::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பாதுகாப்பு வலயத்தில் 1658 பொதுமக்களை இராணுவம் கொன்றதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை – ரம்புக்வெல மறுப்பு

keheliya_rambukwella.jpgகடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களுள் 1658 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற தகவல் முற்றிலும் பிழையானதாகும். இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீகாந்தா எம்.பி. பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நான் சபையில் அமர்ந்திருக்காத நேரத்திலேயே ஸ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியே உள்ள தொலைக்காட்சி மூலம் இதனை அவதானித்த நான் உடனடியாக சபைக்குள் சென்று அதற்கான ஆதாரம் என்னவென அவரிடம் கோரினேன். தான் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றின் மூலம் அத்தகவலைப் பெற்றதாக அவர் கூறினார்.

புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களை ஊடகங்கள் எனக் கூற முடியாது. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பாராளுமன்றத்துக்குள் இன்னும் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். பாராளுமன்ற விஷேட உரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு விமானம் மூலம் சமைத்த உணவு – விமானப் படைப் பேச்சாளர் தகவல்

mcns_j_nanayakkara.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் இன்று கொழும்பிலிருந்து எம்.ஐ.17 ரக விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங்கொமான்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு விமானப் படைப் பேச்சாளர் மேலும் கூறியதாவது,

புலிகளிடமிருந்து சிவிலியன்களை விடுவிக்கும் போராட்டத்தில் விமானப் படை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. வான் வழியாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் படையினரின் முன்நகர்வுகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த 238 பேர் விமானம் மூலம் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமானப் படையினரால் பனிஸ் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இராணுவத்திடம் தஞ்சமடையும் மக்களுக்கு உதவ கடற்படையினர் நடவடிக்கை : டி.கே.பி. தஸாநாயக்க

dkb-dasanayaka.jpg
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் நலன்கருதி கடற்படையினர் பல நடவடிகைகளை மேற்கொண்டு வருவதாகக் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த இரு நாட்களில் கடற்படையினரிடம் 5000க்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடையும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல எமக்கு ஆறு மணிநேரம் தேவைப்பட்டது. கடல் வழியாகத் தப்பி வரும் மக்களில் காயமடைந்தவர்களின் நலன் கருதி மருத்துவ மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய வசதிகள் புல்மோட்டை கடற்தளத்தில் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்க்கக் கூடிய வகையில் கடற்படையினர் தயாரான நிலையலேயே உள்ளனர்” என்றார்

கடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் விடுவித்துள்ளனர்- கெஹெலிய ரம்புக்வெல

keheliya_rambukwella.jpgகடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெரும் தொகையினரை படையினர் விரைவில் விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்ததுவ உதவிகளை படையினர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார். 

பாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதி படையினர் வசம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு

keheliya_rambukwella.jpgபாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதியை படையினர் இப்போது கைப்பற்றியுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இராணுவத்தின் 55 ஆம் 58 ஆம் படையணியினர் பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து பொது மக்களை விடுவித்துக்கொண்டு தெற்கு பக்கம் நோக்கி முன்னேறுகின்றனர். இன்னும் 8 கிலோ மீற்றர் தூரமான நிலப்பரப்பு மட்டுமே புலிகளிடம் எஞ்சியுள்ளது. இதற்குள்தான் பிரபாகரனும் மறைந்துள்ளார் என நம்புகிறோம். புலிகளின் தலைவலைரக் காப்பாற்றும் நோக்கில் இப்பிரதேசத்தில் சுய விருப்பத்துடனேயே பொது மக்கள் தங்கியுள்ளனர் என்ற பொய்ப் பிரசாரம் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

புலிகளிடமிருந்து விடுதலை பெற அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கெண்டனர். கையில் கிடைத்த பொருட்களுடன் கடல் ஏரியில் மார்பளவு நீரில் இறங்கியேனும் தப்பிச் செல்ல அவர்கள் காட்டிய வேகம் இதனை நன்கு நிரூபிக்கின்றது.

புலிகளின் முக்கிய இரு தலைவர்கள் படையினரிடம் சரண் – பாதுகாப்பு அமைச்சு :எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை- விடுதலைப்புலிகள்

dayamaster.jpgஎல்.ரி.ரி.ஈ.  இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று பிற்பகல் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து இவர்களிருவரும் சரணடைந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயா மாஸ்டர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் ஊடகத்துறைப் பெறுப்பாளராகவும் அதன் பேச்சாளராகவும் செயல்பட்டு புலிகள் இயக்கத்துக்குப் பெரும் சேவையாற்றியவராவார்.

geargemaster.jpgஜோர்ஜ் என்பவர் ஆங்கில மொழியில் சரளமாக பேசக்கூடியவர். இவர் எல்.ரி.ரி.ஈ. தலைவரான பிரபாகரனின் மொழி பெயர்ப்பாளரகவும் செயல்பட்டு வந்தார். அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் கடந்ட 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த காலத்தில் பிரபாகரனுடனான பேட்டியின்போது இவர் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை-ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்: விடுதலைப்புலிகள்

புது மாத்தளன் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவரான வேலாயுதம் தயாநிதி என்கிற தயாமாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தார்.

