எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐரோப்பிய பாடல் போட்டி 2010 : விமர்சனம்- நோர்வே நக்கீரா

lena.jpg2010க்குரிய ஐரோப்பிய பாடல் போட்டி நோர்வேயில் 29.05.2010 சனிக்கிழமை மாலை 200லட்சம் நோவேயியன் குரோண்கள் செலவில் வெற்றிகரமாக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கான காரணம் ஒர் அகதியின் பாடலே. அலெக்சாண்டர் றிபாக் அகதிக்குழந்தையாக நோர்வே நாட்டில் குடிபுகுந்த இந்த இரஸ்சிய இளைஞனே சென்றவருடம் நோர்வேக்கு வெற்றியைத் தேடித்தந்து நோவேயை உலகமட்டத்தில் ஒருபடி உயர்ந்தினான். நோர்வேயின் வடபகுதியில் அகதி அந்தஸ்துக் கோரியபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அன்றே அவன் திரும்பிப் போயிருந்தால் இன்று நோவே ஒருநல்ல திறமைசாலியை இழந்திருக்கும். அவனது பெற்றோர்கள் இசைவல்லுனர்கள். கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பதுபோல் இசையுடன் கூடிவளர்ந்த காரணத்தாலும் மரபணுக்களில் இசைவாழ்ந்து கொண்டிருந்ததாலும் இசை சரளமாகவே அவனுக்கு வந்தது. அகதி என்பவர்கள் பணம், உயிர்பாதுகாப்பு மட்டும் தேடிவரவில்லை, திறமைகளுடனும்தான் வருகிறார்கள் என்பதை புலத்து நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தம்திறமைகளை வெளிப்படுத்துவதும். அத்திறமைகளை நாடுகள் நல்ல முறையில் பயன்படுத்துவதும் மனித உயர்வுக்கு இன்றியமையாதது. இது பிறந்தநாட்டுக்கும் புகுந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

எந்தநாடு இப்போட்டியில் வெல்கிறதோ அந்த நாட்டில்தான் அடுத்த பாடல் போட்டி நடைபெறும். இது பெருமைக்குரியது மட்டுமல்ல வியாபார ரீதியாகப் பணம் பண்ணும் காரியமாகவும் மாறியுள்ளது. சென்றவருடம் 2009ல் நோர்வே வென்றகாரணத்தால் இந்தவருடம் இப்போட்டி இங்கே நடத்தப்பட்டது. பிரபல விமர்சகரான எஸ்பன் ஏ ஆமுன்சன் என்பவர் தனது விமர்சனத்தில் இம்முறை பெரும்பாலான பாடல்கள் உப்புச்சப்பில்லாத ஒரு சத்துக்குக் கூட உதவாதபாடல்கள் என்றும், பிரான்சின் பாடல் சரித்திரத்தைக் கறைப்படுத்துமாறு அமைந்தாகவும் தான் இம்முறை வந்தபாடல்களைக் கண்டு அதிர்ந்து போனதாக எபிசி செய்திகளுக்கு அழிந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜேமனிய நாட்டு லேனா எனும் 19வயதுப் பெண் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அப்பாடலின் தரம்பற்றி பலர் தரக்குறைவாகப் பேசுவதையே கேட்கக்கூடியதாக இருந்தது. இதனால் பணம் கொடுத்து வெற்றியை வாங்கினார்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், சர்பியா போன்ற சிலநாடுகளே தமது மொழியில் பாடல்களைப் பாடினார்கள். 80வீதமான பாடல்கள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டியின் ஆரம்ப காலங்களில் தமது மொழியிலேயே பாடல்கள் பாடப்பட வேண்டும் எனும் வரையறை இருந்தது. இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட நாடுகளின் பாடல்கள் புள்ளிகளை அதிகமாகப் பெற்றார்கள். இதனால் வரையறை தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலத்தை வெறுக்கும் பழைய சோவியத்து நாடுகள் ஜேர்மனி போன்ற நாடுகள் கூட ஆங்கிலத்திலேயே பாடினார்கள். இப்போட்டிக்கு வரும் பாடல்கள் தத்தமது நாடுகளில் நடுவர்களாலும் அந்நாட்டு மக்களின் புள்ளிகளாலும் வென்ற பாடல்களே. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திலே உணர்வுகள் பாடலாக்கப்படும் நிலை தென்படுகிறது. ஆங்கிலத்தில் பாடியபாடல்களில் உச்சரிப்புப்பிழையை பலர் அவதானித்திருக்கலாம். பிறமொழியில் பாடுவதாலேயோ என்னவோ பலபாடல்களில் உயிரக்காணோம். பிறமொழிப் பாடல்களால் சுயமொழி அழிப்புடன் ஆங்கிலமொழிச் சீரழிவும் சேர்ந்தே நடைபெறுவதைக் காணலாம். இது உலகமயமாதலில் ஒரு விளைவே. ஆட்சிகளையும், அதிகாரங்களையும் தன்னகத்ததே கொண்டிருந்த நாடுகளின் மொழிகள் உ.ம் ஆங்கிலம், பிரான்ஸ், இரஸ்சிய, அராபிய மொழிகள் மற்றைய மொழிகளை விழுங்கும் நிலை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 10சதவீதமான மொழிகள் பத்து வருடங்களில் இடம் தெரியாமல் போகின்றன. ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒவ்வொரு மொழிகளிலும் 10சதவீதமான மொழி கலப்படைகிறது. உலகமயமாதலினால் ஒரு புதியகாலணித்துவமே உருவாகி வருகிறது. ஆய்வாளர்களின் கூற்றை விட மிகவேகமாகவே இவை நடந்தேறுகின்றன. இதனால் சில முக்கிய மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் ஏன் இனமே அழியும் காலவரிப்பு நடைபெறுகிறது. இக்காலவரிப்பில் தமிழ்மொழியும் ஒன்று. கொன்னைத்தமிழான சென்னைத்தமிழில் இதை அழகுறக் காணலாம்.

