::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

48 மணி நேரத்தில் 10301 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம்

civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 10,301 சிவிலியன்கள் தப்பி வந்து இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களில் 5600 சிவிலியன்கள் நேற்று முன்தினம் 4701 சிவிலியன்கள் நேற்றும் வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாத்திரம் விசுவமடு பிரதேசத்தை நோக்கி வருகை தந்த 4701 சிவிலியன்களில் மூவர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று சிவிலியன்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் கொல்லப்பட்ட மூன்று சிவிலியன்களின் சடலங்களை பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுக்காலை வரை 21,621 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தப்பி வரும் பொதுமக்களை நலன்புரி முகாம்களுக்கு அழைத்துச் செல்லவென போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 50 பஸ்கள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதை புலிகள் பல்வேறு விதத்தில் தடுத்துவருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் பணயமாக வைத்து மேற்கொள்ளும் அடக்கு முறைகளையும், அவர்களது பிடியிலுள்ள சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாளாந்தம் கொடுத்துவரும் துன்பங்களையும் வெறுத்த சிவிலியன்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இது மேலும் கணிசமான முறையில் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பிவர முயற்சிப்பவர்களுக்கு சங்கிலிகளால் புலிகள் அடித்து கடுமையாக துன்புறுத்தியிருப்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களையும் பெருமளவில் குறைத்தும் கொடுப்பதாக தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இளம் வயதுடையவர்கள் பலாத்காரப் படுத்தப்படுவதுடன் 45 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாய பயிற்சி வழங்கப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காமினி மகா வித்தியாலயத்தில் 1000 பேரும், தம்பைமடு முகாமில் 2799 சிவிலியன்களும், நெலுங்குளம் முகாமில் 2625 சிவிலியன்களும், மெனிக் பாம் முகாமில் 582 சிவிலியன்களும், செட்டிக்குளம் மத்திய கல்லூரியில் 1763 சிவிலியன்களும், கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 1351 பொதுமக்களும், ஓமந்தையில் 6000 பொதுமக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக் காட்டினார்.

புலிகளின் ட்ரக் வண்டி மீது படையினர் தாக்குதல் -புதுக்குடியிருப்பில் சம்பவம்

udaya_nanayakkara_.jpgகுண்டு துழைக்காத தகடுகள் பொறுத்தப்பட்ட புலிகளின் ட்ரக் வண்டி ஒன்றை இலக்கு வைத்து படையினர் நடத்திய தாக்குதல்களில் அந்த வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் அதில் இருந்த 34 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு- ஒட்டுச்சுட்டான் வீதியின் ஊடாக முன்னேறிவரும் இராணுவத்தின் 53வது படைப் பிரிவினர் கனரக யுத்த தாங்கிகளை பயன்படுத்தி நேற்று முன்தினம் மாலை இந்த கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக முன்னேறிவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொருட்டே புலிகளின் ட்ரக் வண்டி வேகமாக வந்ததாகவும் இதனை அவதானித்த படையினர் அந்த ட்ரக்கை இலக்கு வைத்து  தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட புலிகளின் 12 பேரின் சடலங்களை நேற்று மாலை வரை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதுவரை 13ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர்

civilians.jpgகட்டுப் பாடற்ற பிரதேசத்திலிருந்து வவுனியாவின் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இதுவரையில் 13 ஆயிரம் பொது மக்கள் வந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்

புலிகளின் தடைகளையும் மீறி 5000 சிவிலியன்கள் நேற்று வருகை

udaya_nanayakkara_.jpgமோதல்கள் நடைபெறும் வன்னிப் பகுதியிலிருந்து நேற்று மேலும் சுமார் 5000 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இவர்களுள் மிதிவெடியில் சிக்கி காயமடைந்த ஒருவரும், புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றுவரை வவுனியாவுக்குள் 8200 பொதுமக்கள் வந்துள்ளனர். வன்னியிலிருந்து வரும் பொது மக்களை தங்கவைக்கவென பம்பைமடுவில் மேலும் ஒரு முகாம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வமடு, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, குப்பிலான் குளம் பகுதியிலிருந்து நேற்றுமுன் தினம் 5000 பேர் படையினரின் கட்டுப்பட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் நேற்று படையினர் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்தவர்களுள் சுமார் 1000 பேர் நேற்று வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 400 நோயாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து தருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இரண்டு சனசமூக நிலைய ங்களிலேயே தற்காலிகமாக புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இயங்குகின்றது. இப்பகுதி கடற்கரைப் பகுதியை அண்டியுள்ளதால் நோயா ளிகளை கடல்மார்க்கமாகவேனும் திருகோணமலைப் பிரதேசத்திற்கு அழைத்துவருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி நகர் படையினரின் முழுமை யான கட்டுப்பாட்டில் வந்துள்ளமையால் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மாவட்ட வைத்திய பணிப்பாளர் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய குழுவொன்றை அனுப்பவும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியை மீண்டும் இயங்கவைக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே இன்றைய முதற்பணி – ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி அறிக்கை

