::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

சோனியாகாந்திக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை நடேசன் மறுப்பு

p_nadesan.jpgஇந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,  தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார். 

புலிகளிடமிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்- பிரியதர்ஷன யாப்பா

anura-piriyadarshana-yappa.jpgபுலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கை பாரிய வெற்றி பெற்றுள்ளது. புலிகளிடமிருந்த முழு நிலப்பரப்பும் படையினரால் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இப்போது பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி ஒழிந்து வாழ்கின்றனர்.

இந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டு பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அதனைத் தொடர்ந்த பாரிய அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசு விசேட படை நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கும். அது எப்போது எவ்வாறு ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூறமுடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு அரசு மிகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுகின்றது. கடந்த வருடம் 164 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வருடம் 171 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டாலும் அதன் பலன் நாட்டுக்குக் கிட்டியுள்ளது. மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புலிகளையும் விரைவில் அழித்து நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவோம்..யுத்தச் செலவுகளுக்கு மத்தியிலும் பொது மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை நாம் ;குறைத்து விடவில்லை. இவ்வரும் ஏப்ரல் மாதம் வரையில் 25000 மில்லியன் ரூபாவுக்கு உர மானியம் வழங்கியுள்ளோம். 

கடந்த வருடத்தில் எமது நாட்டின் விவசாய உற்பத்திகள் 23 சத வீதத்தால் உயர்ந்துள்ளன. அதனால்தான் உலக பொருளாதா வீழ்ச்சியின் தாக்கத்தை எமது இலங்கை மக்கள் வெகுவாக உணரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மண்ணெண்ணெய் நிரப்பிய இரு பவுசர்கள் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg
முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பவுசர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போதே இந்த மண்ணெண்ணெய் பவுசர்களை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னி பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்காக அரசாங்கம் அனுப்பி வைத்த மண்ணெண்ணெய்களை புலிகள் பலாத்காரமாக எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்தமை இதன் மூலம் உறுதிசெய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களில் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே புலிகள் இந்த பவுசர்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்து வைத்திருந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு- லண்டன் ‘கார்டியன்’ பத்திரிகைக்கு ஐ.நா. ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

sirjohnholmes.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடுகளை நடத்தி வருவதாக எமக்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

லண்டனில் வெளியாகும் கார்டியன் எனும் செய்திப் பத்திரிகைக்கு நேற்று முன்தினம் (08) வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புலிகள் தப்பிவரும் சிவிலியன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன் அவர்கள் பயணிக்கும் படகுகளையும் தாக்கியழித்து வருகின்றனர். அங்கிருந்து தப்பிச் செல்ல நினைப்பவர்களை தம்முடன் இணைந்து போர் புரியுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். சிவிலியன்கள் தப்பி வருவதனை புலிகள் விரும்பவில்லையென்பது மாத்திரம் நிச்சயம். அப்படியிருந்தபோதும் பல சிவிலியன்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கிருந்து தப்பி வருகிறார்கள். இது மிகவும் சிக்கலான சூழ்நிலையெனவும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர் குறித்த கொள்கையை இந்தியா மீளாய்வு செய்ய புலிகள் கோருகின்றனர்

p_nadesan.jpgஇந்தியாவில் ஆட்சியமைக்கப்போகும் புதிய ஆட்சியாளர்கள், ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பான தமது கொள்கையை மீளாய்வு செய்யவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

ஈழத் தமிழ் உறவுகளுக்காக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சிக்கு தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் நடேசன் வரவேற்புத் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் “ஹெட்லைன்ஸ் டுடே” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர்  இதனைத் தெரிவித்துள்ளார். தி.மு.கவினால் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் நிலை தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அ.தி.மு.கவின் ஸ்தாபகரான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களின் நலன் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் வேட்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கினார்.

