிப்பிராயத்தினால் வன்முறை மூண்டதாக பிரதமர் கெவின்ரூட் கூறியுள்ளார்.

“கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஒருவர் பாரதூரமான குற்றச் செயலை மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

Varathakumar_and_EPDP(படம்: இறுதிநிமிட உடன்பாட்டு முயற்சியில் வி வரதகுமாரும் அமைச்சர் தேவானந்தா தனது கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசணையில் இருந்த போது.)

நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் மாநாடு பெயரளவு இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய பொது உடன்பாட்டை எட்ட இந்த மாநாடு தவறியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்தில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வருகின்ற பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வரத்தவறியதால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத்திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்குகளை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இம்மாநாட்டில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் என்ற விடயத்திலுமே பிரதான முரண்பாடு ஏற்பட்டது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஸ்டி என்ற விவாதங்கள் நடைபெற்றது.

EPDP_Discussion(படம்: மாநாட்டில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக எஸ் தவராஜா ஈபிடிபி கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குகின்றார்.)

அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றது. அதில் ‘சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை சம உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என அமைச்சர் தேவானந்தா கூறியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் கனடியப் பிரதிநிதி மித்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘தென்பகுதி மக்களை அச்சப்படுகின்ற பதங்களை பாவிப்பது உசிதமானதல்ல’ என்றும் ‘இலங்கை அரசுடன் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்’ எனவும் தெரிவித்தாக மித்திரன் சுட்டிக்காட்டினார். ‘ஐநா சாசனம் சொல்கின்ற சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கும் உரித்துடையது. அதே வரைவிலக்கணத்தை உடன்பாட்டுக்குரிய ஆவணத்தில் பதிவு செய்துகொளலாம் ஆனால் சுயநிர்ணய உரிமை என்ற பதத்திற்குப் பதிலான ஒரு பதத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்ததாக மித்திரன் மேலும் தெரிவித்தார்.

இச்சொல்லாடல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய தமிழ்க் கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க முடியும் என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தின. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி இவ்விவாதத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தது.

இது பற்றி தேசம் நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த ‘தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்று அவர்களை வாழ வைப்பதே எனது நோக்கம்’ என்றும் ‘இன்னுமொரு முள்ளிவாய்க்காலினுள் அந்த மக்களை தள்ளிவிடுகின்ற வார்த்தை ஜாலங்களுக்கு தன்னால் ஒரு போதும் உடன்பட முடியாது’ எனவும் தெரிவித்தார். இந்தப் பதத்தில் மட்டும் இவர்கள் தொங்கிக் தமிழ் தேசியத்தை உசுப்பிவிட்டு தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கே அல்லாமல் மக்களுடைய நலனுக்காக அல்ல என்றே எண்ணத் தோண்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு 13வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் தான் ஆரம்பமாக அமையும் எனவும் தெரிவித்தார். தன்னையொரு யதார்த்தவாதி என்று தெரிவித்த அமைச்சர் தேவானந்தா சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டே தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Suresh_Premachandranஇதுவிடயமாக தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் அனாதரவான நிலையில் உள்ளனர் என்ற தோல்வியுணர்வுடன் அரசியல் தீர்வு விடயங்களை அணுகுபவர்கள் அரசிடம் பணிந்து செல்ல வேண்டும் என்றும் 13வது திருத்தச் சட்டம் போன்ற 20 வருடங்கள் பழமையான காலாவதியான விடயங்களுக்குச் செல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வலயம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விவாதிக்கப்பட அவசியமற்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களதும் மாநாட்டில் கலந்துகொண்டவர்களதும் முகத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் அறிக்கையைத் தயாரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

தேசம்நெற் இல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இம்மாநாடு மூடுமந்திரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன், கட்டுரை மாநாட்டின் முதல்நாள் அமர்விலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இம்மாநாடு இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ரெஜீம் சேன்ஜ் க்கான தேர்தலையொட்டிய மாநாடு என அக்கட்டுரை குற்றம்சாட்டி இருந்தது. கட்டுரையின் பிரதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு மாநாடு பற்றிய முழுமையான விபரங்கள் கோரப்பட்டது. கோரிக்கை வலுவடையவே சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகமும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD அமைப்பும் இம்மாநாட்டின் செலவீனங்களை பொறுப்பேற்றதாகவும் இலங்கையில் மீள்கட்டுமானம், மீளுறவு, மீளுருவாக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களின் பாத்திரம் பற்றியும் கருத்துரை வழங்குவார்கள் எனவும் தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் அங்கு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி நிரலில் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் சிரேஸ்ட்ட ஆலோசகரும் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜோன் பெக்கர் நிகழ்வுக்கு தலைமை தாங்குவதாகவும் வேறு வேறு தலைப்புகளில் ஆய்வுரை வழங்குவதாகவும் இருந்தது. பேராசிரியர் ஜோன் பக்கருடன் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் இணைப்பாளர் கிராக் கொலின், Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர் ஸ்டென்கா மச்நிகோவா ஆகியோரும் வேறுவேறு விடயங்களில் விளக்க உரை வழங்குவதாக இருந்தது.

