புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரனவுடன் கேள்வி நேரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Tissa_Vitharanaஒக்ரோபர் 18ல் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மே 18 நிகழ்வுகளுக்குப் பின் இலங்கை அமைச்சர் ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் சாராதண தமிழர்களைச் ஒரு பொது இடத்தில் சந்திக்கின்ற ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.

இச்சந்திப்பு அமைச்சர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லும் சந்திப்பாக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் முகம் கொடுக்கின்ற வகையிலேயே  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மூடிய கதவுகளுக்குள் அரசியல் நடத்துவதும் சிலர் தங்களை அரசியல் முகவர்களாக புரட்சியின் முகவர்களாக காட்டி மேதாவித்தனம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களும் தங்களை அரசியல் மேதாவிகளாகக் காட்டிக்கொள்வோரும் தான் அரசியல் பேசுகின்ற நிலையைக் கடந்து சாதாரண ஒரு புலம்பெயர்ந்த தமிழனும் இலங்கை அரசை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்கு இச்சந்திப்பு இடமளிக்கும்.

தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும் பட்சத்தில் அக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று தேசம்நெற்றில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவிடவும்.

ஒக்ரோபர் 18ல் நடைபெறவுள்ள சந்திப்பில் கேள்வி நேரத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்தவும். மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளே இருப்பதால் தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்னுடைய தொடர்புகளுக்கு :
ரி கொன்ஸ்ரன்ரைன்
tarrin@desilugroup.com

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்தும் ஆதிக்கம் : த ஜெயபாலன்

Sturattguard_Conference‘தமிழ் மக்களின் அரசியலை நாங்களே நிர்ணயிக்கின்றோம்’ என்ற வகையில் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு எண்பதுகளில் விடுதலை இயக்கங்களின் உருவாக்கத்துடன் ஆரம்பமாகியது. இப்போக்கு இன்று சர்வதேசம் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் காவிச்செல்லப்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயிக்கின்றனர் என்ற நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளது. இந்த ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு தமிழ் மக்களை புள்ளிவிபரப்படியும் புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக மோசமான பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுந்தமானமான, மேலெழுந்தவாரியான அரசியல் முன்னெடுப்புகளும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கின்றது. இந்தப் பின்னணிகளில் கொழும்பு 21 குழு ஒக்ரோபர் 10ல் சுவிஸில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

இக்கட்டுரை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செலுத்தும் தாக்கம் பற்றிய முதற்படிநிலை பதிவு மட்டுமே. இது பற்றிய விரிவான ஆய்வுகளும் மீளாய்வுகளும் எதிர்காலத்தில் அவசியமாகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நான்கு கால கட்டங்களாக வகுக்க முடியும்.
1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.
2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலம்.
3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.
4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. – மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.

1970க்களிலேயே தமிழ் மக்கள் மேற்கு நோக்கிய புலம்பெயர்வுகளை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரே. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ் விடுதலை இயக்கங்களில் இவர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி, ஆரம்பத்தில் புளொட் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு பிற்காலங்களில் புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக்குழுவுடன் செயற்பட்ட மகாஉத்தமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். (இவர்கள் மூவரும் 2006 பிற்பகுதியில் நோய் காரணமாக மரணமடைந்தனர்.)

தற்போதைய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், இளைஞர் பேரவை, மாணவர் பேரவையில் முன்னணி வகித்தவர்கள் மேற்கு நாடுகளுக்கு ஆரம்ப காலங்களிலேயே புலம்பெயர்ந்தனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கணிசமான ஆளுமையைக் கொண்டிருந்தனர். பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் தொடர்புகளை வலுப்படுத்தி தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்களை பயிற்சிக்கு அனுப்பியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி. இராணுவ வழிகளில் மட்டமல்ல தமிழ் இயக்கங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களித்திருந்தனர்.

ENF Leadersஇருந்தாலும் தொடர்ச்சியாக இளைஞர் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் பலர் தங்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அணி பிரிகின்ற போக்கு புலம்பெயர்ந்த தளத்திலும் ஏற்பட்டது.

குறிப்பாக உமா – பிரபா பிரிவும் அதனைத் தொடர்ந்த சுந்தரம் படுகொலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டையும் வரலாறு இயக்க மோதலின் குறியீடாகப் பதிவாக்கிக் கொண்டது. உமா – பிரபாவை ஒன்றினைக்கிறோம் என்று புலத்தில் இருந்து இந்தியா சென்ற அன்ரன் பாலசிங்கம், உகா உத்தமன் போன்றோர் பின்னர் முறையே தமிழீழ விடுதலைப் புலிகளிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். களத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கச் சென்றவர்கள் பிற்காலங்களில் அந்த முரண்பாடுகளின் அங்கமாகினர். அந்த முரண்பாடுகள் களையப்படுவதற்கு முயற்சித்த இன்னும் சிலர் பலவீனமான தளத்திலேயே நின்றனர்.

ஆரம்ப காலங்களில் பல்வேறு அமைப்புக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு லண்டனில் பல போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் இயக்க மோதலால் ஏற்பட்ட பிளவுகளால் பிற்காலங்களில் பிசுபிசுத்துப் போனது. பலர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து அஞ்ஞாதவாசம் சென்றனர்.

2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலப் பகுதி.

1990க்களைத் தொடர்ந்தே பெருமளவிலான தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்தனர். வடக்கு கிழக்கின் குறிப்பாக யாழ் மத்தியதர வர்க்கத்தினர் மேற்கு நாடுகள் எங்கும் பரவி தங்களை ஸ்தீரப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வடமாகாணத்தின் யாழ்மாவட்டம் நீங்கலான சனத்தொகைக்கு ஒப்பானவர்கள் ரொறன்ரோவின் ஸ்காபுறோ பகுதியில் வாழ்கின்றனர். இலங்கையில் இருந்து மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களது சனத்தொகையும் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது சனத்தொகையும் அண்ணளவாக ஒரே அளவினதே.

1980க்களின் பிற்பாடு பிறந்த இளம்சமூகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் பற்றி பெரிதளவில் அறிந்திருக்கவில்லை. அறிவதற்கும் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களே கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஏகதலைமை என்பதை தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களிலும் நிறுவிக் கொண்டனர். புலிகளிடம் இருந்த அராஜகமும் வன்முறையும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பரவி இருந்தது. சபாலிங்கம், ஈழமுரசு ஆசிரியர் உட்பட மூவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகளை விடவும் வன்முறை நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். கனடாவில் நூலக எரிப்பு, ஊடகவியலாளரைத் தாக்கியது என இந்த வன்முறைப் போக்கு பரவலாகக் காணப்பட்டது.

Protest_Londonஇருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாயகத்தில் இருந்த ஆதரவிலும் பார்க்க புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்த ஆதரவு மிக மிக அதிகம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ஆதரவு அலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் பலரும் கூட அள்ளுண்டனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகதலைமையாகவும் வே பிரபாகரனை தேசியத் தலைவராகவும் ஏற்றுக்கொண்டனர். வன்முறைப் போக்கும் அராஜகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்புகளாயின.

மேற்கு நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் மாற்று இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அல்லது புலிகள் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்களே. கவிஞர் சேரன், கவிஞர் கி பி அரவிந்தன், சிவரஞ்சித், எஸ் கே ராஜன், சிவா சின்னப்பொடி என இந்தப் பட்டியல் நீண்டது. புலம்பெயர்ந்த மண்ணில் புலிகளின் பிரச்சாராப் பீரங்கிகளாக இவர்களே நின்றனர்.

