சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஐ.பி.எல். கிரிக்கெட் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிப்பு

images-ipl.jpgதென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆட்டத்தின் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் 2 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகின்றன. 37 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

வழக்கமாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் 3 மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டமும் 31/4 மணிநேரம் நடைபெறும். கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் 10 ஓவர்கள் வீசப்பட்டதும், 71/2 நிமிடங்கள் இடைவெளி விடப்படும். இந்த வகையில் 15 நிமிடங்கள் அதிகமாக கிடைக்கும். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

வணிக நோக்கமே இந்த புதிய இடைவேளை திட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், ஆப்பிரிக்காவில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் இந்த இடைவெளியில் காண்பிக்கப்பட உள்ளன. இதன் மூலமும் ஐ.பி.எல்.க்கு வருவாய் கிட்டுகிறது. மொத்தம் 118 இரண்டரை நிமிட விளம்பர இடைவேளை விற்பனைக்கு தயாராக உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பும் உரிமையை சோனி மற்றும் உலக ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்ழூ.எஸ்.ஜி.) பெற்றுள்ளன. அவை, 9 ஆண்டுகால ஒளிபரப்புக்கு ரூ.8200 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் சோனி செட்மேக்ஸ் சேனல் ஐ.பி.எல். ஆட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 33 நிமிடங்கள் விளம்பரம் ஒளிபரப்ப நேரம் தர வேண்டும் என்று ஒளிரப்பு தாரர்கள் கேட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு ஓவர்கள் முடிவிலும் 40 வினாடிகளும், விக்கெட் விழுந்தால் அந்த இடைவெளியில் சுமார் ஒரு நிமிடமும் விளம்பரத்தை ஒளிபரப்ப அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், ஓர் இன்னிங்சில் மொத்தமே 2 அல்லது 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தாலோ அல்லது 15 ஓவர்களுக்குள்ளேயே போட்டிகள் முடிவடைந்தாலோ அது ஒளிபரப்புதாரர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி தெரிவித்தார்.

ஏர்டன்குடாவில் பதினொரு கடற் கொள்ளையர்கள் கைது; பிரான்ஸ் வீரர்களின் துணிச்சலான செயலை உலக நாடுகள் பாராட்டு

somaliya-robbery.jpgசோமாலியாவின் கடல் எல்லையிலுள்ள ஏர்டன் குடாவில் வைத்து சென்ற புதன்கிழமை பதினொரு கடற்கொள்ளையர்களைக் கைது செய்த பிரான்ஸ் கடற் படையினர் கொள்ளையர்களின் கப்பலையும் தடுத்து வைத்துள்ளனர். சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது கடற் கொள்ளையர்கள் ரொக்கட் தாக்குதலை நடாத்தினர்.

இந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் மேலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதி கடல் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏர்டன் குடாவில் இடம் பெறும் கடற் கொள்ளைகளை முறியடிக்க உலக நாடுகளின் கூட்டான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. வருடாந்தம் சுமார் 16 ஆயிரம் கப்பல்கள் சுயஸ் கால்வாயூடாக ஏர்டன் குடாவை நோக்கி பயணம் செய்கின்றன.

எரிபொருட்கள் தானியங்கள் இராணுவ உபகரணங்கள் என ஏராளமான பொருட்களை இக்கப்பல்கள் வியாபார உதவி நோக்கங்களுக்காக கொண்டு வருகின்றன. இந்தக் கப்பல்களை சோமாலியாவின் கடல் எல்லைகளிலுள்ள கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையிடுவது பெரும் தலையிடியை உருவாக்கியது. இதனால் பல நாடுகள் இணைந்து இக்கடல் எல்லைகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஐரோப்பிய யூனியன் கொடியுடன் ரோந்தில் ஈடுபட்டுள்ளன. சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதால் பிரான்ஸ் கடற் படைக் கப்பல் புதன்கிழமை மாலை ஏர்டன் குடாவில் தரித்து நின்றது.

கொள்ளையர்களின் பத்து மீட்டர் நீளமான படகு ஆயுதங்களுடன் வந்த பொழுது பிரான்ஸ் கப்பலிலிருந்து கிளம்பிய ஹெலிகொப்டர் கொள்ளையர்களின் படகைச் சுற்றி வளைக்க பிரான்ஸின் கடற்படை கப்பல் கொள்ளையர்களின் படகை நெருங்கி கப்பலையும், கொள்ளையர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கென்யாவின் ஐநூறு மைல் கடல் எல்லையில் வைத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் கடல் எல்லைகளில் அதிகரித்துச் செல்லும் கடற் கொள்ளைகளை முற்றாக ஒழிக்கவென அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் நான்கு முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ள வேளையில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர் .