ஜெயலலிதா தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.சமீபத்தைய அறிக்கையொன்றில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு குறித்து அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார். இது மிகவும் நம்பிக்கையளிக்கும் விடயம். இந்தியாவின் புதிய அரசு இலங்கை இனப்பிரச்சினை மற்றும் தமிழர்களின் அபிலாஷைகள் குறித்த தனது கொள்கையை புதிய யதார்த்தங்களின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தி.மு.க. தமிழ் மக்களுக்கு  அவசியமான வழிவகைகளை  அளிப்பதற்குத் தவறியுள்ளது.  தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துக்கு எதிராகவும்  அதேவேளை, பட்டினி மற்றும் நோய்க்கு எதிராகவும் போராடுகின்றனர். தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் இது நன்கு தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.இவ்வாறு நடேசன் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார்

பாதுகாப்பு வலயத்தினுள்ளிருந்து புலிகள் தொடர்ந்தும் மோட்டார் தாக்குதல்

udaya_nanayakkara_brigediars.jpgபாது காப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புப் படையினரை இலக்குவைத்து புலிகள் தொடர்ச்சியாக மோட்டார் தாக்குதல்களை மேற் கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து படையினரை இலக்குவைத்து மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அங்குள்ள பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சுமார் 40 ஆயிரம் பொது மக்களையே புலிகள் கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனரென படையினர் சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் படையினர் முற்றாக கைப்பற்றியதையடுத்து முல்லைத்தீவின் கரையோரப் பகுதியில் மிகவும் ஒடுக்கமான பிரதேசமான பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் புலிகள் முற்றாக ஊடுருவி அங்குள்ள பொதுமக்கள் மத்தியிலிருந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டுத் தம்மிடம் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு நேற்று முன்தினம் இறுதி அறிவிப்பு விடுத்தனர். இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதிலிருந்து சில மணி நேரத்திலேயே புலிகள் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் இந்த இறுதி அறிவிப்பை அடுத்து அங்குள்ள பொது மக்கள் தப்பி வருவதை தவிர்க்கும் வகையிலேயே புலிகள் இந்த எச்சரிக்கை வேட்டுக்களை விடுத்துவருவதாக படையினர் சந்தேகிப்பதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களின் எண்ணிக்கைகளை அவதானித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை படையினர் முன்னெடுக்கக் கூடும் என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு வலயம் படையினரால் நான்கு முனைகளில் சுற்றிவளைப்பு

army-wanni.jpgஅரசாங் கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் அப்பகுதியை நோக்கி தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் என்று படைத்தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் பாரியளவான இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.

மோதல்கள் தொடர்பில் ஊடக நிலையம் மேலும் கூறியதாவது

அண்மையில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கு எதிராக பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மறைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மோட்டர் எறிகணை மற்றும் சிறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் நான்கு சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கடற்புலிகளின் தற்கொலைப் படகொன்று யுத்த தாங்கி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்மிக்க முடியாதவாறு புலிகளால் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்மேடுகள் சிலவற்றை இனங்கண்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான பதுங்கு குழிகள் சிலவும் அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் புலிகளின் இந்த மண்மேடுகளை உடைத்தெறிந்தவாறு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி அங்குள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவில் மேலும் பலர் பலி

இலங்கையின் வடக்கே மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜ தெரிவித்துள்ளார்.

மோதல்களில் பலியான பலரது சடலங்கள் தமது புதுமாத்தளன் மருத்துவமனைக்கு வந்ததாக் கூறுகிற அவர், இருந்தபோதிலும் பலியான பலரது சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாத்திரம் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து தமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்கள் தங்கியுள்ள இடத்துக்கு ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலேயே சண்டைகள் நடப்பதாகவும், ஆயினும் தமது பகுதியை நோக்கி ஏவப்படுகின்ற எறிகணைகளாலேயே பல மக்கள் இறப்பதாகவும் அவர் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் உறவினர்களை சந்திக்க விசேட வரவேற்பறைகள்

srilanka_idp.jpgநிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கு வசதியாக அனைத்து நிலையங்களிலும் விசேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை முதல் திறந்து வைக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

வன்னி அகதிகளின் நலன்கருதி குடாநாட்டில் தற்காலிக கொட்டில்கள்

srilanka_idp.jpgகுடா நாட்டுக்கு வரும் வன்னி அகதிகளின் நலன்கருதி கைதடி பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 600 தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் கிடைப்பது மிகக் கடினமாகவுள்ள போதும் கிடைக்கும் கிடுகுகளைக் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தென்மராட்சி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னி அகதிகள் தற்காலிக குடிசைகளில் தங்கி தாமே சமைத்து உண்பதற்கு விரும்புவதால் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், நலன் நோன்பு நிலையங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்புப் பிரிவினர் அதிகரித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு இதுவரை 4,900 அகதிகள் வந்துள்ள போதும் இவர்களுக்கான சகல வசதிகளும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்நலன் நோன்பு நிலையங்களுக்கு தொலைபேசி வசதியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.