sangari.jpgsitharthan.jpgsritharan.jpgவன்னியில் சிக்கியிருக்கும் மக்களை தாம் விரும்பிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு புலிகள் எதுவித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் அந்த மக்களை பேரவலத்திலிருந்து மீட்பதே இன்றைய முதன்மையான பணியென்றும் மேற்படி கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, தி. ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வன்னியில் பேரவலத்தினுள் சிக்குண்டுள்ள மக்கள் பற்றிய கவலை மனிதநேயமுள்ளவர்களின் மனச்சாட்சியை உலுக்கி நிற்கிறது.

வன்னியில் பரந்து வாழ்ந்த இம்மக்கள், மாதக்கணக்கில் பணயமாக கொண்டு செல்லப்பட்டு இன்று 200 சதுர கி.மீ.க்கு குறைவான நிலப்பரப்பில் ஒடுங்க, ஒதுங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அன்றாடம் காயமும் மரணமுமென்று அவர்கள் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேவேளை அரசாங்கம் அந்த மக்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை உணரும்படியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த மக்கள் கடந்த 15 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ஏதோவொரு வகையில் புலிகளுடன் சம்பந்தப்பட்டு வாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலையே இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய புலிகளின் பொய்யான பிரசாரங்களும் அந்த மக்களை பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. மேலும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களும் அவர்களிடம் இந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் ஐ.நா. நிறுவனங்களின் கண்காணிப்புடன் அல்லது ஒத்துழைப்புடன் பராமரிக்கப்படல் வேண்டும்.

ஜனநாயக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் இம்மக்கள் தொடர்புகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

வயோதிபர்கள் தமது உறவினர்கள் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறவினர் யாராவது அருகிலிருந்து உதவுவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

மரணப் பொறியில் அகப்பட்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கான மக்களை மீட்பதில் உரிய அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தாலும், குறிப்பாக இந்தியாவாலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், தற்போது முகாம்களில் இருப்பவர்கள், இனிமேல் வரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகள், ஏற்பாடுகள் விரிவாக திருப்திகரமாக செய்யப்படல் வேண்டும்.

இந்தக் காரியங்களை செய்வதன் மூலமே மக்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும். பேரவலங்களில் இருந்து அவர்களை மீட்க முடியும்.

அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் 5,000 பொதுமக்கள் வருகை

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் அதிகளவிலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்றைய தினம் (06) மட்டும் சுமார் 5,500 பேர் இவ்வாறு வந்து சேர்ந்துள்ளார்கள். இது தொடர்பாக பிரிகேடியா சவேந்திர சில்வா தகவல் தருகையில் இன்றும் (07) அதிக எண்ணிக்கையான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தவண்ணமுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் கடற்புலித் தளபதி சூசை தங்கியிருந்த இடத்தின் மீது விமானத் தாக்குதல்

mi24_2601.jpgவிமானப் படையின் கிபிர் ஜெட் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த புலிகளின் கடற்புலித் தளபதி சூசையின் மறைவிடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 11 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி களமுனைச் செய்திகள் தெரிவிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் புலிகளின் கடற்புலி தளபதி சூசையும் அங்கே இருந்ததாக நம்பப்படுகிறது.  இந்த தாக்குதல் புதுக்குடியிருப்பு திரணைப்பாலை என்ற இடத்தில் உள்ள பங்கர் ஒன்றின்மீதே நடத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலையே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விமானப் படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில்  கிபீர் மற்றும் எப் 7 ரக ஜெட் விமானங்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராதா படையணி – பிரபாவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு தலைமையகம் படைவசம்

udaya_nanayakkara_.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவான ராதா படையணியின் தலைமையகத்தை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.57 வது படைப் பிரிவும், இராணுவத்தின் மூன்றாவது செயலணியும் இணைந்து இதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் விசுவமடுவுக்கு கிழக்கே இந்த முகாம் அமைந்திருந்தது. இராணுவத்தின் மேற்படி இரண்டு பிரிவுகளும், ராதா படைப் பிரிவு தலைமையகக் கட்டடத் தொகுதியை கைப் பற்றும் போது அங்கு புலிகளின் ஈழக்கொடி பறந்து கொண் டிருந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பிரிவாக இருந்த இந்த படையணி தலைமையகத்திலிருந்தே சகல பாதுகாப்பு மற்றும் யுத்த கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

