இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்தும் ஆதிக்கம் : த ஜெயபாலன்

Sturattguard_Conference‘தமிழ் மக்களின் அரசியலை நாங்களே நிர்ணயிக்கின்றோம்’ என்ற வகையில் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு எண்பதுகளில் விடுதலை இயக்கங்களின் உருவாக்கத்துடன் ஆரம்பமாகியது. இப்போக்கு இன்று சர்வதேசம் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் காவிச்செல்லப்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயிக்கின்றனர் என்ற நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளது. இந்த ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு தமிழ் மக்களை புள்ளிவிபரப்படியும் புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக மோசமான பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுந்தமானமான, மேலெழுந்தவாரியான அரசியல் முன்னெடுப்புகளும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கின்றது. இந்தப் பின்னணிகளில் கொழும்பு 21 குழு ஒக்ரோபர் 10ல் சுவிஸில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

இக்கட்டுரை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செலுத்தும் தாக்கம் பற்றிய முதற்படிநிலை பதிவு மட்டுமே. இது பற்றிய விரிவான ஆய்வுகளும் மீளாய்வுகளும் எதிர்காலத்தில் அவசியமாகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நான்கு கால கட்டங்களாக வகுக்க முடியும்.
1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.
2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலம்.
3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.
4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. – மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.

1970க்களிலேயே தமிழ் மக்கள் மேற்கு நோக்கிய புலம்பெயர்வுகளை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரே. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ் விடுதலை இயக்கங்களில் இவர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி, ஆரம்பத்தில் புளொட் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு பிற்காலங்களில் புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக்குழுவுடன் செயற்பட்ட மகாஉத்தமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். (இவர்கள் மூவரும் 2006 பிற்பகுதியில் நோய் காரணமாக மரணமடைந்தனர்.)

தற்போதைய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், இளைஞர் பேரவை, மாணவர் பேரவையில் முன்னணி வகித்தவர்கள் மேற்கு நாடுகளுக்கு ஆரம்ப காலங்களிலேயே புலம்பெயர்ந்தனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கணிசமான ஆளுமையைக் கொண்டிருந்தனர். பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் தொடர்புகளை வலுப்படுத்தி தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்களை பயிற்சிக்கு அனுப்பியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி. இராணுவ வழிகளில் மட்டமல்ல தமிழ் இயக்கங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களித்திருந்தனர்.

ENF Leadersஇருந்தாலும் தொடர்ச்சியாக இளைஞர் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் பலர் தங்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அணி பிரிகின்ற போக்கு புலம்பெயர்ந்த தளத்திலும் ஏற்பட்டது.

குறிப்பாக உமா – பிரபா பிரிவும் அதனைத் தொடர்ந்த சுந்தரம் படுகொலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டையும் வரலாறு இயக்க மோதலின் குறியீடாகப் பதிவாக்கிக் கொண்டது. உமா – பிரபாவை ஒன்றினைக்கிறோம் என்று புலத்தில் இருந்து இந்தியா சென்ற அன்ரன் பாலசிங்கம், உகா உத்தமன் போன்றோர் பின்னர் முறையே தமிழீழ விடுதலைப் புலிகளிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். களத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கச் சென்றவர்கள் பிற்காலங்களில் அந்த முரண்பாடுகளின் அங்கமாகினர். அந்த முரண்பாடுகள் களையப்படுவதற்கு முயற்சித்த இன்னும் சிலர் பலவீனமான தளத்திலேயே நின்றனர்.

ஆரம்ப காலங்களில் பல்வேறு அமைப்புக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு லண்டனில் பல போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் இயக்க மோதலால் ஏற்பட்ட பிளவுகளால் பிற்காலங்களில் பிசுபிசுத்துப் போனது. பலர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து அஞ்ஞாதவாசம் சென்றனர்.

2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலப் பகுதி.

1990க்களைத் தொடர்ந்தே பெருமளவிலான தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்தனர். வடக்கு கிழக்கின் குறிப்பாக யாழ் மத்தியதர வர்க்கத்தினர் மேற்கு நாடுகள் எங்கும் பரவி தங்களை ஸ்தீரப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வடமாகாணத்தின் யாழ்மாவட்டம் நீங்கலான சனத்தொகைக்கு ஒப்பானவர்கள் ரொறன்ரோவின் ஸ்காபுறோ பகுதியில் வாழ்கின்றனர். இலங்கையில் இருந்து மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களது சனத்தொகையும் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது சனத்தொகையும் அண்ணளவாக ஒரே அளவினதே.

1980க்களின் பிற்பாடு பிறந்த இளம்சமூகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் பற்றி பெரிதளவில் அறிந்திருக்கவில்லை. அறிவதற்கும் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களே கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஏகதலைமை என்பதை தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களிலும் நிறுவிக் கொண்டனர். புலிகளிடம் இருந்த அராஜகமும் வன்முறையும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பரவி இருந்தது. சபாலிங்கம், ஈழமுரசு ஆசிரியர் உட்பட மூவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகளை விடவும் வன்முறை நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். கனடாவில் நூலக எரிப்பு, ஊடகவியலாளரைத் தாக்கியது என இந்த வன்முறைப் போக்கு பரவலாகக் காணப்பட்டது.

Protest_Londonஇருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாயகத்தில் இருந்த ஆதரவிலும் பார்க்க புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்த ஆதரவு மிக மிக அதிகம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ஆதரவு அலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் பலரும் கூட அள்ளுண்டனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகதலைமையாகவும் வே பிரபாகரனை தேசியத் தலைவராகவும் ஏற்றுக்கொண்டனர். வன்முறைப் போக்கும் அராஜகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்புகளாயின.

மேற்கு நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் மாற்று இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அல்லது புலிகள் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்களே. கவிஞர் சேரன், கவிஞர் கி பி அரவிந்தன், சிவரஞ்சித், எஸ் கே ராஜன், சிவா சின்னப்பொடி என இந்தப் பட்டியல் நீண்டது. புலம்பெயர்ந்த மண்ணில் புலிகளின் பிரச்சாராப் பீரங்கிகளாக இவர்களே நின்றனர்.

தாயக மக்களுடன் எவ்வித அரசியல் உரையாடலையும் கொண்டிராத தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உரையாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி கேவலப்படுத்தி வசைபாடிய புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏனைய விடுதலை அமைப்புப் போராளிகளைக் கொலை செய்ததற்கும், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து விரட்டியதற்கும் கிழக்கில் படுகொலைகள் செய்ததற்கும் எப்போதும் மன்னிப்புக் கேட்காத தமிழீழ விடுதலைப் புலிகள் டொலர்களுக்கும், பவுண்ஸ்க்கும், பிராங்கிற்கும், மார்க்கிற்கும், ….. பணிந்தனர். மாவீரர் தின உரைகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு ‘தேசியத் தலைவனே’ வாழ்த்துப்பா பாடினார். மக்களைக் காணாத தலைவர் வே பிரபாகரன் மேற்குநாடுகளில் இருந்து செல்லும் வர்த்தகப் புள்ளிகளுடன் படம் எடுத்துக்கொண்டார். மேற்கு நாடுகளில் பணம்படைத்த பலருக்கு இருந்த ஒரே தகுதி தலைவருடன் படம் எடுத்துக் கொண்டது தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அவர்களது நடவடிக்கைகளை ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தாத புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்கள், தங்களை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழர்களின் மீட்பர்களாகவும் ஒரு மாயையைக் கட்டி அமைத்தனர். இங்கு புலிகளின் மாயைக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மாயைக்கு புலிகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி தமிழ் மக்கள் மத்தியில் இரு அரை ஒட்டுண்ணிகளாக இருந்தனர். இவ்விரு அரை ஒட்டுண்ணித் தன்மையின் மிகமோசமான செயற்பாடுகள் இவர்களுக்கு ஆதாரமாக இருந்த தமிழ் மக்கள் என்ற விருட்சத்தை வேரறுப்பதற்கே இட்டுச்சென்றது. இந்த ஆபத்தான நிலையின் குணங்குறிகள் வெளியே தென்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களையும் சுற்றிப் புனையப்பட்டு இருந்த மாயைகள் வரவிருந்த ஆபத்தை காணவிடாது தடுத்தது.

புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தளம் என்பது சிந்திக்கத் தெரியாத அல்லது சிந்திக்க மறுத்த ஒரு கூட்டமாகவே இயங்கியது. இன்னமும் இயங்க முற்படுகிறது. இவர்கள் தேசியத் தலைவர் மீண்டும் வந்து ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்’ என்ற ஆவலுடன் இன்னுமொரு மாவீரர் தினத்திற்காகக் காத்திருக்கின்றனர். அதனை ஏற்க மறுக்கும் சிந்திக்க முற்பட்டவர்களே இப்போது கடைசியாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டுள்ளனர். ‘மாவீரர் தினத்தன்று தலைவரை நினைத்தபடி நன்றாக கண்ணயர்ந்து தூங்கினால் நிச்சயம் தலைவர் வருவார்?’ என்ற நம்பிக்கையைத் தவிர வேறு எதைத்தான் நாம் அவர்களுக்கு வழங்க முடியும்.

இக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பாலும் இரு முகாம்களே காணப்பட்டது. ஒன்று புலி ஆதரவு அணி மற்றையது புலி எதிர்ப்பு அணி. புலிகளுடைய ஆதிக்கம் மிகப் பலமாக இருந்ததால் புலி எதிர்ப்பு முகாம் ஓரணியில் நிற்க வேண்டிய புறச் சூழல் அன்று இருந்தது. சில தனி நபர் முரண்பாடுகள் ஆங்காங்கே இருந்தாலும் புலிகள் புலி எதிர்ப்பு அணிக்கு ஒரு வடிவம் கொடுத்திருந்தனர். ஆனாலும் இந்த புலி எதிர்ப்பு அணி தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு அரசியல் சக்தியாக இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு என்ற குறுகிய வட்டங்களுக்கு உள்ளேயேயும் அதன் வெட்டுக் குத்தகளுக்கு உள்ளேயுமே உழன்றனர்.

இக்காலகட்டத்தில் தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்திய பலரும் பொது எதிரி இலங்கை அரசு என்ற நிலையிலேயே காணப்பட்டனர். இக்காலகட்டத்தில் புலி ஆதரவு புலி எதிர்ப்பு முகாம்களின் எல்லைகள் புலிகளைக் கொண்டே வரையறுக்கப்பட்டது. ஈரோஸ் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் புலி எதிர்ப்பு அணியிலேயே அடையாளம் காணப்பட்டனர். ஈரோஸ் அமைப்பினர் தொடர்ந்தும் புலிகளுடன் அடையாளம் காணப்பட்டனர்.

2002 ஒஸ்லோ உடன்பாட்டைத் தொடர்ந்து வன்னிக்கு சுற்றுலா சென்றவர்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரித்தது. முதலீடுகளும் அதிகரித்தது. அதனால் வெளிநாட்டுத் தொடர்புகளற்ற ஈழத் தமிழர்களின் கொள்வனவு சக்தி மிகவும் பாதிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் புலி ஆதரவு மேலும் வலுப்பெற்றது. புலம்பெயர் ஊடகங்கள் பெரும்பாலும் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாக மாறின. மாற்றுக் கருத்துடையவர்கள் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அவையெல்லாம் புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளாலும் அதன் ஊடகங்களாலும் நியாயப்படுத்தப்பட்டன. சிறுவர்களை இயக்கங்களில் இணைப்பது, மோசமான வரி அறவீடு போன்ற சாதாரண மக்களைப் பாதிக்கின்ற விடயங்களைக் கூட புலம்பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் நியாயப்படுத்தின. புலிகளிடம் எதேச்சதிகாரப் போக்கு காணப்பட்டாலும் அதனை மிக மோசமான மிலேச்சத்தனமான அமைப்பாக மாற்றியதில் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.

Thesam_Mag_Coverதேசம் சஞ்சிகையின் 17வது இதழ் 2004 மார்ச் – ஏப்ரல் வெளிவந்தது. அதன் அட்டைப்படத் தலைப்பு ‘புலிக்குள் பூகம்பம் ஈழம் ஈடாட்டம்’. தேசம் சஞ்சிகையில் அதுவரை வெளியான தலைப்புகள் கட்டுரைகளில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான தலைப்பும் கட்டுரையும் அதுவே. தமிழீழ விடுதலைப் புலிகளின் அத்திவாரத்தை ஆட்டிய உடைவு. இந்த உடைவை தமிழீழ விடுதலைப் புலிகள் மூடிமறைத்து அதனை ஒரு சில தனிநபர்களின் பிரச்சினையாக பிரச்சாரப்படுத்தினர். தனது ஆதரவு சக்திகளுக்கு இனிப்புத் தடவிய மாத்திரைகளை வழங்கி, ‘எல்லாம் தலைவர் சரி செய்துவிடுவார்’ என்று நம்பிக்கை அளித்தனர். இந்த மாத்திரைகளை விழுங்கிய புலம்பெயர் புலி ஆதரவுத் தலைமை பொங்கு தமிழ் வைத்து, போர் முழக்கம் இட்டு, யுத்த மமதையில் திளைத்தனர். ஏற்கனவே வன்னி சென்று, புலித் தலைமையை வழிபட்டு ஆசிபெற்று வந்த பலர் மேற்குநாட்டுத் தலைநகர்களில் உருஆடினர் என்றால் மிகையல்ல.

மேற்கு நாடுகளில் வாழ்ந்த கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் பெரும்பாலும் இது தொடர்பாக மௌனமாக்கப்பட்டனர். ஒரு பகுதியினர் மறைமுகமாக கருணாவிற்கு தங்கள் ஆதரவையும் வழங்கினார். புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்த புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்த அணி கேர்ணல் கருணாவின் பிளவை தங்களுக்கு சாதகமாகக் கருதினர். அவர்கள் கேர்ணல் கருணாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர். கருணா பிளவடைந்த ஆரம்பகாலத்தில் வெளியான பெரும்பாலான அறிக்கைகள் லண்டனில் இருந்தே தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளைத் தயாரித்தவர்கள் பிற்காலங்களில் கேர்ணல் கருணாவின் கடத்தல் கொள்ளை கொலை போன்ற சம்பவங்களால் தங்களை ஓரளவு அந்நியப்படுத்திக் கொண்டாலும் கேர்ணல் கருணாவின் செயற்பாடுகளை விமர்சிக்கத் தயங்கினர். ஆனால் இன்னும் சிலரோ கருணாவுடன் அணி சேர்ந்து கொண்டனர்.

ஈஎன்டிஎல்எப், லண்டன் ரிபிசி – வி ராம்ராஜ், லண்டனில் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பின் எதிரணிக்குச் சென்ற ஆர் ஜெயதேவன், 1970க்களின் பிற்பகுதிகளில் லண்டனில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின் அரசியல் அஞ்ஞாதவாசம் சென்ற எஸ் கிருஸ்ணன், ஜனநாயகம் தலித்தியம் கிழக்கியம் என நீண்ட காலம் மாற்றுக் கருத்துத் தளத்தில் இயங்கிய பாரிஸ் எம் ஆர் ஸ்ராலின், முன்னாள் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பின்னர் வெளிநாட்டு முகவராகச் செயற்பட்டு தற்போது ஏசியன் ரிபியூனின் ஆசிரியராகச் செயற்படும் சுவிஸில் வாழும் கெ ரி ராஜசிங்கம் போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கேர்ணல் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். கேணல் கருணா ஆரம்பத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனேயே தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அதன் பின் ரிபிசி வி ராம்ராஜின் தொடர்புடன் இந்தியா சென்றார். ஈஎன்டிஎல்எவ் – கேர்ணல் கருணா கூட்டு சிறிதுகாலம் ஓடியது. ஆனால் அக்கூட்டு உருவாகிய வேகத்தில் தகர்ந்தது. இலங்கை உளவுத்துறை நேரடியாக கேர்ணல் கருணாவுடன் தொடர்பை வலுப்படுத்தி கருணாவை இலங்கைக்கு அழைத்துச் சென்றது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்ற கடத்தல் கொள்ளை கொலைச் சம்பவங்களின் பின்னனியில் புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பணியில் இருந்த சிலர் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தனர். பலர் அவற்றை நியாயப்படுத்தினர். அல்லது அவற்றை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். புலி ஆதரவு அணி மேற்கொண்ட அதே கைங்கரியங்களை கேர்ணல் கருணா மற்றும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாக புலி எதிர்ப்பணியின் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். குறிப்பாக கேர்ணல் கருணா – பிள்ளையான் மோதலில் எஸ் கிருஸ்ணன் – கே ரி ராஜசிங்கம் போன்றவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் இருந்தனர். ஏசியன் ரிபியூன் இணையத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசு நிதியுதவி வழங்குவது பற்றிய செய்திகள் தி ஐலண்ட் பத்திரிகையில் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