பூகோளரீதியாக இஸ்ரேவேல் அமைந்திருப்பது மத்தியகிழக்கிலேயே. இதை எதற்காக ஐரோப்பாவிற்குள் சேர்த்து போட்டிகளில் பங்குபற்ற வைக்கிறார்கள். இதில் இருந்து ஐரோப்பியர்களின் நட்புறவும், நடுநிலையற்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி நடுநிலையற்றவர்களே இஸ்ரேலிய பாலஸ்தீன உடன்படிக்கையை ஒஸ்லோ ஒப்பந்தம் என்று உருவாக்கினார்கள். இங்கே எப்படி பாலஸ்தீனத்தின் நலன்கள் நடுநிலையுடன் கவனிக்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக் குறியாகிறது. இரண்டாவது உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக இன்று பாலஸ்தீனத்துக்கு இழைக்கும் அநியாயங்களை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரவேலுக்கு ஐரோப்பிய பாடல் போட்டியில் இடம் உண்டு எனில் ஏன் பாலஸ்தீனத்துக்கு இது இல்லாமல் போனது?

பாடல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்போது எந்தநாட்டுக்கு தமது அதிகூடிய புள்ளிகளை அறிவிப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே சொல்லக் கூடியதாக இருந்தது. தம் உறவு நாடுகளுக்கும் அயல்நாடுகளுக்கும் புள்ளிகளை அள்ளி வளங்கியதைக் காணமுடிந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டி என்பது திறமைகளை வெளிக்கொணரவோ அன்றேல் நல்ல தரமான பாடல்களை தரவோ முயற்சிக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஸ்பானியப்பாடல் அரங்கேறி முடியும் வேளை குழுவில் இல்லாத ஒருவன் உள்ளே புகுந்து மேடையிலுள்ளவர்கள் போல் நடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டான். இவ்வளவு பிரமாண்டமான பெருவிழாவில் நோவேயின் பாதுகாப்புப் போதாது என்பது பலரது குறையாக இருந்த போதிலும் நோவே போதியளவு சீரணியற்ற நகரபாதுகாவலர்களை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போலிப்பேர்வழி உடனடியாக சான்விக்கா நகரபாதுகாவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு 15000 குரோண்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஒருகாலத்தில் பெயருக்கும், தமது பிள்ளைகளை மேடையேற்றுவதற்கும், விலாசத்துக்குமாக பலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததைப் பலர் அறிவர். அதேபோல் ஒன்றுதான் இதுவும். இந்த ஆசாமியிடம் கேட்டபோது நான் 15000 குரோண்கள் கொடுத்து விலாசம் வாங்கியுள்ளேன் என்றாராம். இவர் ஒரு பிரபல்ய உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் உடம்புடன் நடுமைதானத்தால் ஓடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பணத்தொகை மிகப்பெரிது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எத்தனையோ நல்ல தரமான பாடல்கள் இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி தீர்ப்பு ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. தாம்விரும்பும் நாடுகளுக்கு தரம்பாராது புள்ளியிடுவது ஒருபுறம், தமக்குப் பிடிக்காத நாடுகள், இனம் என்பதை தள்ளிவைப்பது என்பது மறுபுறம். இது துவேச வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துவிடும். இனிவருங்காலங்களிலாவது இப்படியான சீர்கேடுகள் இன்றி தரமான பாடல்களை கருத்து, இசை, காட்சி, பாவம் (பாடலின் உயிர்) போன்ற காரணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தரமான பாடல்களைத் தருவார்களா?