தாயக மக்களுடன் எவ்வித அரசியல் உரையாடலையும் கொண்டிராத தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உரையாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி கேவலப்படுத்தி வசைபாடிய புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏனைய விடுதலை அமைப்புப் போராளிகளைக் கொலை செய்ததற்கும், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து விரட்டியதற்கும் கிழக்கில் படுகொலைகள் செய்ததற்கும் எப்போதும் மன்னிப்புக் கேட்காத தமிழீழ விடுதலைப் புலிகள் டொலர்களுக்கும், பவுண்ஸ்க்கும், பிராங்கிற்கும், மார்க்கிற்கும், ….. பணிந்தனர். மாவீரர் தின உரைகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு ‘தேசியத் தலைவனே’ வாழ்த்துப்பா பாடினார். மக்களைக் காணாத தலைவர் வே பிரபாகரன் மேற்குநாடுகளில் இருந்து செல்லும் வர்த்தகப் புள்ளிகளுடன் படம் எடுத்துக்கொண்டார். மேற்கு நாடுகளில் பணம்படைத்த பலருக்கு இருந்த ஒரே தகுதி தலைவருடன் படம் எடுத்துக் கொண்டது தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அவர்களது நடவடிக்கைகளை ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தாத புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்கள், தங்களை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழர்களின் மீட்பர்களாகவும் ஒரு மாயையைக் கட்டி அமைத்தனர். இங்கு புலிகளின் மாயைக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மாயைக்கு புலிகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி தமிழ் மக்கள் மத்தியில் இரு அரை ஒட்டுண்ணிகளாக இருந்தனர். இவ்விரு அரை ஒட்டுண்ணித் தன்மையின் மிகமோசமான செயற்பாடுகள் இவர்களுக்கு ஆதாரமாக இருந்த தமிழ் மக்கள் என்ற விருட்சத்தை வேரறுப்பதற்கே இட்டுச்சென்றது. இந்த ஆபத்தான நிலையின் குணங்குறிகள் வெளியே தென்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களையும் சுற்றிப் புனையப்பட்டு இருந்த மாயைகள் வரவிருந்த ஆபத்தை காணவிடாது தடுத்தது.

புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தளம் என்பது சிந்திக்கத் தெரியாத அல்லது சிந்திக்க மறுத்த ஒரு கூட்டமாகவே இயங்கியது. இன்னமும் இயங்க முற்படுகிறது. இவர்கள் தேசியத் தலைவர் மீண்டும் வந்து ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்’ என்ற ஆவலுடன் இன்னுமொரு மாவீரர் தினத்திற்காகக் காத்திருக்கின்றனர். அதனை ஏற்க மறுக்கும் சிந்திக்க முற்பட்டவர்களே இப்போது கடைசியாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டுள்ளனர். ‘மாவீரர் தினத்தன்று தலைவரை நினைத்தபடி நன்றாக கண்ணயர்ந்து தூங்கினால் நிச்சயம் தலைவர் வருவார்?’ என்ற நம்பிக்கையைத் தவிர வேறு எதைத்தான் நாம் அவர்களுக்கு வழங்க முடியும்.

இக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பாலும் இரு முகாம்களே காணப்பட்டது. ஒன்று புலி ஆதரவு அணி மற்றையது புலி எதிர்ப்பு அணி. புலிகளுடைய ஆதிக்கம் மிகப் பலமாக இருந்ததால் புலி எதிர்ப்பு முகாம் ஓரணியில் நிற்க வேண்டிய புறச் சூழல் அன்று இருந்தது. சில தனி நபர் முரண்பாடுகள் ஆங்காங்கே இருந்தாலும் புலிகள் புலி எதிர்ப்பு அணிக்கு ஒரு வடிவம் கொடுத்திருந்தனர். ஆனாலும் இந்த புலி எதிர்ப்பு அணி தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு அரசியல் சக்தியாக இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு என்ற குறுகிய வட்டங்களுக்கு உள்ளேயேயும் அதன் வெட்டுக் குத்தகளுக்கு உள்ளேயுமே உழன்றனர்.

இக்காலகட்டத்தில் தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்திய பலரும் பொது எதிரி இலங்கை அரசு என்ற நிலையிலேயே காணப்பட்டனர். இக்காலகட்டத்தில் புலி ஆதரவு புலி எதிர்ப்பு முகாம்களின் எல்லைகள் புலிகளைக் கொண்டே வரையறுக்கப்பட்டது. ஈரோஸ் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் புலி எதிர்ப்பு அணியிலேயே அடையாளம் காணப்பட்டனர். ஈரோஸ் அமைப்பினர் தொடர்ந்தும் புலிகளுடன் அடையாளம் காணப்பட்டனர்.

2002 ஒஸ்லோ உடன்பாட்டைத் தொடர்ந்து வன்னிக்கு சுற்றுலா சென்றவர்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரித்தது. முதலீடுகளும் அதிகரித்தது. அதனால் வெளிநாட்டுத் தொடர்புகளற்ற ஈழத் தமிழர்களின் கொள்வனவு சக்தி மிகவும் பாதிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் புலி ஆதரவு மேலும் வலுப்பெற்றது. புலம்பெயர் ஊடகங்கள் பெரும்பாலும் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாக மாறின. மாற்றுக் கருத்துடையவர்கள் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அவையெல்லாம் புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளாலும் அதன் ஊடகங்களாலும் நியாயப்படுத்தப்பட்டன. சிறுவர்களை இயக்கங்களில் இணைப்பது, மோசமான வரி அறவீடு போன்ற சாதாரண மக்களைப் பாதிக்கின்ற விடயங்களைக் கூட புலம்பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் நியாயப்படுத்தின. புலிகளிடம் எதேச்சதிகாரப் போக்கு காணப்பட்டாலும் அதனை மிக மோசமான மிலேச்சத்தனமான அமைப்பாக மாற்றியதில் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.

Thesam_Mag_Coverதேசம் சஞ்சிகையின் 17வது இதழ் 2004 மார்ச் – ஏப்ரல் வெளிவந்தது. அதன் அட்டைப்படத் தலைப்பு ‘புலிக்குள் பூகம்பம் ஈழம் ஈடாட்டம்’. தேசம் சஞ்சிகையில் அதுவரை வெளியான தலைப்புகள் கட்டுரைகளில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான தலைப்பும் கட்டுரையும் அதுவே. தமிழீழ விடுதலைப் புலிகளின் அத்திவாரத்தை ஆட்டிய உடைவு. இந்த உடைவை தமிழீழ விடுதலைப் புலிகள் மூடிமறைத்து அதனை ஒரு சில தனிநபர்களின் பிரச்சினையாக பிரச்சாரப்படுத்தினர். தனது ஆதரவு சக்திகளுக்கு இனிப்புத் தடவிய மாத்திரைகளை வழங்கி, ‘எல்லாம் தலைவர் சரி செய்துவிடுவார்’ என்று நம்பிக்கை அளித்தனர். இந்த மாத்திரைகளை விழுங்கிய புலம்பெயர் புலி ஆதரவுத் தலைமை பொங்கு தமிழ் வைத்து, போர் முழக்கம் இட்டு, யுத்த மமதையில் திளைத்தனர். ஏற்கனவே வன்னி சென்று, புலித் தலைமையை வழிபட்டு ஆசிபெற்று வந்த பலர் மேற்குநாட்டுத் தலைநகர்களில் உருஆடினர் என்றால் மிகையல்ல.

மேற்கு நாடுகளில் வாழ்ந்த கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் பெரும்பாலும் இது தொடர்பாக மௌனமாக்கப்பட்டனர். ஒரு பகுதியினர் மறைமுகமாக கருணாவிற்கு தங்கள் ஆதரவையும் வழங்கினார். புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்த புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்த அணி கேர்ணல் கருணாவின் பிளவை தங்களுக்கு சாதகமாகக் கருதினர். அவர்கள் கேர்ணல் கருணாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர். கருணா பிளவடைந்த ஆரம்பகாலத்தில் வெளியான பெரும்பாலான அறிக்கைகள் லண்டனில் இருந்தே தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளைத் தயாரித்தவர்கள் பிற்காலங்களில் கேர்ணல் கருணாவின் கடத்தல் கொள்ளை கொலை போன்ற சம்பவங்களால் தங்களை ஓரளவு அந்நியப்படுத்திக் கொண்டாலும் கேர்ணல் கருணாவின் செயற்பாடுகளை விமர்சிக்கத் தயங்கினர். ஆனால் இன்னும் சிலரோ கருணாவுடன் அணி சேர்ந்து கொண்டனர்.

