சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

islam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும் ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நடாத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி சிரமப்படுவோருக்கு உதவுமாறு இலங்கை முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தனது குத்பா பேருரையில், இஸ்லாம் பிறருக்கு உதவுவதை பெரிதும் வரவேற்கிறது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற எந்த வித்தியாசமும் இதில் இல்லை. மாறாக மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஓர் உயிர் சிரமப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மிகத்தெளிவாக எமக்கு கற்றுத் தருகின்றன. எனவே நாம் கஷ்டப்படுவோருக்கு துன்ப துயரத்திலிருப்போருக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அது உடலால், பொருளால், பணத்தால், ஆலோசனையால் எந்த தோற்றத்திலிருந்த போதிலும் பிற சகோதரனின் துன்பம் துடைப்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும்.

எனவே நாம் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவவேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உங்களால். முடிந்தவைகளை கொடுத்து உதவுங்கள் இஸ்லாம் கொடையை மிகவும் நேசிக்கின்றது. கஞ்சத்தனத்தை வெறுக்கின்றது.

இன்று முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தில் ஒரு கேள்வி உண்டாகலாம். எமது முஸ்லிம் சகோதரர்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஈவிரக்கமின்றி உடுத்திருந்த ஆடையோடு வடக்கிலுள்ளவர்கள் விரட்டியடித்தார்கள் எமது சமூகம் அவர்களால் அகதிகளாக்கப்பட்டது. சொல்லொணாத் துன்ப துயரங்களை முன்னோக்கியது. இப்பொழுது நாம் உதவி செய்வதா?

எமது சகோதரர்களை விரட்டியவர்கள் இந்த அப்பாவிப் பொது மக்கள் அல்ல. இஸ்லாம் பழிக்குப்பழி வாங்குவதை கற்றுத்தரவில்லை. மாறாக அநியாயம் செய்தவர்களோடும் உபகாரம் செய்து வாழுமாறு எம்மை பணித்திருக்கின்றது. நபி(ஸல்) அவர்களை குறைஷிக் காபிர்கள் மக்காவிலிருந்து விரட்டியடித்தார்கள். எனினும் மக்கா வெற்றி கிடைத்தபோது நபியவர்கள் அவர்களனைவரையும் மன்னித்து விட்டார்கள். நாமும் அந்த உத்தம நபியின் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் – தங்காலையில் மூடப்பட்டிருந்த 8 பாடசாலைகளும் இன்று திறப்பு

schools_stu.jpgடெங்கு காய்ச்சல் தீவிர நிலை காரணமாக சுமார் ஒரு வார காலமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தங்காலைப் பிரதேச எட்டுப் பாடசாலைகளும்இன்று (4ம் திகதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். இந்த எட்டுப் பாடசாலைகளினதும் சுற்றாடல், சுத்தம் தொடர்பான கண்காணிப்பு இன்று முதல் நான்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிர நிலைமை காரணமாக தங்காலை வலயக் கல்விப் பணியகத்திற்கு உட்பட்ட எட்டு பாடசாலைகள் கடந்த 28ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டன.

தங்காலை மகளிர் வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசியப்பாடசாலை, தங்காலை ராகுல வித்தியாலயம், தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆரம்பப் பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்பட்டன.

தங்காலை மகளிர் கல்லூரி மற்றும் தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பெறும் ஒரு மாணவியும், ஒரு மாணவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்தே இப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதேநேரம் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவும், டெங்கு ஒழிப்பு பிரிவும் இணைந்து தங்காலை பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளையும் துரிதப்படுத்தினர்.

‘டெங்கு காய்ச்சல் பரவுகை கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதத்திற்கு அமைய இந்த எட்டுப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவ தாகவும் தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் நாளை இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

இவ் இருநாள் விஜயத்தின் போது இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பல்வேறு அரசாங்க எதிர்க்கட்சித் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயம் இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

பன்றிக்காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது மெக்ஸிகோ

mexican.jpgபன்றிக் காய்ச்சலால், உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை மெக்ஸிகோ அரசாங்கம், 176 இல் இருந்து 101 ஆக குறைத்துள்ளது.

மெக்ஸிகோவில் ஆரம்பித்ததாக நம்பப்படும் இந்த வைரஸ் முன்னர் அஞ்சப்பட்ட அளவுக்கு ஆபத்தானது அல்ல என்பதற்கான அறிகுறிகள் வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.

இதேவேளை, உலகெங்கிலும், சுமார் 15 வெவ்வேறான நாடுகளில், மொத்தமாக இந்த நோயினால், 600 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இடம் பெயரும் மாணவர்க்கு கல்வியை வழங்குதல்; நிவாரண கிராமங்கள், நலன்புரி நிலையங்களில் 200 கொட்டில்கள்

students.jpgஅரச கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக நிவாரண கிராமங்கள், நலன்புரி நிலையங்களில் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வருவதாக வவுனியா வலய கல்வி பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் நேற்று தெரிவித்தார்.

