::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

உயிரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு புலிகள் முயற்சி -கோஹன

Dr Kohonaவிடுதலைப் புலிகள் அண்மைக் காலங்களில் விமான எதிர்ப்பு மற்றும் உயிரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை சர்வதேசத்திடம் இருந்து கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: குறித்த ஆயுதங்கள் மிகவும் வெப்பமான வெடிபொருட்களைக் கொண்டிருக்கும். அத்துடன், அந்த ஆயுதங்கள் இரசாயனக் கலவை கொண்டதாகவும், அவை மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக் கூடியவையுமாகும். இதற்கான ஆதராங்கள் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்டதில் தெரியவந்துள்ளன. அத்துடன், பதிவுகள் எம்மிடம் உள்ளன. யுத்தம் முடிவடைந்ததும் இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.

சர்வதேச ஆயுத வர்த்தகர்களிடம் இருந்து ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதன் மூலம் படையினரை பலமிழக்கச் செய்வதற்கு புலிகள் முயற்சிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். புலிகளுக்கு போர்நிறுத்தம் என்பது தேவையில்லை. மாறாக, அவர்களின் ஆட்பலத்தை மறுசீரமைத்து சிறந்த பலத்துடன் மீண்டும் தாக்குதல் நடத்தவே அவர்களின் தேவையாகவுள்ளது. இதுவே கடந்த காலங்களில் இடம்பெற்றன.  புலிகள் விட்டுச்சென்ற 122 மில்லிமீற்றர் ஆட்டிலறியை அண்மையில் படையினர் கைப்பற்றினர். இது போர் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகமான ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய அவர்கள் முயற்சிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும்.

‘புதுக்குடியிருப்பு முற்றாக சுற்றிவளைப்பு’ – இராணுவப் பேச்சாளர்

armyvictory.gifபுதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 66 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பின் வட திசையில் இருந்து தென் திசை வரையான பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக சுற்றிவளைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் உள்ள புதுக்குடியிருப்பு முழுவதையும் விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் 58வது, 53வது படைப் பிரிவுகளும், இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படையும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பின் நுழைவாயிலில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் முன்னேற்றங்களை தடுக்கும் முயற்சியில் புலிகள் தம்மிடமுள்ள எல்லா வளங்களை பாவித்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பிரிகேடியர், படையினர் புலிகளின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு புலிகளின் முன்னரங்கு நிலைகளை தகர்த்து, தாக்கியழித்த வண்ணம் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

புலிகள் தங்களுக்குள்ள இறுதித்தளமான புதுக்குடியிருப்பை தக்க வைத்துக்கொள்ளும் இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு சில தினங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு நகர் முழுவதையும் விடுவித்து விடுவர் என்று நம்பிக்கை தெரிவித்த இராணுவப் பேச்சாளர், புதுக்குடியிருப்பு நகர் முழுமையாக இராணுவத்தினரிடம் விழும் பட்சத்தில் புலிகளுக்கு புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் உள்ள சிறு சிறு மறைவிடங்கள் மாத்திரமே எஞ்சும் என்றும் தெரிவித்தார்.

‘தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற பெரும்பாலான வன்னி மக்கள் விரும்பவில்லை’- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்

kanakaratnam.gifஇலங்கை யில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பவர் அந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம். தனக்கு வாக்களித்த மக்களை தனியே விட்டுவர மனம் இல்லாதாதால் தான் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவில்லை என்று கூறுகிறார் அவர்.

அவலங்கள் ஏற்பட்ட போதிலும் மக்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களில் தினமும் சராசரி 30 முதல் 35 பேர் வரை கொல்லப்படுகின்றனர். அவ்வாறு மரணங்கள் ஏற்பட்ட போதிலும் அங்கு வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற விரும்பவில்லை.தொடர்ந்தும் அங்கேயே வசிக்க விரும்புகிறார்கள். முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் அங்கிருந்து பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இப்படிக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வசிக்கின்றனர். அப்பகுதிகளில் உணவு இல்லை என்றே கூறலாம். ஒரு நாளுக்கு மூன்று லொறி களில் உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை போதுமானவையல்ல. இதுவரை 5 லொறி உணவுப் பொருள்களே அனுப்பப்பட்டுள்ளன  என்றார் கனகரத்தினம்.

முல்லைத்தீவில் வாழும் மக்களின் நிலை தொடர்பாக  பி.பி.ஸி. செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறுகையில்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்ற பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் முன்னர் வசித்தனர். இப்போது இறந்தவர்கள், வெளியேறியவர்களைத் தவிர்த்து 3லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் என்றார்.

விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர். வெளியேறுவோரை சுட்டுக் கொல்கின்றனர் எனக் கூறப்படுகிறதே எனக்கேட்ட போது அது தவறான தகவல் எனவும் வெளியேற முனைந்த மக்கள் இராணுவப் பகுதிக்கு செல்லும் போது போரின் இடையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை  90வீதம் தாம் நம்புவதாகவும்  என்றும் தெரிவித்தார்

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் இன்று முதல் சுயமாக சமைக்க வழி

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அவர்கள் சுயமாக சமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர் தெரிவிக்கையில்;

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதுவரை சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன. இன்று முதல் அவர்கள் சுயமாகவே சமைக்கத் தொடங்குவர் எனத் தெரிவித்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சகல அடிப்படைத் தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதுடன் இதுவரை காலமும் சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன.

இவர்கள் சுயமாக சமைப்பதற்கு வசதியாக உலக உணவுத் திட்டம் அரிசி உட்பட சமைப்பதற்கான உணவுப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயம் ஆகியன சமையலுக்கான உபகரணங்களையும் வழங்கியுள்ளன.

இதனைத் தவிர ஏனைய பொருட்களை பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தேவை ப்படுமளவுக்கு குடி தண்ணீர் நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் போதியளவில் உள்ளதால் தற்போது எந்த உணவுப் பொருள் தட்டுப்பாடுமில்லை யெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பாரிய முகாம், ஆயுத கிடங்கு புதுக்குடியிருப்பில் படையினர் வசம் -பிரிகேடியர்

uthaya_nanayakara_.jpgபுதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் அங்குள்ள புலிகளின் பாரிய முகாம் மற்றும் ஆயுதக் கிடங்கு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படைப் பிரிவினருக்கும் புலிகளுக்கும் இடையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புலிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் அந்த பாரிய முகாமையும், பாரிய ஆயுதக் கிடங்கையும் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னேறிச் சென்ற இராணுவத்தினர் இந்த முகாமையும், ஆயுதக் கிடங்கையும் கைப்பற்றியுள்ளனர். வன்னி மனிதாபிமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் வசமிருந்த பாரிய முகாம்களையும், பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்த போதிலும், இதுவரை காலம் கைப்பற்றப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலான கனரக ஆயுதங்களைக் கொண்ட பாரிய முகாம் இதுவாகும் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்கள் முதற் தடவையாக மீட்டெடுக்கப்பட்ட பிரதேசம் புதுக்குடியிருப்பு என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். 120 மி. மீ. ரக கனரக மோட்டார் – 03, 81 மி. மீ. ரக மோட்டார்கள் – 45, 60 மி. மீ. ரக மோட்டார்கள் – 43, கொமோண்டோ மோட்டார் – 25, 60 மி. மீ. ரக மோட்டார்களுக்கு பொருத்தப்படும் குழல்கள் – 14, தகடுகள் – 35, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் – 800, பெருந்தொகையான ரி – 56, ரி – 81 ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான உபகரணங்களையும் இந்த முகாமிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள புலிகளின் பாதுகாப்பு அரண்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படையினரின் கடுமையான தாக்குதல்களில் கொல்லப்பட்ட எட்டு புலிகளின் சடலங்களையும், ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, தொலைத் தொடர்பு கருவி – 01, ஆர். பி. ஜி. குண்டு – 02, கிளேமோர் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர். இதுதவிர புதுக்குடியிருப்பு வடக்கு பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரங்கள் மூன்றையும் இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைக் குண்டுகள் – 300, உழவு இயந்திரம் – 01, ட்ரக் வண்டி – 01, மோட்டார் சைக்கிள் – 01, ஜெனரேட்டர்கள் – 02, தண்ணீர் பம்புகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

386 சிவிலியன் நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலை வருகை

trico-hospital.gifமுல்லை தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காயமடைந்த நிலையிலுள்ள 386 சிவிலியன்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐ. சி. ஆர். சி.யின் கப்பல் ஐந்தாவது தடவையாகவும் சிவிலியன்களை திருகோணமலைக்கு அழைத்து வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஐ. சி. ஆர். சியின் கொடியுடன் கூடிய ‘எம். வி. க்ரீன் ஓசன்’ எனும் கப்பலே கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகயீனம் மற்றும் காயங்களுக்குள்ளாகியுள்ள 386 சிவிலியன்களை நேற்று முன்தினம் (24) திருகோணமலைக்கு அழைத்து வந்திருந்தது.

திருகோணமலைக்கு வந்த சிவிலியன்களுக்கான உடனடி மருத்துவ சிகிச்சைகளை கடற்படையின் மருத்துவ குழுவினர் அளித்தனர். பின்னர் இவர்கள் உடனடியாக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியக் குழுவினர் இவர்களுக்கான சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேநேரம் மருத்துவர்களும் போதியளவில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ. சி. ஆர். சி முதல் தடவையாக கடந்த 10ம் திகதி செவ்வாய்க்கிமை 356 சிவிலியன்களையும் இரண்டாவது தடவையாக கடந்த 12ம் திகதி 403 சிவிலியன்களையும் மூன்றாவது தடவையாக கடந்த 16ம் திகதி 440 சிவிலியன்களையும் நான்காவது தடவையாக கடந்த 20ம் திகதி 397 சிவிலியன்களையும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

நிவாரண கிராமங்களுக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர் அனுப்பி வைப்பு

pregnant-lady.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கிய நலன்களைக் கவனிக்கவென சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணரொருவரும் உடனடியாக கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருவர் கடமையில் உள்ளனர்.

