சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவ கலாநிதி பட்டம்

arrahma.jpgஒஸ்கார் விருது பெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கத் தீர்மானித்துள்ளது.  மிடில்செக்ஸ் பல்கலையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோ விக்டர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் ஆரம்பித்துள்ள இசைப் பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது எதிர்வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் பல்கலைக்கழக விழாவில் ரஹ்மானுக்கு கலாநிதி பட்டம் வழங்க உள்ளதாக ஜோ விக்டர் தெரிவித்துள்ளார்.

ரஸாக் மலேசியா பிரதமராகிறார்

najib-razak.jpgகடும் எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், தனது பிரதமர் பதவியை முகம்மது அப்துல்லா படாவி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதையடுத்து துணைப் பிரதமர் நஜீப் ரஸாக் பிரதமராக பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலில் ஆளும் கூட்டணியான உம்னோவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண மெஜாரிட்டியுடன்தான் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடக்குமுறை நடவடிக்கை காரணமாக அவரது கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. இதனால் படாவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஆரம்பத்தில் விலக முடியாது என பிடிவாதமாக கூறி வந்தார் படாவி. இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு விரைவில் பதவி விலகுவேன், நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார் படாவி. அதன்படி சமீபத்தில் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பிரதமர் பதவியையும் படாவி ராஜினாமா செய்துள்ளார். இதை அந்த நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதைத் தொடர்ந்து ரஸாக் பிரதமராக வழி ஏற்பட்டுள்ளது.

1957ம் ஆண்டு முதலே உம்னோ கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக படாவி தலைமையிலான உம்னோ அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய வம்சாவளியினர் குறித்த பிரச்சினையை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதே அந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய அடிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நாளை நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

பார்வையற்றவர்களுக்கு வாக்களிப்பு வசதி

duglas_devanandass.jpg
பார்வையற்றவர்கள் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்காக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைத் தம்முடன் அழைத்துச் செல்லும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக  அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பலி

g-20-landon.jpgலண்டனில் இன்று ஆரம்பமான ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது லண்டன் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் கலந்துகொண்ட 63 ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்பில் “வார உரைகல்” பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்

vaarauraika.jpgகாத்தான்குடி பிரதேசத்தில் டீன் வீதியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ வார இதழின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லா இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை இரவு 10.30மணியளவில் இவரது வீட்டுக்கு முகத்தை மூடியநிலையில் வந்த ஆயுதக்குழுவினர் இவர் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வீட்டுடன் இணைந்ததாகவுள்ள அலுவலகத்துக்குள்ளும் நுழைந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த கணணி உட்பட அலுவலக ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில் – படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு

wanni-operations.jpgஉயிர் நீத்த மற்றும் வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில்களை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து இந்த புலமைப் பரிசில்களை கையளித்தது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களை ஒன்றிணைத்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இலங்கையில் படை வீரர்கள் அடைந்துவரும் வெற்றிகளைப் பாராட்டும் நோக்கில் சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த அன்பளிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஜி20 நாடுகளின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பம்

g-20.jpgலண்டன், எக்ஸல் மையத்தில் இன்று ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங். 

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பாடசாலைகளிலுள்ள மரங்களின் கிளைகளைத் தறிக்க அவசர உத்தரவு

fallen-tree-branch.jpgவவுனியா பாடசாலை வளவுகளில் உள்ள சகல மரங்களினதும் கிளைகளை தறிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வி.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மர நிழல்களில் பாடசாலை வகுப்புக்களை நடத்துவது பற்றி கவனமாக இருக்குமாறும் அதிபர்கள் இந்த வியடத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப் பாளர் ஆலோசனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மகா இறம்பைக்குளம் பாடசாலை வளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் மரணமாகி 13 பாடசாலை மாணவர்களும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

ஐபிஎல் 20-20 ஆட்டம் 10 நிமிடம் அதிகரிப்பு

_ipl_graphic_.jpgஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20 20 வரும் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக தொடங்குகிறது.  வழக்கமாக 20 20 ஆட்டங்கள் 3 மணி நேரம் நடைபெறும். இதில் 15 நிமிட இடைவேளையும் அடங்கும். இந்நிலையில் விளம்பர வருமானத்திற்காக போட்டியின் இடைவேளை நேரத்தை 10 நிமிடம் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐபிஎல்லும் போட்டி ஒளிபரப்பாகும் சோனி டிவியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதன்படி ஒவ்வொரு அணிக்கும் 10 ஓவர்கள் முடிந்ததும் 5 நிமிட இடைவேளை வழங்கப்படும். இந்த நேரத்தில் கேப்டன் சக வீரர்களுடன் ஆலோசனை நடத்திக்கொள்ளலாம் என ஐபிஎல் தெரிவித்துள்ளது. மேலும் டிவி நிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.