சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பன்றிக் காய்ச்சல் அபாயம் இலங்கையும் முன்னெச்சரிக்கை

swine-flue.jpgமெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரச தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இந்நோய் தொற்றாமல் தடுப்பதற்கு சகல சுகாதார நிலையங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

* பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன அது எங்கிருந்து தோற்றம் பெற்றது?

சுவாச உறுப்புகளில் ஒருவகைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவிதமான காய்ச்சலே பன்றிக் காய்ச்சல் ஆகும்.

இக்காய்ச்சல் பொதுவாக பன்றிகளுக்கே ஏற்படும் ஆனாலும் மனிதர்களுக்கும் தொற்றக் கூடிய தன்மை கொண்டது.

இவ்வாறு மெக்ஸிகோவில் பன்றி ஒன்றில் தாக்கி வைரஸ் மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தது இதுவே பன்றிக் காய்ச்சலின் ஆரம்பமாகும்.

* பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து முகமூடிகள் பாதுகாத்துக் கொள்ளுமா?

பன்றிக் காய்ச்சலிலிருந்து முகமூடிகள் அணிவதன் மூலம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளது. இருந்தாலும் அதன் முடிவுகள் சர்ச்சைக்குரியது.

* பன்றிக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் என்ன?

சாதாரண காய்ச்சலுக்கு எவ்வாறான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அவையே பன்றிக் காய்ச்சலுக்கும் தோன்றும்.

அதாவது இருமல், தடிமன், தலையிடி, உடல்வலி, நடுக்கம், சோர்வு ஆகியவற்றுடன் சில வேளைகளில் வயிற்றுப் போக்கு வாந்திபேதி என்பனவும் காணப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்குள்ளானவர்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பது தொடர்பாக எவ்வாறு அறிய முடியும்?

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பவராகவோ அல்லது மெக்ஸிகோவிலிருந்து அண்மையில் வந்திருந்தவராகவோ இருந்தால் கட்டாயம் மருத்துவ அறிவுரையை பெற வேண்டியது அவசியம்.

ஆனால், இந்நோய் தோற்றுவதைத் தடுக்காமல் இருக்க நோயாளர் வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

ஆம், ரமிபுளு அல்லது ரிலன்ஹா மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும் ஆனால், காய்ச்சலுக்கான வழமையான மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது.

* பன்றிக் காய்சலுக்கு ஊசி மருந்து உள்ளதா?

இல்லை, ஓர் ஊசி மருந்தினைக் கண்டு பிடிக்க 3 முதல் 6 மாதம் வரையான காலப்பகுதி தேவைப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலிலிருந்து எம்மை நாமே பாதுகாக்க முடியுமா?

பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதாவது தும்மும் போதோ இருமும் போதோ திசுக்களால் முகத்தை மூடி தும்மியபின் திசுக்களை உடனடியாக வேறு இடங்களிற்கு அப்புறப்படுத்த வேண்டும்.

நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்குறிப்பிட்ட தகவல்கள் அரச தொற்று நோய் தடுப்புப் பிரிவால் பொதுமக்களின் நலன்கருதி வெளியிடப்பட்டதாகும்.

சென்னையில் மர்ம ஆசாமி ஓட்டிய ரயில் -சரக்கு ரயில் மோதல்: 7 பேர் பலி

29-train.jpgசென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் இயக்கினார். அந்த ரயில் வியாசர்பாடி அருகே நின்று கொண்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் ரயில் மீது மோதியதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் 7 பேர் பயணிகள் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய நபரும் பலியானார்.

சென்னை-திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. ஆனால், 4.50 மணியளவி்ல் ரயிலின் டிரைவர் அதில் ஏறும் முன்பே திடீரென அந்த ரயில் கிளம்பியது. அப்போது அந்த ரயிலில் 20 பயணிகளே இருந்தனர். இதைக் கண்ட பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் டிரைவர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். வேகமாகச் சென்ற அந்த ரயில் சென்ட்ரலை அடுத்த பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து அந்த ரயில் படுவேகத்தில் 5.00 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது தண்டையார்பேட்டையில் பெட்ரோலியம் நிரப்புவதற்காக டேங்கர் சரக்கு ரயில் ஒன்று லூப்லைனில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

