எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புலிகளின் தற்கொலைப் படகு முல்லைக் கடலில் தாக்கி அழிப்பு

sl_navy.jpgபுலிகளின் தற்கொலைப் படகு ஒன்றை கடற்படை படகுகள் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்கே கரையோரத்தை அண்மித்த பிரதேசத்தில் நேற்று அதி காலை 3.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் கடுமையான தாக்குதல்களில் புலிகளின் தற்கொலைப் படகு வெடித்துச் சிதறி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த படகிலிருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு வடக்கு கரையோரத்தை அண்மித்த கடற்பரப்பில் புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று செல்வதை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் அவதானித்து கடற்படையின் அதிவேக தாக்குதல் மற்றும் டோரா படகுகளைப் பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் கடற்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புலிகளின் விநியோகங்களையும், புலிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் வடக்குக் கரையோர பிரதேசம் மற்றும் கடற்பரப்பில் கடற்படையினர் நான்கு தடை வலயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், முதலாவது, இரண்டாவது தடை வலயங்களில் கடற்படையின் துரித செயலணி, விசேட படகு அணி, அதிவேக தாக்குதல் படகுகளும், மூன்றாம், நான்காம் தடை வலயங்களில் பீரங்கி படகுகளும், கரையோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுக்கும் இரண்டாவது யுத்தம் – தென்மாகாண முதலமைச்சர்

ballot-box.jpgமாகாண சபைத் தேர்தலை நாட்டை மீட்டெடுப்பதற்கான இரண்டாவது யுத்தம் எனக் கருதி  மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனத் தென் மாகாண முதலமைச்சர் ஷான்விஜயலால் தசில்வா தெரிவித்தார். மாத்தளை சுதந்திரக் கட்சி பணிமனையில் கட்சியின் அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறுகையில்;

ஆங்கில ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து தாய் நாட்டை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்த வீரபுரன் அப்பு, கொங்கடுவெல பண்டார போன்ற வீர புருஷர்கள் மாத்தளை மாவட்டத்திலேயே தோன்றியுள்ளனர். மாத்தளை மண்ணில் இருந்தே வெள்ளைக்காரர்களிடமிருந்து தாய் நாட்டை மீட்கும் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அந்நியரிடமிருந்து மீட்கப்பட்ட எமதுமண் இன்று பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்குண்டுள்ளது. அன்றைய வீரபுருஷர்களை போன்றே இன்று எமது முப்படையினரும் , உயிர்த்தியாகம் செய்து போராடி, எமது நாட்டை படிப்படியாக மீட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் அரசியல் சாணக்கியமும் ஆளுமை மிக்க தலைமைத்துவமுமே இதற்கான காரணம்.

நாட்டின் இறைமையையும் , ஒருமைப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமாயின் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் .நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு இடமளிப்பார்களானால் இதுவரை கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்படும். ஜனாதிபதித் தேர்தலை விட இந்த மாகாணசபைத் தேர்தல்களில் பெருமளவு மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி பெற்றுள்ளார்.  என முதலமைச்சர் ஷான்விஜயலால் தசில்வா குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

redcrose2801.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தங்கியிருந்து நோயாளர்களில் ஒரு தொகுதியினர் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (29) இவர்களை மீட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின அமைப்பின் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துளளார்.

விடுதலைப் புலிகளுடனும் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து குறித்த இந்த 226 நோயாளர்களையும் போர் தணிந்திருந்த சிறிய இடைநேரத்தில்  அழைத்துவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீட்கப்பட்ட நோயாளர்களில் 50 சிறுவர்கள் அடங்கியுள்ளதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நோயாளர்களை அழைத்துவருவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் பல தடவைகள் மேற்கொண்டிருந்த போதிலும் அது கைகூடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலைய அலுவலகத்தை சுற்றிவளைத்த மாணவர்கள் கைது

சென்னை உயர் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவேளையில் இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்; இன்று முற்பகல் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை; சுற்றி வளைக்க முற்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள பிரதி உயர் ஸ்தானிகர் பி.எம். ஹம்சா தெரிவித்தார். இதனையடுத்து 35 மாணவர்களை பொலிசார் கைதுசெய்ததாக பிரதி உயர் ஸதானிகர் குறிப்பிட்டார்.

அத்துடன் சென்னையில் அமைந்திருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநில அதிகாரிகள் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது குறித்து தமிழ் நாடு மாநில பொலிஸ்மா அதிபருடன் தாம்; இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் ஹம்சா மேலும் தெரிவித்தார்.

முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

muthukumar-30011.jpgமுத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

anbhazagan.jpgஇலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது. புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.

16,000மில். ரூபாவை பெற்றுக் கொள்ள பாராளுமன்றில் குறைநிரப்பு பிரேரணை

yappa.jpg16,000 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆலோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தின் துரிதமான வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் அவசியத்தை கருத்திற் கொண்டு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளவும், சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக 16,000 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையூடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக ஏற்றுமதிக் கைத்தொழில், உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், விவசாய உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதி வழங்கப்படவுள்ளது. மேற்படி துறைகளின் உற்பத்திச் செலவினை குறைப்பதன் ஊடாக போட்டித் தன்மையை அபிவிருத்தி செய்தல், ஏற்றுமதி வருமானம் மேற்படி துறைகளின் பாதுகாப்புத் தன்மையை பலப்படுத்துதல், போன்றவற்றை உள்ளடக்கியதாக பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தையில் தேயிலையின் விலையை உறுதிப் படுத்துவதற்காக இலங்கைத் தேயிலைச் சபையின் மதிப்பீட்டின் கீழ் அரச நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தலுக்கும் ஏல விற்பனையில் தேயிலையின் விலையை கிலோ ஒன்றுக்கு 300 ரூபா வரை தக்க வைத்தலுக்குமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை தேயிலைச் சபைக்கு 1500 மில்லியன் ரூபாவை வழங்கவும். தேயிலை கைத்தொழில் தொழிற் சபைகளுக்கு ஒரு மாதத்திற்கான தொழில் மூலதனத்தினை சலுகை அடிப்படையிலான வட்டி விகிதாசாரம் ஒன்றின் கீழ் வழங்குவதற்காக நிதி திட்டமிடல் அமைச்சு, அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.