மற்றொரு தலைவரான வி.கே.பஞ்சரத்தினம் என்கிற ஜார்ஜ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பணிபுரிந்து போரில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் உதவியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தயா மாஸ்டர் மற்றும் ஜார்‌ஜ் ஆகியோர் தாங்களாக முன்வந்து சரணடையவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து போது இலங்கை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரு தினங்களில் 63, 000க்கும் அதிக – சிவிலியன்கள் படையினரால் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நேற்றைய தினமும் பெருந்தொகையான பொது மக்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்ததாக தெரிவித்த அவர் கடந்த இரு தினங்களுக்குள் 62,609ற்கும் அதிகமான பொது மக்களை படையினர் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொது மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தற்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புதுமாத்தளன் பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் புதுமாத்தளன் வைத்தியசாலையையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். பொது மக்களுக்காக பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலையை புலிகளே பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 புதுமாத்தளன் பகுதிக்குள் பிரவேசித்து முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புதுமாத்தளன் மேற்கு பிரதேசத்திலிருந்து கிழக்கு பிரதேசம் வரையிலான கரையோரத்தையும் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் இராணுவத்தினர் புலிகளின் கவச வாகனம் ஒன்றையும் தாக்கியழித்துள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்லும் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நால்வர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடும் இடம் ஒன்றை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயத்திலுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆரம்பித்தனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ மீற்றர் நீளமான மண் அணையை படையினர் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களை படையினர் மீட்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி சாரைசாரையாக மக்கள் வர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, திங்கட்கிழமை மாத்திரம் 39,081 பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். இவர்களில் 36,914 பேரை இராணுவத்தினரும், 2,167 பேரை கடற்படையினரும் மீட்டெடுத்தனர் என்றும் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து தப்பி செல்லும் பொது மக்களை தடுக்கும் வகையில் புலிகள் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை: புலித்தேவன் அறிவிப்பு

puli_thevan0.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், “நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்” எனவும் கோரியிருக்கின்றார்.

“நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய புலித்தேவன், “நேரம் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

தாக்குதல் தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவிப்பு

puthumathalan.jpg அம்பலவன் பொக்கணை பகுதியில் செவ்வாய்கிழமை குண்டு தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன என்றும், தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் அங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்று அரச மருத்துவர் டாக்டர் சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களில் சிவ மனோகரன் என்ற ஒரு இறுதியாண்டு மருத்துவ மாணவர் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் அரச பகுதிகளுக்கு இடம்மாறுவது குறித்த செய்திகள் பற்றி, கருத்துவெளியிட்ட அவர், தாம் இது குறித்து வரும் செய்திகளைக் கேள்விப்படுவதாகவும் ஆனாலும் எண்ணிக்கை குறித்து தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் தப்பியோடும் பொதுமக்களை சுடுவதாக அரச தரப்பு வெளியிட்டுள்ள படங்கள் குறித்தும் தம்மால் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக அவர் கூறினார். தமது பகுதிக்கு வரும் மக்களில் பலர் ஷெல் காயங்களுடனும் சிலர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடனும் வருவதாக அவர் கூறினார்.

படையினரால் மீட்கப்படும் மக்களை தங்கவைக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி

puthu.jpgபாது காப்புப் படையினரால் தற்போது மீட்கப்பட்டு வரும் பெருந்தொகையான பொது மக்களை தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள அதேசமயம், மருத்துவ நிபுணர்கள், மின்சார சபை அதிகாரிகள் அடங்கிய இரண்டு விசேட குழுக்கள் நேற்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இதற்கு மேலதிகமாக வந்துள்ள மக்களின் நிலைமைகளை விசேடமாக அவதானிக்கவென ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினமும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று மற்றுமொரு குழுவுடன் சென்றுள்ளதுடன் இன்று இன்னுமொரு குழு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொள்ளுப்பிட்டியில் உள்ள அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

மீட்டெடுக்கப்பட்ட மக்களை நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கவென மேலதிகமாக 154 பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 58 ஆயிரம் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன் 6700 கூடாரங்களும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அருணாச்சலம், கதிர்காமர், வலயம் – 01 ஆகிய மூன்று நிவாரணக் கிராமங்களிலும், தாண்டிக்குளம், புதுக்குளம், ஓமந்தை, ஆண்டி புளியங்குளம் மற்றும் முதலியார் குளம் ஆகிய ஐந்து பாடசாலைகளிலும் இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 30 ஆயிரத்திற்கும், 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட மக்களே எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எதிர்காலத்தில் வருகைதரவுள்ள மக்களையும் எந்த பாதிப்புக்களுமின்றி தங்க வைக்கவென ஆயிரம் ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரயான்குளத்தில் – 600 ஏக்கர், மெனிக்பாம் – செட்டிக்குளம் பகுதிகளில் – 200 ஏக்கர், மதவாச்சி – செட்டிக்குளம் பகுதிகளில் 200 ஏக்கர் காணிகள் தற்பொழுது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.