2004க்கும் 2009க்கும் இடையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கின்றது. மாவிலாறு அணையை மூடி சிங்கள விவசாயக் கிராமங்களுக்கான நீர் விநியோகத்தை நிறுத்திய புலிகள் தங்கள் இராணுவ பலவீனத்தை அம்பலமாக்கினர். புலிகளுடைய பலவீனத்தை புலி எதிர்ப்பு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்பட ஆரம்பித்தனர். நீண்டகாலமாக தாங்கள் முன்பு சார்ந்திருந்த இயக்கங்களை மறந்திருந்த புலம்பெயர்ந்து வாழ்ந்த ‘தோழர்கள்’ எல்லாம் தங்கள் இயக்க அடையாளங்களைத் தேட ஆரம்பித்தனர். இவர்கள் வன்னி மக்களுக்காக ஏதாவது கூட்டம் கூடியதாக எமக்கு அறியக்கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்கு பாரிஸில் கூட்டம் கூட்டப்பட்டது.

France_Delegation‘உயர்சாதியினர் எல்லோரும் ஊரைவிட்டு வந்துவிட்டார்கள் அங்கு தலித்துக்களே பெரும்பான்மையாக உள்ளனர்’ என ஐரோப்பாவில் மாநாடு கூட்டிய தலித் சமூக மேம்பாட்டு முன்னணியும் வன்னி மக்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் முக்கியஸ்தர் (முன்னாள்) எம் ஆர் ஸ்ராலின் கிழக்கு முதலமைச்சரின் மதியுரைஞர் ஆன பிற்பாடு தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகஜர் கொடுப்பதுடன் மட்டும் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டது. ஜனநாயகம், விளிம்புநிலை மக்கள் எல்லாம் கிழக்கிசத்துடன் சமரசம் செய்து கொண்டுவிட்ட நிலையே உள்ளது.

இக்காகட்டத்திலேயே புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பு இயக்க அணிகள் இலங்கையில் காளான்களாக முளைவிட்டனர். ஈரோஸ் (பிரபா அணி), சிறிரெலோ போன்ற புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பிரபாகரன், உதயராஜா, சக்தி போன்றவர்கள் மேற்கு நாடுகளில் இருந்து இலங்கை சென்று கட்சிகளை ஆரம்பித்தனர். இவ்விரு கட்சிகளின் உருவாக்கத்தின் பின்னணியிலும் ஈபிடிபியே இருந்துள்ளது. இவ்விரு புதிய அமைப்புகளுக்கும் ஈபிடிபிக்குமான உறவும் அதனை உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவில் ரகு இலங்கை சென்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டார். இவர் பின்னர் பிள்ளையான் – கருணா உள்மோதலில் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்குள் இருந்த முரண்பாடுகள் புலம்பெயர்ந்தவர்களின் தலையீட்டுடன் மேலும் மேலும் கூர்மையடைந்தது. சிறிரெலோ – புளொட் உறுப்பினர்களிடையே இருந்த முரண்பாடு படுகொலைவரை சென்றது.

வெளிநாடுகளில் உள்ள ஈபிடிபியின் பிரதான ஆதரவுத் தளம் அவ்வமைப்பின் சலுகைகளிலும் தங்கள் வியாபார நலன்களுக்குமே அதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற பலமான குற்றச்சாட்டு பொதுவாக ஏனைய அமைப்புகளிடம் உள்ளது. ஈபிடிபி, புளொட், ரிஎம்விபி என ஆயுதம் தரித்த இந்த அமைப்புகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருப்பது சர்வதேச உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால் இவ்வமைப்புகளை இந்நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கின்ற காத்திரமான முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அவ்வமைப்பின் பிரதிநிதிகளால் அதன் ஆதரவாளர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை. வெறும் கண்டனங்களுடன் அவை மட்டுப்படுத்தப்பட்டன. அவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்கான பலம் இருந்த போதும் அது இங்குள்ள இயக்க மற்றும் முரண்பாடுகளால் பலவீனப்பட்டு இருந்தது.

இக்காலகட்டத்திலேயே அறுவரைக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் குழு முதல் தடவையாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தது. அதன் பின்னர் குழுவாகவும் தனியாகவும் பயணங்கள் இடம்பெற்றாலும் இவ்விஜயமே அவை அனைத்திற்கும் மூலமாக அமைந்தது. இந்த விஜயத்தின் மூலம் சாதிக்கப்பட்ட விடயங்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கை அரசுடன் தொடர்புபட்டே சில விடயங்களைக் கையாள வேண்டும் என்ற போக்கு உருவாக்கப்பட்டது. இப்பயணத்தை மேற்கொண்டவர்கள் தீவிர புலி எதிர்ப்பாளர்களாகவும் அரசு சார்பாக மென்போக்கு உடையவர்களாகவுமே இருந்துள்ளனர். அதனால் அரசியல் ரீதியில் இப்பயணம் காத்திரமானதாக அமையவில்லை.

இக்காலப் பகுதியில் புலிகளின் அழுத்தத்தினால் ஓரணியில் நின்ற புலி எதிர்ப்பு அணியில் பிளவுகள் வெளிப்படையாகின. புலி எதிர்பு அணியில் அரசுக்கு எதிரான போக்குடையவர்கள் தனியான அணியாக உருவாகினர்.

இவர்களுக்கு மத்தியில் இடதுசாரிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்தும் பலவீனமான பிரிவு ஒன்றல்ல பல ஆங்காங்கே உள்ளது. இவர்களிடையே ஒரே கருத்தியல் உடைய இருவரை அடையாளம் காண முடியாவிட்டாலும் புலிகளுக்கும் அரசுக்கும் எதிரான போக்கு இவர்களிடையே இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள். தாங்கள் எந்த நோக்கத்திற்காக இணைந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்ற விரக்தி நிலையில் இருந்து இவர்கள் இன்னமும் வெளிவரவில்லை. சமூகம் சில பத்தாண்டுகள் நகர்ந்தவிட்ட போதும் இவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினையில் மட்டும் இன்னமும் அன்றைய நிலையிலேயே உறைநிலையில் உள்ளனர். தமது சொந்த வாழ்வியல் விடயங்களில் அவர்கள் தங்களை முன்னோக்கி நகர்த்தியே உள்ளனர்.

