எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜப்பானின் விஷேட தூதுவர் அகாசியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

yasusi.jpgஇலங் கைக்கான ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ரி.கனகசபை, எஸ். பத்மநாதன், ரி.பத்மினி, எஸ். அரியநேத்திரன் ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வன்னியில் அரச படைகளால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அவல நிலைமைகள் தொடர்பாகவும் அங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதனை விட அரசியல் தீர்வொன்றின் மூலம் உரிய தீர்வொன்றைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

காஸாவில் பொஸ்பரஸ் குண்டு பற்றி விசாரணைக்கு உத்தரவு

gaa-sa.jpgயுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து  தற்போது காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இல்லை. காஸா மக்கள் தங்களது சொந்தங்கள் சொத்துக்களைத் தேடி அலைகின்ற வேளையில் இடி பாடுகளுக்கிடையில் சிக்குண்ட சடலங்களையும் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.  நாட்கள் கடந்த நிலையில் மீட்டெடுக்கப்படும் சடலங்கள் உருக்குலைந்து அழுகியுள்ளன. இதனால் பிரேதங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடிந்த வீடுகள், தொழிற்சாலைகளைக் கண்ட மக்கள் தலையில் அடித்து கதறி அழுதனர். இதுவரையான கணக்கெடுப்பின்படி காஸாவில் 1284 பேர் பலியானதாகவும் இவற்றில் 894 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் 280 பேர் குழந்தைகள் எனவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

இஸ்ரேல் தாக்குதலின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாகவும் இதனால் ஏராளமான காஸா மக்கள் எரி காயங்களால் அவதிப்படுவது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளதால் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கு இஸ்ரேலியத் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள், மீட்புப் பணியாளர்கள் பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். இதனால் குழப்பமுற்ற இஸ்ரேல் அரசு இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. சுமார் 500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதுடன் ஏராளமான சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல் இடிபாடுகளைத் துப்புரவு செய்யும் ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் காட்டியது.

பெரும்பாலானோர் சுரங்க இடிபாடுகளைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இஸ்ரேலின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை பக்கச் சார்பின்றி முன்னெடுக்க ஐ. நா.வும் ஒத்துழைப்பு வழங்குவுள்ளதாக அறவித்துள்ளது.  சட்ட ரீதியான ஆயுதங்களையே தாம் பயன் படுத்தியதாக இஸ்ரேல் கூறுவதை அனேக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டமைச்சர் சிபிலிவின் சர்வதேச நாடுகளிடம் ஹமாஸின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

சரியானதை பகிரங்கமாக கூறும் வல்லமை ரஞ்சன் விஜேரட்ணவுக்குப் பின் கோதாபயவுக்கே -பாராட்டுகிறார் ஊடக அமைச்சர்

laksman-yaappa.jpgதனக்குச் சரியெனப்பட்டதை எந்தவித தயக்கமுமின்றி பகிரங்கமாகக் கூறும் வல்லமை முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணவுக்கு அடுத்தபடியாக இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு மட்டுமே உண்டு எனத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன படையினர் முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைக்கு மாசுகற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பவராகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தனது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாதுகாப்புச் செயலாளர் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் அரசியல்வாதியல்ல. ஒரு அதிகாரியாவார். அவர் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால் அவரது கருத்துகளில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அரசாங்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர  அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில ஊடகங்கள் உள்ளூரிலும், சர்வதேசத்திலும் தவறான தகவல்களை தெரிவித்துவருகின்றன. அதனைக் கண்டிப்பது தவறாக முடியுமா? எனக் கேட்கவிரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ண எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுபவராவார். அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் ஜே.வி.பி.யை சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டபோது அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ரஞ்சன் விஜேரட்ணவிடம் ஜே.வி.பி. இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு அரசுதானே பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அதற்கு சட்டெனப்பதிலளித்த ரஞ்சன் விஜேரட்ண ஆமாம் அரசுதான் பொறுப்பேற்கின்றது.அதிலென்ன தவறு. வன்முறை, பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை தாலாட்டவா சொல்கிறீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோன்றுதான் இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் செயற்படுகிறார். யுத்தத்தை விமர்சித்து அதற்கு மாசு கற்பிக்க முயற்சி செய்வோர் விடயத்தில் அவர் கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறார். இதில் எந்தத் தவறுமில்லையே. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கே யுத்தம் நடத்தப்படுகிறது. எந்தவொரு இனத்துக்கும் எதிராக நாம் போர் தொடுக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார

