யாழ்ப் பாணத்தில் இன்று முதல் (14-06-2010) ‘ஜேர்மன் வாரம்’ நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐந்து நாட்களுக்கு நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் யாழ்.கோவில் வீதியிலுள்ள ஜி.ரி.இசட் நிறுவன விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
தொடர்ந்து இன்று மாலை யாழ. பொதுநூலக மண்டபத்தில் ‘யாழ்ப்பாணத்தில் ஜேர்மன் வாரம்’ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். நாளை 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையான நிகழ்ச்சிகள் யாவும் யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது கலையகத்தின் வளாகத்தில் நடைபெறும்.
தமிழ் மொழியிலான அரங்க நிகழ்வு 15ம் திகதி நடைபெறும். 16ம் திகதி ‘ஜெர்மனியில் கல்விகற்றல்’ எனும் தலைப்பில் ‘டாட்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஹெய்டி ஸ்ரெய்னர் உரையாற்றுவார். அன்று மாலையிலிருந்து 18ம் திகதி மாலை வரை ஜேர்மன் மொழியலான திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.
18ம் திகதி மாலை தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜெர்மன் சேர்பிய அணிகளுக்கிடையிலான போட்டி திரையில் ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெர்மன் வார’ நிகழ்வுகள் கொழும்பிற்கு வெளியே முதற் தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.