ஈஎன்டிஎல்எப், லண்டன் ரிபிசி – வி ராம்ராஜ், லண்டனில் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பின் எதிரணிக்குச் சென்ற ஆர் ஜெயதேவன், 1970க்களின் பிற்பகுதிகளில் லண்டனில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின் அரசியல் அஞ்ஞாதவாசம் சென்ற எஸ் கிருஸ்ணன், ஜனநாயகம் தலித்தியம் கிழக்கியம் என நீண்ட காலம் மாற்றுக் கருத்துத் தளத்தில் இயங்கிய பாரிஸ் எம் ஆர் ஸ்ராலின், முன்னாள் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பின்னர் வெளிநாட்டு முகவராகச் செயற்பட்டு தற்போது ஏசியன் ரிபியூனின் ஆசிரியராகச் செயற்படும் சுவிஸில் வாழும் கெ ரி ராஜசிங்கம் போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கேர்ணல் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். கேணல் கருணா ஆரம்பத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனேயே தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அதன் பின் ரிபிசி வி ராம்ராஜின் தொடர்புடன் இந்தியா சென்றார். ஈஎன்டிஎல்எவ் – கேர்ணல் கருணா கூட்டு சிறிதுகாலம் ஓடியது. ஆனால் அக்கூட்டு உருவாகிய வேகத்தில் தகர்ந்தது. இலங்கை உளவுத்துறை நேரடியாக கேர்ணல் கருணாவுடன் தொடர்பை வலுப்படுத்தி கருணாவை இலங்கைக்கு அழைத்துச் சென்றது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்ற கடத்தல் கொள்ளை கொலைச் சம்பவங்களின் பின்னனியில் புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பணியில் இருந்த சிலர் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தனர். பலர் அவற்றை நியாயப்படுத்தினர். அல்லது அவற்றை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். புலி ஆதரவு அணி மேற்கொண்ட அதே கைங்கரியங்களை கேர்ணல் கருணா மற்றும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாக புலி எதிர்ப்பணியின் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். குறிப்பாக கேர்ணல் கருணா – பிள்ளையான் மோதலில் எஸ் கிருஸ்ணன் – கே ரி ராஜசிங்கம் போன்றவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் இருந்தனர். ஏசியன் ரிபியூன் இணையத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசு நிதியுதவி வழங்குவது பற்றிய செய்திகள் தி ஐலண்ட் பத்திரிகையில் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

2004க்கும் 2009க்கும் இடையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கின்றது. மாவிலாறு அணையை மூடி சிங்கள விவசாயக் கிராமங்களுக்கான நீர் விநியோகத்தை நிறுத்திய புலிகள் தங்கள் இராணுவ பலவீனத்தை அம்பலமாக்கினர். புலிகளுடைய பலவீனத்தை புலி எதிர்ப்பு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்பட ஆரம்பித்தனர். நீண்டகாலமாக தாங்கள் முன்பு சார்ந்திருந்த இயக்கங்களை மறந்திருந்த புலம்பெயர்ந்து வாழ்ந்த ‘தோழர்கள்’ எல்லாம் தங்கள் இயக்க அடையாளங்களைத் தேட ஆரம்பித்தனர். இவர்கள் வன்னி மக்களுக்காக ஏதாவது கூட்டம் கூடியதாக எமக்கு அறியக்கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்கு பாரிஸில் கூட்டம் கூட்டப்பட்டது.

France_Delegation‘உயர்சாதியினர் எல்லோரும் ஊரைவிட்டு வந்துவிட்டார்கள் அங்கு தலித்துக்களே பெரும்பான்மையாக உள்ளனர்’ என ஐரோப்பாவில் மாநாடு கூட்டிய தலித் சமூக மேம்பாட்டு முன்னணியும் வன்னி மக்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் முக்கியஸ்தர் (முன்னாள்) எம் ஆர் ஸ்ராலின் கிழக்கு முதலமைச்சரின் மதியுரைஞர் ஆன பிற்பாடு தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகஜர் கொடுப்பதுடன் மட்டும் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டது. ஜனநாயகம், விளிம்புநிலை மக்கள் எல்லாம் கிழக்கிசத்துடன் சமரசம் செய்து கொண்டுவிட்ட நிலையே உள்ளது.

இக்காகட்டத்திலேயே புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பு இயக்க அணிகள் இலங்கையில் காளான்களாக முளைவிட்டனர். ஈரோஸ் (பிரபா அணி), சிறிரெலோ போன்ற புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பிரபாகரன், உதயராஜா, சக்தி போன்றவர்கள் மேற்கு நாடுகளில் இருந்து இலங்கை சென்று கட்சிகளை ஆரம்பித்தனர். இவ்விரு கட்சிகளின் உருவாக்கத்தின் பின்னணியிலும் ஈபிடிபியே இருந்துள்ளது. இவ்விரு புதிய அமைப்புகளுக்கும் ஈபிடிபிக்குமான உறவும் அதனை உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவில் ரகு இலங்கை சென்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டார். இவர் பின்னர் பிள்ளையான் – கருணா உள்மோதலில் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்குள் இருந்த முரண்பாடுகள் புலம்பெயர்ந்தவர்களின் தலையீட்டுடன் மேலும் மேலும் கூர்மையடைந்தது. சிறிரெலோ – புளொட் உறுப்பினர்களிடையே இருந்த முரண்பாடு படுகொலைவரை சென்றது.

வெளிநாடுகளில் உள்ள ஈபிடிபியின் பிரதான ஆதரவுத் தளம் அவ்வமைப்பின் சலுகைகளிலும் தங்கள் வியாபார நலன்களுக்குமே அதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற பலமான குற்றச்சாட்டு பொதுவாக ஏனைய அமைப்புகளிடம் உள்ளது. ஈபிடிபி, புளொட், ரிஎம்விபி என ஆயுதம் தரித்த இந்த அமைப்புகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருப்பது சர்வதேச உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால் இவ்வமைப்புகளை இந்நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கின்ற காத்திரமான முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அவ்வமைப்பின் பிரதிநிதிகளால் அதன் ஆதரவாளர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை. வெறும் கண்டனங்களுடன் அவை மட்டுப்படுத்தப்பட்டன. அவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்கான பலம் இருந்த போதும் அது இங்குள்ள இயக்க மற்றும் முரண்பாடுகளால் பலவீனப்பட்டு இருந்தது.

இக்காலகட்டத்திலேயே அறுவரைக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் குழு முதல் தடவையாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தது. அதன் பின்னர் குழுவாகவும் தனியாகவும் பயணங்கள் இடம்பெற்றாலும் இவ்விஜயமே அவை அனைத்திற்கும் மூலமாக அமைந்தது. இந்த விஜயத்தின் மூலம் சாதிக்கப்பட்ட விடயங்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கை அரசுடன் தொடர்புபட்டே சில விடயங்களைக் கையாள வேண்டும் என்ற போக்கு உருவாக்கப்பட்டது. இப்பயணத்தை மேற்கொண்டவர்கள் தீவிர புலி எதிர்ப்பாளர்களாகவும் அரசு சார்பாக மென்போக்கு உடையவர்களாகவுமே இருந்துள்ளனர். அதனால் அரசியல் ரீதியில் இப்பயணம் காத்திரமானதாக அமையவில்லை.

இக்காலப் பகுதியில் புலிகளின் அழுத்தத்தினால் ஓரணியில் நின்ற புலி எதிர்ப்பு அணியில் பிளவுகள் வெளிப்படையாகின. புலி எதிர்பு அணியில் அரசுக்கு எதிரான போக்குடையவர்கள் தனியான அணியாக உருவாகினர்.

இவர்களுக்கு மத்தியில் இடதுசாரிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்தும் பலவீனமான பிரிவு ஒன்றல்ல பல ஆங்காங்கே உள்ளது. இவர்களிடையே ஒரே கருத்தியல் உடைய இருவரை அடையாளம் காண முடியாவிட்டாலும் புலிகளுக்கும் அரசுக்கும் எதிரான போக்கு இவர்களிடையே இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள். தாங்கள் எந்த நோக்கத்திற்காக இணைந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்ற விரக்தி நிலையில் இருந்து இவர்கள் இன்னமும் வெளிவரவில்லை. சமூகம் சில பத்தாண்டுகள் நகர்ந்தவிட்ட போதும் இவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினையில் மட்டும் இன்னமும் அன்றைய நிலையிலேயே உறைநிலையில் உள்ளனர். தமது சொந்த வாழ்வியல் விடயங்களில் அவர்கள் தங்களை முன்னோக்கி நகர்த்தியே உள்ளனர்.