வடக்கு மக்களின் பாதுகாப்புக் குறித்து பிரிட்டிஷ் தூதுவர் ஹய்ஸ் கவலை

போர் நடைபெறும் வட பகுதில் உள்ள மக்களின் பாதுகாப்புக் குறித்து இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் பீட்டர் ஹெய்ஸ் கவலை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்குள்ள நிலவரங்கள் குறித்து அரசியல்வாதிகள், சமய, சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

யுத்த நிலைமை விலகிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், வடக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டால், அனைத்து விடயமும் பலனற்றதாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடல் எல்லை தொடர்பாக சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை – பாராளுமன்றத்தில் அமைச்சர் தினேஷ்

denees.jpgஇந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சார்க் மாநாட்டில் வடக்கு கடல் எல்லை தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லையென அரச தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே கடற்றொழில் நீரக வளங்கள் அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

இலங்கையின் வடக்கு கடல் வலயத்தில் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தூரம் எமது நாட்டிற்கு சொந்தமானதாகும். இதில் பருத்தித்துறையிலிருந்து கிழக்காக 16 கடல் மைலும் காங்கேசன்துறையிலிருந்து கிழக்காக 15 கடல் மைலும் திருகோணமலையிலிருந்து கிழக்காக 122 கடல் மைலும் முல்லைத்தீவிலிருந்து கிழக்காக 28 கடல் மைலும் உள்ளடங்குகின்றது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இந்திய மீனவர்களின் 66 படகுகள் தொடர்பிலான வழக்கு யாழ். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எல்லை தாண்டியதாலேயே இவை கைப்பற்றப்பட்டன.  இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே, இலங்கையின் கடல் எல்லையின் தூரம் நீங்கள் கூறியதை விடவும் அதிகமாக இருந்ததென்பதை ஏற்றுக்கொள்வீர்களா என்று அமைச்சரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைவாக கடல் எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படும் எனினும்,வடக்கு கடல் எல்லை தொடர்பில் சார்க் மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார

ஐ.சி.ஆர்.சி.யின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு வலயத்திற்கு வன்னி மக்களை அனுப்புவதற்கு நடவடிக்கை

red_cross.jpgவன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களை அரசு புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தினுள் அனுப்பி வைப்பதற்குரிய ஒத்துழைப்பை பெற்று கொள்வது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா பிரதிநிதியுடன் வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய பேச்சுகள் நடத்தியுள்ளார். கடந்த புதன் கிழமை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா அலுவலகத் தலைமையதிகாரி வலரி பெட்டிட்டியருக்கும் வன்னி இராணுவத் தளபதிக்கும் இடையிலான இந்தச் சந்திந்திப்பின்போது, அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துவது, விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முல்லைதீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைத் தருமாறு வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரியிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, வன்னிப் பிரதேசத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து உலக உணவுத்திட்ட அதிகாரியுடனும், வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து வவுனியாவில் உள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியுடன் பேச்சுகள் நடத்தியதுடன் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்து வருவது குறித்தும், வன்னிப்பிராந்திய இராணுவத்தளபதி பேச்சுகள் நடத்தியுள்ளார்.

இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் ஆதரவா? கஜேந்திரன் எம்.பி. கேள்வி

வன்னியில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்காதிருப்பது, படுகொலைகளுக்கு ஆதரவழிப்பதாகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நடத்திய ஷெல் தாக்குதலில் முல்லைத்தீவு வைத்தியசாலை பலத்த சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் இயங்கிவந்த பொது வைத்தியசாலை இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள மக்கள் செறிந்து வாழும் பகுதியான வள்ளிபுனத்தில் உள்ள பாடசாலையில் இயங்கிவந்தது. வைத்தியசாலை இடம் பெயர்ந்து இயங்கும் இடத்தின் அமைவிடம் பற்றிய விபரம் அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இலங்கை அரசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12.20 மணியளவில்  இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலையை இலக்கு வைத்து மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள் காரணமாக அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்தினுள்ளும் அதி தீவிரசிகிச்சைக் கூடத்தினுள்ளும் மற்றும் வைத்தியசாலை விடுதி என்பவற்றினுள்ளும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலைவளாகத்தினுள் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் அச்சம் காரணமாக வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் அனைவரும் சிதறி ஓடி பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்புத் தேட வேண்டிய அவல நிலைக்குள் தள்ளப்பட்டனர். தாக்குதல் காரணமாக வைத்தியசாலை பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி வரதராஜா தெரிவித்துள்ளார். மூன்று நாட்களில் மட்டும் நூறுவரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன். 400 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