எதிர்பார்ப்புகளுடன்
நோர்வே நக்கீரா

சிறுபான்மையின கட்சிகளுடன் இந்தியா பேசவேண்டிய அவசியத் தேவை என்ன? -ரவி : ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கள் முட்டாள்தனமானவை- மனோ

mano.gifஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் சிறுபான்மையினக் கட்சிகளின் யோசனைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து அது தொடர்பாக அரசாங்கத்திடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெள்ளிக்கிழமை விளக்கம் கேட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மையினக் கட்சிகளை தனித்தனியே புதுடில்லிக்கு அழைத்து இந்தியா பேசவுள்ளதாக ஏசியன் ரிபியூன் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில் அமைதி நிலவிய வேளையில் அண்டை நாடான இந்தியா குறிப்பிட்ட சில சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கி குழப்பியதாகவும் பிரச்சினைகளை உருவாக்கியதாகவும் இந்த விடயம் அறியப்பட்டதொன்று என்றும் சாடிய ரவி கருணாநாயக்க சிறுபான்மைக் கட்சிகளுடன் இந்தியா ஏன் பேச்சு நடத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

சிறுபான்மையினரை ஐ.தே.க.வும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய அவர், தமிழரும் முஸ்லிம்களும் தனக்கு வாக்களித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதங்களைப் பதிவு செய்தல், சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருப்போருக்கு எதிராகத் தண்டனை விதித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இந்தப் பிரச்சினை பற்றி சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

சிறுபான்மையினக் கட்சிகளைச் சந்தித்துப் பேச இந்தியா ஏன் முயற்சிக்க வேண்டும் என்பதே எமது கேள்வியாகும்.ஐ.தே.க.வுடன் பேசலாம். எனக்கும் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது முஸ்லிம் கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் பிரச்சினைகளே அதிகரிக்கும்.

கடந்த காலத்தில் நாடு அபிவிருத்தியடைந்து வந்த போது இந்திய ஆயுதங்களை வழங்கி குழப்பியது. எனவே மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்று ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.இது இவ்வாறிருக்க “தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியா சிறுபான்மையினக் கட்சிகளை பேச்சுக்கு அழைக்கவுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக எந்தக் கட்சிகளுக்கும் இதுவரை அழைப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அந்த மாதிரியான சந்திப்புகளை நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் பி.ரி.ஐ.க்கு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார். தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதேசமயம் “புதுடில்லியிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் இந்த உத்தேச பேச்சுவார்த்தை அடிப்படையில் நகல் வரைபுகளைத் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்” என்று இணையத்தளச் செய்திகள் தெரிவித்துள்ளன.

 இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை  ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இவ்வாறு ரவி கருணாநாயக்க கூறுவது முட்டாள்தனம்  என நான் நினைக்கின்றேன். இவருடைய கருத்து ஐக்கிய தேசிய கட்சியின் கருத்தா என விரைவில் அதன் தலைமைத்துவம் சிறுபான்மையினத்தவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டியுள்ளார்.

இந்திய அரசு இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முயற்சிக்கின்றார்  என மனோ கணேசன் தெரிவித்தார்.

பொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.

இராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப்பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்களிடம் ஒரு கேள்விக்காக 31,500 ரூபா செலவிடப்படுகிறது சபையில் ரவி கருணாநாயக்க

பாராளு மன்றத்து எதிர்க்கட்சி எம்.பி.களினால் அமைச்சர்களிடம் ஒரு தடவை கேட்கப்படும் கேள்வி ஒன்றுக்கு 31,500 ரூபா செலவிடப்படுவதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போதே ரவி கருணாநாயக்க எம்.பி இதனை சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று ரவி கருணாநாயக்காவின் வாய்மூல விடைக்கான 3 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் ஒன்றுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டனரே தவிர பதில் அளிக்கவில்லை.

இதனால் விசனமடைந்த ரவி கருணாநாயக்க எம்.பி. பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றை ஒரு தடவை கேட்க 31,500 ரூபா செலவாகின்றது.இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது செலவு இன்னும் அதிகரிக்கின்றது.

எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாகவே பதில் வழங்கக் கூடிய நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு நடந்து கொண்டால் மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை.

