எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நீர்வேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிழந்தார். நீர்வேலி இராசபாதையில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றது. யாழ். நகரிலிருந்து சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தோடு மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரான அனலைதீவைச் சேர்ந்த கு. நிர்மலன் (வயது-25) என்பவரே உயிழந்தார். அவரோடு பயணித்த இன்னொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸலிம்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

வடக்கில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரம் வீடுகளை முஸ்லிம் மக்களுக்கு வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடமும், மீள்குடியேற்ற அமைச்சிடமும் மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பலர் வடபகுதிக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் வடபகுதியிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை 10 வீதமாகும். எனவே, இந்திய அரசு வடபகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய. இலங்கை அரசுகளை மன்னார் மீள்குடியேற்ற அமைப்பு கோரியுள்ளது.

கிழக்கு மாகாண காடுகளில் களவாக புதையல் தோண்டப்படுகின்றன!

கிழக்கு மாகாணத்திலுள்ள அடர்ந்த காடுகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளும், கஞ்சா செடிகளை உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளும் மற்றும், மரங்களை வெட்டிக் கடத்துகின்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கன்றன.

கிழக்குக் காடுகளுக்குள் காணப்படும் புராதன சின்னங்களைத் களவாகத் தோண்டியெடுத்து விற்பனை செய்வதைத் தடுக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடபட்டு வருகின்றனர். அதேவேளை, தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சில உள்ளுர்வாசிகளின் உதவியுடன் காட்டுப் பகுதிகளுக்குள் சென்று சதாதிஸ்ஸ என்ற மன்னனின் ஆட்சிகால தொல்பொருள் சின்னங்களைத் தோண்டி எடுத்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குழுவினர் அண்மையில் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.  காடுகளுக்குள் கஞ்சா உற்பத்தி செய்து பதப்படுத்தி அக்கரைப்பற்று வழியாக கொழும்பிற்கு கடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச் செயல்களையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட காட்டுப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிக்காட்டுவான் இறங்குதுறையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை! உள்ளுர் பயணிகள் புறக்கணிப்பு!

யாழ்.குறிகாட்டுவான் இறங்குதுறையில் நயினாதீவிற்குச் செல்வதற்காக வரும் தென்பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸாரும் இருர்ணுவத்தினரும் தனிப்பட்டவகையில் சலுகை அளிப்பதாகவும் நெடுந்தீவு, நைனாதீவு பயணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் நெடுந்தீவு, நயினாதீவு பயணிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து குறிக்காட்டுவான் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படயினர் ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர். இவ்வாறு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் படையினர் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தாமதமின்றி செல்வதற்கு முன்னுரிமை வழங்கி வருவதோடு, அவை குறிக்காட்டுவான் வரை செல்வதற்கும் அனுமதிக்கின்றனர். நயினாதீவு, நெடுந்தீவு செல்லும் பயணிகள் பஸ்கள் இறங்குதுறை வரை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தீவுப்பகுதிகளிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய செல்பவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்பவர்களும் இதனால் பெரிதும பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளில் சகல மக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை படையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

Prof_Hoole_at_Thesam_Meeting_27Aug10பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்  நேற்று நாடு திரும்பினார். 2006ல் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஹூல்  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் நியோர் Rensselaer Polytechnic Institute இல் தன் தன் கற்பித்தலை மேற்கொண்டு இருந்த பேராசிரியர் செம்ரம்பர் 2 2010ல் மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து இலங்கை செல்வதற்கு முன்னதாக தேசம்நெற் அழைப்பில் லண்டன் வந்திருந்த பேராசிரியர் ஹூல் லண்டனில் இடம்பெற்ற கல்வியியல் சந்திப்புக்களில் கலந்துகொண்டிருந்தார். ஓகஸ்ட் 29 2010ல் இடம்பெற்ற சந்திப்பில் ‘வடக்கு – கிழக்கு (வடகிழக்கு) இல்/க்கான கல்வி’ என்ற தலைப்பில் 45 நிமிட பேருரையை வழங்கினார்.