இவர்கள் இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விமர்சித்து வந்தபோதும் கொள்கையடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதை எதிர்த்தனர். அல்லது ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்குமாறு கோருவதையும் தவிர்த்தனர். யுத்த நிறுத்தத்திற்கான காலம் கடந்துவிட்ட போதும் ஒப்புக்கு யுத்த நிறுத்தம் கோரி தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். இதில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்த வைத்துள்ள மக்களை வெளியே விட வேண்டும் என்று கூட கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் சரியோ தவறோ எந்த அரசியல் சூழலுக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ற ‘ரெய்லர் மேட்’; விளக்கம் அவர்களிடம் இருக்கும். இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுடன் மக்களாகப் போராடுபவர்கள் அல்லர் மாற்றத்துக்கு விளக்கம் கொடுப்பவர்கள். எப்படிப் போராட வேண்டும் என்று சொல்லித் தருபவர்கள். ‘கீ போட் மார்க்ஸிஸ்ட்’ . அதனால் இவர்களை ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டு’க்கள் என்றும் சொல்லலாம்.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் தமிழ் மக்கள் மீது மிக மோசமான வன்முறையை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இலங்கை அரச படைகளின் தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றுள்ளனர். மக்களைப் பலவந்தமாக கொண்டு வந்து யுத்த முனையில் நிறுத்தி அவர்களுக்கு மத்தியில் இருந்து தாக்குதலை நடத்தி எதிர்த் தாக்குதலில் அதிகப்படியான மக்கள் கொல்லப்படுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் செயற்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றும் இருந்தனர். இன்னும் சில அமைப்புகள் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பேர்ள் போன்ற அமைப்புகள் வன்னி மக்களை மீட்பதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் எச்சரித்தன. இவ்வாறு வன்னி மக்களை மிகப்பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியதில் புலம்பெயர்ந்து வாழ்ந்த புலி ஆதரவு சக்திகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலி ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை போராட்டங்களும் அர்த்தமற்றுப் போனதற்குக் காரணம் அப்போராட்டங்கள் வன்னி மக்களுக்காக நடத்தப்படவில்லை என்பதே. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளைக் காக்கவே வீதிகளில் இறங்கினர். ஆனால் புலி ஆதரவுத் தலைமையோ அவற்றை தங்கள் குறுகிய நலன்களுக்கு பயன்படுத்தினர். பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்த புலி ஆதரவு அமைப்புகள், பிரான்ஸில் உள்ள புலிகளின் மனிதவுரிமை அமைப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு என்பன வன்னி மக்களின் அவலத்தை அரசியல் பேரம்பேசலுக்கே பயன்படுத்தினர். வன்னி மக்களின் நலன்களுக்கு விரோதமாகவே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தது.

4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கூறிவந்தார். தனது முடிவு தான் தமிழ் மக்களின் வாரலாற்றுத் திருப்புமுனையாகப் போகின்றது என்பதை அவரும் அவரைச் சார்ந்திருக்கின்றவர்களும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதனை அறியும் போது காலம் கடந்துவிட்டது. ஆனால் அவர்களில் இன்னும் பலர் உண்மைகளை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.

வன்னி மக்களை மந்தைக் கூட்டங்களாகச் சாய்த்து வந்து முல்லைத்தீவில் நடந்த யுத்த வேள்வியில் பலிகொடுத்த புலம்பெயர்ந்த புலி அதரவுத் தமிழர்கள் வன்னி முகாம்களின் அவலம் பற்றிப் பேசுகின்ற தகமையை இழந்துவிட்டனர். ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாகி விட்டது’ புலத்து புலி ஆதரவுத் தமிழர்களின் திறப்புப் போராட்டம்.

நாடு கடந்த தமிழீழம், புலம்பெயர் பாராளுமன்றம், வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்று புலி ஆதரவுத் தமிழ் அமைப்புகள் படுபிசியாக இயங்கிக் கொண்டு உள்ளன. தலையற்ற கோழியைப் போல் அவர்களது ஆதரவுப் பட்டாளம் அங்கும் இங்கும் ஓடுகின்றது. இவர்கள் வன்னியில் உள்ள மக்களில் இருந்து முற்றிலும் அன்னியப்பட்டு குத்து மதிப்பாக அரசியலை நகர்த்துகின்றனர். அவர்களுக்கு தற்போது யாரைத் துரோகி என்றழைப்பது, யார் தம்மவர் என்ற தெளிவும் இல்லாமல் உள்ளனர். இதுவரை அடக்கி வைக்கப்பட்ட ரிஎன்ஏ, இலங்கை அரசோடு வன்னி மக்களுக்காகப் பேச மறுத்த ரிஎன்ஏ தற்போது அரசோடு விருந்தோம்பி பேச்சும் நடத்துகின்றது. லண்டன் வந்திருந்த ரிஎன்ஏ தலைவர் ஆர் சம்பந்தன் தங்களுடைய பொறுப்பும் கடமையும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கே அல்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அல்ல என்று ஆணித்தரமாகத் தெரிவித்து இருந்தார்.

புலிகளின் ஆதரவுத் தளம் தளம்பிய நிலையில் உள்ளது என்றால் அதற்கு எதிரணியில் உள்ளவர்களும் தெளிவுடன் இல்லை. மாற்றுக் கருத்து, ஜனநாயகம், மறுத்தோடிகள் என்று பேசியவர்கள் இப்போது அவற்றுக்கு புதிய விளக்கம் தேடுகின்றனர். இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறுவதுடன் சர்வதிகாரப் போக்கு நோக்கியும் நகர்ந்து கொண்டு உள்ளது. அரசின் இப்போக்கிற்கு எதிராக செயற்பட வேண்டிய ஒரு அவசர நிலையுள்ளது.

Rajini_Thiranagama_20thRememberanceஆனால் சகல ஒடுக்கமுறைகளுக்கும் எதிராகப் போராடிய ஒரு பெண், ராஜினி திரணகமவின் நினைவு தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. வன்னிப் பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் காரணமல்ல. இலங்கை அரசுக்கும் அதில் சம பொறுப்புண்டு. இலங்கை அரசு தனக்கு எதிரான குரல்களை நசுக்கி வருகின்ற ஒரு சூழலில் அதன் ஒடுக்குமுறைக்குப் பயந்து ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்ற சூழலில் லண்டனில் இருந்து சென்று ராஜினி திரணகமவிற்கு கொழும்பில் நினைவு தினம் வைக்கின்றனர் லண்டன் ‘ஜனநாயகவாதிகள்’ ‘மறுத்தோடிகள்’.

ராஜினி திரணகமவுடன் இணைந்து பணியாற்றிய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ராஜினிக்கு தெரிவித்த அஞ்சலியில் ”Today up to 300 000 IDPs are interned behind barbed wire without any sensitivity to their real needs, but rather exacerbating the terrible trauma they suffered for several months running from place to place under government bombardment, suffering injury and bereavement.” என்று தெரிவித்து இருக்கின்றது. இந்த யாழ் பல்கலைக் கழக மனிதஉரிமை சங்கத்தைச் சேர்ந்த ராஜன் கூல், கோ சிறீதரன் போன்றவர்கள் இலங்கை அரசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை விபரங்களை அங்கு பேசியிருக்க முடியுமா? அல்லது ராஜினி திரணகம செயற்பட்ட புரணி பெண்கள் அமைப்பினர் தான் வந்து தங்கள் கருத்துக்களை அச்சமின்றித் தெரிவித்திருக்க முடியுமா?  வன்னிப் பேரவலம் நடைபெற்று சில மாதங்களே நிறைவடையாத நிலையில் 300 000 தமிழ் மக்கள் அவர்களது அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜினி திரணகமவுக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட நினைவுக் கூட்டம் ராஜிணி திரணகமவையும் அவரைச் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்களையும் அவமதிக்கின்ற ஒரு கூட்டமே. புலம்பெயர்ந்த தமிழர்களின் மேல்தட்டு ஜனநாயகம் அவர்களின் இருப்பை அடையாளப்படுத்துவதற்கே உதவும். அதற்கு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபமே உகந்த இடம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை குறிப்பாக புலி எதிர்ப்பு அணியில் இருந்த அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்த வேண்டும் அவர்களை பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்று சில முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்றது. கட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளுக்கு வந்தபோது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லண்டனில் ஒன்றாக இருந்து தேநீர் அருந்திய டக்ளஸ் தேவானந்தா – அனந்தசங்கரி கூட்டு தென்னாபிரிக்காவில் தேநீர் குடிக்கு முன்பே பிரிந்துவிட்டது. இம்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் எம் நகுலேந்திரன் (கீரன்) போன்றவர்களும் அடங்கினர். மே 18க்குப்பின் எம் நகுலேந்திரன் இலங்கை சென்று சிறி ரெலோவுடன் செயற்படுகின்றார். ஒருவர் தன்னுடைய அரசியலைத் தெரிவு செய்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கின்ற கிராம மக்களை சிறி ரெலோவினர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் லண்டனில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தயா குற்றம் சுமத்துகின்றார். அங்குள்ள முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே பழைய கதை மீண்டும் இங்கு அரங்கேறுகிறது. அன்ரன் பாலசிங்கம் விட்ட இடத்தில் இருந்து எம் ஆர் ஸ்ராலின், எம் நகுலேந்திரன் தொடர்கின்றனர்.

