அல்- ஹஸனாத் மாதாந்த இஸ்லாமிய சஞ்சிகையின் 600 பிரதிகள் கல்முனைப் பகுதியில் இனந் தெரியாத குழுவினரால் அபகரிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் ஏப்ரல் மாத வெளியீடு ‘பல்லின சமூகங்களுக்கு மத்தியில் பண்பாட்டெழுச்சி, எனும் கருப்பொருளில் சிறப்பிதழாக வெளியாகியது. இந்த இதழ்களே அபகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.
குறித்த சிறப்புப் பிரதிகளை விற்பனை செய்வதற்கென்று அல்ஹஸனாத் தொண்டர்கள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்றனர். கல்முனை பிரதேசத்தில் சென்று அல்ஹஸனாத் சஞ்சிகையை வீட்டுக்கு வீடாக விற்பனை செய்து கொண்டிருந்த தொண்டர்களிடம் இனந்தெரியாத குழு ஒன்று வந்து அல்ஹஸனாத் சஞ்சிகையை விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியதுடன், அதனை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளனர்.
அதனைக் கொடுக்க மறுத்த தொண்டர்களை தாக்க முற்பட்ட அந்தக் குழு, விற்பனைக்காக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 600 பிரதிகளை பலவந்தமாக பறித்தெடுத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.