இதேநேரம், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணிகளை பிரசவத்திற்கென வவுனியா போதனா வைத்தியசாலைக்கும் செட்டிகுளம், பூவரசங்குளம் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இப்பெண்களின் பிரசவத்திற்கு ஏற்ப இந்த ஆஸ்பத்திரிகளின் வசதிகளை துரிதமாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சுமார் 750 கர்ப்பிணிப் பெண்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவசேவை வழங்கவென வவுனியா ஆயுர்வேத ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ மாதுகளின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற பொருத்தமான ஏற்பாடு வேண்டும்; உதவத்தயார் – டில்லி கொழும்புக்குத் தெரிவிப்பு

navy_rg.jpgஇலங்கையில் மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையூட்டுவதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கும் இந்திய அரசாங்கம் இதற்கு உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதியளிக்க வேண்டுமென்று சர்வதேச ரீதியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விருப்பத்தைப் புலிகள் தெரிவித்திருப்பதாக செய்திகளில் நாம் பார்த்தோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இதனடிப்படையிலேயே இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையையும் அக்கறையுடைய ஏனையவர்களையும் இந்தியா கேட்டுக் கொள்கின்றது என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதை சர்வதேச நிறுவனங்களும் மேற்பார்வை செய்யும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு வலயங்களுக்கு இருதரப்பும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறிய தொகையினர் கடல் மார்க்கமாக வெளியேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன் தரை, கடல்மார்க்கமாக அதிக எண்ணிக்கையானோரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையை சாத்தியமானதாக மாற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புதுடில்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாகவும் அத்துடன், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உதவிகளை வழங்கத் தயாரெனவும் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும், காயமடைந்த மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய்களை தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை

navy_rg.jpgவவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.

பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் பொக்களிப்பான் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படும் ஐயப்பாடு தொடர்பாகக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; நிவாரணக் கிராமங்களில் தங்கி இருப்பவர்கள் எவராவது தொற்று நோய்க்கு உள்ளானால் அவர்களைத் தங்க வைக்கவென தனியான வார்ட்டு தொகுதியும் வவுனியாவில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆகவே, தொற்று நோய்கள் பரவுமென எவரும் அச்சப்படத் தேவையில்லை. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த ஒரு சிலர் மத்தியில் பொக்களிப்பான் தொற்று காணப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நோய்களின் பரவுகை வவுனியா நிவாரணக் கிராமங்களில் கிடையாது என்றார்.

சிவிலியன்களை விடுவிக்க சம்மதித்தால் உரிய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயார்

mahinda_samarasinghe.jpgசிவிலியன்களைத் தமது பிடியில் இருந்து விடுவிப்பதாக புலிகள் ஒரு தெளிவான அறிவிப்பைச் செய்வார்களாயின் அதற்காக அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயாரென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்கமும், சர்வதேச சமூகமும் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து புலிகள் ஒரு தெளிவான பதிலை அறிவித்தால், சிவிலியன்கள் எவ்வகையிலும் பாதிப்படையாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்காக இருதரப்பும் மோதல்களை இடைநிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கைவிடுமாறும் அறிக்கையொன்றின் மூலம் இயக்கத்தைக் கோரியுள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரமசிங்க, ‘இந்தத் தருணத்திலாவது புலிகள் சாதகமாகப் பதில் அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புலிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அவர்கள் பிடித்த பிடியாய்த் தடுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது படையினர் புதுக்குடியிருப்பை நெருங்கிவிட்டார்கள். அதனால், சிவிலியன்கள் இனி வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவிலியன்கள் வெளியேறினாலும் புலிகள் இயக்கத்தினரை எதிர்கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அவ்வாறான நிலைமையில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். நாம் மோதல்களை இடைநிறுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். புலிகள் அமைப்பு இதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியுயோர்க்கில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த அவர் :-

‘ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அண்மையில் மிகச் சிறப்பான ஒரு விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்துக்குமிடையில் மோதல்கள் தீவிரமாக உள்ள பகுதிகளில் சிவிலியன்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கும் சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேறி விடுவிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மோதலை இடைநிறுத்த வேண்டும். இது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மேலும் சிவிலியன் உயிரிழப்பைத் தடுப்பதற்கும் மிக அத்தியாவசியமானது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தை மூலமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் பங்காற்ற வேண்டுமென்றும் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.