கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து வருவதால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரிவுரையாளர் ஒருவருக்கும் மாணவர்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இந்த பகிஷ்கரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.
குறிப்பிட்ட விரிவுரையாளரை தமது பீடத்திலிருந்து மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மாணவர்களை அவமதிக்கும் வகையில் இவ்விரிவுரையாளர் நடந்து கொள்வதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மாணவ பிரதிநிதிகளுக்கும் மருத்துவத் துறை பீடாதிபதி வைத்திய நிபுணர் கே.ஜி கருணாகரனுக்குமிடையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்ததைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பீடாதிபதி விதித்திருந்த நிபந்தனையை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதன் காரணமாகவே தொடர்ந்தும் மாணவர்கள் இந்த விரிவுரைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் இணைப்பாளர் ஒருவர் மாணவர்கள் விரிவுரைகளுக்குத் திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.