இவர்கள் இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விமர்சித்து வந்தபோதும் கொள்கையடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதை எதிர்த்தனர். அல்லது ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்குமாறு கோருவதையும் தவிர்த்தனர். யுத்த நிறுத்தத்திற்கான காலம் கடந்துவிட்ட போதும் ஒப்புக்கு யுத்த நிறுத்தம் கோரி தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். இதில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்த வைத்துள்ள மக்களை வெளியே விட வேண்டும் என்று கூட கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் சரியோ தவறோ எந்த அரசியல் சூழலுக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ற ‘ரெய்லர் மேட்’; விளக்கம் அவர்களிடம் இருக்கும். இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுடன் மக்களாகப் போராடுபவர்கள் அல்லர் மாற்றத்துக்கு விளக்கம் கொடுப்பவர்கள். எப்படிப் போராட வேண்டும் என்று சொல்லித் தருபவர்கள். ‘கீ போட் மார்க்ஸிஸ்ட்’ . அதனால் இவர்களை ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டு’க்கள் என்றும் சொல்லலாம்.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் தமிழ் மக்கள் மீது மிக மோசமான வன்முறையை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இலங்கை அரச படைகளின் தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றுள்ளனர். மக்களைப் பலவந்தமாக கொண்டு வந்து யுத்த முனையில் நிறுத்தி அவர்களுக்கு மத்தியில் இருந்து தாக்குதலை நடத்தி எதிர்த் தாக்குதலில் அதிகப்படியான மக்கள் கொல்லப்படுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் செயற்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றும் இருந்தனர். இன்னும் சில அமைப்புகள் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பேர்ள் போன்ற அமைப்புகள் வன்னி மக்களை மீட்பதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் எச்சரித்தன. இவ்வாறு வன்னி மக்களை மிகப்பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியதில் புலம்பெயர்ந்து வாழ்ந்த புலி ஆதரவு சக்திகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலி ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை போராட்டங்களும் அர்த்தமற்றுப் போனதற்குக் காரணம் அப்போராட்டங்கள் வன்னி மக்களுக்காக நடத்தப்படவில்லை என்பதே. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளைக் காக்கவே வீதிகளில் இறங்கினர். ஆனால் புலி ஆதரவுத் தலைமையோ அவற்றை தங்கள் குறுகிய நலன்களுக்கு பயன்படுத்தினர். பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்த புலி ஆதரவு அமைப்புகள், பிரான்ஸில் உள்ள புலிகளின் மனிதவுரிமை அமைப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு என்பன வன்னி மக்களின் அவலத்தை அரசியல் பேரம்பேசலுக்கே பயன்படுத்தினர். வன்னி மக்களின் நலன்களுக்கு விரோதமாகவே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தது.

4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கூறிவந்தார். தனது முடிவு தான் தமிழ் மக்களின் வாரலாற்றுத் திருப்புமுனையாகப் போகின்றது என்பதை அவரும் அவரைச் சார்ந்திருக்கின்றவர்களும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதனை அறியும் போது காலம் கடந்துவிட்டது. ஆனால் அவர்களில் இன்னும் பலர் உண்மைகளை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.

வன்னி மக்களை மந்தைக் கூட்டங்களாகச் சாய்த்து வந்து முல்லைத்தீவில் நடந்த யுத்த வேள்வியில் பலிகொடுத்த புலம்பெயர்ந்த புலி அதரவுத் தமிழர்கள் வன்னி முகாம்களின் அவலம் பற்றிப் பேசுகின்ற தகமையை இழந்துவிட்டனர். ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாகி விட்டது’ புலத்து புலி ஆதரவுத் தமிழர்களின் திறப்புப் போராட்டம்.

நாடு கடந்த தமிழீழம், புலம்பெயர் பாராளுமன்றம், வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்று புலி ஆதரவுத் தமிழ் அமைப்புகள் படுபிசியாக இயங்கிக் கொண்டு உள்ளன. தலையற்ற கோழியைப் போல் அவர்களது ஆதரவுப் பட்டாளம் அங்கும் இங்கும் ஓடுகின்றது. இவர்கள் வன்னியில் உள்ள மக்களில் இருந்து முற்றிலும் அன்னியப்பட்டு குத்து மதிப்பாக அரசியலை நகர்த்துகின்றனர். அவர்களுக்கு தற்போது யாரைத் துரோகி என்றழைப்பது, யார் தம்மவர் என்ற தெளிவும் இல்லாமல் உள்ளனர். இதுவரை அடக்கி வைக்கப்பட்ட ரிஎன்ஏ, இலங்கை அரசோடு வன்னி மக்களுக்காகப் பேச மறுத்த ரிஎன்ஏ தற்போது அரசோடு விருந்தோம்பி பேச்சும் நடத்துகின்றது. லண்டன் வந்திருந்த ரிஎன்ஏ தலைவர் ஆர் சம்பந்தன் தங்களுடைய பொறுப்பும் கடமையும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கே அல்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அல்ல என்று ஆணித்தரமாகத் தெரிவித்து இருந்தார்.

புலிகளின் ஆதரவுத் தளம் தளம்பிய நிலையில் உள்ளது என்றால் அதற்கு எதிரணியில் உள்ளவர்களும் தெளிவுடன் இல்லை. மாற்றுக் கருத்து, ஜனநாயகம், மறுத்தோடிகள் என்று பேசியவர்கள் இப்போது அவற்றுக்கு புதிய விளக்கம் தேடுகின்றனர். இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறுவதுடன் சர்வதிகாரப் போக்கு நோக்கியும் நகர்ந்து கொண்டு உள்ளது. அரசின் இப்போக்கிற்கு எதிராக செயற்பட வேண்டிய ஒரு அவசர நிலையுள்ளது.

Rajini_Thiranagama_20thRememberanceஆனால் சகல ஒடுக்கமுறைகளுக்கும் எதிராகப் போராடிய ஒரு பெண், ராஜினி திரணகமவின் நினைவு தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. வன்னிப் பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் காரணமல்ல. இலங்கை அரசுக்கும் அதில் சம பொறுப்புண்டு. இலங்கை அரசு தனக்கு எதிரான குரல்களை நசுக்கி வருகின்ற ஒரு சூழலில் அதன் ஒடுக்குமுறைக்குப் பயந்து ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்ற சூழலில் லண்டனில் இருந்து சென்று ராஜினி திரணகமவிற்கு கொழும்பில் நினைவு தினம் வைக்கின்றனர் லண்டன் ‘ஜனநாயகவாதிகள்’ ‘மறுத்தோடிகள்’.

ராஜினி திரணகமவுடன் இணைந்து பணியாற்றிய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ராஜினிக்கு தெரிவித்த அஞ்சலியில் ”Today up to 300 000 IDPs are interned behind barbed wire without any sensitivity to their real needs, but rather exacerbating the terrible trauma they suffered for several months running from place to place under government bombardment, suffering injury and bereavement.” என்று தெரிவித்து இருக்கின்றது. இந்த யாழ் பல்கலைக் கழக மனிதஉரிமை சங்கத்தைச் சேர்ந்த ராஜன் கூல், கோ சிறீதரன் போன்றவர்கள் இலங்கை அரசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை விபரங்களை அங்கு பேசியிருக்க முடியுமா? அல்லது ராஜினி திரணகம செயற்பட்ட புரணி பெண்கள் அமைப்பினர் தான் வந்து தங்கள் கருத்துக்களை அச்சமின்றித் தெரிவித்திருக்க முடியுமா?  வன்னிப் பேரவலம் நடைபெற்று சில மாதங்களே நிறைவடையாத நிலையில் 300 000 தமிழ் மக்கள் அவர்களது அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜினி திரணகமவுக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட நினைவுக் கூட்டம் ராஜிணி திரணகமவையும் அவரைச் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்களையும் அவமதிக்கின்ற ஒரு கூட்டமே. புலம்பெயர்ந்த தமிழர்களின் மேல்தட்டு ஜனநாயகம் அவர்களின் இருப்பை அடையாளப்படுத்துவதற்கே உதவும். அதற்கு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபமே உகந்த இடம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை குறிப்பாக புலி எதிர்ப்பு அணியில் இருந்த அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்த வேண்டும் அவர்களை பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்று சில முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்றது. கட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளுக்கு வந்தபோது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லண்டனில் ஒன்றாக இருந்து தேநீர் அருந்திய டக்ளஸ் தேவானந்தா – அனந்தசங்கரி கூட்டு தென்னாபிரிக்காவில் தேநீர் குடிக்கு முன்பே பிரிந்துவிட்டது. இம்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் எம் நகுலேந்திரன் (கீரன்) போன்றவர்களும் அடங்கினர். மே 18க்குப்பின் எம் நகுலேந்திரன் இலங்கை சென்று சிறி ரெலோவுடன் செயற்படுகின்றார். ஒருவர் தன்னுடைய அரசியலைத் தெரிவு செய்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கின்ற கிராம மக்களை சிறி ரெலோவினர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் லண்டனில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தயா குற்றம் சுமத்துகின்றார். அங்குள்ள முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே பழைய கதை மீண்டும் இங்கு அரங்கேறுகிறது. அன்ரன் பாலசிங்கம் விட்ட இடத்தில் இருந்து எம் ஆர் ஸ்ராலின், எம் நகுலேந்திரன் தொடர்கின்றனர்.