பிரபாகரனுக்கும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த முக்கிய தலைவர்களுக்கும் ராதா படையணியே பாதுகாப்பு வழங்கி வந்தது. அதேநேரம், புலிகளின் விமானப் படைப் பிரிவுக்குரிய பாதுகாப்பையும் இந்த படையணியே வழங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ராதா படையணி தலைமையகம் பாரிய மண் அணைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள், இராணுவத்தினர் கட்டடத் தொகுதிக்குள் புகுவதற்கு சற்று முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளனர். படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புலிகளின் பிடியிலுள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச சமூகத்தின் பணி – கோத்தாபய : செஞ்சிலுவை குழுவை நாட்டை விட்டுத் துரத்துங்கள்- விமல்

gotabhaya.jpgபுலிகளைப் பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு புலிகளின் பிடியிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச அமைப்புக்களினதும், தன்னார்வ நிறுவனங்களினதும் முன்னுள்ள மிக முக்கிய பணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்களை பாதுகாப்பதாக கூறி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகின்றனர். யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிக்கும்படி சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் கொடுப்பதுடன் அதற்கான உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மக்களை விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் எமது பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை திசை திருப்பும் வகையிலும், அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடனும் சில சர்வதேச அமைப்புக்களும், வெளிநாட்டு ஊடக நிறுவனங்களும் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குற்றஞ்சாட்டினார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.  இதன் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியதாவது:-

புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சிப்பவர்களும், அதனை திரிவுபடுத்தி பொய்ப்பிரசாரங்கள் செய்கின்றவர்கள் எவரும் அப்பாவி பொது மக்களை புலிகள் பலாத்காரமாக பிடித்து மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவதையோ விடுவிக்காமல் இருப்பதையோ பேசுவதில்லை.

ஆயுதங்களை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்வது எமது நோக்கமாக இருந்திருந்தால் இன்று இந்த யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். பொது மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்டதனாலேயே இந்த நடவடிக்கையை எமது படையினர் இன்று வரை நீடித்துச் செல்கின்றனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தொடர்பாக பலர் பேசுகின்றனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக புதிதாக கூற வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில், அவர்கள் சரணடைய வேண்டியது மாத்திரமே உள்ளது. இதில் எமக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.

கிழக்கை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான புனர்வாழ்வையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களில் சிலர் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான நடவடிக்கையை நாங்கள் நடைமுறையில் காண்பித்துள்ளோம் என்றார்.

இலங்கையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ, அமைப்புக்கள் சிறந்த சேவைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன. இதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் இந்த நிறுவனங்களில் பணி புரியும் அதிகாரிகளோ மோசமாகவும், புலிகளுக்கு சார்பான நிலையிலும் செயற்படுகின்றனர்.

புலிகள் ஆயுதத்தை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்யவில்லை. இந்த யுத்தத்தை முன்னெடுப்பதற்கு வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே தான் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தில் இருப்பவர்களும், சில சர்வதேச அமைப்புக்களும் புலிகளுக்குச் சார்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

படையினர் நடத்திய மோட்டார் தாக்குதல்களிலேயே அநேகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சிலரிடம் சூட்டுக் காயங்களும் காணப்படுகின்றன. நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபடுபவர்களுக்கே சூட்டுக் காயம் ஏற்படும். துப்பாக்கியுடன் காயமடைந்த நிலையில் இருப்பவர்களை புலி உறுப்பினர்கள் என்றும், துப்பாக்கி இல்லாத நிலையில் காயமடைந்தவர்கள் இருந்தால் அவர்கள் சிவிலியன்கள் என்றும் சொல்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அநேகமான புலிகள் சிவில் உடைகளுடன் இருந்து கொண்டே மோதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தின் அரைவாசி பிரதேசத்திலேயே அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது. இலங்கை போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வரும் எந்த ஒரு நாடும் வழங்காத பல சந்தர்ப்பங்களை நாங்கள் பொது மக்களுக்காக வழங்கியுள்ளோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் பிடியில் நான்கரை இலட்சம் மக்கள் இருப்பதாக ஒருசிலரும், இரண்டரை இலட்சம் மக்கள் இருப்பதாக இன்னும் சிலரும் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்த எண்ணிக்கை புலிகளின் அழுத்தத்தினால் கூறப்பட்டவையாகும்.