இவ்வளவு ஓட்டங்களுக்கும் மத்தியில் கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட புலம்பெயர்ந்த குழுவும் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிறது. இக்குழு இலங்கை சென்று வந்து ஆறு மாதங்களாகியும் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஒரு மாநாட்டைக் கூட்டியம் தாங்கள் யார் என்பதையோ தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதையோ வெளிப்படையாக வைக்கவில்லை. இந்தக் குழுவிடம் ஒரு கூட்டுப் பொறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  பயண ஏற்பாட்டாளர் நடேசன், ஆர் நரேந்திரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆங்காங்கே பத்திரிகைப் பேட்டிகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு தங்கள் நன்றியை அரசுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். அதற்கு மேல் கொழும்பு சென்று வந்த எஸ் மனோரஞ்சன் புலம்பெயர் குழுவுக்கு எழுதிய கடிதம் தேசம்நெற் இல் கசிந்தது.

இந்தப் புலம்பெயர் குழுவில் கொழும்பு சென்ற இந்த 21 பேரும் யார் என்ற கேள்வியை கவுன்சிலர் போல் சத்தியநேசன் உட்பட பலரும் எழுப்பி இருந்தனர். ரி கொன்ஸ்ரன்ரைன் தேசம்நெற் சார்பில் இக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் அவர் அந்தத் தகவலை தருவதற்கு மறுத்துவிட்டார்.  ஆனால் அதற்கு அக்குழு இதுவரை மௌனம் சாதித்தனர். ஆனால் அக்குழு யார் என்பதை தேசம்நெற் வாசகர்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இப்பகுதி ஒக்ரோபர் 14 2009ல் மீள்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்கா (பொஸ்ரன்) : சிறீதரன் தில்லையம்பலம்
அவுஸ்திரேலியா: நடேசன், ரவீந்திரன், என் சதானந்தன், ஆர் சிவநாதன்
கனடா : மகேஸ்வர ராஜா, மித்திரன், ராஜேந்திரன், மனோரஞ்சன்
பிரித்தானியா : ராஜேஸ் பாலா, எம் சூரியசேகரம், பாலா, ரி கொன்ஸ்ரன்ரைன்
பரிஸ் : குகநாதன் DAN TV
ஜேர்மனி : ஜெகநாதன், புத்ரா
டென்மார்க் : வதனன் குமாரதுரை, மதி குமாரதுரை
சுவிஸ்லாந்து : எஸ் கலாமோகன்
நோர்வே: ராஜன்
சவுதிஅராபியா: ஆர் நரேந்திரன்

கொழும்பு சென்ற இக்குழுவின் செயற்பாடுகள் பற்றி ரி கொன்ஸ்ரன்ரைன் விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் இக்குழுவின் செயற்பாடுகள் வெளியாகி இருந்தது. இக்குழு ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஏற்பாடு செய்த மாநாடு இக்குழுவின் பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. இவர்களுடைய ஒரே பலம் இவர்கள் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதே. மற்றும்படி இக்குழு ஒரு ‘லூஸ்’ அமைப்பாகவே இருக்கின்றது. தனிநபர்களின் ஓட்டங்கள் அரசியல் அபிலாசைகள் இக்குழுவை ஒரு உறுதியான அமைப்பாக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலரின் செயற்பாடுகள் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற போக்கையே கொண்டிருந்தது.

ஒக்ரோபர் 7ல் பிபிசி இணையத்தில் வெளியான செய்தி The BBC was able to meet refugees who clamoured to talk about their situation. One woman after another said the conditions were poor – that there was no good drinking water, that the drainage system could not cope, and that people were falling ill in the hot weather. “Please send us home as soon as possible,” one said. இச்செய்தி தொடர்பாக கொழும்பு சென்ற குழுவின் உறுப்பினர் ஆர் நரேந்திரன் நியூஹாம் கவுன்சிலர் பொல் சத்தியநேசனுக்கு அனுப்பிய கடிதத்தில் ”The BBC reports such as yesterdays can only fool people who want to be fooled.” எனத் தெரிவித்துள்ளார். அது பற்றி மேலும் விளக்கம் அளித்துள்ள ஆர் நரேந்திரன் “People have to collect water in containers for their personal use and await their turn to get the water. In fact water is being wasted in these camps. We saw people having long leisurely baths, as they would at their home wells! people yet form line lines in the poorer area of Chennai to collect their water and the volumes they can get are severely limited” என வன்னி முகாம்களில் உள்ள மக்களைக் குற்றம்சாட்டி உள்ளார்.

அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போக்கு கொழும்பு சென்ற குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது. இலங்கை அரசு தொடர்பில் வேண்டுகோள் (request) விடுக்கப்பட வேண்டுமே அல்லாமல் உரிமையுடன் கோர (demand) முடியாது என ஸ்ருட்காட் மாநாட்டில் கொழும்பு சென்றுவந்த குழுவினர் கருத்து வெளியிட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் கொழும்புக் குழு வேண்டுகோள் என்றே நின்று கொண்டது. வன்னி முகாம்கள் தொடர்பாக தீர்மானம் இயற்ற முற்பட்ட போதும் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

180 நாட்களுக்குள் பெரும்பாலான வன்னி மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றப் போவதாக அரசு கோரி வருகின்றது. ஆனால் வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றக் கோருவது முட்டாள்தனமானது என்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் (பிரான்ஸ்). அண்மைக் காலமாக இவர் தேசியகீதம், புத்தம் சரணம் கச்சாமி எல்லாம் கூறித்தான் தன் கதாப் பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றார். ஸ்ருட்காடிலும் அவ்வாறே. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அம்மாநாட்டில் சில கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. வடக்கில் வன்னி முகாம்களுக்குள் மக்கள் முடங்கி இருக்க அவ்வறிக்கையில் ‘வடக்கில் சிங்கள மக்களும் குடியேற்றப்பட வேண்டும்’ என்று தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கோரிக்கை வைத்தது. இவ்வாறு அதன் கோரிக்கைகள் பல கோமாளித்தனமாகவே அமைந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுதா என்ற இளைஞர் தான் சபையை விட்டு வெளியேறப் போவதாகத் தெரிவித்து வெளியேறவும் முயன்றார்.

London_Delegationஇந்தப் பின்னணியிலேயே கொழும்பு சென்ற குழுவும் அதற்கு ஆதரவானவர்களும் இணைந்து பெடரெசன் ஒப் சிறிலங்கன் டயஸ்பொரா (FOSLD – Federation of Sri lankan Diaspora) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். இதன் தலைவராக லண்டன் பாலா நியமிக்கப்பட்டும் உள்ளார்.

ஸ்ருட்காட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒவ்வவொருவரும் தங்கள் நாடுகளுக்குச் சென்று அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளே FOSLD இல் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது கீழிருந்து மேல் செல்லாமல் மேலிருந்து கீழ் வரும் செயன்முறை. டென்மார்க், சுவிஸ், அவுஸ்திரேலியாவிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்றது. வேறு எந்த நாட்டிலும் எவ்வித கூட்டங்களையும் FOSLD பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அல்லது மேற்கொள்ள இயலவில்லை. தாங்கள் உருவாக்கிய விதிகளுக்கு அமையவே அவர்களால் செயற்பட முடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர். ஸ்ருட்காட் மாநாடு பற்றிய குறைந்தபட்ச செய்திக்குறிப்பைக் கூட FOSLD இன் தலைமை வெளியிடவில்லை.

Swiss_Delegationசுவிஸில் ஒக்ரோபர் பத்து (நாளை) மற்றுமொரு சந்திப்பும் இடம்பெறவுள்ளது. தாம் விரும்புகின்ற அரசியலை முன்னெடுக்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட குழுவுக்கும் உள்ளது. ஆனால் இவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களையோ தமிழ் மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. இவ்வாறான ஒரு குழு பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நலன்கள் தொடர்பில் பணியாற்றி அம்மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த உதவலாம். அது இன்றுள்ள அவசர தேவையும் கூட. அதற்கு அப்பால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் பேச்சுவதற்கு இந்தக் குழுவிடம் எவ்வித அரசியல் பண்பும் கிடையாது. மேலும் இக்குழுவினருக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்கின்றது என்ற சந்தேகம் பொதுவாக எழுந்தள்ளது. அதற்கான வாய்ப்புகளை இக்குழுவினரே உருவாக்கியும் உள்ளனர். இந்த முரண்பட்ட நிலையில் நின்று தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் பற்றி இவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல. இவர்களில் பலர் அரச பிரதிநிதிகள் போன்றே செயற்படுவதால் வேண்டுகோள் (request) மட்டுமே விடமுடியும் உரிமையுடன் கோர (demand) முடியாது என்ற சிந்தனை வசப்பட்ட இக்குழு தமிழ் மக்களுடைய உரிமைகள் பற்றிப் பேசுவது தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும். இக்குழு தங்களுடைய இயலுமை இயலாமையை இனம்கண்டு தங்களுடைய எல்லையை வரையறை செய்வது அவசியமானது.