இவ்வளவு ஓட்டங்களுக்கும் மத்தியில் கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட புலம்பெயர்ந்த குழுவும் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிறது. இக்குழு இலங்கை சென்று வந்து ஆறு மாதங்களாகியும் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஒரு மாநாட்டைக் கூட்டியம் தாங்கள் யார் என்பதையோ தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதையோ வெளிப்படையாக வைக்கவில்லை. இந்தக் குழுவிடம் ஒரு கூட்டுப் பொறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  பயண ஏற்பாட்டாளர் நடேசன், ஆர் நரேந்திரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆங்காங்கே பத்திரிகைப் பேட்டிகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு தங்கள் நன்றியை அரசுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். அதற்கு மேல் கொழும்பு சென்று வந்த எஸ் மனோரஞ்சன் புலம்பெயர் குழுவுக்கு எழுதிய கடிதம் தேசம்நெற் இல் கசிந்தது.

இந்தப் புலம்பெயர் குழுவில் கொழும்பு சென்ற இந்த 21 பேரும் யார் என்ற கேள்வியை கவுன்சிலர் போல் சத்தியநேசன் உட்பட பலரும் எழுப்பி இருந்தனர். ரி கொன்ஸ்ரன்ரைன் தேசம்நெற் சார்பில் இக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் அவர் அந்தத் தகவலை தருவதற்கு மறுத்துவிட்டார்.  ஆனால் அதற்கு அக்குழு இதுவரை மௌனம் சாதித்தனர். ஆனால் அக்குழு யார் என்பதை தேசம்நெற் வாசகர்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இப்பகுதி ஒக்ரோபர் 14 2009ல் மீள்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்கா (பொஸ்ரன்) : சிறீதரன் தில்லையம்பலம்
அவுஸ்திரேலியா: நடேசன், ரவீந்திரன், என் சதானந்தன், ஆர் சிவநாதன்
கனடா : மகேஸ்வர ராஜா, மித்திரன், ராஜேந்திரன், மனோரஞ்சன்
பிரித்தானியா : ராஜேஸ் பாலா, எம் சூரியசேகரம், பாலா, ரி கொன்ஸ்ரன்ரைன்
பரிஸ் : குகநாதன் DAN TV
ஜேர்மனி : ஜெகநாதன், புத்ரா
டென்மார்க் : வதனன் குமாரதுரை, மதி குமாரதுரை
சுவிஸ்லாந்து : எஸ் கலாமோகன்
நோர்வே: ராஜன்
சவுதிஅராபியா: ஆர் நரேந்திரன்

கொழும்பு சென்ற இக்குழுவின் செயற்பாடுகள் பற்றி ரி கொன்ஸ்ரன்ரைன் விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் இக்குழுவின் செயற்பாடுகள் வெளியாகி இருந்தது. இக்குழு ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஏற்பாடு செய்த மாநாடு இக்குழுவின் பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. இவர்களுடைய ஒரே பலம் இவர்கள் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதே. மற்றும்படி இக்குழு ஒரு ‘லூஸ்’ அமைப்பாகவே இருக்கின்றது. தனிநபர்களின் ஓட்டங்கள் அரசியல் அபிலாசைகள் இக்குழுவை ஒரு உறுதியான அமைப்பாக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலரின் செயற்பாடுகள் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற போக்கையே கொண்டிருந்தது.

ஒக்ரோபர் 7ல் பிபிசி இணையத்தில் வெளியான செய்தி The BBC was able to meet refugees who clamoured to talk about their situation. One woman after another said the conditions were poor – that there was no good drinking water, that the drainage system could not cope, and that people were falling ill in the hot weather. “Please send us home as soon as possible,” one said. இச்செய்தி தொடர்பாக கொழும்பு சென்ற குழுவின் உறுப்பினர் ஆர் நரேந்திரன் நியூஹாம் கவுன்சிலர் பொல் சத்தியநேசனுக்கு அனுப்பிய கடிதத்தில் ”The BBC reports such as yesterdays can only fool people who want to be fooled.” எனத் தெரிவித்துள்ளார். அது பற்றி மேலும் விளக்கம் அளித்துள்ள ஆர் நரேந்திரன் “People have to collect water in containers for their personal use and await their turn to get the water. In fact water is being wasted in these camps. We saw people having long leisurely baths, as they would at their home wells! people yet form line lines in the poorer area of Chennai to collect their water and the volumes they can get are severely limited” என வன்னி முகாம்களில் உள்ள மக்களைக் குற்றம்சாட்டி உள்ளார்.

அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போக்கு கொழும்பு சென்ற குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது. இலங்கை அரசு தொடர்பில் வேண்டுகோள் (request) விடுக்கப்பட வேண்டுமே அல்லாமல் உரிமையுடன் கோர (demand) முடியாது என ஸ்ருட்காட் மாநாட்டில் கொழும்பு சென்றுவந்த குழுவினர் கருத்து வெளியிட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் கொழும்புக் குழு வேண்டுகோள் என்றே நின்று கொண்டது. வன்னி முகாம்கள் தொடர்பாக தீர்மானம் இயற்ற முற்பட்ட போதும் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

180 நாட்களுக்குள் பெரும்பாலான வன்னி மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றப் போவதாக அரசு கோரி வருகின்றது. ஆனால் வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றக் கோருவது முட்டாள்தனமானது என்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் (பிரான்ஸ்). அண்மைக் காலமாக இவர் தேசியகீதம், புத்தம் சரணம் கச்சாமி எல்லாம் கூறித்தான் தன் கதாப் பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றார். ஸ்ருட்காடிலும் அவ்வாறே. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அம்மாநாட்டில் சில கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. வடக்கில் வன்னி முகாம்களுக்குள் மக்கள் முடங்கி இருக்க அவ்வறிக்கையில் ‘வடக்கில் சிங்கள மக்களும் குடியேற்றப்பட வேண்டும்’ என்று தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கோரிக்கை வைத்தது. இவ்வாறு அதன் கோரிக்கைகள் பல கோமாளித்தனமாகவே அமைந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுதா என்ற இளைஞர் தான் சபையை விட்டு வெளியேறப் போவதாகத் தெரிவித்து வெளியேறவும் முயன்றார்.

London_Delegationஇந்தப் பின்னணியிலேயே கொழும்பு சென்ற குழுவும் அதற்கு ஆதரவானவர்களும் இணைந்து பெடரெசன் ஒப் சிறிலங்கன் டயஸ்பொரா (FOSLD – Federation of Sri lankan Diaspora) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். இதன் தலைவராக லண்டன் பாலா நியமிக்கப்பட்டும் உள்ளார்.

ஸ்ருட்காட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒவ்வவொருவரும் தங்கள் நாடுகளுக்குச் சென்று அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளே FOSLD இல் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது கீழிருந்து மேல் செல்லாமல் மேலிருந்து கீழ் வரும் செயன்முறை. டென்மார்க், சுவிஸ், அவுஸ்திரேலியாவிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்றது. வேறு எந்த நாட்டிலும் எவ்வித கூட்டங்களையும் FOSLD பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அல்லது மேற்கொள்ள இயலவில்லை. தாங்கள் உருவாக்கிய விதிகளுக்கு அமையவே அவர்களால் செயற்பட முடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர். ஸ்ருட்காட் மாநாடு பற்றிய குறைந்தபட்ச செய்திக்குறிப்பைக் கூட FOSLD இன் தலைமை வெளியிடவில்லை.