இரண்டு இலட்சத்து எட்டாயிரம் பொதுமக்களே உள்ளார்கள் என்று 2002 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர். இது தவிர மலையகம் உட்பட ஏனைய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையானவர்கள் சென்றுள்ளதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், கடந்த சில மாதங்களாக வருகை தந்த பெருந்தொகையானோர் வவுனியாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய

படையினரால் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளும், அவர்களுக்கு சார்பானவர்களும் கூறுவது போன்று பெருந்தொகையான பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான எந்தவித தகவல்களும் இல்லை என்று தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முல்லை மாவட்டத்தில் எத்தனையோ குளக்கட்டுகள் வந்த போதிலும் அவற்றை பயன்படுத்தி மக்கள் விவசாய நடவடிக்கைகள் செய்த எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.

புலிகள் உலகளாவிய ரீதியில் பாரிய வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் பெருமளவிலானவர்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளமையும் தெரிய வருகிறதென்றும் குறிப்பிட்டார்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் இராணுவ ரீதியான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்று உறுதியாக தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவை நாட்டை விட்டுத் துரத்துங்கள்!  விமல் வீரவன்ஸ ஆவேசம்

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல்கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, போல் கஸ்ட்டெலாவையும் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சித் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு: பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்து அவர்களின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக எமது படையினர் போராடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாடுகள் எமது நாட்டுக்கு எதிராகச் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஒருபுறம் இணைத்தலைமை நாடுகள் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுகின்றன. மறுபுறம் சில சர்வதேச அமைப்புகள் புலிகளைக் காப்பாற்றிவிட முற்படுகின்றன.  அந்த வகையில் செஞ்சிலுவை  சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவான வகையிலும் எமது படையினருக்கு எதிரான வகையிலும் அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
வன்னி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்று அவர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார். அவரது கூற்றில் எந்த உண்மையுமில்லை.  எமது படையினர் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றவே யுத்தம் செய்கின்றனர். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.

ஆனால், போல் கஸ்ட்டெலா ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை படையினர் மீது சுமத்துகின்றார். அவர் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார். அவ்வாறான ஒருவரை நாட்டில் வைத்திருக்கக்கூடாது. அரசு அவரை உடனடியாக நாட்டிலிருந்து அனுப்பவேண்டும். அத்தோடு செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் இங்கிருந்து விரட்டிவிடவேண்டும். எமது மக்களுக்கு எமது அரசு போதுமான உதவிகளைச் செய்துவருகிறது  என்றார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசும் குற்றச்சாட்டு

red-cr.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது.

கொழும்பில் உள்ள தமது அலுவலகம் ஆர்பாட்டக்காரர்களால் கல் வீசித்தாக்கப்பட்டதாகவும், தமது அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

12 வயது சிறுமியை பயன்படுத்தி புலிகள் தற்கொலைத் தாக்குதல்

udaya_nanayakkara_.jpgஉடம்பு முழுவதிலும் குண்டைக் கட்டி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாதுகாப்புப் படையினரை நோக்கி அனுப்பிய புலிகள் அந்தக் குண்டை வெடிக்கச் செய்த தில் அந்தச் சிறுமியின் உடல் வெடித்துச் சிதறி சின்னா பின்னமாகிய கோரத்தை கள முனையில் நேரில் கண்ட பாதுகாப்பு படைவீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரிடம் சரணடையும் சிவிலியன்கள் போன்று கைகளை உயர்த்தியவாறு அந்தச் சிறுமி சாலையின் வடக்கே படையினரை நோக்கி வந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு இராணுவத்தினர் அந்தச் சிறுமியை அண்மித்தபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

புலிகளின் இறுதி கடற்புலி தளமாக விளங்கிய சாலையை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்த அகோர காட்சியை கண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமியை நோக்கிச் சென்ற இரண்டு இராணுவ வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சிறார்களை யுத்தத்தில் பலாத்காரமாக ஈடுபடுத்திய புலிகள் தற்பொழுது அவர்களை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளமை தெளிவாக விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.