விஸ்வா

விஸ்வா

முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!

Musical_Instrumentபுனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 125 பேர் உட்பட 495 பேர் நேற்று (May 17 2010) அவர்களது பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இவர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ.சந்திரசிறி, அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ரி.நீக்கிலாப்பிள்ளை, உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமானது. வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வு, பனர்வாழ்வளிக்கபட்டு இரத்மலானை இந்தக் கல்லாரியில் தற்போது கல்வி கற்று வரும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் என்பனவும் இதன் போது இடம் பெற்றன.  இரத்மலானை இந்துக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள முன்னால் குழந்தைப் போராளிகளுக்கு லிற்றில் எய்ட் இசைக் கருவிகளை வழங்கி அவர்களுக்கு இசை பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தது.  லிற்றில் எய்ட் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009

பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 495பேர் அவர்களின் பெற்றொர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக போரில் இணைக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 198 பேரும், பல்கலைக்கழக மாணவர்கள் 72 பேரும், கனரக வாகன சாரதிப் பயிற்சி பெற்றிருந்த 100 பேரும் மற்றும், முன்னாள் போராளிகள் 125 பேரும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்குடா நாட்டில் திடீரெனப் பெய்த கடும் மழையினால் மக்கள் பாதிப்பு!

May 17 2010  யாழ்.குடாநாட்டில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. சில வீடுகளின் கூரைகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமாகின். மின்சாரமும் முழுவதுமாக குடாநாட்டில் தடைப்பட்டது.  இன்று (May 18 2010) காலையிலேயே மின்சார விநியோகம் யாழ்ப்பாணத்தில் சீர்செய்யப்பட்டது.

இதேவேளை, கொழும்பு உட்பட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். தெற்கில் 2இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கொழும்பு, களுத்துறை, கம்பகா, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரற்ற இக் காலநிலை சில நாட்களுக்குத் தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

வலி வடக்கு மீள்குடியேற்றத்தில் இணைந்து செயற்பட யாழ் பா உ க்கள் முடிவு! தீர்க்கமான முடிவு எடுக்காவிடில் யாழ் பா உ க்களுக்கு எதிராக போராட்டம்!!

Mavai_Senathirajahஅதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இரு வாரங்களில் சாதகமான முடிவெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (May 17 2010) தெல்லிப்பழையில்  நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் ஆர்.சி நடராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ். சிறிதரன், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தயாராக இருப்பதாக மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் சகலரும் இணைந்து செயற்பட முன்வந்தால், தானும் பங்களிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

யாழ் மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் இது குறித்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இக்கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின தலைவர் ஆர்.சி. நடராசா குறிப்படுகையில் வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கமாக முடிவை அறிவிக்காவிடில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாகள் ஒன்பது பேருக்கும் எதிராக போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் இன்று நினைவு கூரப்படுகின்றனர்.

Tribute_to_Deathsவன்னியில் இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று 17ம் திகதி வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே வேளை, உயிரிழந்த  மக்களை நினைவு கூரும் விதமாக ஆலயங்கள் தேவாலயங்களில் இன்று பூஜை வழிபாடுகளும்  நடைபெறுகின்றன. வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது குறித்த புள்ளிவிபரங்கள் போர் முடிவடைந்து ஓராண்டு நிறைவடைகின்ற நிலையிலும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்காவற்றுறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டார்!

யாழ். ஊர்காவற்றுறைப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் நேற்று 16ம் திகதி பொதுக் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த குமாரவேலு பாலதேவி என்ற 44 வயது குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். மீட்கப்பட்ட சடலம் மரணவிசாரணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ள தமிழ் பொலிஸாருக்கு களுத்துறையில் பயிற்சி!

யாழ்.மாவட்டத்தில் நாளை 18ம் திகதி  நியமனம் வழங்கப்படவுள்ள 342 பொலிஸாருக்கும் யூன் மாதம் முதலாம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லாரியில் பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ். பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மென்டிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில்,  யாழ்.மாவட்ட தமிழ் இளைஞர்; யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரிட்சையில்  மருத்துவ சோதனையில் பங்கேற்றவர்களில் 342பேர் பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 22 பெண்களும். 320 ஆண்களும் அடங்குகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர், சிறைக் கைதிகள் தொடர்பாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்.