Swiss_Delegationசுவிஸில் ஒக்ரோபர் பத்து (நாளை) மற்றுமொரு சந்திப்பும் இடம்பெறவுள்ளது. தாம் விரும்புகின்ற அரசியலை முன்னெடுக்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட குழுவுக்கும் உள்ளது. ஆனால் இவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களையோ தமிழ் மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. இவ்வாறான ஒரு குழு பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நலன்கள் தொடர்பில் பணியாற்றி அம்மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த உதவலாம். அது இன்றுள்ள அவசர தேவையும் கூட. அதற்கு அப்பால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் பேச்சுவதற்கு இந்தக் குழுவிடம் எவ்வித அரசியல் பண்பும் கிடையாது. மேலும் இக்குழுவினருக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்கின்றது என்ற சந்தேகம் பொதுவாக எழுந்தள்ளது. அதற்கான வாய்ப்புகளை இக்குழுவினரே உருவாக்கியும் உள்ளனர். இந்த முரண்பட்ட நிலையில் நின்று தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் பற்றி இவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல. இவர்களில் பலர் அரச பிரதிநிதிகள் போன்றே செயற்படுவதால் வேண்டுகோள் (request) மட்டுமே விடமுடியும் உரிமையுடன் கோர (demand) முடியாது என்ற சிந்தனை வசப்பட்ட இக்குழு தமிழ் மக்களுடைய உரிமைகள் பற்றிப் பேசுவது தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும். இக்குழு தங்களுடைய இயலுமை இயலாமையை இனம்கண்டு தங்களுடைய எல்லையை வரையறை செய்வது அவசியமானது.

எப்போதும் பேரழிவுகள் ஏற்படும் போது மனிதம் வேதனை கொள்வதும் புரிந்துணர்வை ஏற்படுத்தவதும் உதவ விளைவதும் இயல்பானது. சுனாமியினால் மிகப்பெரும் அவலம் நிகழ்ந்தது. மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகள் சுனாமி மீள்கட்டுமான கட்டமைப்பில் பங்கேற்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் சுனாமிக்குப் பின் புரிந்துணர்வும் சுமூகநிலையும் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் வன்னியில் மற்றுமொரு யுத்தம் பல்லாயிரம் மக்களைப் பலிகொண்டு மிக மோசமான மனித அவலத்தை தோற்றுவித்துள்ளது. இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவுவது? எப்படி உதவுவது? என்ற சர்ச்சை புலம்பெயர் மண்ணில் ஓயவில்லை. ஒக்ரோபர் 6ல் லிற்றில் எய்ட் 16 000 பவுண்கள் பெறுமதியான 1100கிகி எடையுள்ள பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது. டென்மார்க்கில் உள்ள ‘இனிசியேடிவ் 2009’ என்கின்ற அமைப்பு அந்நாட்டில் உள்ள மருத்துவ நிறுவனங்களைத் தொடர்புகொண்டு வலி நிவாரணப் பொருட்களைப் பெற்று லிற்றில் எய்ட் மூலம் அதனை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

‘மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு – புரட்சிக்கு’ பங்கம் விளைவிக்கும் இவ்வாறான உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒருசில ‘புரட்சி’ப் புலிகள் நினைக்கின்றனர். ‘லிற்றில் எய்ட் போன்ற உதவி அமைப்புகள் அரசாங்கத்தோடு இயங்குகின்றது. அரசாங்கத்தின் சுமையை அவ்வமைப்புகள் குறைக்கின்றன. மக்களின் வலி குறைந்தால் மக்கள் போராட மாட்டார்கள்’ என்றெல்லாம் இவர்களிடம் அடுக்கடுக்கான காரணங்கள் உள்ளது. இம்மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு இவர்கள் சொல்லும் கொள்கையில் இவர்களுக்கே முழுமையான நம்பிக்கையில்லை. இவர்கள் யாரும் தாங்கள் சொல்லும் கொள்கைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் அல்ல. அர்ப்பணிக்கப் போபவர்களும் அல்லர். ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிஸ்ட்கள். இவர்களை நம்பி மக்களை வலியுடன் தவிக்க விடாமல் லிற்றில் எய்ட் போன்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அம்மக்களுக்கு மேற்கொள்வது அவசியம். மேலும் அரசினையும் உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துவதற்கும் தொடர்ந்தும் நிர்ப்பந்திக்க வேண்டும். வன்னி முகாம்களுக்கு பலரும் உதவிகளை மேற்கொள்வது அரசின் சுமையைக் குறைக்க அல்ல. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வன்னி மக்களுக்கு உதவ முன்வருவது தங்கள் குற்ற உணர்வின் காரணமாக. உதவ முன்வருபவர்களது நோக்கம் மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் வரை அவர்களது உதவி அவசியமாகிறது. ஆனால் உதவ முன்வருபவர்களுக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்குமானால் அது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இவர்கள் அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பிரிவனர் தங்கள் அரசியல் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான களமாகவும் வன்னி முகாம்களை ஆக்கி உள்ளனர். தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் அறியப்பட்ட சில எழுத்தாளர்கள் மத்தியில் புல்லரிக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் மரத்தைப் பற்றியும் அதன் கீழ் தவிக்கும் மக்களுக்காகவும் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் உள்ள மாடுகளை மரத்தில் கட்டிவிட்டு அவற்றைத் திட்டித் தீர்த்து சிற்றின்பம் அடைகின்றனர். நிதர்சனம் போன்ற இணையங்களின் சொல்லாடல்களை இப்போது இவர்களே குத்தகை எடுத்துள்ளனர்.

தாயகத்தில் ஏற்படும் அழிவும் அவலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களின் புறச்சூழலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எழுத்துப் படிமங்களாகவும் ஒலிப் படிமங்களாகவும் காட்சிப் படிமங்களாகவும் மட்டுமே அவற்றை உணர்ந்து கொள்கின்றனர். தாங்கள் விரும்பிய பொழுது அந்தப் படிமங்களில் இருந்து அவர்களால் விலகி இருக்கவும் முடியும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் புலம்பெயர்ந்த மக்களால் முழுமையாக உணர முடிவதில்லை. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கத்தின் பின்னணியில் தாங்கள் கேள்விப்படுகின்ற எழுத்து, ஒலி, காட்சிப் படிமங்களை தங்கள் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப சமையல் செய்து வெளிப்படுத்துகின்றனர். இந்தப் போக்கு தாயகத்து மக்களின் அரசியல் சூழலில் எதிர்மறையான விளைவையே இதுவரை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான விலையைக் கூட புலம்பெயர்ந்து வாழும் மக்கள் செலுத்துவதில்லை. புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தவறான முன்னெடுப்புகளுக்கு தாயக மக்களே தங்கள் அதிகூடிய விலையைச் செலுத்தி உள்ளனர்.

அரசியல் மேற்கோள்களை கூகுலில் தேடுவதை விட்டுவிட்டு அரசியலையும் அரசியல் தந்திரோபாயங்களையும் தாயக மக்களிடம் கற்றுக் கொள்வதே புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக் கூடியது. ‘தத்துவமற்ற நடைமுறை’ புலிகளது அரசியல் – ‘நடைமறையற்ற தத்துவம்’ சொகுசு மார்க்ஸ்ஸிட்டுக்களின் அரசியல். முன்னையது எவ்வளவு ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. பின்னையது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதன் வாழ்தகவு கணணியுடன் முடிந்துவிடும்.

தாயக மக்கள் தொடர்பான புலத்து தமிழ் மக்களுடைய அரசியல் நடவடிக்கைகள் பற்றி இரட்டிப்பு விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகின்றது. தாயகத் தமிழர்கள் புலத்து தமிழர்களை தங்கள் பொருளாதார தேவைகளுக்கு அப்பால் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு மிகச் சரியான காரணங்கள் நிறையவே உள்ளது. புலத்து தமிழர்களுடைய அரசியல், அடையாள அபிலாசைகளுக்கு தாயகத் தமிழர்களை பணயம் வைக்க முடியாது. இனவாத அரசுக்கும் சர்வாதிகார ஆயுத அமைப்புக்கும் முகம்கொடுக்காது தப்பித்து ஓடி வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த அந்த மக்களுக்கு அரசியல் வழியை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் தாயகத்தில் மக்களுடைய தேவைகளை அறிந்து அவர்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவது அவசியம். அம்மக்களே தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை புலத்து தமிழர்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    அமெரிக்கா (பொஸ்ரன்): சிறீதரன் தில்லையம்பலம்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அவர்களின் இணையத்தளத்தில் தங்களைப்பற்றி என்ற லிங்கில்– “About … under development…..”
    இன்னும் தாங்கள் யார் என சொல்ல முடியாமல் தாங்கள் யார் என டெவலப் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாதபோது எங்களுக்கு எப்படி சொல்ல முடியும்? 7 மாசம் ஆச்சு !

