சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

எஞ்சிய மாகாண சபைகளுக்கும் புதுவருடத்திற்கு முன் தேர்தல்

susil.jpgவிரைவில் ஏனைய மாகாண சபைகளையும் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முதலில் இரண்டு மாகாண சபைகளையோ அல்லது மூன்றையும் ஒரே தடவையிலோ கலைக்கப்படலாம். தமிழ்- சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தும் வகையில் இம் மாகாணசபைகள் கலைக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லையெனவும் தேவையேற்படின் விரைவில் பொதுத் தேர்தலும் நடத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் செய்தியாளர் மாநாடென்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் காமினி லொக்கே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம். பி. ஆகியோர் கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணம் முழுமையாக மீட்கப்பட்ட பின் அங்கும் தேர்தல் நடத்தப்படும். எனினும் கிழக்கைப் போன்று ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அப்பகுதியின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பல பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. முதலில் மக்களின் பாதுகாப்பான இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். அதனையடுத்து முதலில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலே நடத்தப்படும் அதன் பின்னர் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது போன்று வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும். கல்வித்துறையைப் பொறுத்தவரை கிழக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று வடக்கிற்கும் கல்வித்துறை அபிவிருத்திக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பாடசாலைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கணனி இயந்திரங்கள் உட்பட பெரும்பாலான வளங்களை புலிகளே உபயோகித்துள்ளனர் என்பதால் வளங்களில் பின்னடைவு காணப்பட்டது. இவையனைத்துமே மீளக்கட்டியெழுப்படும்.

புலிகள் ஆசிரியர்களையும் பலவந்தமாகத் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ள முற்பட்டதையடுத்து பெரும்பாலான ஆசிரியர்கள் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை மீள அவர்கள் கற்பித்த பாடசாலைகளுக்கே நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலக சாதனை- சனத் ஜயசுரிய

srilanka-india.jpgஇன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச ஆட்டத்தில் சனத் ஜயசுரிய சதம் அடித்ததினால் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் கூடிய வயதில் சதம் அடித்தது இவரின் இந்த சாதனையாகும். இவர் சதம் அடிக்கும் போது இவரின் வயது 39 வருடங்களும் 254 நாட்களும் ஆகும். இதற்கு முன் இச்சாதனையை ஏற்படுத்தியவர் ஜெப்ரி பொய்கொட் (இங்கிலாந்து) என்பவராவார். அவர் சதம் அடிக்கையில் அவரது வயது 39வருடங்களும் 51நாட்களும் ஆகும்.  

ஊடக முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

mahi-raja.jpgஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நேற்று தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைப்பதற்கோ, இழுத்தடிப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையவே கிடையாது. அப்படியானதொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை.

அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அப்படியானதொரு நிலையில் இத்தகைய கேவலமான வேலையை செய்யவேண்டிய தேவையே இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற போது அரசாங்கத்தின்மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும். லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல முக்கியஸ்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம்.

ரிவிர ஆசிரியர் காமினி விஜயக்கோனும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமானது. பதவியிலுள்ள அரசாங்கம் இதற்கு வகை கூறவேண்டுமென்பது உண்மை. அதற்காக எடுத்ததற்கெல்லாம் அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். ஊடகவியலாளர்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவுடன் தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இது நாட்டில் பாரதூரமான குரோதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அமைதியின்மையொன்றை தோற்றுவிக்கும்.

தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரிக்கின்றன. தயவுசெய்து தமிழர்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத வேண்டாமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை தமிழ் மக்களுக்கெதிரானதல்ல. பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள தமிழ் மக்களை விடுவிப்பதற்கானது. வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். அதாவது, புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதனை வலியுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். இத்தகைய பங்களிப்புக்களை தமிழ்ப் பத்திரிகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இலங்கை- இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று

doni-maha.jpgஇலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ரன்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்பஜன்சிங் இல்லாவிட்டாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றுமுன் தினம் பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தது. இங்கு இலங்கை கிரிக்கெட்சபை நிர்வாகிகள், இந்திய அணியினரை வரவேற்றனர்.