Disappeared_Families_20007காணாமல் போனோர் மற்றும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை 18ம் திகதி வவனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்த ‘காணாமல்போனோரைத் தேடியறியும் குழு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இக்குழுவின் இயக்குநர் சு.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், நாம் அரசாங்கத்திற்கு இதனை விளக்கி வந்துள்ளோம். இதுவரை எமது அமைப்பிற்கு எத்தகைய பதிலையும் அரசாங்கம் வழங்கவில்லை. யுத்தத்தின் பாதிப்பினால் மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழந்த நிலையில் துன்பச்சுமையுடன் வாழந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எதவித நீதிவிசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்றும் ஒரு இலட்சம் பேர் வரையிலான மக்கள் முட்கம்பிவேலிகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். வெளியேறிய இரண்டு இலட்சம் மக்கள் எதுவித பாதுகாப்புமின்றி பரிதவிக்கின்றனர். இத்தகைய துயரமான நிலையில் அரசாங்கம் யுத்த வெற்றியின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பாகவும், சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கவனத்தை ஈர்க்க நாளை 18ம் திகதி செவ்வாய் கிழமை வவுனியா மாநகரின் பஸ்நிலையத்திற்கு முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளோம். எனவே காணாமல் போனோரின் உறவினர்களும், சிறைக் கைதிகளின் உறவினர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது உறவுகளை மீட்டெடுக்க எம்மோடு கைகோர்த்து செயற்படும் படி வேண்டுகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் அல்வாயில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!

யாழ்.வடமராட்சி அல்வாய் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையே கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த குடும்பத்தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மோதல்கள் கடந்த சனிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இரு தரப்பம் எதிரெதிர் தரப்புகளின் விடுகளுக்குள் புகுந்து கண்டபடி வாள்வீச்சில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்ற இவ் வாள்வெட்டுச் சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை இரட்ணசிங்கம், என்ற 8 பிள்ளைகளின் தந்தை, 20 வயதான முருகதாஸ் என்ற இளைஞன், இரட்ணசிங்கத்தின் 10 வயது மகளான ஜென்சி, அவரது மைத்துனியான 30 வயது ஜெயரஞ்சி, ஆகியோரே படுகாயமடைந்தவர்களாகும் இம்மோதல்களைத் தடுக்கும் முயற்சியில் பருத்தித்துறை பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

‘தேசிய நல்லிணக்க ஆணைக்குழு’ சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம்’ தமிழ்தேசிய கூட்டமைப்பு பா உ பா அரியநேத்திரன்

மகிந்த ராஜபக்ச அரசின் புதிய அறிவிப்பான தேசிய நல்லிணக்க ஆணைக்கழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கூறியுள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் ‘பம்மாத்து’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசினால் ஏழு பேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்று  ஜனாதிபதியினால் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரவிக்கும் போதே திரு. அரிய நேத்திரன் இவ்வாறு கூறினார்.

“இலங்கை சுந்திரம் அடைந்ததாக கூறப்படும் 1948ஆம் ஆண்டு தொடக்கம் 61 வருடங்களாக பல்வேறு ஒப்பந்தங்களை தமிழ் மக்களுடன் செய்து கொண்ட தெற்குத் தலைமைகள் இப்போது தமிழர்களின் பிரச்சினை குறித்து ஆராய ஆனைக்குழு நியமிக்க முன்வருவது வேடிக்கையான விடயமாகும்.  செல்வா – பண்டா ஒப்பந்தம், செல்வா – டட்லி ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் பிரதான இரு கட்சிகளுடன் செய்யப்பட்டன. அதன் பின்னர், திம்பு பேச்சவார்த்தை, இலங்கை இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தன்னாட்சி அதிகாரசபை யோசனை, சுனாமி மீள் கட்டமைப்பு உடன்பாடு, அனைத்துக்கட்சி தெரிவுக்குழு, நிபுணர் குழு என்றெல்லாம் காலத்திற்குக் காலம் எத்தனையோ ஒப்பந்தங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த 61 ஆண்டுகளாக இவ்வாறு வந்து போன உடன்பாடுகள் மூலம் தமிழர் பிரச்சினைக்கான மூலகாரணத்தை கண்டறிய முடியாத அரசு இப்போது தமிழர் பிரச்சனைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிக்கவிருப்பது காலத்தை இழுத்தடிக்கவும், தமிழர்களையும், இந்தியா உட்பட சாவ்தேசத்தையும் ஏமாற்றுவதற்கேயாகும், அத்தோடு நடைபெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடனானதுமாகும்” எனவும் திரு.பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்!

‘ஹலோட்ரஸ்ற்’ நிறுவனத்தின் கண்ணிவெடியகற்றும் வாகனம் ஒன்று நேற்று (15th May 2010) கண்ணிவெடியகற்றும் பணியினை முடித்துக் கொண்டு அலுவலகம் திரும்பும் வழியில், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் வைத்து தடம்புரண்டது. இதன்போது இவ்வாகனத்தில் பயணித்த அறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். ஒன்பது பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குறித்த வாகனம் சென்று கொண்டிருக்கையில், எதிரே பாடசாலை மாணவர்கள் சென்றதால் சடுதியாக வாகனம் நிறுத்தப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பெண்பணியாளர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை, தற்போது வன்னியில் கண்ணிவெடியற்றும் பணிகளில் அதிகளவிலான தமிழ் யுவதிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.