    Domain Name:SRILANKAN-DIASPORA.ORG
    Created On:29-Mar-2009 23:05:42 UTC
    Last Updated On:29-May-2009 03:54:19 UTC
    Expiration Date:29-Mar-2010 23:05:42 UTC

    டொமெய்ன் ரிஜிஸ்ரேசன் எக்ஸ்பயர் பண்ணுவதற்கு முன்னராவது சொல்லுவார்கள் என நினைக்கிறேன்!!!!

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜயோ சாமி இததானே பல்லி குடுகுடுப்பை சாமி போல் அன்று இருந்து இன்றுவரை சொல்லி வருகிறேன்; எனது பல பின்னோட்டங்கள் சேர்ந்ததுதான் இந்த கட்டுரையோ என கூட பல்லிக்கு தோன்றுகிறது, இருப்பினும் பல தடவை நான் ஜெயபாலனிடம் புலியை மட்டும் விமர்சித்தால் போதுமா? மாற்றுகுழு செய்யும் குண்டக்க மண்டக்காவை யார் விமர்சிப்பது என கேட்டதுண்டு, அதுக்காக சில தகவல்களை கூட தேசத்திடம் பல்லி கேட்டிருந்தேன்; ஆனால் பல்லியின் கனவுக்கு அப்பால் மிக நிதானமாக யார் மனதையும் புண்ணாக்காமல் தனெக்கே உரிய பாணியில் மிக நேர்த்தியுடன் கட்டுரையை தந்துள்ளார், இதை பின்னோட்டமூலம் நாமும் நமக்கு தெரிந்த தெரிய வேண்டிய தகவல்களை இதில் எழுதுவோம்; இந்த கட்டுரையின் பின்னோட்டத்தில் பல்லி பலரிடம் சொல்லெறி வாங்குவது திடம், ஆனால் அதுவும் எம் சமுதாய நல்லெண்ணத்துக்காய் இருக்கட்டும்; ஈயம் பித்தளைகளை காப்பதுக்காய் இருக்க வேண்டாம்; மேலே கட்டுரையை அலங்கரித்த பலர் ஜெயபாலனின் மிகநெருங்கிய நண்பர்கள், ஆனாலும் ஜெயபாலன் நட்ப்பை கூட இங்கு தனது விமர்சனத்தில் விட்டு வைக்கவில்லை,

    கட்டுரையின் உச்ச கட்டமே இதுதான்;
    //தாயக மக்கள் தொடர்பான புலத்து தமிழ் மக்களுடைய அரசியல் நடவடிக்கைகள் பற்றி இரட்டிப்பு விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகின்றது. //

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    This analysis is presented in a beautiful way. We need more than this. Tamil, specially Jaffna Tamils self centred community, they are not familiar to rational thinking. That is why Tamils were fooled by GG’s 50 fifty and SJV’s Federal slogans. While the two leaders were the champions of the Tamil’s rights they owned huge wealth in predominant Sinhalese areas. Average Tamil man’s head was empty, full of communal thinking. He does not know still greater portion of the Sinhalese people are very poor.
    Mr.Jayabalan well done. I have been a regular reader of your writings. Keep on writing. Though I dont agree on all what you said, we need variety.

    Reply
  • மரியதாஸ்
    மரியதாஸ்

    மற்ற தமிழனுக்கு ஏமாத்து வித்தை காட்டி வயிறு வளர்ப்பதே பல தமிழருக்கு தெரிந்த ஒரே பிழைப்பாக போச்சுது. தமிழனா என்று கேட்டால் தமிழன் என்று சொல்லாமல் தலை குனிந்து தப்பி ஓடடா–மரியதாஸ் மன்னார்

    Reply
  • Nick
    Nick

    தமிழ் தேசியத்தின் அத்தனை தேசவிரோதிகளையும் ஒன்று திரட்டி தமிழ் தேசியத்தை வேரறுத்து ஆழப்புதைத்து அம்மணமாகி அம்போவான பெருமை பிரபாகரனையும் பிரபாகரனை வளர்த்த தமிழ் மக்களை காலைவாரி கழுத்தறுத்த கயவர்களையும் சாரும்

    Reply
  • Nick
    Nick

    துரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள். இது முள்ளிவாய்க்காலில் நாம் பெற்ற அனுபவம். புலம்பெயர் மண்ணில இது தொடர்கின்றது.
    (பாரிஸ் ஈழநாடு)

    Reply
  • suban
    suban

    நல்லது. நல்ல கட்டுரை.
    இன்னும் விரிவாகப்பேசவேண்டும்.
    அரசியல் போதைதான். பொதுவேலைகளில் சுயபுகழ்ஆசை ஒழிந்தே காணப்படும். புகழ்ஆசையில்லாத மானிடபிறவி கிடையாது. சிலர் அறிந்து தவறிழைக்கிறார்கள். பலர் அறியாமலே தவறிழைக்கிறார்கள். தவறுகளையும் தரம்பிரித்தே பார்க்கவேண்டும். விமர்சனங்கள் சுட்டுவிரலை நீட்டுவதாக மட்டும் இருக்ககூடாது. அவர்களின் நல்ல பக்கங்கங்களையும் கொண்டுவர வேண்டும். கட்டுரைக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அது வெறும் கைதட்டுலுக்காக மட்டும் இருக்கக்கூடாது. சமூக இயங்குதளத்திற்கு வருகின்ற புத்திஜீவிகள் குறைவு. எப்படியோ இவர்கள் தான் மக்களுக்காக இயங்கப்போகிறார்கள். இதுதான் யதார்த்தம். மே 18 ஈழத்தமிழா; வாரலற்றில் ஒரு முக்கியநாள்தான். இதற்கு முன்பின்னான வரலாறுகள் நிலைமைகள் முற்றிலும் மாறுபட்டவை.
    ஜெயபாலன் நீங்கள் ஏற்கனவே வாசித்திருக்கலாம். இல்லாவிட்டால் மு.தளையசிங்கத்தின் ஏழாண்டுகால இலக்கியவளா;ச்சி நுhலை எடுத்து படியுங்கள். பயனுள்ளதாய் இருக்கும். விமர்சனத்தின் உயர்ந்த பண்புகள் நுhலில் தெரியும்.

    Reply
  • மாயா
    மாயா

    நேற்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கு இனிதே நடந்தது. பலதரப்பட்ட விவாதங்களுடன் , கருத்துகளும் பரிமாறப்பட்டன. சில விபரங்களை சுருக்கமாக தர முயல்கிறேன்.

    Reply
  • nallurkantha
    nallurkantha

    Dear Suban,
    Sorry for writing in English.I am not good in Tamil typing.I started my reading when I was 18.K,Daniels book,S Kaneshalingan,maruthoorkani etc I read many many.I cannot agree Tamils have special problems(other than the suffering war brought.But our Tamil breathern( depressed Tamils have many.

    Reply
  • என் ஜெயரூபலிங்கம்
    என் ஜெயரூபலிங்கம்

    இரசாயன பதார்த்தங்கள் மனிதரின் மனோ நிலையை பாதிப்பது உண்மை. எங்கள் சாப்பாட்டில் எதோ பிழை. புளட், புலி, ஈபீஆர்எல்எப், என்எலஎப்டி, ஈரோஸ் எந்த தமிழ் இயக்கமானாலும் எந்த கொள்கை உள்ளதானாலும் அதிகாரம் கையில் வந்தால் மக்களை அடக்குவதும், சித்திரவதை செய்வதும் படு கொலை செய்வதும் தாமாகவே பூதாகரமாக உருவெடுத்ததுதான் நாம் கண்ட வரலாறு.

