சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

சார்க் சிறுவர் அமைப்பின் அமைச்சர்கள் மட்ட 4வது மாநாடு இன்று ஆரம்பம் – தலைமைப்பொறுப்பு அமைச்சர் சுமேதாவுக்கு

sumeda.jpgதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான நான்காவது சிரேஷ்ட உயர் அதிகாரிகள் மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்றுக் காலை ஆரம்பமான இந்த மாநாட்டின் போது இலங்கைக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷில் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாக கலந்து கொண்ட நேற்றைய மாநாட்டிற்கு இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம். சுமனதாச தலைமை வகித்தார். சார்க் அமைப் பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, சார்க் நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான நான்காவது மாநாடு இன்று ஆரம்பமாகிறது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் அமைச்சர்கள் மட்ட மாநாட்டின் தலைமை பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜீ. ஜயசேன தலைமை வகிக்கவுள்ளார்.

இன்றைய தினம் இந்த மாநாட்டில் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் சிறுவர் விவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 13 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்ற இந்த மாநாட்டின் போது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிரபல டென்னிஸ் வீரர் திடீர் மரணம்

matius.jpgபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் மத்தியூ மான்ட்கோர்ட் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 24 வயதான அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதற்கான காரணம் தெரிய வரும். பாரிசில் உள்ள அவரது காதலியின் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் பிணமாக கிடந்ததாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

உலக தரவரிசையில் 199 ஆவது இடம் வகித்த மார்ன்ட் கோர்ட், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் 2 ஆவது சுற்று வரை வந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு 5 வார காலம் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்தது.

இந்த நிலையில் அவரது மரணம் ரசிகர்களை மட்டுமின்றி, பிரா ன்ஸ் நாட்டு டென்னிஸ் சங்கத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 4 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால், மான்ட் கோர்ட்டுக்கு எதிராக விளையாடி இருக்கிறார்.

நடால் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்தியூ எனது நண்பர். அவர் இறந்த தகவலைக் கேட்டு இன்னும் என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அந்தத் தகவலை என்னால் நம்பவே முடியவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.- எல்லாவல மேதானந்த தேரர்

parliament.jpgபயங் கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் முன்வரவேண்டிய அதேவேளை, மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.

இன, மத பேதங்களுக்கப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் சகல கட்சிகளும் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகிறது. மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு நாட்டைச் சீரழித்த பிரபாகரன் அழிக்கப்பட்டுவிட்டார். அவர் செய்த படுகொலைகளே இறக்கும்போது சயனைட்குப்பி கூட இல்லாத நிலையை அவருக்குத் தோற்றுவித்தது. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எல்லாவல மேதானந்த தேரர்: (ஹெல உறுமய கட்சி எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.

விலா எலும்பில் காயத்தால் முதல் போட்டியில் பிரட்லீ இல்லை?

cricket.jpgஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், அபாரமாக பந்துவீசி வரும் பிரட் லீ திடீரென இடது விலா எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக ஸ்கேன் எடுக்க லண்டன் அனுப்பப்பட்டுள்ளார். இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
சோபியா கார்டன்ஸில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியில் பிரட் லீ கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்தத் தொடர் முழுதும் அவர் விளையாடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றில் அழுதவண்ணம் உரையாற்றிய பத்மினி பா.உ.

11padmini.gifவவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.  மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு  உரையாற்றினார்.

சர்வதேசத் திடமிருந்து நற்பெயரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையே இன்று மேலோங்கியுள்ளது. எனது பாராளுமன்ற அனுபவத்தின் படி அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களின் வாயை மூடுவதற்கே பயன்பட்டுள்ளது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் விருப்பமின்றி அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மக்களின் பெறுமதியான சொத்துக்கள் அழிந்துவிட்டன.

இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ நாடு யுத்தத்துக்கு முன்னுரிமையளித்து வந்தது. எனினும் இனியாவது பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பட வேண்டும். முகாம்களில் வாழும் மூன்று இலட்சம் மக்கள் படும் அவஸ்தைகளினால் முழு தமிழ் சமூகத்தின் மனங்களும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளன. இம்மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

முகாம்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். அப்போது அங்குள்ள அடர்த்தி குறைந்து நோய்களும் இறப்புக்களும் குறைவடையும். பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பத்மினி சிதம்பரநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கான் முகமது மரணம்

_khan_muhammed_cricket.jpgபாகிஸ் தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கான் முகமது தமது 81 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சார்பில் முதல் இந்திய விக்கெட்டை வீழ்த்தியவர் என்கிற பெருமையை பெற்றவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாட 1952 ஆம் ஆண்டு சென்றது.

1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் சார்பில் முதலில் பந்து வீசியவர் கான் முகமது. அதாவது பாகிஸ்தான் அணியின் சார்பில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீசியவர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

முதலில் இந்தியா ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களாக பன்கஜ் ராயும், வினூ மன்கட்டும் களம் இறங்கினர். இந்திய அணி தனது முதன் இன்னிங்ஸில் 19 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது.