கொள்ளையர்களின் சொத்துக்களை முடக்குதல் அவர்கள் செயற்படும் நாடுகளில் கொள்ளையர்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கிய திட்டங்கள் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட யோசனைகளிலுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள போதும் பிரான்ஸ் கடற்படையே முதற் தடவையாக கடற் கொள்ளையர்களைக் கைது செய்துள்ளது.

அமெரிக்கத் தூதுவருடன் அமைச்சா; ரிஷாட் சந்திப்பு.

rishad__usambassador.jpgஇலங் கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் பிளேக்,  மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இன்று காலை சந்தித்து உரையாடினார். வடக்கில் நலன்புரி நிலையங்களில் உள்ள பொது மக்களின் தேவைகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள் பற்றியும் இங்கு கலந்துரையர்டப்பட்டதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தியாவில் தொடரும் செருப்பு கலாசாரம் – அத்வானி மீதும் செருப்பு வீச்சு

advanil000.jpgபாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால்,  அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ,  செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி விட்டது. ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசப்பட்டது போல இப்போது இந்தியத் தலைவர்கள் மீதும் ஷூக்கள் வீச்சு தொடர் கதையாகியுள்ளது.

முதலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஷூ வீசினார், இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் நவீன் ஜிந்தால் மீது ஒரு முதியவர் செருப்பை வீசினார். இப்போது அத்வானி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ப.சிதம்பரம் மீது காரைக்குடியில் உருட்டுக்கட்டை வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

16042009.jpgகிழக்கு மாகாணசபை நாளை கொண்டு வரவுள்ள உள்ளூராட்சி சபை விசேட சட்ட மூலத்திற்கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து வெளிநடப்புச் செய்ததுடன் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 1424 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

bandula_gunawardena.jpgஇவ்வருட ஆரம்பம் முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மூலம் கூடுதல் விலைக்கு அத்தியவசிய பாவனைப் பொருட்களை விற்பனை செய்த  1424 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் இறுதி வரை 974 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மட்டும் 450 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கொழும்பு புறக்கோட்டையில் 180 அரிசி மூடைகளும் கண்டியில் 44 அரிசி மூடைகளும் சவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றங்களுக்கான விடுமுறை முடிவுற்றதும் குறிப்பிடப்பட்ட 450 வாத்தகர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நோர்வே தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

protest_norvey.jpgகொழும்பு, வோர்ட் பிளேசில் உள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கை தூதரகம் தாக்கி சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தரமுல்ல சீலாரத்ன தேரோ தலைமையில் இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைக் கண்டிப்பதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தும் பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கிளிநொச்சிக்கு விஜயம்

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அவருடன் படை உயரதிகாரிகளும்  கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.

கிளிநொச்சியில் படையினருடன் புத்தாண்டு நிகழ்வுகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முப்பது வருடங்களின் பின்பு இலங்கை அரசுத் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தமது விஜயத்தின்போது, கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து படையினருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன்- வைகோ

india-election.jpgமதிமுக பொதுச்செயலாளர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியி தான் போட்டியிடும் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘’என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக்கேட்க வேண்டும். இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை” என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு; தோழமை. மக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கோபத்தில் உள்ளனர். அதனால் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்று பேசினார்.

இந்திய கடற்பரப்பினுள் செல்ல வேண்டாம்! அமைச்சர் மீனவர்களுக்கு எச்சரிக்கை

f-m.jpgதமிழ் நாட்டு கடற் பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நேற்று முதல் 45 நாட்களுக்கு தடைவிதித்துள்ளதாக மீன் பிடி அமைச்சு தெரிவித்தது.  இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவர் எனவும், இதனால் இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் மீன்பிடி அமைச்சு இலங்கை மீனவர்களை கோரியுள்ளது.

மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கம் 45 நாள் மீன் பிடித் தடையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டு அரசாங்கம் மீன்பிடி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

மீன்பிடித் தடை தொடர்பாக இலங்கை மீனவர்களை அறிவூட்டியுள்ளதாகவும் இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் இந்தியக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதாகும் இலங்கை மீனவர்களை விடுவிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர்களுக்கு இலங்கை அரசும் தண்டனை வழங்கும் எனவும் அமைச்சு கூறியது. கடந்த காலங்களில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் பல இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனவே இந்த 45 நாள் தடை அமுலிலுள்ள நாட்களிலாவது இந்திய கடல் எல்லைக்குச் செல்வதை தவிர்க்குமாறு அமைச்சு கோரியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாட்டு அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 45 தினங்களுக்கு தமிழ்நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தினுள் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். கடந்த காலங்களில் பல இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்து வருகின்றனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.