செட்டிக்குளத்திலுள்ள அருணாச்சலம், ஆனந்த குமார சாமி வலயம் 1, வலயம் 2, வலயம் 3 ஆகியவற்றில் 100’x16’ அளவு கொண்ட சுமார் 200 தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்படுவதுடன் ஒவ்வொரு வலயத்திலும் சுமார் 4500 மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் இரு நேர பாடசாலையாக இயங்க வைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வலயம் மூன்றில் 60 பாடசாலைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 6 தற்காலிக கொட்டில்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாளை திங்கட்கிழமை செட்டிக்குளம் வலயம் இரண்டில் பாடசாலைக்கான கொட்டில்களை அமைப்பதற்கான மதிப்பீடுகளை பொறியியலாளர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இங்கும் 100’x16’ அளவிலான 60 தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வலயத்திலும் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்கள் உள்ளனர். இதுவரையில் 500 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் ஏற்கனவே அமை க்கப்பட்டுள்ள தற்காலிக பாடசாலைகளில் பெருந்தொகையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அத்துடன் அண்மைக்காலமாக வவுனியாவுக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு பகுதிக்குள் வரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்க கல்வி அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் எதிர்வரும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றத் தகுதியுற்ற அனைத்து மாணவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை ஏற்கும் வேலைகளும் நடைபெறுவதாகவும் வவுனியா வலய கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தொகையான மக்கள் ஒரே நேரம் இடம்பெயர்ந்து வந்ததால் வவுனியா மாவட்டத்தில் சுமார் 20 பாடசாலைகளில் மக்களை தங்க வைக்க நேரிட்டது. இதனால் பாடசாலையை இழந்த வவுனியா மாவட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொட ர்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

வடக்கில் வைத்திய உதவிகளை விஸ்தரிக்க பிரான்ஸ் உதவி

france.jpgவடக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு வைத்திய உதவிகளை விஸ்தரிக்கும் வகையில் பிரான்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பொன்றும் உதவ முன் வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 100 மில்லியன் ரூபா செலவில் செட்டிக்குளத்தில் 35 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையொன்று பிரான்ஸ் அரசாங்கத்தினாலும், எம்.எஸ்.எப். எனப்படும் எல்லைகள் அற்ற பிரான்ஸ் வைத்திய அமைப்பு 100 படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை மெனிக் பார்ம் முகாமிலும் அமைக்க முன் வந்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் டபிள்யு.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்..

மன்னார் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், தாதிகள் ஆகிய துறையினருக்கும் மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

பழம்பெரும் நடிகர் பாலாஜி மரணம்

balaji.jpgநடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று அவர் காலமானார். மறைந்த அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மஸ்கெலியா தோட்ட உத்தியோகத்தர் வேலை நிறுத்தம் தொடர்கிறது

sri-lanka-upcountry.jpgமஸ்கெலியா பகுதி தோட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (01) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

உத்தியோகத்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் நுவரெலிய மாவட்டமெங்கும் தமது போராட்டத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவித்தார். இதுவரை, தோட்ட உத்தியோகத்தர்களின் கடமைகளைத் தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், சில தோட்டங்களில் உத்தியோகத்தர்களுக்கும், தொழிலாளர்க ளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படலாமென்பதால், தொழிலாளர்கள் தமது கடமையை மாத்திரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவி க்கப்பட்டது.

உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால், தொழிலாளர்களின் சம்பளத்தை உரிய வேளையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உத்தியோகத்தர்கள் தமக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குமாறு கோரி கடந்த 29 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஹொங்கொங் பரவியது பன்றிக் காய்ச்சல்

swine-flue.jpg மெக்ஸிகோவில் இருந்து ஹொங்கொங்குக்கு வந்த மெக்ஸிகோ நாட்டு பிரஜை ஒருவரில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் காணப்பட்டதாக, ஹொங்கொங்குக்கான தலைமை அதிகாரி டொனால்ட் சாங் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவில் 160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான நோய்க்கிருமி என்று சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ், ஆசியாவுக்கு வந்த ஒருவரிலும் காணப்பட்டமை உறுதிசெய்யப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

சாங்காய் ஊடாக வந்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், அவர் தங்கியிருந்த விடுதி பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டுள்ளதாகவும் சாங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய தாதிக்கும் இந்த நோய் தொற்றியுள்ளதாக, ஜேர்மனி கூறுகிறது. அவர் தற்போது உடல்நிலை தேறிவருகின்றார்.
 

கொழும்பில் அகாஸி

akashi2.jpgஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி நேற்றிரவு கொழும்பு வந்து சேர்ந்தார். நேற்றிரவு வருகை தந்த அவர் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்யவுள்ள அகாஸி, ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களையும் சந்தித்துப் பேசுவார்.

அகாஸியின் இலங்கைக்கான 17வது விஜயம் இதுவாகும்.