எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பு

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தங்களது செயற்பாட்டை மீளமைக்க முயல்வது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவல்களை யடுத்து இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு புலிகள் இயக்கம் மீண்டும் செயற்படத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் அனுமதி வழங்க உறுதியளிப்பு – 8000 பேர் அனுமதி குறித்து சவூதி ஆலோசனை

hajj.jpgஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் பவுட் பின் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன் போது இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆனால் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி – ஒருவர் பலி, வீடுகள் சேதம்

lightning-01.jpgநுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சூறாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன. இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவுகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மே 18 அன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – எம் கெ சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kதமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணியும் இணைந்து எதிர்வரும் 18ம் திகதி வவுனியா நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளியவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும், சிறைகளிலுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளதாகவும் திரு. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்ற படுகொலைகளை விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்கக் கோரியும், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgஅரசாங் கத்தின் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆரியரட்ன எதுகல நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் அமைச்சர் ரம்புக்வெல்ல முதன் முதலாகக் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

house.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் 1200 பேரை இவ்வாரத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 540 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இவ்வாரத் தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண் டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்த அவர்,

படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மக்களின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர்களின் அர்ப்பணிப்பு அவசியம்

president.jpgஅமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்காமல் மக்களின் சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேபோன்று அரசாங்கத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மிடம் வரும் பொதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். காலி மலிகஸ்பே சுபத்ராராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி தர்மசாலைக் கட்டிடத்தை உத்தியோகபூர்மாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு; 367 பேருக்கு களுத்துறையில் பயிற்சி

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளனர்.  யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.

இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.

2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இவர்கள் யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

வடமராட்சியில் பெண்ணைக் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

வடமராட்சியில் கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் (11 May 2010) வல்லைவெளியில் பற்றையொன்றில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட லங்காதேவி (வயது 37) என்ற பெண்ணைக் கடத்தியவர்களான உடுப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்த பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 26 வரை இவர்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் மகளை திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தியே இக்கடத்தல் மற்றும், இப்பெண் மீதான கத்திக்குத்து என்பன நடைபெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது. வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கணவர் மற்றும் மகன் ஆகியோர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பிள்ளைகளுடன் கரவெட்டியில் சம்பந்தர் கடைப்பகுதியில் இப்பெண் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராலியில் சிறிலங்கா இராணுவச்சிப்பாய் மரணம்!

Check_Pointஇன்று 13ம் திகதி யாழ்ப்பாணம் அராலியில் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளதாக இன்று பகல் யாழ்ப்பாணத்தில் பரபரப்பாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக விசாரித்தபோது ஒரு இராணுவ சிப்பாய் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்ததாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து இராணுவச்சிப்பாயை நோக்கி யார் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார்கள் என்கிற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்தன. இச்சம்பவம் மக்கள் மத்தியில் ஓரு அச்சத்தை ஏற்படுத்தின.

பின்னர் வந்த தகவல்களின் படி குறிப்பிட்ட இராணுவச்சிப்பாய் ஒரு யுவதியைக் காதலித்து வந்ததாகவும் பின்னர் அப்பெண் மனம் மாறி அவரின் காதலை மறுத்ததாகவும், இதனால் விரக்கியுற்ற அச்சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.