எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம் – மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் ‘எம். வி. டல்கா’ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முகவர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்தமான மேற்படி ‘எம். வி. டல்கா’ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்

பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென்றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப்பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங்களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையாளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.

யாழ். பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழா – 3972 பேர் பட்டம் பெற்றனர்

5 வருட இடைவெளிக்குப்பின் யாழ். பல்கலைக்கழக 25 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கைலாசபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2005, 2006, 2007 ஆம் வருடங்களில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 3972 பேர் தமக்கான பட்டங்களைப் பெறுகின்றனர்.

இம்முறை பட்டமளிப்பு விழா மூன்று தினங்களில் ஐந்து அமர்வுகளில் நடைபெறும். தினமும் 1324 பட்டதாரிகள் தமது பட்டத்தை ஐந்து அமர்வுகளில் பெறுவர்.

சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கைது; கிணற்றுநீரை ஆராயும் பணியில் சுகாதார குழு

மட்டக்களப்பு வவுணதீவு இருட்டுச் சோலை மடு விஷ்ணு வித்தியாலயத்தில் 118 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்றது தொடர்பில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராசா கோதையம்மா (42) என்ற பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமையன்று பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் பாடசாலையின் கிணற்று நீரை அருந்திய மாணவர்கள் திடீர் மயக்கம், வாந்தி, வயிற்று நோவு என்பனவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 118 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. மாணவர்களில் 115 மாணவர்கள் குணமடைந்து நேற்றுக் காலை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தொடர்ச்சியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதே நேரம் இப்பாடசாலைக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று அப்பாடசாலையின் கிணற்று நீர் மற்றும் சுற்றுப்புற சூழல் என்பனவற்றை பரிசோதித்துள்ளனர். இப்பாடசாலையின் கிணற்று நீர் பரிசோதனைக்காக கொழும்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரெஞ்சு தூதுவர் யாழ். விஜயம்

இலங்கை யிலுள்ள பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொன் நேற்று முன்தினம் (25) யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்தார். யாழ். அரச அதிபர் கே. கணேஸை பிரெஞ்சு தூதுவர் யாழ். செயலகத்தில் வைத்து முதலில் சந்தித்து பேசினார். அதனையடுத்து திருநெல்வேலியில் உள்ள பிரெஞ்சு நட்புறவு கலாசார கேந்திரத்துக்கு சென்ற அவர் அதன் நடவடிக்கைகளை நேரில் கண்டறிந்தார்.

யாழ். குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதா என்பதைப் பற்றி அரச அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் பிரெஞ்சு தூதுவர் அதிக அக்கறை காட்டியதாக செயலக வட்டாரங்கள் கூறின.

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.  பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.  குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் ‘கல்ப் டெய்லி நியூஸ்’ ,  “தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.

பணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை!

வெம்பிளியைச் சேர்ந்த ஜெகதீசன் குணராஜா (20) என்ற இளைஞர் கிங்ஸ்பறியைச் சேர்ந்த பிரேம் என அறியப்பட்ட பிரனானந் கணேஸ்நாதனை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றதற்காக குற்றவாளியாகக் காணப்பட்டு உள்ளார். நீதிபதி கிரகாம் அரன் தலைமையில் 12 ஜூரிகளுடன் வழக்கு நடைபெற்றது.

1200 பவுண்களை வழங்காமல் விட்டால் பிரேமின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசப்போவதாக ஆறு பேரைக் கொண்ட குழு மிரட்டியாதாக பிரேம் குற்றம்சாட்டி இருந்தார். 2009 செப்ரம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஹரோ கிறவுண் கோர்ட்டில் நடைபெற்று 2010 பெப்ரவரி 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திவீகன் குகநாதனுக்குச் சொந்தமான காரை பிரேம் காப்புறுதி இன்றி ஓட்டியதால் வாகனம் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட நஸ்டத்திற்காக 1200 பவுண்களை தன்னிடம் கேட்டு மிரட்டியதாக நீதிமன்றத்தில் பிரேம் தெரிவித்து இருந்தார். தன்னை தனது விருப்பத்திற்கு மாறாக கிங்ஸ்பறியில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து பலவந்தமாக வானில் ஏற்றி வொன்ஸ்வேத் செயின்ஸ்பறி கார் பார்க்குக்கு கூட்டிச் சென்று தாக்கியதாக பிரேம் நீதிமன்றில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த கடத்தல் நாடகம் நான்கு மணிநேரம் நீடித்ததாகவும் பிரேம் தெரிவித்து இருந்தார்.

மருத்துவரினால் முகத்தில் உள்ள காயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவற்றுக்கு தாங்கள் காரணமல்ல என சந்தேகநபர்கள் வாதிட்டனர். மேலும் பணம் கேட்டதை ஒத்துக் கொண்டவர்கள் தாங்கள் கையால் தட்டியதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனர். பணத்திற்காகப் பயமுறுத்தவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.

ஜெகதீசன் குணராஜ் உடன் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பின்வருவோர் மீதான குற்றச்சாட்டுகள்  நிராகரிக்கப்பட்டது
சுதர்சன் சிறீதரன் (22) – மில்ரன் கீன்ஸ்
சுதாகரன் ராசலிங்கம் (21) – வெம்பிளி
வேணுசங்கர் லம்பொதரராஜா (20) – வெம்பிளி
சிவகுமார் தினேஸ்குமார் (19) – ஹரோ
தீவிகன் குகநாதன் (திவான்) – ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

கே. கே. எஸ். துறைமுகம் ரூ. 100 மில். புனரமைப்பு – முழுமையான பணியில் கடற்படை

போர்ச் சூழல் காரணமாக சேதமடைந்து பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத காங்கேசன்துறை துறைமுகம் நூறு மில்லியன் ரூபா செலவில் மீளமைக்கப்பட்டு வருவதாக துறமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

துறைமுகத்தை மீளமைக்கும் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருவதாகவும் இதனூடாக வடபகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய உற்பத்திகளை தெற்கிற்கு அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

காங்கேசன்துறை துறைமுகம் மீளமைக்கப்படுவதோடு வடபகுதி மேலும் அபிவிருத்தி அடையும். வடபகுதி மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறு இந்தத் துறைமுகம் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்கள் உள்நாட்டு வர்த்தக்கத்துறை மற்றும் மீன்பிடித்துறை முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுவதோடு வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். காங்கேசன்துறை துறைமுக பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.

திருகோணமலை துறைமுகமும் முதலீட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இந்த துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு பெருமளவானோருக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்க உள்ளது என்றார்.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (25) சுமுகமாக நடைபெற்றதாக தேர்தல் திணைக்களம் கூறியது. இன்றும் (26) வாக்களிப்பு நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு முப்படையினர், பொலிஸார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். நேற்று பெரும்பாலானவர்கள் வாக்களித்ததாக வும் எதுவித அசம்பாவிதங்களோ முறை கேடுகளோ இடம்பெறவில்லை எனவும் தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்களிப்பை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்

Seveal_K_JHC_in_Jaffnaயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால்  க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.