50 கிலோ எடைகொண்ட தேயிலைக்கான கலப்பு உரம் 1000 ரூபாவுக்கு வழங்குவதற்காக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சுக்கு 2500 மில்லியன் ரூபாவும், பஸ் வண்டிகள், டிரக் வண்டிகளுக்கு அவசியமான டயர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு 200 மில்லியன் ரூபாவும் இறப்பருக்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்துக்கு கடன் வழங்குவதற்காக மேற்படி அதே அமைச்சுக்கு 450 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும்.

கறுவாவிற்கான உறுதியான விலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்துக்காக நிதி திட்டமிடல் அமைச்சு அபிவிருத்தி நிதித் திணைக்களம் என்பவற்றுக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்படும். 2008ம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் ஊழியர்க ளின் எண்ணிக்கை மற்றும் அத்துறைகளுடன் தொடர்பான பொருத்தமான பெறுமதிச் சேர்ப்பை பேணும் ஏற்றுமதியாளர்களுக்கு 5 சதவீத ஏற்றுமதி ஊக்குவிப்பை வழங்குவதற் காக 8000 மில்லியன் ரூபா பெற்றுக் கொடுக் கப்படும்.

தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை பேணும் சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்துள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் மற்றும் கடனை மறு சீரமைத்தலுக்காக 200 மில்லியன் ரூபாவும் அரசினால் வழங்கப்படும் ஏனைய மானியங்களுக்காக நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 3000 மில்லியன் ரூபாவும் வழங்குவதற்கான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

தமிழகத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயம்

tamilar-phathukappu.jpgஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணத்தால் எந்தவொரு பயனும் இலங்கைத் தமிழர் தொடர்பாக ஏற்படவில்லையென அதிருப்தியடைந்திருக்கும் தமிழகக் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்து வரும் நிலையில், “தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க.பெப்ரவரி 3இல் செயற் குழுவை கூட்டி முக்கிய தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா புலிகளின் ஆதரவைத் தவிர இலங்கைத் தமிழர் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தனது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென தனது கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புதன்கிழமை உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக இரவு ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவுநர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயமாகியுள்ளது. உடனடியாகவே (இன்று) வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் மௌனவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதையடுத்து இப்பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியுமே தினமும் போராட்டம் என்று அறிவித்து சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன

ஈராக்கில் 440 மாகாண ஆசனங்களை தெரிவு செய்யும் முக்கிய தேர்தல் நாளை

iraq-elections.jpgஈராக்கில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்துவதன் மூலம் ஈராக் அரசும் இராணுவமும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளதை உலகுக்கு எடுத்துக்காட்டவுள்ளது.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் வாக்களிப்பில் பங்கேற்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள், வைத்தியசாலைகளில் உள்ளோர் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் இவர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்தனர். வைத்தியசாலைகளிலுள்ளோர், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறைக்கைதிகள் ஆகியோரிடம் வாக்குச் சீட்டுகள் அவர்களது காலடிக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரமான ஈராக்கைத் தெரிவு செய்யவும் பங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவும் நாங்கள் வாக்களித்ததாக அவர்கள் கூறினர்.

பின்னர் வாக்குப் பெட் டிகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட் டன. இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடை பெறவுள்ளது. ஈராக்கில் மொத்தமாகவுள்ள 18 மாகாணங்களில் 14 மாகாணங்களுக்கு நாளை தேர்தல் இடம்பெறுகிறது. இதுவரை ஆபத்தான தாக்குதல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஈராக் அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். வீதியோரக் குண்டுத் தாக்குதல்களைத் தவிர்க்க பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான நிலலயங்களும் இன்றும், நாளையும் மூடப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் தலைமையிலான ஷியா அரசுக்குச் சவாலாக உள்ள ஈராக் கெளன்ஸில் குர்தீஷ்க ளைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சுயாட்சியை வட ஈராக்கில் கோருகின்றது.

ஈரான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஈராக் கொன் ஸிலின் இக் கோரிக்கையை அமெரிக்காவும், ஈராக்கும் நிராகரித்துள்ளன. மாகாண ரதியான அதிகாரங்களைக் கைப்பற்றுவதனூடாக தங்களது இன அடையாளங்களை ஓங்கச் செய்ய ஷியா, சுன்னி, குர்தீஷ் இனங்கள் கடும் பிரயத்தனங்களில் இறங்கியுள்ளன. ஈராக்கில் தற்போதுள்ள மத்திய அரசு ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஈராக்கில் நடைபெறும் 14 மாகாணங்களுக்கான தேர்தல்களில் மொத்தம் 14 ஆயிரத்து நானூறு வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூவாயிரத்து தொளாயிரம் பேர் பெண்களாவர். 440 மாகா ண சபை ஆசனங்களுக்கு இத் தேர்தல் நடைபெறு கின்றது. ஈராக் அரசின் நாகரிக சர்வாதிகாரம் இது வென இஸ்லாமிய அமைப்பு விமர்சனம் செய்துள்ளது