எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பூநகரி-குருநகர் படகு சேவை நேற்று ஆரம்பம்

பூநகரிக்கும் யாழ்-குருநகருக்கும் இடை யிலான படகுச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதியமைச் சர்கள், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு இந்த படகுச் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்தப் படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக நான்கு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம், தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை இந்த படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் பெரிதும் நண்மையடையவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பூநகரியிலிருந்து குருநகருக்கு தற்பொழுது சென்றுவரும் பொதுமக்கள் வழங்கும் பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக படகின் மூலம் செல்லும் பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – குருநகர் பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ‘ஜெர்மன் வாரம்’ நடைபெறுகிறது!

Germany_Flagயாழ்ப் பாணத்தில் இன்று முதல் (14-06-2010) ‘ஜேர்மன் வாரம்’ நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐந்து நாட்களுக்கு நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் யாழ்.கோவில் வீதியிலுள்ள ஜி.ரி.இசட் நிறுவன விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளார். 

தொடர்ந்து இன்று மாலை யாழ. பொதுநூலக மண்டபத்தில் ‘யாழ்ப்பாணத்தில் ஜேர்மன் வாரம்’ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். நாளை 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையான நிகழ்ச்சிகள் யாவும் யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது கலையகத்தின் வளாகத்தில் நடைபெறும்.

தமிழ் மொழியிலான அரங்க நிகழ்வு 15ம் திகதி நடைபெறும். 16ம் திகதி ‘ஜெர்மனியில் கல்விகற்றல்’ எனும் தலைப்பில் ‘டாட்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஹெய்டி ஸ்ரெய்னர் உரையாற்றுவார். அன்று மாலையிலிருந்து 18ம் திகதி மாலை வரை ஜேர்மன் மொழியலான திரைப்படங்கள் காண்பிக்கப்படும். 

18ம் திகதி மாலை தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜெர்மன் சேர்பிய அணிகளுக்கிடையிலான போட்டி திரையில் ஒளிபரப்பப்படும்.  நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெர்மன் வார’ நிகழ்வுகள் கொழும்பிற்கு வெளியே முதற் தடவையாக   இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

”முல்லைத்தீவில் 22 000 வீடுகள் அழிவடைந்துள்ளது.” முல்லை அரச அதிபர்

Imelda_Sugumar_GAமுல்லைத் தீவு மாவட்டத்தில் மட்டும் போரின் காரணமாக 22 ஆயிரம் வீடுகள் முற்றாகச் அழிவடைந்துள்ளதாக முலலைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ஐயாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றை மீளமைப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், முல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மட்டும் 60 வீதமான மக்கள் மிள்குடியேற்றப்பட்டு உள்ளதாகவும், முல்லை மாவட்டத்தில் எல்லாமாக இதுவரை 13 612 குடும்பங்களைச் சேர்ந்த 39 470 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெடி பொருட்கள் அகற்றும் பணிகள்  நிறைவடைந்ததும் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் முதன்மையான தொழில் விவசாயமாகும். இவ்வருட காலபோகத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் நெல் விதைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், கைவிடப்பட்ட குளங்கள், காணிகளை திருத்துவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குமுதினி படகில் பயணிக்க ‘டோக்கன்’ முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

Kumudini_Boatகுறிக் கட்டுவான் – நெடுந்தீவிற்கிடையே சேவையில் ஈடுபட்டுவரும் குமுதினி படகில் பயணிப்பதற்கு பயணிகளுக்கு இப்போது ‘டோக்கன்’ முறை அமுல்படுத்தப்பட்டு உள்ளது. குமுதினி படகு அடிக்கடி பழுதடைந்து வருவதால் ஒரு தடவையில் நூறு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக ஒரு தடவையில் நூறு பயணிகளுக்கு மட்டுமே ‘டோக்கன்’ வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதகாரி தெரிவித்துள்ளார்.

Kumudini_Boatகுமுதினி படகில் முன்னர் நூறுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, இப்படகு அடிக்கடி பழுதடைந்த வருவதால் இதற்கான மாற்று ஒழங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நெடுந்தீவு பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நயினை நாகபூசணி அம்மன் திருவழாவில் அதிகளவிலான நகைகள் களவு போயின!