Prof_Hoole_at_London_Meeting_29Aug10ஓகஸ்ட் 31 முதல் அவருடைய அமெரிக்க கல்வி நிறுவனத்தின் வேலையில் இருந்து நீங்கும் இவர் தான் பிறந்த தன்னை வளர்த்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு தன் சேவையை வழங்க செல்வதாக தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணியை முடித்துக்கொண்டு இலங்கைப் பேரதனைப் பல்கலைக்கழகத்தில் தன் கற்பித்தலைத் தொடர்ந்த போதும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். மிகவும் முடிய இறுக்கமான  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் தனக்கு வெளியே இருந்து வருபவர்களை உள்வாங்க முன்வருவதில்லை. கிணற்றுள் தவளையாகவே இந்நிர்வாகம் செயற்பட்டு வந்தது. பல்கலைக்கழக கணணியில் துறையை நிறுவி செயற்பட வைத்த பேராசிரியர் ஹூல்  யாழ் பல்கலைக்கழகத்தில் கணணியியல் துறைக்கு விண்ணப்பித்த போது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தற்போது மேற்படி துறைக்கு அவரை நியமிக்குமாறு நீதிமன்றம் ஆணை பிற்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் ஹூல்  இன்னும் சில தினங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணமாகின்றார்.

பேராசிரியர் ஹூல்  உடன் அவரது துணைவி துஸியந்தி ஹூல்  உம் மகன் யோவான் ஹூல்  உம் யாழ் செல்கின்றனர். துஸியந்தி ஹூல்  உம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்த போதும் அவரது விண்ணப்பமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் முதல் யோவான் ஹூல் யாழில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர உள்ளார். பேராசிரியர் ஹூல் யாழ் திரும்புவதும் தனது கற்பித்தல் கடமையை தொடர முடிந்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும். புலம்பெயர்நாடுகளில் கல்வியியல் செழிப்புடன் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை தம் மக்களுடன் பகிந்துகொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமையும்.

Sooriyasegaram_Mஇடதுசாரி சிந்தனையாளரும் கடந்த காலங்களில் தேசம்நெற் கூட்டங்களில் அறியப்பட்டவரும் ஆன சூரியசேகரம் தற்போது இலங்கை சென்று யாழ் மாநகரசபைக்கு ஆலோசகராக கடமையாற்றுகின்றார். கம்டன் கவுன்சிலின் பெரும்தெருக்கள் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தனது அனுபவங்களை ஆற்றலை யாழ் மாநகரசபையுடன் பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் அவசியமான ஒரு காலகட்டத்தில் பேராசிரியர் ஹூல்  யாழ் வருகிறார் எனத் தெரிவித்த சூரியசேகரம் பேராசிரியர் ஹூல்  போன்ற ஆளுமைகள் யாழ் கல்விச் சமூகத்திற்கு அவசியமானது எனத் தெரிவித்தார்.

அறிவுத் தேடலுடன் தம முன்னேற்றத்திற்கான தாகத்துடன் உள்ள தாயக மக்களுக்கு பேராசிரியர் ஹூல்  போன்று பல்துறை சார்ந்தவர்களும் தங்கள் சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் முன்வருவது லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்களில் மிகவும் வரவேற்கப்பட்டது. இலங்கை செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்தாலும் லண்டனுக்கு வந்ததன் பின் கிடைத்த ஆதரவும் வாழ்த்துக்களும் தன்னை உற்சாகப்படுத்தியதாக லண்டனில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன் பேராசிரியர் ஹூல்  தெரிவித்தார்.

Prof_Hoole_Meeting_27Aug10தன்னிடம் பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறிய பேராசிரியர் ஹூல்  தனது எல்லைக்குட்பட்ட விடயங்களை மட்டுமே தன்னால் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தருக்கான பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி இரு கட்டங்களினூடாக தெரிவு செய்யப்படுகின்றது. முதற்கட்டத்தில் பல்கலைக்கழக சபையில் உள்ள உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் University Grants Commission வழங்கப்படும். அடுத்து பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார்.