எப்போதும் பேரழிவுகள் ஏற்படும் போது மனிதம் வேதனை கொள்வதும் புரிந்துணர்வை ஏற்படுத்தவதும் உதவ விளைவதும் இயல்பானது. சுனாமியினால் மிகப்பெரும் அவலம் நிகழ்ந்தது. மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகள் சுனாமி மீள்கட்டுமான கட்டமைப்பில் பங்கேற்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் சுனாமிக்குப் பின் புரிந்துணர்வும் சுமூகநிலையும் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் வன்னியில் மற்றுமொரு யுத்தம் பல்லாயிரம் மக்களைப் பலிகொண்டு மிக மோசமான மனித அவலத்தை தோற்றுவித்துள்ளது. இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவுவது? எப்படி உதவுவது? என்ற சர்ச்சை புலம்பெயர் மண்ணில் ஓயவில்லை. ஒக்ரோபர் 6ல் லிற்றில் எய்ட் 16 000 பவுண்கள் பெறுமதியான 1100கிகி எடையுள்ள பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது. டென்மார்க்கில் உள்ள ‘இனிசியேடிவ் 2009’ என்கின்ற அமைப்பு அந்நாட்டில் உள்ள மருத்துவ நிறுவனங்களைத் தொடர்புகொண்டு வலி நிவாரணப் பொருட்களைப் பெற்று லிற்றில் எய்ட் மூலம் அதனை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

‘மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு – புரட்சிக்கு’ பங்கம் விளைவிக்கும் இவ்வாறான உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒருசில ‘புரட்சி’ப் புலிகள் நினைக்கின்றனர். ‘லிற்றில் எய்ட் போன்ற உதவி அமைப்புகள் அரசாங்கத்தோடு இயங்குகின்றது. அரசாங்கத்தின் சுமையை அவ்வமைப்புகள் குறைக்கின்றன. மக்களின் வலி குறைந்தால் மக்கள் போராட மாட்டார்கள்’ என்றெல்லாம் இவர்களிடம் அடுக்கடுக்கான காரணங்கள் உள்ளது. இம்மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு இவர்கள் சொல்லும் கொள்கையில் இவர்களுக்கே முழுமையான நம்பிக்கையில்லை. இவர்கள் யாரும் தாங்கள் சொல்லும் கொள்கைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் அல்ல. அர்ப்பணிக்கப் போபவர்களும் அல்லர். ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிஸ்ட்கள். இவர்களை நம்பி மக்களை வலியுடன் தவிக்க விடாமல் லிற்றில் எய்ட் போன்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அம்மக்களுக்கு மேற்கொள்வது அவசியம். மேலும் அரசினையும் உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துவதற்கும் தொடர்ந்தும் நிர்ப்பந்திக்க வேண்டும். வன்னி முகாம்களுக்கு பலரும் உதவிகளை மேற்கொள்வது அரசின் சுமையைக் குறைக்க அல்ல. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வன்னி மக்களுக்கு உதவ முன்வருவது தங்கள் குற்ற உணர்வின் காரணமாக. உதவ முன்வருபவர்களது நோக்கம் மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் வரை அவர்களது உதவி அவசியமாகிறது. ஆனால் உதவ முன்வருபவர்களுக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்குமானால் அது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இவர்கள் அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பிரிவனர் தங்கள் அரசியல் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான களமாகவும் வன்னி முகாம்களை ஆக்கி உள்ளனர். தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் அறியப்பட்ட சில எழுத்தாளர்கள் மத்தியில் புல்லரிக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் மரத்தைப் பற்றியும் அதன் கீழ் தவிக்கும் மக்களுக்காகவும் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் உள்ள மாடுகளை மரத்தில் கட்டிவிட்டு அவற்றைத் திட்டித் தீர்த்து சிற்றின்பம் அடைகின்றனர். நிதர்சனம் போன்ற இணையங்களின் சொல்லாடல்களை இப்போது இவர்களே குத்தகை எடுத்துள்ளனர்.

தாயகத்தில் ஏற்படும் அழிவும் அவலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களின் புறச்சூழலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எழுத்துப் படிமங்களாகவும் ஒலிப் படிமங்களாகவும் காட்சிப் படிமங்களாகவும் மட்டுமே அவற்றை உணர்ந்து கொள்கின்றனர். தாங்கள் விரும்பிய பொழுது அந்தப் படிமங்களில் இருந்து அவர்களால் விலகி இருக்கவும் முடியும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் புலம்பெயர்ந்த மக்களால் முழுமையாக உணர முடிவதில்லை. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கத்தின் பின்னணியில் தாங்கள் கேள்விப்படுகின்ற எழுத்து, ஒலி, காட்சிப் படிமங்களை தங்கள் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப சமையல் செய்து வெளிப்படுத்துகின்றனர். இந்தப் போக்கு தாயகத்து மக்களின் அரசியல் சூழலில் எதிர்மறையான விளைவையே இதுவரை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான விலையைக் கூட புலம்பெயர்ந்து வாழும் மக்கள் செலுத்துவதில்லை. புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தவறான முன்னெடுப்புகளுக்கு தாயக மக்களே தங்கள் அதிகூடிய விலையைச் செலுத்தி உள்ளனர்.

அரசியல் மேற்கோள்களை கூகுலில் தேடுவதை விட்டுவிட்டு அரசியலையும் அரசியல் தந்திரோபாயங்களையும் தாயக மக்களிடம் கற்றுக் கொள்வதே புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக் கூடியது. ‘தத்துவமற்ற நடைமுறை’ புலிகளது அரசியல் – ‘நடைமறையற்ற தத்துவம்’ சொகுசு மார்க்ஸ்ஸிட்டுக்களின் அரசியல். முன்னையது எவ்வளவு ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. பின்னையது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதன் வாழ்தகவு கணணியுடன் முடிந்துவிடும்.

தாயக மக்கள் தொடர்பான புலத்து தமிழ் மக்களுடைய அரசியல் நடவடிக்கைகள் பற்றி இரட்டிப்பு விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகின்றது. தாயகத் தமிழர்கள் புலத்து தமிழர்களை தங்கள் பொருளாதார தேவைகளுக்கு அப்பால் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு மிகச் சரியான காரணங்கள் நிறையவே உள்ளது. புலத்து தமிழர்களுடைய அரசியல், அடையாள அபிலாசைகளுக்கு தாயகத் தமிழர்களை பணயம் வைக்க முடியாது. இனவாத அரசுக்கும் சர்வாதிகார ஆயுத அமைப்புக்கும் முகம்கொடுக்காது தப்பித்து ஓடி வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த அந்த மக்களுக்கு அரசியல் வழியை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் தாயகத்தில் மக்களுடைய தேவைகளை அறிந்து அவர்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவது அவசியம். அம்மக்களே தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை புலத்து தமிழர்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

Parameswaran_Subramaniyammcdonalds_burgerscotland_yardவன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். ஆனால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் புலிக்கொடி, பிரபாவின் படம் என புலிமயப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்தினர். தற்போது ஸ்கொட்லன்ட் யாட் மற்றுமொரு விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்திடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (தகவல்: டெய்லி மெயில் லண்டன்)

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது. வன்னியில் நிகழ்ந்த பேரவலத்தில் புலிகளுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. புலிகள் யுத்தப் பகுதியில் மக்களை பணயம் வைத்தே தாக்குதலை நடத்தினர். அப்படி இருந்தும் வெளிநாடுகளில் புலி ஆதரவுத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே புலி ஆதரவாளர்களால் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. வன்னியில் உள்ள மக்களை யுத்த முனைக்குள் தள்ளி மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்தியதில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சமபொறுப்பு உண்டு. புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளின் பொறுப்பற்ற போராட்டங்கள் வன்னி மக்களை மிகப்பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

வடமராட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர். லண்டனில் போராட்டங்களில் புலிகொகொடி பிரபாவின் படம் போன்ற விடயங்களில் இவரே தீவிரமாக இருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். செப்ரம்பர் 29ல் அவரை கொன்வே ஹோலில் சந்தித்து அந்த உறுதிமொழி என்ன வென்று கேட்ட போது அது இன்னமும் இரகசியமாகவே இருப்பதாகத் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஆனால் பிரித்தானிய இளையோர் அமைப்பினர் சில உள்வீட்டு விடயங்களை வெளியிடுகையில் அவ்வாறான உறுதிமொழி எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் உண்ணாவிரத்தை முடிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணமே அதுவென்றும் தெரிவிக்கின்றார்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் போராட்டங்கள் நியாயத்தன்மையைக் கொண்டிருக்காதபடியால் அவை பயனற்ற முயற்சிகள் என்பதனை தேசம்நெற்றில் பல தடவை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பரமேஸ்வரன் சுப்பிரமணியத்துடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் பிபிசி தமிழோசைக்கு இச்செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்ட பரமேஸ்வரன் சுப்பிரமணியம் இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

தமிழ்மணி அரங்க முருகையன் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

லண்டனில் எம்மிடையே நீண்டகாலமாக வாழ்ந்து அண்மையில் 13.09.2009 அன்று மறைந்துவிட்ட தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களை அறியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்களோ, கல்விசார் சமூக அமைப்புகளோ இருக்க முடியாது.