Naagapoosani_Amman_Kovilபல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நயினை நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றத் திருவிழாவில் அதிகளவு நகைள் களவாட்டப்பட்டுள்ளன. இம்முறை நடைபெற்ற  இவ்வாலயத் திருவிழாவில் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர். Jun 12 2010 நடைபெற்ற திருவழாவில் 18 பவுண் வரையிலான தங்க நகைகளை மக்கள் கள்வர்களிடம் பறிகொடுத்துள்ளனர்.

இக்களவுகளில் பெண்களே அதிகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிழாவில் பெண்களின் பக்கம் ஆண்கள் சென்றால் பெண்கள் சந்தேகப்பட்டு அவதானமாக இருப்பார்கள் என்பதனால் பெண்களே பெண்களின் பக்கம் நெரிசலாக இருக்கும் போது சாதுரியமாக நகைகளை அபகரித்துக்கொண்டு நழுவி விடுவதாக அக்கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

Naagapoosani_Amman_Kovilநடைபெறும் இக்களவுகள் காரணமாக பக்தர்கள் அவதானமாக இருக்கமாறும் கூடியவரை கோவிலுக்கு வரும்போது அதிகமான தங்க  நகைகள் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நயினை நாகபூசணி அம்மன் திருவிழாவிற்கு  அதிகளவு பக்தர்கள்  சென்றதால் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் முப்பதிற்கும் மேற்பட்ட படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. படகுகளில் மக்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்தே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!!

ATN_Jewelersகிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் செலுத்திய கட்டுப் பணத்தையும் இழந்து நிர்க்கதியாகி உள்ளனர்.உரிமையாளர்(கள்) தலைமறைவான நிலையில் வாடிக்கையாளர்கள் நகைக்கடைக்கும் வீட்டுக்குமாக அலைகின்றனர்.

ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடை அண்மைக் காலமாகப் பூட்டப்பட்டு உள்ளது. இவர்களிடம் நகைச் சீட்டுப் போட்ட பலரும் தங்களுடைய பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர்.

ATN_Jewelersஏரிஎன் ஜவலர்ஸில் நகைச்சீட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னதாகவே லண்டன் குரலுக்கு இது பற்றி அறியத் தந்தனர். அக்குடும்பத்தினர் 2008 பிற்பகுதியில் ஏரிஎன் ஜீவலர்ஸில் நகை வாங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏரிஎன் ஜீவலர்ஸ் அக்குடும்பத்தினரை நகைச்சீட்டில் சேர வற்புறுத்தினர். பெண்களுக்கு நகைகள் மீதுள்ள மோகத்தை குறிவைத்து ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைச்சீட்டில் ஏராளமானவர்களை இணைத்துக் கொண்டனர்.

குறிப்பிட்ட குடும்பத்தினர் 13 மாத கால நகைச்சீட்டில் இணைந்து கொண்டனர். சீட்டு முடிவில் அவர்களுக்கு 13 பவுண் நகைகொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஏரிஎன் ஜிவலர்ஸ் அவர்கள் இரு மாதம் 5 நாட்கள் தாமதமாகக் கட்டியதற்காக மாதத்திற்கு ஒரு பவுண் வீதம் 2 இரு பவுண்களைக் கழித்துக் கொண்டனர். இது குறித்து சீட்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருக்கவில்லை.

மிகுதி 11 பவுண்களுக்கும் சரியாக நகைகள் கொடுக்கப்படவில்லை. தனித் தங்க நகைகளுக்குப் பதிலாக கல் பதித்த இரு நெக்லஸ் நகைகள் (ஒவ்வொன்றும் நான்கு பவுண்கள்) வழங்கப்பட்டது. கல்லின் நிறைக்கான தங்கம் சீட்டுப் பிடித்தவர்களுக்கு நட்டமாகியது.

மேலும் ஏரிஎன் ஜீவலர்ஸினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு தங்க நாணயங்கள் (ஒவ்வொன்றும் ஒரு பவுண்) 22 கரட் தரம் இல்லாதவை என்பதனை நகைவினைஞர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏரிஎன் ஜீவலர்ஸில் நகைச்சீட்டு போட்டவர்களிடம் இருந்து இவ்வாறான கதைகள் பல தாராளமாகவே வெளிவருகின்றது. இதனைவிட இன்னும் பலருக்கு நகைச்சீட்டின் எப்பெறுமதியும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஏரிஎன் ஜீவலர்ஸிடம் சென்று மன்றாடி தனது நகைச்சீட்டின் பெறுமதிக்கு காசோலையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் மீளவும் அவரிடமே வந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்னதாக ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கு ‘ஏரிஎன் சொப்’ எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. ஆயினும் தொடர்ந்தும் கடை பூட்டப்பட்டே உள்ளது.