எதிர் திசையில் பயங்கர வேகத்தில் ரயில் வருவதை பார்த்த சரக்கு ரயிலின் டிரைவர் ஆறுமுகம், உதவி டிரைவர் பிரதாப், கார்டு கில்பர்ட் ஆகியோர் ரயிலிலிருந்து குதித்து ஓடினர். அவர் ஓடிக் கொண்டிருந்தபோதே டேங்கர் ரயில் மீது பயங்கர வேகத்தில் பயணிகள் ரயில் மோதியது. இதில் இரு ரயில்களும் தீப் பிடித்துக் கொண்டதோடு தடம் புரண்டன. மோதிய வேகத்தில் மின்சார ஒயர்கள் அறுந்து அந்தப் பகுதியில் மின்சாரமும் தடைபட்டது.

பயணிகள் ரயிலை இயக்கியது ரயில்வே என்ஜின் டிரைவரோ, ரயில்வே மெக்கனிகல் ஷெட் ஊழியரோ இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த ரயிலை இயக்கிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் தீவிரவாதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

பிரான்ஸ் அமைச்சரும் பிரித்தானிய செயலாளரும் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

29042009-2.jpgஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கலாநிதி பாலித்த கோஹன, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர்; காமினி செனரத், இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் மற்றும் பிரான்ஸ் உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயந்தேர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு விஜயம் செய்தனர்.

அங்குள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வசதிகளை நேரில் கண்டு திருப்தி தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரான்ஸ் அரசாங்கத்தால் அங்கு அமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆஸ்பத்திரியையும் இவர்கள் பாவையிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தா கல்லூரியின் நிவாரணப் பொருட்கள் ஊடகத்துறை அமைச்சர் யாப்பாவிடம் கையளிப்பு!

donation_food_anandacollage.jpgவடக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு,  ஆனந்தா கல்லூரியினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஊடகத்துறை அமைச்சிடம் இன்று கையளிக்கப்பட்டன.

இது தொடர்பாக ஆனந்தா கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வைபத்தில் நிவாரணப் பொருட்களை கல்லூரியின் பழைய மாணவரும் தகவல்,  ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கல்லூரி அதிபர் கையளித்தார்.  இவ்வைபவத்தில் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட, பௌத்த மதகுருக்கள் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

flee0009.jpgவன்னி மோதல் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் சுதாகர் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை அமர்வின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து சேகரிக்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கிழ.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைப் பகிஷ்கரிப்பு

eastern-university.gifகிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து வருவதால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரிவுரையாளர் ஒருவருக்கும் மாணவர்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இந்த பகிஷ்கரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.

குறிப்பிட்ட விரிவுரையாளரை தமது பீடத்திலிருந்து மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மாணவர்களை அவமதிக்கும் வகையில் இவ்விரிவுரையாளர் நடந்து கொள்வதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மாணவ பிரதிநிதிகளுக்கும் மருத்துவத் துறை பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.ஜி கருணாகரனுக்குமிடையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்ததைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பீடாதிபதி விதித்திருந்த நிபந்தனையை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதன் காரணமாகவே தொடர்ந்தும் மாணவர்கள் இந்த விரிவுரைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் இணைப்பாளர் ஒருவர் மாணவர்கள் விரிவுரைகளுக்குத் திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை – 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டி

advani.jpgஇந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதுடன் 107 தொகுதிகளில் 1567 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலின்; 3ம் கட்டத்துக்கான பிரசார நடவடிக்கைகள்  நேற்று மாலையுடன் முடிவடைந்தன. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. இந்திய பொதுத் தேர்தல் 5 கட்டமாக் நடக்கிறது. கடந்த 16ந் தேதி முதல்கட்ட தேர்தல் 124 தொகுதிகளிலும் 23ந் தேதி 2ம் கட்ட தேர்தல் 141 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. 3ம் கட்டமாக 107 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் 107 தொகுதிகளில் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இவர்களில் 101 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

107 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 14 கோடியே 40 லட்சத்து 2 ஆயிரத்து 265 பேர் ஆவர். 

2011 உலகக்கோப்பை: இலங்கையில் 12 போட்டிகள்

28icc.jpg2011ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவில் 8 இடங்களில் 29 போட்டிகள் நடைபெற உள்ளன. இலங்கையில் மூன்று இடங்களில் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. சரத்பவார் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக்கோப்பை ஏற்பாட்டுக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளில் ஓர் அரையிறுதி ஆட்டமும், இறுதி ஆட்டமும் அடங்கும். இலங்கையில் மற்றொரு அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடக்கவிழா வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இரு இடங்களில் எட்டு போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் ஐசிசி தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கத் வெளியிட்டார்.

பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் மீது மார்ச் 3ந்தேதி தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கு போட்டிகளை நடத்துவதில்லை என ஐசிசி நிர்வாகக் குழு தீர்மானித்தது. இதையடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடைபெறுகின்றன.

முசலியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நாளை

மன்னார் – முசலி பகுதியிலிருந்து 2007 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நாளை (30) ஆரம்பமாகின்றன.

முதற்கட்டமாக 122 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் முசலி – சவரியார்புரம் கிராமத்தில் நாளை குடியமர்த்தப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.நிக்கலஸ்பிள்ளை தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு சவரியார்புரம் விளையாட்டுத் திடலில் நாளை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்து மன்னார், நானாட்டான் பிரதேசங்களில் தங்கியிருந்து மீளவும் தமது சொந்த வாழ்விடத்துக்கு செல்லும் இந்த 122 குடும்ப ங்களுக்கும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான உலருணவுப் பொருள்கள் வழங்கப்படுவதுடன், சேதமடைந்த வீடுகள் திருத்தப்படும்வரை தங்குவதற்கு வசதியாக கூடாரங்கள் வழங்கப்படுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இதற்கான உதவிகளை அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் வழங்குவதாகவும் அவர் கூறினார். மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு முன்னோடியாக, படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு கிராம சேவையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கபட்டதன் காரணமாகவே மீள்குடியேற்றம் தாமதமானதாக தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதைப் போன்று வடபகுதியிலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிய மர்த்துவதற்காக 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது ஆறு பிரிவுகளில் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மீள்குடியமரும் சவரியார்புரம் கிராம மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயம், கைத் தொழில் முயற்சிகளுக்கும் உதவி வழங்கப்படுகிறது.

நாளை மீள்குடியமரும் மக்களுக்காக நடைபெறவுள்ள நிகழ்வில் அமைச்சு க்களின் உயரதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோர் கலந்துகொள்கின்றனர். 2007 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

இந்த மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்தி அவர்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மேலும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவென உலக வங்கியின் 380 மில்லியன் ரூபா நிதியில் யோதவெவ மீளமைக்கப்படவுள்ளது. அதேநேரம், மதவாச்சி- மன்னார் வீதியும் புனரமைக்கப்படுகின்றது.

தங்காலையில் டெங்கு தீவிரம்: எட்டு பாடசாலைகள் மூடப்பட்டன

தங்காலை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்ததையடுத்து தங்காலைப் பிரதேசத்திலுள்ள எட்டு பாடசாலைகள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருப்பதாக தங்காலை வலயக் கல்விக் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் தொடர்பாக இப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாகவே இப் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தங்காலைப் பிரதேசத்திற்கு இரு மருத்துவ நிபுணர்கள் அடங்கலான விசேட குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்த்தன கூறினார்.

இவ் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று 28 ஆம் திகதி வரையும் டெங்கு காய்ச்சலுக்கு 3591 பேர் உள்ளாகினர். இவர்களில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக நோயியல் தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணரொருவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, கண்டி, கேகாலை, மட்டக்களப்பு, கம்பஹா, குருணாகல், மாத்தறை, அனுராதபுரம் உட்பட பல பிரதேசங்களில் இக் காய்ச்சலுக்குப் பலர் உள்ளாகியுள்ளதகவும் அவர் கூறினார்.

தங்காலை நிலைமை தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் சுனில் மேலும் குறிப் பிடுகையில்; டெங்கு காய்ச்சல் காரணமாக தங்காலை மகளிர் கல்லூரி 6 ஆம் வகுப்பு மாணவியொருவரும், தங்காலை முன் மாதிரி பாடசாலை முதலாம் தர மாணவரொருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக இப் பிரதேசத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்தே எமது வலயத்திற் குட்பட்ட 8 பாடசாலைகளை மறு அறிவித்தல் வரையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை மகளிர் கல்லூரி, தங்காலை ராகுல கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்மாதிரி பாடசாலை, தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசிய பாடசாலை, தங்காலை ஆரம்ப பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றார்.