தற்போது பத்து தமிழ் கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் ‘தமிழ் கட்சிகளின் அரங்கம்’ என்கிற அமைப்பு அரசாங்கத்தினதோ அல்லது வேறு எந்த சக்திகளினதோ தூண்டுதலினால் உருவாக்கபட்டதல்ல. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்சி பேதங்களை மறந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு இது என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (01-08-2010) யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!
“இப்பொழுது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அம்மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் பணியை விடவும், அப்பகுதிகளில் இராணுவக் கிராமங்கைள அமைக்கும் பணிகளுக்கே அரசாங்கம் அதிகம் முன்னுரிமை வழங்குவதாகத் தெரிகின்றது. முறிகண்டிப் பகுதிகளில் அதனை நேரில் அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் தமிழ் கட்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது வரலாற்றுக் கடமையாகவுள்ளது.
இதன் காரணமாகவே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கருத்து முரண்பாடுகளையும், கடந்தகால கசப்புணர்வகளையும் மறந்து இக்கட்சிகள் தற்போது ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக இணைந்துள்ளன. இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் இணைந்துக் கொள்ள வேண்டிய தேவை மிக அவசியமானதாகவுள்ளது. இதனை இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து க்கட்சிகளும் விரும்புகின்றன. அதற்காக அக்கட்சியினருக்கு நாம் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் விரும்புகின்ற நேரத்தில், அவர்கள் விரும்பும் இடத்தில் சந்திப்பதற்கும் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் நன்மைக்காக செயற்படுவதேயன்றி யாரும் யாரினதும் நிழலிலும் குளிர்காய்வது எமது நோக்கம் அல்ல.
அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்துவற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது சரியானால், அதனை இந்த அமைப்பிற்குள் இணைவதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் அல்லவா? தனிப்பட்ட ஒரு கட்சியின் தீர்மானமாக இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் கூட்டுத் தீர்மானங்களே அந்த அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும். இதில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் முன்வைக்கலாம். தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற அமைப்பில் தாங்கள் இணைந்து கொள்ள முன்வருவோம் என கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் கூட அதனை விரும்பாத தமிழர்கள் யார் இருப்பார்கள்? தேசியம் சுயநிர்ணய ஊரிமைகளை யார் மறுக்கப் போகின்றார்கள்? ஆனால், இவற்றை கவர்ச்சிகரமான கோசங்களாக பாவித்து தமிழர்களை மேலும் இன்னல்களுக்குள் தள்ளிவிடக்கூடாது என்பது தான் எமது நோக்கம். தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமை நிலையை நீடிக்கவிடக்கூடாது. யதார்த்தமான ஒரு கட்டத்திற்குள் நாம் முதலில் பிரவேசிக்க வேண்டும்” இவ்வாறு திரு. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறப்பினர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
மேலதிக வாசிப்பிற்கு:
அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்
rohan
அந்த் அந்தக் கட்சிகளின்ரை தலைவர்களாய் இருக்கிற தமிழ் மக்களைச் சொல்லுறியள் போலை.