இந்திய அணி வீரர்கள் கொழும்புக்கு புறப்படும் முன்பு நேற்று முன்தினம் காலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்தும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீசக்கூடிய புதுமுக சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம், இலங்கை பயணத்துக்கான இந்திய அணியில் காயம் காரண மாக ஹர்பஜன்சிங் இடம்பெறாதது பின்னடைவா? என்று கேட்டதற்கு பதில் அளித்து கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அணியில் இடம்பெறாததால் அணிக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடுவோம். வீரர்கள் எல்லோரும் தங்களது துறையில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய அணி வருமாறு:-

டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), டெண்டுல்கர், யுவராஜ்சிங், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, யூசுப் பதான், சகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஒஜா, முனாப் பட்டேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன்குமார்.

இலங்கை அணி வருமாறு:-

ஜயவர்த்தன (கப்டன்), சங்கக்கார, ஜயசூரிய, தரங்க, கப்புகெதர, முபாரக், தில்ஷான், கன்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மஹ்ரூப், பெர்னாண்டோ, குலசேகர, துஷார, மெத்தியு.

இந்திய – இலங்கை இடையேயான போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-

போட்டி அட்டவணை

ஜன  28:  முதல் ஒரு நாள் போட்டி தம்புள்ள
ஜன  31  2 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் -இரவு)
பெப்.  3  3வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  5  4 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப்.  8  5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு
பெப்.  10  20 ஓவர் போட்டி, கொழும்பு (பகல் – இரவு)

சீதனத்தை தடைசெய்துள்ள நேபாள அரசு தலித்களைக் காப்பாற்ற புதிய சட்டம்

நேபாளில் சீதனக் கொடுமையை இல்லாதொழிக்கப் போவதாக கூறியுள்ள பிரதமர் பிரசண்டா பாரபட்சமற்ற நேபாளைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பிரசண்டா அமைதியான முறையில் அரசியல் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நேபாளத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சீதனக் கொடுமைகள் அதிகரித்துள்ளமைக்கு கவலை வெளியிட்ட பிரதமர் சீதனம் நேபாளத்தில் தடை செய்யப்படுவதுடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரும். சீதனம் வாங்குவோரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தலின் போது தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இவ் வேளையில் அரசுக்கெதிரான செயற்பாடுகளையும், பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லையென்றும், பெண்கள் அடக்கியாளப்படுவது நேபாளத்துக்குப் பெரும் அவமானம் எனவும் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார். நேபாளத்திலுள்ள 27 மில்லியன் சனத்தொகையில் 14 வீதமானோர் தீண்டத்தகாத தலித் இனத்தவராவர்.

இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நேபாளின் பிரபல இந்து ஆலயங்களில் தலித்கள் வழிபடவும் பொது வைபவங்களில் பங்கேற்கவும் தடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் பாராபட்சமும் சமூகக் குற்றமும் எனச் சுட்டிக்காட்டிய சமூகத் தலைவர்கள் இம் முறைகள் மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் பிரசண்டா தொலைக் காட்சியில் உரையாற்றியுள்ளார். சரிந்து செல்லும் தனது அரசின் செல்வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அடிமட்டத்திலும் கிராமப் புறங்களிலும் ஆதரவைத் தேடும் முயற்சியே இதுவென எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

நேபாள அரசில் பல வகைக் கொள்கையுடைய கட்சிகள் உள்ளதால் அரசைக் கொண்டு செல்வதற்கான அனுபவம் குறைவாக உள்ளதென்பதை ஏற்றுக் கொண்ட பிரதமர் பிரசண்டா கட்சிகளின் கருத்துக்கள், தெரிவுகள் என்பவற்றை வரையறுத்துள்ளதாகக் கூறினார்.