அம்பானி குழுவினர் இலங்கை வருகை

ambani-brothers.jpgஇந்தியா வின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி குழுவினர் அடுத்த கிழமை இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கை வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி பாடசாலைக்கு புதிய கணனி ஆய்வுகூடம்

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனிகள் ஆய்வுகூடம் மற்றும் புனரமைக்கப்பட்ட புதிய கட்டடம் என்பவை நேற்று திறந்து வைக்கப்பட்டன.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ எம்.பி, உதித லொக்குபண்டார எம்.பி. மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைகள், பாடநூல்கள் போன்ற வற்றையும் நாமல் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் ஆகியோர் வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மேற்படி கல்லூரிக்கு சுமார் 11 கணனிகள் அடங்கிய புதிய ஆய்வுகூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல்ல – சபையில் அமைச்சர் தினேஷ் அறிவிப்பு

parliament.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார். இந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.

அரசியலமைப்பு திருத்தத்தின்போது சிறுபான்மை சமூகங்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வரும்போது சிறுபான்மைச் சமூகங்களின் நலன் குறித்து அதிகளவு சிந்தித்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்புத் திருத்தம், தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் அரசு சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்தும் யோசனையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது தொடர்பாக கேட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த ஹஸன் அலி கூறியதாவது;

அரசாங்கம் அதன் சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலிறங்கியுள்ளது. இவ்வாறான சுயநல நோக்கத்தின் பிரதிபலன் சிறுபான்மை மக்களுக்குப் பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

இது தொடர்பிலான அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கைகளைப்பொறுத்தே எமது கட்சி எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியும். அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுவிட்டால் மாத்திரம் அரசியலமைப்பை மாற்றிவிட முடியாது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கான யோசனைகளை அது தயாரித்து பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசியலமைப்புத் திருத்தமோ, தீர்வுத்திட்டமோ, எதுவாக இருப்பினும் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசின் யோசனைகள் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக அவை அமைய வேண்டும்.அரசியலமைப்புத் திருத்தம் தீர்வு விடயங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள சிறுபான்மைத் தலைவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய முக்கியத்துவத்தையும் இங்கு நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். வெறும் கை தூக்கிகளாக அவர்களால் செயற்பட முடியாது. தமது சமூகங்களுக்குத் துரோகமிழைக்கப்படக்கூடிய முடிவுகளுக்கு அவர்கள் துணைபோய்விடக்கூடாது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசு அதன் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஆராய்ந்த பின்னரே அடுத்த நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி தெரிவித்தார்.

பொது இடங்களில் முத்தமிட்ட 200 ஜோடிகளை பொலிஸார் கைது

பகிரங்கமாக முத்தமிடுவதால் சங்கடமான நிலைமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகார்களையடுத்தே பொலிஸார் இளம் ஜோடிகளை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மாத்தறை,குருநாகல் மாவட்டங்களில் கடந்த இருவாரங்களில் சுமார் 200 ஜோடிகளை தடுத்து வைத்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.பொது இடங்களில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதற்காக அவர்களை நாம் தடுத்து வைத்தோம்.வழமையாக பெற்றோருக்கு அறிவித்துவிட்டு அவர்களை விடுவித்து வருகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செவதில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹோட்டல்களில் அந்தரங்கமாக இருப்பதற்கு அவர்களிடம் பணவசதி இல்லாததால் கடற்கரைகளில் இளம் ஜோடிகள் அந்நியோன்யமாக இருப்பதாக மாத்தறை வாசியொருவர் கூறியுள்ளார்.தலைநகர் கொழும்பின் கடற்கரைகளில் குடைக்கு கீழ் இருக்கும் ஜோடிகள் அடிக்கடி சுற்றிவளைக்கப்படுவதுண்டு.

வங்கக் கடலில் தாழமுக்கம்: புயல் சின்னமாக மாறும் அபாயம் – பலத்த காற்றுடன் மழை பெய்யும்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய தாழமுக்கம் காரணமாக புயல் சின்னம் உருவாகும் அபாயம் உள்ளபோதும் எவ்வகையிலும் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கம் காரணமாக தமிழ் நாட்டுக்கே அதிகளவு மழை பெய்யும். இலங்கைக்கு தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழையுடன் காற்று சற்று வேகமாக வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம், மத்திய, மேல் மாகாணங்களுக்கு அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும். நேற்றும், இன்று காலை வேளைகளிலும் வீசிய கடும் காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனவும் அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இதேவேளை வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்:- கேரளாவிலும், தமிழகத்தின் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. கர்நாடகத்திலும் மழை தொடங்கி பெய்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.