வன்னியில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்காதிருப்பது, படுகொலைகளுக்கு ஆதரவழிப்பதாகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நடத்திய ஷெல் தாக்குதலில் முல்லைத்தீவு வைத்தியசாலை பலத்த சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவில் இயங்கிவந்த பொது வைத்தியசாலை இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள மக்கள் செறிந்து வாழும் பகுதியான வள்ளிபுனத்தில் உள்ள பாடசாலையில் இயங்கிவந்தது. வைத்தியசாலை இடம் பெயர்ந்து இயங்கும் இடத்தின் அமைவிடம் பற்றிய விபரம் அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இலங்கை அரசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12.20 மணியளவில் இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலையை இலக்கு வைத்து மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள் காரணமாக அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்தினுள்ளும் அதி தீவிரசிகிச்சைக் கூடத்தினுள்ளும் மற்றும் வைத்தியசாலை விடுதி என்பவற்றினுள்ளும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் காரணமாக வைத்தியசாலைவளாகத்தினுள் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் அச்சம் காரணமாக வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் அனைவரும் சிதறி ஓடி பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்புத் தேட வேண்டிய அவல நிலைக்குள் தள்ளப்பட்டனர். தாக்குதல் காரணமாக வைத்தியசாலை பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி வரதராஜா தெரிவித்துள்ளார். மூன்று நாட்களில் மட்டும் நூறுவரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன். 400 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.
தமிழ் மக்களை முற்றாக அழிக்கும் வகையிலேயே வைத்தியசாலையை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவற்றை சர்வதேச சமூகம் கண்டிக்காது மௌனமாக இருப்பது படுகொலைகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமைகின்றது. சில தினங்களுக்கு முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு ஊக்கம் வழங்குவதாகவே அமைந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மேற்படி தாக்குதல்களை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.