வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்ற புதிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நடைமுறையில் செய்து காட்ட வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.
வன்னியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது தொடர்பிலேயே மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
முன்னரை போன்ற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாதென்றே நான் அஞ்சுகிறேன். கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற யோசனையை நேர்மையாக மதித்து செயற்படுவார்களென நான் நம்புகிறேன் என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் கூறியதை தற்போது மதிக்கிறதா என்பது இதில் மிகவும் முக்கியமானதென்றும் அவர் கூறியிருக்கிறார்.
இரு நாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஜோன் ஹோம்ஸ் வவுனியா முகாம்களுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே ஹோம்ஸ் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
இவற்றுக்கமைய களத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கூறியது நடைபெற்றால் மோதல் நிலைமைகள் வெகுவாக குறைவடையும் என நான் நம்புகிறேன் என்று ஹோமஸ் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் வன்னியிலிருந்து பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து அங்கு 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் இன்னும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எஞ்சியிருக்கின்றனர் என்பதே ஐ.நா.வின் மதிப்பீடென்று ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கத்தினது புள்ளி விபரங்களிலும் பார்க்க எமது புள்ளிவிபரங்கள் சரியானவை? என்று கூறியிருக்கும் அவர், 70 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே அங்கு இருப்பதாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் கொழும்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், இந்த மக்கள் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருகிறார்.
இதேநேரம், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும், ஐ.நா.புள்ளிவிபரங்களென ஜனவரி மாத இறுதியிலிருந்து 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டதாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. அத்துடன், அது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களென கூற போதிய தெளிவான தகவல்கள் இல்லையென்றும் ஹோம்ஸ் இதன்போது கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளுடான பேச்சுக்கள் பயனுடையதாக அமையவில்லை. நான் தொடர்பு கொண்டிருந்த போது, பொது மக்களை விடுவிப்பது பற்றியோ அல்லது ஆயுதங்களை கீழே வைப்பது பற்றியோ அவர்கள் உரிய பதிலெதுவும் அளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயற்சிக்கும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஏனையவர்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதாகவும் பல்வேறு சாட்சியங்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்கள் அவர்களது தெரிவின் பேரிலேயே தங்களுடன் இருப்பதாக புலிகள் கூறுகின்றனர்.
இதேநேரம், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஐ.நா.மனிதாபிமான அணியொன்றை அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாகவோ, அகதி முகாமிலுள்ள ஐ.நா.வின் உள்நாட்டு பணியாளர்களை விடுவிப்பது குறித்தோ எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் ஜோன் ஹோம்ஸ் இதன்போது மேலும் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.