விஸ்வா

விஸ்வா

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் மாநாடு யாழ்ப்பாணத்தில்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் மாநாடு ஒன்று நாளை மறுதினம் சனிக்கிழமை (August 07 2010) நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த தொழில் வாயப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தினிது சமன் ஹென்னாயக்க யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2005ம் ஆண்டு மகிந்த சிந்தனையின் ‘தருண அருண’ என்ற திட்டத்தின் அடிப்படையில் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு Nவைலைவாயப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தும் எதுவும் நடைபெறவில்லை என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்யுள்ளார்.

மகாசபை செயலாளர் பதிவிகளுக்கு பட்டதாரிகள் 14 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கவதாகவும், ஆயுர்வேத மருத்துவர்கள் 900 பேருக்கும், அழகியல் பாடத்திற்கான ஆசிரியர் நியமனம் மூவாயிரத்து 174 பேருக்கும் இவ்வருட வரவு செலவு திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்குவதாகவும் கூறப்பட்ட போதும், இது வரை இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நாட்டிலுள்ள பட்டதாரிகள் அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அதற்காகவே யாழ்ப்பாணத்தில் இம்மாநாட்டை நடத்துவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

வன்னியில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்படும் மக்கள் படையினரால் திருப்பியனுப்பப்படுகின்றனர்.

வன்னியில் மக்களை மீள்குடியமர்த்தும் அரச அதிகாரிகளுக்கும் படையினருக்குமிடையில் இணைந்த செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்படுகின்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மயில்வாகனபுரம். குமாரசாமிபுரம் பகுதிகளில் மீள்குடிமர்த்தப்படுவதற்காக அழைத்துச செல்லப்பட்ட 301 குடும்பங்கள் படையினர் அனுமதி மறுத்தமையினால் குடியமர முடியாத நிலை எற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படாமலுள்ளதால் அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதியில்லை என படையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அம்மக்கள் பாடசாலைக் கட்டங்களில் அடிப்படை வசதிகளின்றி தங்கயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள படையினருடன் சரியான அனுமதியினைப் முதலிலேயே பெற்று மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டால் மக்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதும், துன்பங்களுக்குள்ளாவதும் தவிர்க்கப்படலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி பொன்னகரில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்கள் படையினரால் திருப்பியனுப்பப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வீடமைப்பு உதவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அக்காணி உரிமையாளர்கள் வீடமைப்பு உதவிகளைப் பெறமுடியாத நிலை எற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 3290 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், காணி உரிமம் இல்லாத காரணத்தினால், 2466 பேருக்கு உதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வடக்கு, கிழக்கு வீடமைப்பு மீள்நிர்மான திட்டமான ‘நேர்ப்’ திட்டத்தின் கீழ் வீடமைப்பு பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ‘நேர்ப்’ திட்டத்தின் பிரதித் திட்டப் பணிப்பாளர் கந்தையா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு காணி உறுதி வழங்கப்படாமையினால் வங்கிகளில் கூட வீடமைப்பு கடன்களைப் பெறமுடியாத நிலை மக்களுக்கு எற்பட்டுள்ளது. பலருக்கு தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அநேகமான காணிகளில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மக்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.

கிளிநொச்சியில் படையினரால் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சிப் பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக்க் கருதப்படும் பெருமளவு வெடிபொருட்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கிளிநொச்சியில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதனையடுத்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளைமோர் குண்டுகள் 38, கைக்குண்டுகள் 45, ஆர்பிஜி குண்டுகள் 90, சி-4 ரக வெடிமருந்து 50 கிலோ ஆகியவையே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நாளை வாசுதேவ நாணயக்காரவை சந்திக்கின்றனர்.

Vasudeva Nanayakaraதமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்காரவை நாளை (02-08-2010)  சந்திக்கவுள்ளனர். நீண்டகாலமாக எதுவித விசாணைகளுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் கடந்த மாதம் இவ்விடயம் குறித்து வாசுதேவ நாணக்காரவிடம் தெரிவித்திருந்தனர். இதற்கிணங்கவே இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கள் கிழமை இச்சந்திப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”விடுதலைப் புலிகளின் தலைவரின் வாகனச்சாரதி சரணடைந்ததாக வெளியான செய்திகள் தவறானவை” என பொலிஸ் பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வாகனச்சாரதி சரணடைந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட வாகனச் சாரதியாக நீண்டகாலம் பணியாற்றிய சதீஸ்குமரன் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் இறுதிக்கட்டப் போரின் போது இவர் வன்னியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் திருகோணமலையில் வைத்து அவர் பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவற்றில் உண்மை இல்லை எனவும், குறிப்பிட்ட நபர் திருகோணமலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒரு காலை இழந்தவர் என்றும், தற்போது அவர் பொலிஸ் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

”தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களின் நலன் கருதியே எற்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்தப் பின்னணிகளும் இல்லை.” வி ஆனந்தசங்கரி (தவிககூ)

Chelva_Memorial_Anada_Shangareeதற்போது பத்து தமிழ் கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் ‘தமிழ் கட்சிகளின் அரங்கம்’ என்கிற அமைப்பு அரசாங்கத்தினதோ அல்லது வேறு எந்த சக்திகளினதோ தூண்டுதலினால் உருவாக்கபட்டதல்ல. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்சி பேதங்களை மறந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு இது என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (01-08-2010) யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

Chelva_Memorial_Anada_Shangaree“இப்பொழுது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அம்மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் பணியை விடவும், அப்பகுதிகளில் இராணுவக் கிராமங்கைள அமைக்கும் பணிகளுக்கே அரசாங்கம் அதிகம் முன்னுரிமை வழங்குவதாகத் தெரிகின்றது. முறிகண்டிப் பகுதிகளில் அதனை நேரில் அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் தமிழ் கட்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது வரலாற்றுக் கடமையாகவுள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கருத்து முரண்பாடுகளையும், கடந்தகால கசப்புணர்வகளையும் மறந்து இக்கட்சிகள் தற்போது ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக இணைந்துள்ளன. இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் இணைந்துக் கொள்ள வேண்டிய தேவை  மிக அவசியமானதாகவுள்ளது. இதனை இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து க்கட்சிகளும் விரும்புகின்றன. அதற்காக அக்கட்சியினருக்கு நாம் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் விரும்புகின்ற நேரத்தில், அவர்கள் விரும்பும் இடத்தில் சந்திப்பதற்கும் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் நன்மைக்காக செயற்படுவதேயன்றி யாரும் யாரினதும் நிழலிலும் குளிர்காய்வது எமது நோக்கம் அல்ல.

Chelva_Memorial_Audienceஅரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்துவற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது சரியானால், அதனை இந்த அமைப்பிற்குள் இணைவதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் அல்லவா?  தனிப்பட்ட ஒரு கட்சியின் தீர்மானமாக இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் கூட்டுத் தீர்மானங்களே அந்த அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும். இதில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் முன்வைக்கலாம். தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற அமைப்பில் தாங்கள் இணைந்து கொள்ள முன்வருவோம் என கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் கூட அதனை விரும்பாத தமிழர்கள் யார் இருப்பார்கள்? தேசியம் சுயநிர்ணய ஊரிமைகளை யார் மறுக்கப் போகின்றார்கள்? ஆனால், இவற்றை கவர்ச்சிகரமான கோசங்களாக பாவித்து தமிழர்களை மேலும் இன்னல்களுக்குள் தள்ளிவிடக்கூடாது என்பது தான் எமது நோக்கம். தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமை நிலையை நீடிக்கவிடக்கூடாது. யதார்த்தமான ஒரு கட்டத்திற்குள் நாம் முதலில் பிரவேசிக்க வேண்டும்” இவ்வாறு திரு. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறப்பினர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08, 2010ல் : தேசம்

கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

Suresh_Piremachandranவவுனியா முகாமிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்ட மக்களை அவர்களின் இடங்களில் மீள்குடியமர படையினர் மறுத்ததால் மீண்டும் அவர்கள் இடைக்கால முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தின் 35 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  அவர்களின் இடங்களில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச் செல்லபட்டபோது அப்பகுதியிலுள்ள படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் மீள்குடியேற்றத்தை தடுத்துள்ளனர். இதனையடுத்து அம்மக்கள் தங்களின் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இம்மக்களை அழைத்துச்சென்ற மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் இடைக்கால முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை தங்க வைத்தனர்.

கிளிநொச்சியில் ஏ-9 பிரதான வீதிக்கு மேற்கே அமைந்துள்ள வறிய மக்கள் வாழும் கிராமம் பொன்னகர் ஆகும். இக்கிராமத்தில் வலுவிழந்தோர் மற்றும், விதவைகளுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒருவர் அமைத்துக் கொடுத்திருந்தார். அவ்வீட்டுத் திட்டத்தில் குடியிருந்த மக்களே வவுனியா முகாமிலிருந்து மீள்குடியமர்வுக்காக அவர்களின் சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த வீடுகள் விடுதலைப் புலிகளால் அமைக்கபட்டவை என்றும் இவற்றில் குடியமர அனுமதி இல்லை எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளபட்ட சமாதானப் பேச்சுவார்தை காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள சில வறிய கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்களை  அமைத்துக் கொடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைக்கு பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும்! – தமிழ் அரசியல் கைதிகள்.

Buddha_SriLankaநீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும் என பௌத்த மதபீடங்களுக்கு சிறைக் கைதிகள் சார்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்த, ஸ்யாம், பௌத்த பீடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் அரசியல் கைதிகள் நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இக்கைதிகளின் அவலநிலை குறித்து அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு பல தடவைகள் தெரியப்படுத்தினோம். ஆக்கபூர்வமாகன பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் அதியுயர் நிலையில் மதிக்கப்படுகின்ற பௌத்த பீடங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதம நீதியரசர், அமைச்சர் டீயூ குணசேகர ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதே வேளை, கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல தேரர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண வெளிச்சவீடுகள் புனரமைக்கப்படாமையால் மீனவர்கள் இரவில் சிரமம்.

Light_House_PointPedroயாழ்ப் பாணத்திலுள்ள வெளிச்ச வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். குடாக்கடலில் உள்ள வெளிச்ச வீடுகள் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னரான சூழலில் தற்போது இரவு வேளைகளிலும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளிச்ச வீடுகள் சீரமைக்கப்படாமையால் கடலில் இரவுப் பொழுதுகளில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.