விஸ்வா

விஸ்வா

தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

Univercity_of_Jaffnaயாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)

நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

50 வருடங்களின் பின் வடக்கு மாகாணத்தில் அதிகளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Paddy_Fieldsவட மாகாண சபைக்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் இவ்வருட காலபோக நெற்செய்கை இரண்டு லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களின் பின்னர் இந்தளவு அதிகமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் செ.பத்மநாதன் இத்தகலை தெரிவித்துள்ளார்.

இந்த நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறந்த விளைச்சலை விவசாயிகள் பெறுவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும், கடந்த சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லையே விவசாயிகள் இன்னமும் முழுவதுமாக சந்தைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனியபாரதிக்கு பத்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

Iniyaparathy_TMVPமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளில் இணைந்தவருமான, தற்போது அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக பணியாற்றும் இனியபாரதி என்ற கந்தசாமி நிசாந்தனுக்கு கல்முனை மேல் நீதிமன்றினால் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்பபை வழங்கினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தனை இனியபாரதி 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதாகவும், இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இனியபாரதி இக்குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத்தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. பத்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அத்துடன், 25 000 ரூபா அபாராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். குறிப்பட்ட பத்து வருடகாலத்தில் எதிரி ஏதாவது குற்றச்செயலில் தண்டிக்கப்பட்டால் அதற்கான தண்டனையுடன் இதனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரியின் பொதுச் சேவை மற்றும், எதிர்காலத்தில் அவர் மேற்கொள்விருக்கும் சேவைகள் என்பனவற்றைக் கொண்டு இத்தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

”தமிழ் மக்களின் நலன் கருதி ஏனைய தமிழ் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயார்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

TNAதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்குபற்றும் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது கடும் விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஏனைய தமிழ் கட்சிகளோடு கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) எஸ்.சிறிதரன், இடம்பெயர்ந்த மக்களின் பனர்வாழ்வுக்கழகத் தலைவரான எஸ்.சந்திரகாசன், தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோரை முதலில் சந்தித்து கலந்துரையாடுவதென்று தற்பொது கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பல தடவைகள் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதான கருத்தை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த யுத்தம் நடைபெற்ற காலங்களில் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிய போது பல சிக்கல்களுக்கு மத்தியில் 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்த இந்த தொண்டர்  அசிரியர்கள் வேறு தொழில்களுக்கு தாங்கள் விண்ணப்பிக்க வில்லை எனக்கூறுகின்றனர். ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகளிலும் தோற்றியுள்ளதாக தெரிவித்துள்ள இத்தொண்டர் ஆசிரியர்கள்  தங்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது.

Douglas Devanandaமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல வீதிகள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. சீன நிறுவனமொன்றினால் இவை புனரமைக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு – பு ல்மோட்டை வீதி, அகியனவே இவ்வாறு புனரமைக்கப்படவள்ளன. இதற்கான ஆரம்ப நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் கொத்தலாவல, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, சிறிரங்கா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர் சடலமாக மீட்பு.

யாழ். புலோலி தெற்கில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை புலோலித் தெற்கைச் சேர்ந்த வடிவேல் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. நேற்று மாலை மந்திகை அம்மன் கோவில் பகுதியிலுள்ளவர்களால் துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டள்ளது. இச் சடலம் பின்னர் காணாமல் போன் குறித்த நபரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.

சடலத்தை பொலிஸார் மீpட்டெடுத்த மந்திகை வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை சட்ட நடவடிக்கை எதையும் இன்னும் மேற்கொள்ளவில்லை.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமிறி குடியேறியுள்ள விடயம் குறித்து நடவடிக்கை எடுக்குமுகமாக வீடமைப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் றோயல் ஜெயச்சந்திரன் அதன் கொழும்பு தலைமையகத்திற்கு கடிதம் எழுதி இரண்டு வாரங்களாகியும் இதற்கு சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைமை அலவலகத்திலிருந்து தமக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.

ICRC_Logoசர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வடபகுதி அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணம், வவுனியா, உட்பட வடக்கிலுள்ள அதன் அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள இந்த அலுவலகங்களை எப்போது மூடுவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை எனவும், அரசாங்கத்தோடு கலந்துரையாடி எப்போது மூடுவது என முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளார். ஆனால் மன்னாரிலுள்ள அலுவலகம் இம்மாத இறுதியில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வடக்கிலுள்ள அலுவலகங்கள் மூடப்பட்டதும் கொழும்பிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வடக்கின் பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான அறிவைப் மக்கள் மத்தியில் பரப்பியதற்காக கலாநிதி மிகுந்தனுக்கு தேசிய விருது.

யாழ்.பல்கலைக்கழக விவசாய உயிரியல் துறைத்தலைவராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றும் கலாநிதி மிகுந்தனுக்க இவ்வாண்டிற்கான தேசிய விருது (National Award for Popularization of Science) வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞான அறிவை மக்கள் மத்தியில் பரப்புவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சும், தேசிய விஞ்ஞான மன்றமும், இணைந்து இவ்வருடத்திற்கான தேசிய வீருதை வழங்கியுள்ளன.

கலாநிதி மிகுந்தன் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் அலகின் பணிப்பாளராகவும், யாழ்.விஞ்ஞான சங்கத்தின் இவ்வருடத்திற்குரிய தலைவராகவும் பணியாற்றி வருகின்றனார். அத்துடன் பத்திரிகை சஞ்சிகைகளில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.