2006ல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் தனது கடமையைச் செய்வதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த பல்வேறு அநியாயங்களின் பட்டியலில் கல்விச் சமூகத்தை சீரழித்தது குறிப்பிடக்கூடிய ஒன்று.

தற்போது யாழ் திரும்பும் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கான பதவிக்கு போட்டியிட உள்ளார். அவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் தற்போது பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் பேராசிரியர் ஹூல் உடைய வெளிப்படையான பேச்சும் நேர்மையான நடவடிக்கைகளும் அவரது தெரிவுக்கு எதிரானதாக அமையலாம் என்ற அச்சமும் கல்வியியலாளர்கள் மத்தியில் உள்ளது.

Thavarajah_Sபேராசிரியர் ஹூல் ஓகஸ்ட்30ல் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் கல்வி நிலை தொடர்பாகவும் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விநிலை தொடர்பாகவும் உரையாடினார். இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா பேராசிரியர் ஹூல் 2006ல் தனது துணை வேந்தர் பணியை மேற்கொள்ள முடியாது போனது துரதிஸ்டமானது என்றும் அவர் தற்போது யாழ் திரும்பிச் செல்வது பாராட்டுக்கு உரியது என்றும் தெரிவித்தார். பேராசிரியர் ஹூல் உடைய தகமையுடன் இலங்கையில் யாரும் இல்லை எனத் தெரிவித்த எஸ் தவராஜா அவருடைய சேவைக்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பேராசிரியர் ஹூல் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்திப்பும் அவர் யாழ் செல்ல எடுத்த முடிவை மனதார வாழ்த்துவதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹூல் அங்கு அதிசயம் எதையும் நிகழ்த்த முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இது மாற்றத்திற்கான முதற்படியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் – சு.க. மாநாட்டில் ஜனாதிபதி

slfp.jpgஎனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான் தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல் யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசியல் யாப்பு மாற வேண்டும்.

இந்த அரசியல் யாப்பின் ஊடாக மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் தேவையான பலத்தை பெற்று வலுவான அரசை அமைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எமது பொறுப்பு என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.

நாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக்கின்றோம். அது மக்கள் மயமான அரசியல் யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக்காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்கக் கூடியதல்ல.

தற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது ஷரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களின் பட்டியல் உள்ளது. அதில் மன நோயாளர்கள், லஞ்சம் பெற்றவர்கள், வங்குரோத்துகாரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கின்றது. இதற்கு மாற்றமாக பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர்.

மக்கள் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்றனர். அதனையே நாம் செய்கின்றோம். அதனால் மக்களுக்கு உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமாராவுடன் பேச்சு

nerupama.jpgதமிழ்க் கட்சிகள் அரங்கம் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை சந்தித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தது. இந்திய இல்லத்தில் நேற்றுக்காலை சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்க் கட்சிகள் அரங்கப்பிரதிநிதிகள் இந்திய வெளிவிகார செயலாளரிடம் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீள்கட்டுமானம், உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் இராணுவ முகாம் ளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அதன் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார செயலாளர், இந்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவும். இதற்காக 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவிருப்பதாகவும் மலையக மக்களுக்காக பல்வேறு உதவிகளை முன்னெடுக்க விருப்பதாகவும் கூறினார்.

சீன ஊசிட்டி நகரமும் கண்டி மாநகரமும்

sarath.jpgசீனாவின் ஊசிட்டி நகரமும் கண்டி மாநகரமும் ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யேன் சியூபின் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரின் ஒப்புதலுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தமிழ் கட்சிகள் பிரிந்துள்ளமை குறித்து நிருபமா கவலை

niru.jpgதழிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த தன்னை சந்திக்காதது தனக்கு கவலையளிப்பதாக இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்ததாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் என்.குமரகுருபரன் தெரிவித்தார்.

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

baby_mother.jpgபிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.

குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், “இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,”என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை’ என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். “உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது’ என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

baby_mother.jpg