தமிழ் மக்களை முற்றாக அழிக்கும் வகையிலேயே வைத்தியசாலையை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவற்றை சர்வதேச சமூகம் கண்டிக்காது மௌனமாக இருப்பது படுகொலைகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமைகின்றது. சில தினங்களுக்கு முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு ஊக்கம் வழங்குவதாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மேற்படி தாக்குதல்களை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தல் வன்முறைகள் – அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாக விசனம்

ballot-box.jpgதேர்தல் தொடர்பாக இதுவரை 16 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளதுடன் மத்தியமாகாணத்தில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் சகலரையும் கருத்தரங்கென்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் நடத்தியமை தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானதாகும் என்றும் சாடியுள்ளது. இது தொடர்பாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை கலைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி டிசம்பர் 11 இல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை 16 தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெருமளவானவை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடும் மலையகமக்கள் முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் போது சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் போது தேர்தல் சூடுபிடிக்கும் போது வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதேவேளை, அட்டனில் ஜனநாயக மக்கள் முன்னணி மீதும் கண்டியில் ஐ.தே.கட்சி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திலேயே வன்முறைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

இதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதாகும். இது இவ்வாறிருக்க அரச சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. கண்டிமற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளை மூடி சகல அதிபர், ஆசிரியர்களை கருத்தரங்கு என்ற பெயரில் அழைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு முரணானதாகும் தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானிடம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் நிதி உதவி வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் தான் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தன் வெளிநாட்டுக் கொள்கையில் அறிவித்தார். இது வெளியானதும் பாகிஸ்தான், ஒபாமா மீது பாயத்தொடங்கி உள்ளது.

ஒபாமா தேர்தல் பிரசாரத்தின்போதே அல்கொய்தாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அரசு அல்கொய்தா இலக்குகளைத் தாக்கி அழிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்றும் எச்சரித்து இருந்தார். இதனால் புஷ் மாதிரி ஒபாமா இருக்க மாட்டார் என்பது பாகிஸ்தானுக்கு புரிந்துபோனது. இதனால் தான் அவர் பதவி ஏற்றபோது போட்ட கையெழுத்தின் மை கூட காய்வதற்கு முன்பு அவர் மீது தன் கோபத்தை காட்ட பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி பாகிஸ்தானில் உள்ள ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ஒபாமா பொறுமையை கடைப்பிடிப்பார் என்று பாகிஸ்தான் நம்புகிறது.  பாகிஸ்தானுடன் சாதகமான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்போம். புஷ் பாகிஸ் தானுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை பாகிஸ்தான் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத் கூறுகையில், இதுபோன்ற எதற்கும் உதவாத போக்குகளை ஒபாமா கைவிடவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தன் நேர்மையை அமெரிக்காவிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சீனாவில் விஷம் கலந்த பால் உற்பத்தி 2 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

சீன பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனையும் பெண் அதிகாரி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் ஏனையவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது பீஜிங் நீதிமன்றம். அதன் விபரம் வருமாறு:- சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் தயாரான குழந்தை கள் பால் பவுடரில் நச்சுத்தன்மை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விஷத் தன்மை உள்ள பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் 6 பேர் பலியானார்கள்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கிட்னி, ஈரல் பழுதடைந்தது. சில குழந்தைகளுக்கு கை, கால் முடங்கியது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பால் பொருள்களுக்கு உலக நாடுகள் தடை விதித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள், விற்பனை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பீஜிங் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் பால் நிறுவனத் தலைவர் உட்பட 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. பெண் அதிகாரி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீதி உள்ளவர்களுக்கு 2 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.