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பிறந்தவர். தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டவர். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். தன் கணவனுக்கு ஈடுகொடுக்கும் தமிழறிவு மிக்கவர். தமிழ்மணி அரங்க முருகையன் அவர்கள் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த மலாயா நண்பன் நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து, 1972இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் நித்திலம் என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.

மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த இலண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.

அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வந்தவர் மட்டுமல்ல அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். அவருடன் தொடர்புகொண்ட எவரும் இதனை எளிதிலேயே புரிந்துகொள்வார்கள். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். அவரது தமிழ் அபிமானம் தீவிரமானது.

ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அமரர் அரங்க முருகையன் பின்னாளில் 1978இல் லண்டன், கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும், மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி இலண்டன் தமிழ் வாசகம் என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.

உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற இவரது நூல், சைவ உலகம் என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிவாகியுள்ளன. கோயில்கள் பழங்காலத்திலே இயங்கியதைப் போன்று தான் சார்ந்த சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வளரவேண்டும் என்று அரங்க முருகையன் இந்நூலில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். கோவில்கள், சமூக மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அமைதியாக வழிபாடு செய்யவும், வயிற்றுப் பசியாறும் அறச்சாலையாகவும், மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக் கூடமாகவும், நுண்கலைகளைப் பயிலும் கலைக்கூடமாகவும், அக்கலைகளை அரங்கேற்றும் மண்டபமாகவும் இன்றைய நவீன ஆலயங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்று அரங்க முருகையன் அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகி;ன்றார்.

அரங்க முருகையனின் நாவலான தொடர்வண்டித் தூது ஒரு தூயதமிழ் நாவலாகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.

இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அரங்க முருகையன் அவர்கள் லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இவர் ஈழத்தமிழர்பாற்கொண்ட பற்றின் ஆழத்தை தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம் என்ற தலைப்பில் இவர் 1980இல் கும்பகோணத்தில் எழுதி வெளியிட்ட முதலாவது நூலே சான்றாகும். சோழர் வெற்றி என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.

அமரர் அரங்க முருகையன் லண்டனில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தேர்வாளராகவும் இங்கு இயங்கியுள்ளார். 1978ம் ஆண்டு முதல் கிரீன்போர்ட்டிலுள்ள மேற்கு லண்டன் தமிழ்ப் பள்ளியில் மொழித்துறைத் தலைவர் பணியில் ஈடுபட்டுழைத்துவந்தார். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூலாக பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு என்ற நூல் அமைகின்றது. மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. தன் வாழ்விலும் கனவிலும் தமிழ் இனத்தையும், மொழியையும், அதன் சிறப்பையும் மட்டுமே உயிராகக்கொண்டு வாழ்ந்த அந்தப் பெருமனிதன் 13 செப்டெம்பர் 2009 அன்று தனக்கு ஏற்பட்ட முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் உலகத்தமிழ் அறிஞர்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.

‘பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ புலி ஆதரவு அரங்கில் தமிழருவி மணியன் தொகுப்பு : த ஜெயபாலன்

Maniyan_thamilaruvi‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

Maniyan_thamilaruvi‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Maniyan_thamilaruviஅதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

இலங்கை சென்ற புலம்பெயர் குழுவினுள்ளே ஒரு குறுகிய பயணம் : எஸ் மனோரஞ்சனின் மெல்லக் கசிந்த மின் அஞ்சல்

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்று திரும்பிய 21 பேரைக் கொண்ட குழு பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. 27 – 29 மார்ச் 2009ல் இலங்கை சென்று திரும்பிய பின்னர் தனியாகவும் ஒரு சிலர் இணைந்த குழுவாகவும் இவர்களில் சிலர் அதன் பின்னரும் சென்று திரும்பி உள்ளனர். இவர்களது செயற்பாடுகள் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உள்ளன. தற்போது இக்குழுவின் நடவடிக்கைகள் அரையாண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் இக்குழு பற்றியதும் அவர்களது செயற்பாடுகள் பற்றியதுமான மதிப்பீடு ஒன்று அவசியமாகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் குழுவில் சென்று திரும்பிய எஸ் மனோரஞ்சன் தான் இலங்கை சென்று இக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். அக்கடிதம் தேசம் வாசகர் ஒருவருக்குச் சென்று தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இக்கடிதம் இலங்கை சென்ற புலம்பெயர் குழுவின் உள்ளே உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு உதவும் எனக் கருதுவதால் அக்கடிதத்திற்கான இணைப்பை வழங்குகிறோம். Letter_from_SManoranjan_to_Diaspora_Group

TRO தலைவர் ரெஜிக்கு UK இல் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் : த ஜெயபாலன்

Reggie_TROபுலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெஜியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு கேட்டுள்ளதாக உள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது. சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் ரெஜி இங்கு அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். ஆனால் அவருடைய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்குப் பிறம்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” கவுன்சிலர் போல்சத்தியநேசன் இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்வேயில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ரெஜி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தேசம்நெற்க்கு செய்திகள் கிடைத்துள்ளது. நோர்வெயின் ஆளும்கட்சியில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவருக்கு ஊடாக நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹைமிடம் இந்த தஞ்சக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பாக இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக ரெஜி செயற்பட்டு வந்தார்.

இச்செய்தி தொடர்பாக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதும் தனிப்பட்ட ஒருவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.

Raj_Rajaratnamஇதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். சுனாமியின் போது இலங்கையில் தங்கியிருந்து உயிர் தப்பிய ராஜ் ராஜரட்ணம் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கு 5 மில்லியன் யுஎஸ் டொலர்களை வழங்கி இருந்தார். உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் ராஜ் ராஜரடணம் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவரது மேற்பார்வையில் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட போதும் பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க பிரித்தானியா மறுத்திருந்தது. குறிப்பாக கேணல் கிட்டுவினுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு தாங்கள் கைது செய்து திருப்பி அனுப்புவதற்கு முன்னர் கேணல் கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது. அவ்வாறு கிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை சென்றபோதே சர்வதேச எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்ய முற்படுகையில் தங்களது கப்பலைத் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொண்டனர்.

பிரித்தானிய உள்துறை அமைச்சு கேணல் கிட்டு தொடர்பாக எடுத்த அதே முடிவையே தற்போது ரெஜி தொடர்பாகவும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.

மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )

தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

”பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். ” எனத் தெரிவிக்கிறார் சட்ட வல்லுனர் அருண் கனநாதன். இவர் இவ்வாண்டு மார்ச்சில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

\Paul_Sathyanesan_Cllrஇது தொடர்பாக தேசம்நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல்கொடுத்து வரும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”ரீஆர்ஓ தலைவர் ரெஜி க்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டது பற்றியோ அல்லது அவரை வெளியேறும்படி கேட்டது பற்றியோ எனக்கு உறுதியாகத் தெரியவரவில்லை” என்றார். ஆனால் ”ரெஜி போன்ற முக்கிய புள்ளிகள் இலங்கைக்கு அனுப்பப்ட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஒன்று அங்கு உள்ளது. மேலும் ரெஜியை திருப்பி அனுப்பும் முடிவு ஏனைய அரசில் தஞ்ச விண்ணப்பதாரிகளையும் திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்” என்றும் கவுன்சிலர் போல் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

”பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சத்தை சட்டவியலின் நுணுக்கத்தில் பார்க்கின்றதேயல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை கையாள்வதில்லை” எனவும் ஆட்சியில் உள்ள தனது கட்சியின் அரசியல் தஞ்சம் தொடர்பான கொள்கையை விமர்சித்தார்.