கான் முகமது வீசிய பந்தில், பன்கஜ் ராய் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சார்பில் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற புகழ் கான் முகமதுக்கு கிடைத்தது.

தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடிய அவர் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். – விஜித ஹேரத்

06arliament.jpgநாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே பயங்கரவாதத்தை ஒழித்து தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். அதற்கான முதற்படியை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கான விதவைகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பிள்ளை களை இழந்த பெற்றோர்கள் உள்ளனர். அவர்களுக்கான எதிர்கால வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் நாட்டின் பிரதான பிரச்சினையை இனங்கண்டு அதனைத் தீர்க்க அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி வழங்கிய ஆதரவினைப் போலவே மிஞ்சியுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளைத் துடைத்தெறியும் வரை அவசரகால சட்டத்துக்கும் பூரண ஆதரவினை வழங்கும். அதற்குப் பின்னரும் அவசரகாலச் சட்டம் தொடருவதை ஜே. வி.பி. அனுமதிக்காது. ஏனெனில் அது மக்களைப் பாதிப்பதாகவே அமையும். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத்: (ஜே. வி. பி. எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

cricket.jpgஅவுஸ் திரேலியா – இங்கிலாந்து ஆணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்து ஆஷஸ் தொடர் அணி அறிவிப்பு:

கார்டிஃப் மைதானத்தில் இன்று துவங்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஹார்மிசன் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக கிரகம் ஆனியன்ஸ் இடம் பெற்றுள்ளார்.

மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அதேபோல் ரவி பொபாரா அணியில் இடம் பெற்றிருந்தாலும் இயன் பெல்லும் ஒரு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொன்ட்டி பனேசர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (கப்டன்), அலைஸ்டர் குக், ரவி பொபாரா, கெவின் பீட்டர்சன், போல் கொலிங்வுட், இயன்பெல், மேட் ப்ரையர், பிளின்டாஃப், ஸ்டூவார்ட் பிராட், கிரேம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர் சன், கிரகம் ஆனியன்ஸ் மொன்ட்டி பனேசர்.

அவுஸ்திரேலிய விபரம் வருமாறு:- பிலிப் கூச், சைமன் கடிச், ரிக்கி பொண்டிங் (கப்டன்), மைக்கல் கிளார்க், மைக்கல் ஹஸி, மார்ஷல் நேகர்தி, பிராட் ஹடின், மிச்சல் ஜோன்சன், நாதன் ஹரிட்டஸ், பீட்டர் சிடில், ஸ்டுவர்ட் கிளார்க், பென் ஹில்பென்ஹஸ் .

தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது இத்தருணத்திலாவது அவசியம் – கடற்றொழில் அமைச்சர்

felixperera.jpgதமிழ் மக்களைப் பிரதிநிதி த்துவப்படுத்தும் 22 தமிழரசுக் கட்சி எம்.பிக்களும் தமிழ் மக்களின் சுகதுக்கங்கள் பற்றி சபையில் பேசாமல் யுத்த வெற்றி பற்றி பேசியமையே தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். இன்று பத்மினி சிதம்பரநாதன் எம்.பி- சபையில் வேதனையுடன் கூறும் விடயங்கள் எமக்கும் கவலையையே தருகிறது. எனினும் இதற்குக் காரணமானவர்கள் யார்?

இன்றைய நாளிலும் அகதிமுகாம்களில் மக்கள் அவதிப்படும்போது வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் செளகரியமாக வாழ்கின்றனர். லண்டனிலும் மலேசியாவிலும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நான் முழுமையாக நம்புகின்றேன் தமிழ், மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்ச அளவிலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பார். இத்தருணத்திலாவது தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தமிழ் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இனவாதம் இனியும் தலைதூக்க இடமளிக்க முடியாது.

எமது நாட்டில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் அகதி முகாம்கள் உள்ளன. எனினும் எமது அகதி முகாம்கள் போன்று சிறப்பாக எதுவும் பராமரிக்கப்படவில்லை. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா: மேற்கண்டவாறு கூறினார்.

பெடரர் வரலாறு படைத்தார்

padaral.jpg
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் போராட்டத்திற்கு பின்னர் மகுடம் சூடிய பெடரர், பீட் சாம்ப்ராஸின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கௌரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி அரங்கேறியது.

கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், 6ஆம் நிலை வீரர் அமெரிக்காவின் அன்டி ரொடிக்கும் சந்தித்தனர்.  இறுதிப் போட்டிக்கே உரிய விறுவிறுப்புடன் இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடினர். இதனால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இதில் 4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6, (86), 7-6, (75), 3-6, 1-614 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரொடிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர்.   27 வயதான பெடரர் 6ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க  பீட் சாம்ப்ராஸின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம்பெற்றார்.

ஓய்வு பெற்ற பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும் அமெரிக்க ஓபனை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால், பிரெஞ்ச் ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.