ஈழத்தமிழர் குறித்த கொள்கையை இந்தியா மீளாய்வு செய்ய புலிகள் கோருகின்றனர்

p_nadesan.jpgஇந்தியாவில் ஆட்சியமைக்கப்போகும் புதிய ஆட்சியாளர்கள், ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பான தமது கொள்கையை மீளாய்வு செய்யவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

ஈழத் தமிழ் உறவுகளுக்காக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சிக்கு தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் நடேசன் வரவேற்புத் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் “ஹெட்லைன்ஸ் டுடே” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர்  இதனைத் தெரிவித்துள்ளார். தி.மு.கவினால் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் நிலை தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அ.தி.மு.கவின் ஸ்தாபகரான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களின் நலன் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் வேட்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கினார்.

ஜெயலலிதா தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.சமீபத்தைய அறிக்கையொன்றில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு குறித்து அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார். இது மிகவும் நம்பிக்கையளிக்கும் விடயம். இந்தியாவின் புதிய அரசு இலங்கை இனப்பிரச்சினை மற்றும் தமிழர்களின் அபிலாஷைகள் குறித்த தனது கொள்கையை புதிய யதார்த்தங்களின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தி.மு.க. தமிழ் மக்களுக்கு  அவசியமான வழிவகைகளை  அளிப்பதற்குத் தவறியுள்ளது.  தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துக்கு எதிராகவும்  அதேவேளை, பட்டினி மற்றும் நோய்க்கு எதிராகவும் போராடுகின்றனர். தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் இது நன்கு தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.இவ்வாறு நடேசன் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • s.s.ganendran
    s.s.ganendran

    இது என்ன இலஙகையில் ஜனாதிபதி தேர்தலா நடக்கப்போகிண்றது ரணிலுக்கு ஆப்புவைத்து ராஜபக்ஸ்வின் முதுகில் சவாரிசெய்யலாம் என நினைப்பதற்கு?

    இந்த்தியாவின் புதிய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமது கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டுமென சொல்லவாறாரா பொலிஸ் கொஸ்த்தாப்பு அல்லது புலிகள் சார்பான கொள்கையை மீளாய்வு சொல்ல வாறார என்பது இந்த்தியர்களுக்கு நண்றாகப்புரியும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நடேசனின் கேள்வியே தவறானது. இந்தியா ஈழத் தமிழர் பற்றிய கொள்கையில் தெளிவாகவே உள்ளது. புலிகள் குறித்த கொள்கையையே மீளாய்வு செய்யுமாறு கேட்டிருக்க வேண்டும். அதை எப்படி நேரடியாகக் கேட்பதென்பதனாலேயே இப்படிச் சுற்றிவளைத்து கேட்கின்றார் போலுள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் புலிகள் பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என்பது தெரியாமல் இருப்பது தான் நடேசனின் அறியாமை.

    Reply