ATN_Jewelersஏரிஎன் ஜீவலர்ஸ் சர்ச்சைக்கு உள்ளானது இது முதற்தடவையல்ல. கிறடிட்காட் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் ஏரிஎன் ஜீவலர்ஸ்க்கும் வோல்தம்ஸ்ரோ இளைஞர் குழுவுக்கும் நகைக் கடையிலேயே மோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஏரிஎன் ஜீவலர்ஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்டோர் போட்டி – வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் களத்தில் குதிக்கத் தயார்

unp.jpgஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கென நான்குக்கும் மேற்பட்டோர் போட்டியிடத் தயாராக உள்ளதாக ஐ. தே. க. உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக வேறொருவர் கட்சித் தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்டால், அது ஒரு நான்குமுனைப் போட்டியாக இருக்குமென்று தெரிய வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி ஆதரவாளர் ஒருவரின் கொழும்பு 07 பகுதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தை யொன்றில், ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாச முன்வரவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச கட்சித் தலைமைத்து வத்திற்காகப் போட்டியிட்டால், மேலும் இருவர் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் இந் நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரம சிங்கவை நீக்க முடியாத சூழல் உருவாகுமென்பதே கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

சஜித் பிரேமதாச தலைமைத்துவத்திற்கு வர முயற்சித்தால் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ரவி கருணாநாயக்க எம். பி. வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். எவ்வாறெனினும் ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து சஜித் பிரேமதாச போட்டியிடும் பட்சத்தில் இவர் அரசியலில் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகலாம் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதே நேரம், ரவி கருணாநாயக்க போன்றோர் போட்டியிட முன்வரும் பட்சத்தில் சஜித் ஆக பின்னிலைக்குத் தள்ளப்படுவாரென்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தலைமைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தமது ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவேண்டும் -வீ.நாராயணசாமி

narayanasamy.jpgதமிழ கத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வீ நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். பயங்கரவாதம் தமது நாட்டில் எங்கும் பரவாத வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் புகையிரத பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆர்வளர்கள் வெடிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சிகிச்சைபெற அனுமதி – இந்திய மத்திய அரசு அறிவிப்பு

பிரபாவின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 திகதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்ப¨யில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள்.

நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கைக்கு சென்றுவிட்ட காரணத்தினால், மத்திய அரசு 18.5.2010 அன்று தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பார்வதி அம்மாளின் உடல்நிலை கருதியும், அவர் தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை மனதிலே கொண்டும் அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனையை தளர்த்தி அவரது மகளின் இல்லத்திலே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அந்த அம்மையாரின் உறவினர்களும், நண்பர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டிருந்தார்கள்.

இந்தக் கடிதத்திற்கு 20.5.2010 அன்று தமிழக அரசு அனுப்பிய பதிலில் பார்வதி அம்மாள் அவரது மகளின் இல்லத்திலே சிகிச்சை பெறுவது பற்றி தமிழக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், அந்த அம்மையாரை அவரது நண்பர்கள் வந்து சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவினை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையிலே உள்ள இந்திய தூதுவருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ள பதிலில், பார்வதி அம்மாள் அவருடைய மகளின் இல்லத்திலே தங்கலாம் என்றும், அந்த அம்மையாரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும், ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுபற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிகோபர் தீவுகளுக்கு அருகாமையில் பாரிய நில நடுக்கம் , சுனாமி எச்சரிக்கை

tsunami.jpgநிகோபர் தீவுக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இவ் நிலநடுக்கமானது 7.7 அளவினைக் கொண்டுள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் எனவே கடற்கரையை அண்டிய பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நேரம் பசுபிக் சுனாமி அவதானிப்பு நிலையமும் இப்பாரிய நிலநடுக்கமானது சுனாமியை ஏற்படுத்தும் என வெளியிட்டுள்ளது.

இச்சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் இலங்கை நேரம் அதிகாலை 1:00 மணியளவில் கொழும்பில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக்கட்டடங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கத்தினை உணர்ந்த மக்கள், கட்டிடங்களை விட்டு வீதியில் நின்றதாக கொழும்பு பகுதி மக்கள் தெரிவித்த போதிலும், மட்டக்களப்பிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும், இலங்கையில் சுனாமி ஏற்படாது என தற்போது சுனாமி அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

சுனாமி அலாரம் மூலம் சுனாமி பற்றி உடனுக்குடன் அறியலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.