புலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கை பாரிய வெற்றி பெற்றுள்ளது. புலிகளிடமிருந்த முழு நிலப்பரப்பும் படையினரால் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இப்போது பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி ஒழிந்து வாழ்கின்றனர்.
இந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டு பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அதனைத் தொடர்ந்த பாரிய அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசு விசேட படை நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கும். அது எப்போது எவ்வாறு ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூறமுடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு அரசு மிகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுகின்றது. கடந்த வருடம் 164 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வருடம் 171 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டாலும் அதன் பலன் நாட்டுக்குக் கிட்டியுள்ளது. மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புலிகளையும் விரைவில் அழித்து நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவோம்..யுத்தச் செலவுகளுக்கு மத்தியிலும் பொது மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை நாம் ;குறைத்து விடவில்லை. இவ்வரும் ஏப்ரல் மாதம் வரையில் 25000 மில்லியன் ரூபாவுக்கு உர மானியம் வழங்கியுள்ளோம்.
கடந்த வருடத்தில் எமது நாட்டின் விவசாய உற்பத்திகள் 23 சத வீதத்தால் உயர்ந்துள்ளன. அதனால்தான் உலக பொருளாதா வீழ்ச்சியின் தாக்கத்தை எமது இலங்கை மக்கள் வெகுவாக உணரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.