2011ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவில் 8 இடங்களில் 29 போட்டிகள் நடைபெற உள்ளன. இலங்கையில் மூன்று இடங்களில் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. சரத்பவார் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக்கோப்பை ஏற்பாட்டுக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளில் ஓர் அரையிறுதி ஆட்டமும், இறுதி ஆட்டமும் அடங்கும். இலங்கையில் மற்றொரு அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடக்கவிழா வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இரு இடங்களில் எட்டு போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் ஐசிசி தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கத் வெளியிட்டார்.
பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் மீது மார்ச் 3ந்தேதி தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கு போட்டிகளை நடத்துவதில்லை என ஐசிசி நிர்வாகக் குழு தீர்மானித்தது. இதையடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடைபெறுகின்றன.