நீண்டகால பிரச்சினைகள் தொடர்பாக பொதுப் புரிந்தணர்வையும் விதிகளையும் நோக்கிச் செல்வது என்று ஆரம்பிக்கும் 2ம்நாள் நவம்பர் 22ம் திகதி நிகழ்வில் வருகின்ற தேர்தல் பற்றிய அடிப்படை உடன்பாடு பற்றி விவாதிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வேறுவேறு தலைப்புகள் எடுக்கப்பட்டு இருந்த போதும் தேர்தல் விடயமாகப் பேசுவதற்கே கூடுதலான நேரம் – மூன்று மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Dujglas_Devananda_and_John_Packer(படம்: மாநாட்டில் முரண்பட்டு ஜோன் பக்கரது தலைமையை நிராகரித்த அமைச்சர் மாநாட்டுக்கு வெளியே தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குகின்றார்.)

ஆனால் தேசம்நெற் கட்டுரை எழுப்பிய சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதத்தை ஆரம்பித்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மாநாட்டின் திசையை மாற்றியமைத்தார். ஏற்பாட்டாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டது. ‘சர்வதேச பொது ஸ்தாபனங்கள் தங்கள் காலனியாதிக்கத்தை புதிய வடிவத்தில் தொடர முயற்சிக்கின்றது’ என்று குற்றம்சாட்டிய அமைச்சர் தேவானந்தா மேற்படி ‘நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட வேண்டும்’ என்றும் ‘வந்திருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளே இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க வேண்டும்’ என்றும் கோரியதுடன் இம்மாநாட்டுக்கு தங்களை வரவழைத்த ‘தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் அல்லது சட்டத்தரணி மனோகரனே தலைமை தாங்க வேண்டும்’ என்றும் வெள்ளைநிற மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோரியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தேசம்நெற் சார்பில் இம்மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனையோரை அனுமதிப்பதில்லை என்ற மாநாட்டு ஏற்பாட்டாளர்களது பொதுவிதியின்படி தேசம்நெற் க்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம்நெற்றை பார்வையாளராக அனுமதிக்கும்படி கேட்டிருந்த போதும் வேறு சில கட்சித் தலைவர்(கள்) மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறிய சட்டத்தரணி மனோகரன் தேசம்நெற்றுக்கான அனுமதியை மறுத்தார். இருந்த போதும் மாநாட்டுக்கு வெளியே கட்சித் தலைவர்களுடன் உரையாடி அவர்களது கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.

Sambanthan_Rதேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் – சிறிதரன், மலையக மக்கள் முன்னணி – பொ சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி – மனோ கணேசன், புளொட் – சித்தார்த்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் – என் எம் அமீன், ரெலோ – ஹென்ரி மகேந்திரன், தமிழரசுக்கட்சி – ஆர் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி – வி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) – சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபை – எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா ஆகியோர் இம்மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் கலந்தரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டதாகவும் சில விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். விவாதங்கள் சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற்றுமை ஏன் எற்படவில்லை? எனக் கேட்டபோதும் எல்லா விடயங்களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற்றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் பேசுகின்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டிய கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்பதாகத் தெரிவித்தனர். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டவர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலையை ஏற்படுத்த எத்தனை ஆயிரம் உயிர்களும் எத்தனை ஆயிரம் டொலர்களும் தேவைப்பட்டிருக்கின்றது என்ற முணுமுணுப்பு மாநாட்டுக்கு வெளியே ஏற்படத் தவறவில்லை.

இம்மாநாட்டுக்கு தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். இச்சந்திப்பில் சிறிரொலோ கலந்துகொள்ளவில்லை அல்லது அழைக்கப்படவில்லை. பேரியல் அஸ்ரப் அழைக்கப்பட்டு இருந்த போதும் அவர் இம்மாநாட்டில் கலந்தகொள்ளவில்லை. சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் தமிழ் – முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் அல்லாததால் அவர்கள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெற இருந்ததால் நவம்பர் 21 இரவு நாடு திரும்பினார். இச்சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

சுவிஸ்லாந்தில் உள்ள 26 கன்ரோண்களில் ஒன்றான துர்கா கன்ரோனில் இம்மாநாடு நடைபெற்றது. சூரிச் நகரிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பகுதி தமிழ் மக்கள் பெரும்பாலும் இல்லாதவொரு கன்ரொன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுவாக குறைந்தது 3 மாதகால விசா வழங்கப்படுவதற்கான நடைமுறையைக் கொண்டுள்ள இந்நாட்டில் இம்மாநாட்டு க்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மாநாட்டுக் காலப்பகுதியில் தங்குவதற்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் மாநாடு முடிந்த மறுதினம் நாட்டுக்குச் செல்ல வலிறுயுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.