மாற்றம் கோரி பிரித்தானிய தமிழ் பேரவை கூட்டத்தில் வாக்குவாதம் : தேசம்நெற் வாசகர்

BTF Banner._._._._._.
இவ்வாக்கத்தை இங்கு பதிவு செய்துள்ளவர் தேசம்நெற் கருத்துக்களம் பகுதியில் கருத்துக்களைப் பதிவு செய்து வருபவர். தேசம்நெற் க்கு தன்னை அடையாளப்படுத்தியும் உள்ளார். இவர் அண்மைக் காலங்களில் பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மட்டுமல்ல போராட்டங்களை முன்னெடுத்தவரும் கூட.
._._._._._.

செம்பரம்பர் 6 லண்டன் ரெயினஸ் லேன் பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கு பிரித்தானிய தமிழ் பேரவையின் ரெயினஸ் லேன் பகுதி உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு இந்தியாவில் இருந்து சைக்கிளில் உலகம் சுற்றிய ஒரு சிறப்பு பிரதிநிதி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் கடந்தகால, எதிர்கால திட்டம் பற்றியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான தமது நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டது.

அங்கு பிரிஎப் தலைவர்கள் கொடுத்த அரசியல் விளக்கம் அவர்களின் அரசியல் தேர்ச்சியை வெளிப்படுத்தியது. லப்ரொப்பைக் கொண்டு வந்து பவர்பொயின்றில் படம் காட்டியவர்களின் பிறைனில் பிளெக்ஹோல் தான் தெரிந்தது. நகைச்சுவையாகவும் இருந்தது. ‘லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக கொன்ஸவேற்றிவ் கட்சியில் உறுப்பினராக வேண்டும்’ என்று ஒருவர் கருத்து வெளியிட்டார். காரணம் ‘கொன்சவேட்டிவ் தான் இனி ஆட்சியமைக்கும்’ என்றார். அவர் நிறுத்தவில்லை தொடர்ந்தார். திறப்பு போராட்டம் பற்றி குறிப்பிட்டார். ‘ஒரு திறப்பை அவர்கள் அச்சிட்டிருக்கினம். இதை நாம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.’ என்றவர் ‘இதுதான் வன்னி தடுப்பு முகாமின் திறப்பு’ என்றார். ‘அட பாவிகாள இந்த திறப்பு அடிச்ச காசை அங்கை அனுப்பியிருந்தால் ஒரு நேர சாப்பாடாவது அந்த சனம் சாப்பிட்டிருக்கும்’ என ஆதங்கத்தில் பேச முனைந்த போது தடுத்து விட்டனர். பின்னர் எமக்கு பேச சந்தர்ப்பம் தருவதாக கூறினார்கள்.

வரிசைப்படி பேச சந்தர்ப்பம் கொடுத்த போதும் வரிசையின் இறுதியில் இருந்த பிரிஎப் சாதாரண உறுப்பினர்கள் இருவர் தம் கருத்தை கூற முன் வந்தனர். அவர்களின் அவசரத்திற்கான காரணம் இனியும் மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்டால் தலை வெடிக்குமளவிற்கு அங்கிருந்தவர்கள் பேசியதே.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் பற்றியோ அல்லது நடந்து முடிந்த யுத்த அவலம் பற்றிய ஒரு சுயவிமர்சனத்தை வைக்காது திரும்பவும் எவ்வாறு லண்டன் வாழ் மக்களிடம் காசு புடுங்கலாம் என்ற திட்டங்களே அங்கு பேசப்பட்டது. லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் விளம்பரம் போட வேண்டும் என்று அதற்கு காசு சேர்க்கவும் முனைந்தனர். அந்த இரு உறுப்பினரும் ‘இனியும் சனத்தை பேக்காட்டிறதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்’ என்று கோரினார்கள்.

‘நாங்கள் அண்மையில் கூட்டிய ஊர்வலத்திற்கு சனம் வராததற்கு காரணம் ஊரில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை’ என்று பிரிஎப் பேச்சாளர் அளித்த காரணத்திற்குப் பதில் அழித்த ஒருவர், ‘மக்களை காசு போடும் வங்கிகளாக பார்த்த நீங்கள் அவர்களை அரசியல் மயப்படுத்தி நீங்கள் ஒழுங்கான அரசியல் செய்திருந்தால் மக்கள் தாமாகவே வந்திருப்பார்கள்’ என்று சாடினார். ‘இன்றைய மக்களின் தேவை அவர்களின் மறுவாழ்வே ஒழிய மீண்டும் உங்களுடைய சுத்துமாத்து அரசியல் அல்ல’ என்று அவர் தொடர்ந்தும் கூற அங்கிருந்த ஒருவர் ‘சிங்களவனோடு போய் வேலை செய்வதே’ என்று கூக்குரல் இட்டார்.

இங்கு வந்திருந்தவர்கள் அனைவருமே பிரிஎப் இன் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். பிரிஎப் யை கேள்விக்கு உட்படுத்திய இரு உறுப்பினர்களும் பிரித்தானியாவில் பிரிஎப் ஆல் நடத்தப்பட்ட கடந்த கால போராட்டங்களில் முன்னின்றவர்கள். இன்று கேள்வி கேட்கும் இவர்களை பிரிஎப் எட்டத்தில் வைத்திருக்கவே முயல்கிறது. ஏனெனில் பிரிஎப் இடம் பதிலில்லை.

விடுதலைப் புலிகளின் இறுதி நேர மனித உரிமை மீறில்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது யாராலும் அங்கு பதில் கூற முடியவில்லை. மாறாக ‘அது அரசின் பொய் பிரச்சாரம்’ என்று பதில் கொடுக்கப்பட்டது. ‘தன் சொந்த குடும்பமே இவ்வாறு பாதிக்கப்பட்டது’ என்று ஒரு உறுப்பினர் கூற அங்கு அதற்கு மறுமொழி கொடுக்க யாரும் இருக்கவில்லை.

‘தமிழ் மக்களின் அவலங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது அந்த மக்கள் பற்றிய நலனில் எந்தவித அக்கைறையும் இல்லாத அமைப்பில் இணைந்து வேலை செய்வது மடைத்தனம்’ என்று கூறிய அந்த இரு பிரிஎப் உறுப்பினரும் ‘மக்களை பலகாலம் பேய்க்கட்ட முடியாது’ என்று கூறிவிட்டு வெளியேறினர்.

இவர்கள் இருவரும் வெளியேறியதும் இருவரையும் சிறீலங்கா அரசின் ஏஜன்டுகள் என்று பழி சுமத்தி விட்டு தமது கூட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவரின் முன்னைநாள் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் இந்த இருவருக்கும் தொலைபேசியில் மிரட்டியிருக்கறார். ‘இயக்கதிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தாவிட்டால் பின் நடப்பவைக்கு தன்னில் பிழை கூற வேண்டாம்’ என்று. அவர்களில் ஒருவர் இது சம்பந்தமாக பொலிசாரிற்கு புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்? “அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி” : ஜூனியர் விகடன்

120909rudrakumaaran_v.jpgகுமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது
 
இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது:-

கே.பி-‘யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் உருத்திரகுமாரன். ‘இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!’ என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த உருத்திரகுமாரன். எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!” என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

உருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை பொலிஸார், இராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. கே.பி. ஸ்டைலில் அலேக்காக அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

‘கே.பி.’ மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், கடைசி காலகட்டங்களில் அன்ரன் பாலசிங்கத்தின் அபிமானத்தைப் பெற்ற உருத்திரகுமாரனைத்தான் பிரபாகரன் வெகுவாக நம்பி வந்தார். புலம்பெயர்ந்த நாடுகளின் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியும் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞரான உருத்திரகுமாரன் தன் கூர்மையான வாதத்திறனால் புலிகளின் மீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடியும் வந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்தது. உருத்ராவை எப்படியாவது பிடித்துப் போட்டுவிட்டால்… புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு அவரைக் கைது செய்ய தனிப்படையே அமைத்தது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், ”அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை…” என்று கூறினார்கள். ”அமெரிக்கா ஒன்றும் மலேசியா இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைதுசெய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் ‘நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்’ (EXTRADITION TREATY) அமுலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை! அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப் போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை உருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந்திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!” என்று கூறினார்கள்.

உருத்திரகுமாரனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசே கூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயோர்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத்தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் உருத்திரகுமாரன்.

உருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு ‘கைது’ செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன்.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்களாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர். கலிபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத விநியோக முகவர் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மன் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். ”என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்து விடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!” என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு… பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் உருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான ‘சனல்-4’ வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

‘என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்” என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் உருத்திரகுமாரன்.