ஐரோப்பிய பாடல் போட்டி 2010 : விமர்சனம்- நோர்வே நக்கீரா

lena.jpg2010க்குரிய ஐரோப்பிய பாடல் போட்டி நோர்வேயில் 29.05.2010 சனிக்கிழமை மாலை 200லட்சம் நோவேயியன் குரோண்கள் செலவில் வெற்றிகரமாக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கான காரணம் ஒர் அகதியின் பாடலே. அலெக்சாண்டர் றிபாக் அகதிக்குழந்தையாக நோர்வே நாட்டில் குடிபுகுந்த இந்த இரஸ்சிய இளைஞனே சென்றவருடம் நோர்வேக்கு வெற்றியைத் தேடித்தந்து நோவேயை உலகமட்டத்தில் ஒருபடி உயர்ந்தினான். நோர்வேயின் வடபகுதியில் அகதி அந்தஸ்துக் கோரியபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அன்றே அவன் திரும்பிப் போயிருந்தால் இன்று நோவே ஒருநல்ல திறமைசாலியை இழந்திருக்கும். அவனது பெற்றோர்கள் இசைவல்லுனர்கள். கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவிபாடும் என்பதுபோல் இசையுடன் கூடிவளர்ந்த காரணத்தாலும் மரபணுக்களில் இசைவாழ்ந்து கொண்டிருந்ததாலும் இசை சரளமாகவே அவனுக்கு வந்தது. அகதி என்பவர்கள் பணம், உயிர்பாதுகாப்பு மட்டும் தேடிவரவில்லை, திறமைகளுடனும்தான் வருகிறார்கள் என்பதை புலத்து நாடுகள் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தம்திறமைகளை வெளிப்படுத்துவதும். அத்திறமைகளை நாடுகள் நல்ல முறையில் பயன்படுத்துவதும் மனித உயர்வுக்கு இன்றியமையாதது. இது பிறந்தநாட்டுக்கும் புகுந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.

எந்தநாடு இப்போட்டியில் வெல்கிறதோ அந்த நாட்டில்தான் அடுத்த பாடல் போட்டி நடைபெறும். இது பெருமைக்குரியது மட்டுமல்ல வியாபார ரீதியாகப் பணம் பண்ணும் காரியமாகவும் மாறியுள்ளது. சென்றவருடம் 2009ல் நோர்வே வென்றகாரணத்தால் இந்தவருடம் இப்போட்டி இங்கே நடத்தப்பட்டது. பிரபல விமர்சகரான எஸ்பன் ஏ ஆமுன்சன் என்பவர் தனது விமர்சனத்தில் இம்முறை பெரும்பாலான பாடல்கள் உப்புச்சப்பில்லாத ஒரு சத்துக்குக் கூட உதவாதபாடல்கள் என்றும், பிரான்சின் பாடல் சரித்திரத்தைக் கறைப்படுத்துமாறு அமைந்தாகவும் தான் இம்முறை வந்தபாடல்களைக் கண்டு அதிர்ந்து போனதாக எபிசி செய்திகளுக்கு அழிந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜேமனிய நாட்டு லேனா எனும் 19வயதுப் பெண் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அப்பாடலின் தரம்பற்றி பலர் தரக்குறைவாகப் பேசுவதையே கேட்கக்கூடியதாக இருந்தது. இதனால் பணம் கொடுத்து வெற்றியை வாங்கினார்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிரான்ஸ், ஸ்பெயின், சர்பியா போன்ற சிலநாடுகளே தமது மொழியில் பாடல்களைப் பாடினார்கள். 80வீதமான பாடல்கள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டியின் ஆரம்ப காலங்களில் தமது மொழியிலேயே பாடல்கள் பாடப்பட வேண்டும் எனும் வரையறை இருந்தது. இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட நாடுகளின் பாடல்கள் புள்ளிகளை அதிகமாகப் பெற்றார்கள். இதனால் வரையறை தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஆங்கிலத்தை வெறுக்கும் பழைய சோவியத்து நாடுகள் ஜேர்மனி போன்ற நாடுகள் கூட ஆங்கிலத்திலேயே பாடினார்கள். இப்போட்டிக்கு வரும் பாடல்கள் தத்தமது நாடுகளில் நடுவர்களாலும் அந்நாட்டு மக்களின் புள்ளிகளாலும் வென்ற பாடல்களே. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திலே உணர்வுகள் பாடலாக்கப்படும் நிலை தென்படுகிறது. ஆங்கிலத்தில் பாடியபாடல்களில் உச்சரிப்புப்பிழையை பலர் அவதானித்திருக்கலாம். பிறமொழியில் பாடுவதாலேயோ என்னவோ பலபாடல்களில் உயிரக்காணோம். பிறமொழிப் பாடல்களால் சுயமொழி அழிப்புடன் ஆங்கிலமொழிச் சீரழிவும் சேர்ந்தே நடைபெறுவதைக் காணலாம். இது உலகமயமாதலில் ஒரு விளைவே. ஆட்சிகளையும், அதிகாரங்களையும் தன்னகத்ததே கொண்டிருந்த நாடுகளின் மொழிகள் உ.ம் ஆங்கிலம், பிரான்ஸ், இரஸ்சிய, அராபிய மொழிகள் மற்றைய மொழிகளை விழுங்கும் நிலை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.

மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 10சதவீதமான மொழிகள் பத்து வருடங்களில் இடம் தெரியாமல் போகின்றன. ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒவ்வொரு மொழிகளிலும் 10சதவீதமான மொழி கலப்படைகிறது. உலகமயமாதலினால் ஒரு புதியகாலணித்துவமே உருவாகி வருகிறது. ஆய்வாளர்களின் கூற்றை விட மிகவேகமாகவே இவை நடந்தேறுகின்றன. இதனால் சில முக்கிய மொழிகள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள் ஏன் இனமே அழியும் காலவரிப்பு நடைபெறுகிறது. இக்காலவரிப்பில் தமிழ்மொழியும் ஒன்று. கொன்னைத்தமிழான சென்னைத்தமிழில் இதை அழகுறக் காணலாம்.

பூகோளரீதியாக இஸ்ரேவேல் அமைந்திருப்பது மத்தியகிழக்கிலேயே. இதை எதற்காக ஐரோப்பாவிற்குள் சேர்த்து போட்டிகளில் பங்குபற்ற வைக்கிறார்கள். இதில் இருந்து ஐரோப்பியர்களின் நட்புறவும், நடுநிலையற்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி நடுநிலையற்றவர்களே இஸ்ரேலிய பாலஸ்தீன உடன்படிக்கையை ஒஸ்லோ ஒப்பந்தம் என்று உருவாக்கினார்கள். இங்கே எப்படி பாலஸ்தீனத்தின் நலன்கள் நடுநிலையுடன் கவனிக்கப்பட்டிருக்கும் என்பது கேள்விக் குறியாகிறது. இரண்டாவது உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக இன்று பாலஸ்தீனத்துக்கு இழைக்கும் அநியாயங்களை நியாயப்படுத்த முடியாது. இஸ்ரவேலுக்கு ஐரோப்பிய பாடல் போட்டியில் இடம் உண்டு எனில் ஏன் பாலஸ்தீனத்துக்கு இது இல்லாமல் போனது?

பாடல்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்போது எந்தநாட்டுக்கு தமது அதிகூடிய புள்ளிகளை அறிவிப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே சொல்லக் கூடியதாக இருந்தது. தம் உறவு நாடுகளுக்கும் அயல்நாடுகளுக்கும் புள்ளிகளை அள்ளி வளங்கியதைக் காணமுடிந்தது. இந்த ஐரோப்பிய பாடல் போட்டி என்பது திறமைகளை வெளிக்கொணரவோ அன்றேல் நல்ல தரமான பாடல்களை தரவோ முயற்சிக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

ஸ்பானியப்பாடல் அரங்கேறி முடியும் வேளை குழுவில் இல்லாத ஒருவன் உள்ளே புகுந்து மேடையிலுள்ளவர்கள் போல் நடித்துவிட்டு இறங்கி ஓடிவிட்டான். இவ்வளவு பிரமாண்டமான பெருவிழாவில் நோவேயின் பாதுகாப்புப் போதாது என்பது பலரது குறையாக இருந்த போதிலும் நோவே போதியளவு சீரணியற்ற நகரபாதுகாவலர்களை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போலிப்பேர்வழி உடனடியாக சான்விக்கா நகரபாதுகாவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு 15000 குரோண்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஒருகாலத்தில் பெயருக்கும், தமது பிள்ளைகளை மேடையேற்றுவதற்கும், விலாசத்துக்குமாக பலர் புலிகளுக்கு பணம் கொடுத்ததைப் பலர் அறிவர். அதேபோல் ஒன்றுதான் இதுவும். இந்த ஆசாமியிடம் கேட்டபோது நான் 15000 குரோண்கள் கொடுத்து விலாசம் வாங்கியுள்ளேன் என்றாராம். இவர் ஒரு பிரபல்ய உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் உடம்புடன் நடுமைதானத்தால் ஓடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு களியாட்ட நிகழ்வாக இருந்தாலும் பயன்படுத்தப்படும் பணத்தொகை மிகப்பெரிது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. எத்தனையோ நல்ல தரமான பாடல்கள் இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி தீர்ப்பு ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. தாம்விரும்பும் நாடுகளுக்கு தரம்பாராது புள்ளியிடுவது ஒருபுறம், தமக்குப் பிடிக்காத நாடுகள், இனம் என்பதை தள்ளிவைப்பது என்பது மறுபுறம். இது துவேச வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துவிடும். இனிவருங்காலங்களிலாவது இப்படியான சீர்கேடுகள் இன்றி தரமான பாடல்களை கருத்து, இசை, காட்சி, பாவம் (பாடலின் உயிர்) போன்ற காரணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தரமான பாடல்களைத் தருவார்களா?

எதிர்பார்ப்புகளுடன்
நோர்வே நக்கீரா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *