விஸ்வா

விஸ்வா

கிளிநொச்சியில் இந்திய அரசாங்கம் அமைக்கவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Kilinochiஇந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கிளிநொச்சிப் பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீட்டுத்திட்டம் அடுத்துதவருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை யடுத்து இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஐந்து இலட்ச ரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி உட்பட வன்னியில் வீடுகளை இழந்தவர்களுக்கு ‘நேர்ப்’ நிறுவனத்தினுடாக வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்துப்பட்டு வருகின்றன. 3 இலட்சத்து 25 ஆயிரம் ருபா பெறுமதியான வீடுகளே இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.

பல பொதுமக்களிடம் காணி உறுதிகள், அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் வீட்டுத்திட்டங்களுக்கு பதிவு செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

LandMine_Signவட மாகாணத்தில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார். இக்கண்ணிவெடியகற்றும் பணியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுடன் 1000 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு கண்ணிவெடிகள் காணப்படுவதாகவும் அவற்றை மீட்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள 20 ஆயிரம் முல்லைத்தீவு மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

மீசாலையில் பொதுமக்களிடம் பணம் சேகரித்த சிங்கள இளைஞர்கள் இருவர் கைது.

மீசாலைப்பகுதி வீடுகளில் பணம் சேகரிக்கச் சென்ற இரு சிங்கள இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி இவர்கள் மீசாலைப் பகுதி வீடுகளில் பணம் சேகரித்துள்ளனர். பணம் வழங்க மறுப்புத் தெரிவித்தவர்களிடம் தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

அப்பகுதி சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்குச் சென்று இவர்கள் பணம் கேட்ட போது விட்டிலிருந்த பெண் கணவருக்கு தொலைபேசி மூலம் விடயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு சாவகச்சேரி பெலிஸாரினால் குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இவ்விளைஞர்களுக்கு பணம் வழங்கியவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்குப் முன்னர் கிளிநொச்சிப் பகுpகளிலும் இவ்வாறு சிலர் சிறுவர் இல்லம், அநாதைகள் இல்லம் எனக் கூறிக்கொண்டு பொதுமக்களிடம் நிதி சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மரணச் சான்றிதழ்களை வழங்கும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில்

Certificate_of_Deathயுத்தத்தி னாலும் ஏனைய பயங்கரவாத சம்பவங்களாலும் உயிரழிந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான மரணப் பதிவுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரணத்தைப் பதிவு செய்யும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின்படி யுத்தத்தினால் அல்லது, பயங்கரவாத நடவடிக்கைகளினால் உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒருவர் காணாமல் போய் ஒரு வருடம் கடந்த பின்னர் அவருக்கான மரணச் சான்றிதழுக்கு உறவினர் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன், கொல்லபட்ட, காணாமல் போன விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் உறவினர்களும் மரணச் சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன இச்சட்ட மூலத்தை நாளை செவ்வாய் கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இச்சட்டமூலம் நிறைவற்றப்பட்ட பின்னர் யுத்தம் மற்றும் காணமாமல் போன அரசாங்க ஊழியர்களின் பெற்றோர் உறவினர்கள் இழப்பீடுகள் மற்றும், அரசின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான கூட்டம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.

Students_Under_Treeமகிந்த சிந்தனையின் அடிப்படையில் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டமொன்று நாளை செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இக்கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும் நடைபெறும் எனவும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை வவுனியா இறம்பைக்குளம், திருக்குடும்பக் கன்னியர்மட மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

Killinoche_Schoolநாளை மறுதினம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை அகலிப்பினால் சாவகச்சேரியில் பல கட்டடங்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Chavakacheriஏ-9 பிரதான வீதி அகலிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரியிலுள்ள பல கட்டங்களுக்கு ஆபத்து எற்பட்டுள்ளது. பாதை அகலிப்புக்காக சுமார் 50 வரையிலான கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வீதி அகலிப்புக்கென எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளதன்படி வீதியின் மேற்கிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ பகுதியாகவோ உடைக்கப்பட வேண்டிய நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மூன்று வங்ககிக் கட்டங்களும் அமைந்துள்ளன. அத்துடன் பல குடிமனைகளும் அரச கட்டங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாழைச்சேனையில் மோட்டார் குண்டுகள் மீட்பு.

கிழக்கில் வாழைச்சேனை வட்டவான் பிரதேசத்தில் மோட்டார் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் மீடக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி அப்பகுதி வெற்றுக் காணியொன்றில் புதைக்கபபட்டிருந்த இக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குண்டுகள் முன்னர் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வேறு இடங்களில் இவ்வாறான குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளனவா எனவும் ஆராயப்பட்டு வருகின்றன.

கடந்த இரு தினங்களாக முல்லைத்தீவு கரையோர மக்கள் சுனாமி அச்சத்தினால் குழப்பம்.

Mullaittivu_Beachமுல்லைத் தீவு கரையோரப் பகுதிகளிலுள்ள மக்கள் கடந்த இரு தினங்களாக சுனாமி அச்சத்தினால் கண்விழித்திருக்கும் நிலை எற்பட்டது. ‘ஜல்’ புயல் தொடர்பான எச்சரிக்கை வளிமண்டல திணைக்களத்தால் விடுக்கபட்டுக் கொண்டிருந்த வேளை, கடும் காற்று, மழை ஏற்படும் என அம்மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழாமல் மந்தமான காலநிலையே காணப்பட்டது.

அது 2004ஆம்ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு முன்பாக இருந்த காலநிலையை இம்மக்களுக்கு நினைவூட்டியது. அதனால் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு கரையோர மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர். இரவில் நித்திரை கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் பொழுதைக் கழித்தனர்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், சிறைக்கைதிகளின் விடுதலை மற்றும், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், இச்நதிப்பின் பொது ஜனாதிபதியிடம் சமாப்பிக்கப்படவிருக்கும் மகஜரைத் தயாரிக்க முவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அந்தக்குழு தயாரிக்கும் மகஜருக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கம் கூடவுள்ளதாகவும் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கான திட்டமொன்று டிசெம்பர் இறுதியில் தயாரிக்கப்படும் எனவும், அது தயாரிக்கும் போது தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுவிடும் என தான் நம்புவதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நீடிக்கப்பட்டுள்ளன.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்பு மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதால் அதன் காலஎல்லை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மேலும் பலர் சாட்சியமளிக்க விரும்புவதாக கோரியிருப்பதால் அதன் அமர்வுகளை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிக்கும்படி ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி சில்வா ஜனாதிபதி செயலகத்திடம் கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.