கம்பளையில் திடீர் மண்சரிவு- 44 வீடுகள் பாதிப்பு;

28-01.jpgகம்பளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கம்பளவெல முஸ்லிம் கிராமத்தில் மகாவலி கங்கை ஓரமாக இடம்பெற்ற மண்சரிவில் 44 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம் பெற்ற இந்த ஆற்றங்கரையோர மண்சரிவு காரணமாக 44 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அக் குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கம்பொலவெல சிங்கள கனிஷ்ட பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அமைச்சர் டி. எம். ஜயரத்ன ஸ்தலத்துக்கு விரைந்து தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உலர் உணவுகளை வழங்க துரித நடவடிக்கை எடுத்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் கம்பொலவெல முஸ்லிம் பள்ளி வாசல் சூழலில் வசிப்பவர்களாவர். கம்பொலவெல பாதையும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்திற்காக மாற்று வழியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகாவலி கங்கை ஓரமாக உள்ள நிலப்பரப்பில் இந்த வீடுகள் அமைந்திருப்பதால் சட்டத்தையும் மீறிய நிலையில் பலர் மணல் அகழ்வு வேலையில் ஈடுபட்டதன் எதிரொலியாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு அப்பிரதேசத்தின் அருகே காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜயரட்ன தெரிவித்தார். இந்த அனர்த்தத்தைக் கேள்விப்பட்டதும் மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயும் அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இரு மாகாண சபைகள் இவ் வாரம் கலைக்கப்படும்?

lanka-map-02.jpgஇந்த வாரத்தினுள் மேலும் இரு மாகாண சபைகள் கலைக்கப்படலாமென அரசுதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ் வாரத்தின் இறுதிப் பகுதியில் மேல் மாகாண மற்றும் ஊவா மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரச உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை தென்மாகாண சபையை சிறிது காலம் தாமதித்து கலைப்பதற்கும் அரசு உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

stop-violance.jpg
ஊடகவியலாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலையும் கண்டித்து கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடக அமைப்புகள், இலங்கை ஆசிரியர் சங்கம், இடதுசாரி முன்னணி, புதிய சமசமாஜக் கட்சி, சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன பங்கு பற்றின.

இதன் போது, தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இது அரசின் பொறுப்பு, ஊடக அடக்கு முறையை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை வைத்திருந்ததுடன் அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகை தர உள்ளார்.

pranab.jpgஇன்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி  கொழும்பு வருகை தர உள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பிற்கு வருகை தர உள்ளார் . அச்சமயம் ஜனாதிபதி ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது என ராஜபக்சேவிடம் பிரணாப் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. மேலும் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் அவர் ராஜபக்சேவை கேட்டுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர். இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இத்தகைய பின்னணியில், பிரணாப் கொழும்பு வருகை தரும்  செய்தி வந்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரின் கருத்தால் இஸ்ரேலுடனான உறவில் பெரும் விரிசல்

gaa-sa.jpgபாலஸ்தீனம் காஸா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஸா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. “காஸா’ பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுவதை பொய்களால் மறைக்க முடியாது என தயான் ஜெயதிலக்க குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல், இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தக் கூடுமென்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது. தயான் ஜெயதிலக்கவின் கருத்துகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் கடந்த வாரம் இலங்கைக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது. இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகனவை கடந்த புதன்கிழமை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

மனித உரிமை சபையில் அரபு நாடுகள் எடுத்த நிலைப்பாட்டை விட இலங்கை மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் அதனை தாம் எதிர்க்கவில்லை எனவும் பாலித ஹோகனவிடம் மார்க் சோபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய நண்பர் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரதிநிதி மிகவும் சினமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இலங்கைக்கான ஆயுத உதவிகளை இஸ்ரேல் நிறுத்தக் கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தயான் ஜெயதிலக்க இஸ்ரேலுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சிடம் எவ்வித அங்கீகாரங்களையும் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொண்ட படைத்துறை தொடர்புகளுக்கு தயான் ஜெயதிலக்கவின் கருத்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.