    எம்மவரின் இரத்தத்தில் எதோ குருர கொலை வெறியும் தனி நபர் வழிபாடுகளும் மனிதர்களை விட காசுக்கும் சொத்துக்கும் முக்கியம் கொடுக்கும் காசையும் சொத்தையும் கண்டே அறியாத பிச்சைக்கார சிந்தனையும் ஊறி இருப்பதால் புலத்திலோ அல்லது புலன் பெயர்ந்த நாட்டிலோ எம்மால் பீலா விட்டு பிலிம் காட்டி எம்மவரை சுத்தி எம்மவரையே சுடுகாட்டிற்கு அனுப்பி எம்மவரையே ஏமாற்றுவதை தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை.
    ஆணவம் அழிவுக்குத்தான் வழி வைக்கும்தமிழருக்கெல்லாம் தலை நிறைய செருக்கும் ஆணவமும் தான் இருக்கே தவிர வேறு எதுவும் கிடையாது. சொந்தமாக சரியாக சிந்திக்க மூளை இல்லாதலால் அடுத்தவனை பார்த்து அவன் செய்வதை செய்யவும் பொய் சொல்லி ஏமாற்றவும் முடிகிறதே தவிர ஆக்க பூர்வமாக எதையும் செய்ய தெரியாது.செருக்கும் ஆணவமும் அதிகளவில் இருப்பதால் நாலு விடயத்தை அறிந்து கொள்ள இருக்க வேண்டிய பணிவு எமக்கு கிடையாது. வால் பிடிக்கவும் வாலாட்டவும் பீலா காட்டவும் மட்டும் தான் எமக்கெல்லாம் தெரியும்.அடிமைப் புத்தியும் ஆணவமும் இருக்கும் வரை நாம் முன்னேற முடியவே முடியாது.

    Reply
  • Naane
    Naane

    Very well documented article. Thanks.I am not familier with those guys who you identifiedI as represenining the Tamils now.!!!. Theese kind of unfortunate things happened in our history so many times.Why your giving them a platform in your site.

    Let the people deside what they want as you said.

    Reply
  • thurai
    thurai

    காலத்திற்கு ஏற்ரவாறும், சந்தற்பத்திற்கு ஏற்ரவாறும் பேசுவது அரசியல். விடுதலையென்பது அடிமையில் வாழும் மனிதனோ இனமோ அடிமைப்படுத்துபவனிலிருந்து விடுபடுவது.

    ஈழத்தமிழரின் விடுதலையென்பது இலங்கையில் வாழும் தமிழர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியது. அங்குள்ள தமிழரின் மனோநிலையை அறியாத புரியாத சில புலத்தில் வாழும் பதவி மோகம் கொண்ட, சுயநலம் கொண்ட தமிழர்களால் பேசப்படும் விடுதலைப் பேச்சு ஓர் கெடுதலைப் பேச்சாகும்.

    ஈழத் தமிழரின் தற்போதைய நிலைமை கடந்த 30 வருடத்திலும் மோசமானத்ற்குக் காரணம் யாரென்பதை முதலில் உலகிற்கு தெளிவாக்க வேண்டும். இதனை செய்யாது தமிழீழம், ஈழவிடுதலை , உருமைகள் பற்ரிப் பேசுவது புலத்துத் தமிழரின் பொழுது போக்கேயன்றி வேறொன்றுமில்லை.

    துரை

    Reply
  • பல்லி
    பல்லி

    துரை இது விவாதிக்கபட வேண்டிய வியம்மட்டுமல்ல; கவனத்தில் எடுக்கபட வேண்டிய விடயமும் கூட, ஆனால் இந்த கட்டுரையை கூட ஒரு கவர்ச்சி கட்டுரை செல்லாகாசாக்கி விட்டதே, இதுதான் எம்மின தலைவிதியா?

    Reply
  • Arul
    Arul

    பரிஸ், கனடாவில் இருந்து புலம் பெயர் குழுவில் இடம் பெற்ற நபர்கள்
    பரிஸ் : குகநாதன் DAN TV
    கனடா : மகேஸ்வர ராஜா, மித்திரன், ராஜேந்திரன், மனோரஞ்சன்

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    /…இந்தப் புலம்பெயர் குழுவில் கொழும்பு சென்ற இந்த 21 பேரும் யார் என்ற கேள்வியை கவுன்சிலர் போல் சத்தியநேசன் உட்பட பலரும் எழுப்பி இருந்தனர். ரி கொன்ஸ்ரன்ரைன் தேசம்நெற் சார்பில் இக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் அவர் அந்தத் தகவலை தருவதற்கு மறுத்துவிட்டார். ஆனால் அதற்கு அக்குழு இதுவரை மௌனம் சாதிக்கின்றனர்.) சாதித்தனர்……./ ஆனால் அக்குழு யார் என்பதை தேசம்நெற் வாசகர்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இப்பகுதி ஒக்ரோபர் 14 2009ல் மீள்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா (பொஸ்ரன்) : சிறீதரன் தில்லையம்பலம்
    அவுஸ்திரேலியா: நடேசன், ரவீந்திரன், என் சதானந்தன், ஆர் சிவநாதன்
    கனடா : மகேஸ்வர ராஜா, மித்திரன், ராஜேந்திரன், மனோரஞ்சன்
    பிரித்தானியா : ராஜேஸ் பாலா, எம் சூரியசேகரம், பாலா, ரி கொன்ஸ்ரன்ரைன்
    பரிஸ் : குகநாதன் DAN TV
    ஜேர்மனி : ஜெகநாதன், புத்ரா
    டென்மார்க் : வதனன் குமாரதுரை, மதி குமாரதுரை
    சுவிஸ்லாந்து : எஸ் கலாமோகன்
    நோர்வே: ராஜன்
    சவுதிஅராபியா: ஆர் நரேந்திரன்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Jeyabalan,
    தங்கள் தகவலில் தற்போதும் தவறுள்ளது. முன்பு டென்மார்க்கில் குமாரதுரை அவர்களும் போனதாக போட்டீர்கள். இப்போது மாற்றியுள்ளீர்கள். அதுபோல் சுவிசிலிருந்து ஒருவரல்ல இருவர் சென்றனர். ஆனால் இங்கு ஒருவரினது பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் தற்போது தாங்கள் இணைத்துள்ள இந்தப் பட்டியலிலும் வேறொருவரின் பெயரை கூடுதலாக தவறாக இணைத்து பட்டியலைச் சமன் செய்துள்ளீர்கள். இதுவும் தவறல்லவா??

    Reply
  • பல்லி
    பல்லி

    இவர்கள் புலியின் உளவுத்துறையைவிட பாதுகாப்பாய் செயல்படுமாபோல இருக்கு; அது சரி போன 21 பேருக்காவது யார்யார் எங்கிருந்து வந்தார்கள் என தெரியுமா.,,?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அமெரிக்காவில் இருந்து இருவர் சென்றனர் ஒருவரின் பெயர் பிரசுரமாகியுள்ளது. மற்றவர் அக்குழுவில் அங்கத்தினராகச் சென்றாரா, அரச சந்திப்புகளில் கலந்து கொண்டாரா என உறுதிப்படுத்த முடியாததனால் பெயரை வெளியிட விரும்பவில்லை.

    Reply
  • suban
    suban

    இந்த 21பேரும் போனார்கள் கதைத்தார்கள் வந்தார்கள். வரட்டுமென். இதற்கு ஏன் நீங்கள் எல்லோரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இவர்களது சந்திப்பால் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட சாதக பாதக அம்சங்கள் பற்றி யாராவது எழுதினால் பிரயோனமாய் இருக்கும். அதை விட்டு மினக்கெடுவது தனிப்பட்ட காச்சலாகத்தானிருக்கும்..

    Reply
  • Rohan
    Rohan

    சந்திரகாசன் என்று ஒரு பிரமுகர் அவுஸ்திரேலியாவிலிருந்து போனதாக ஒரு பேச்சு. அவர் தனது பயணம் பற்றி எழுதிய ஒரு கட்டுரை கூட படித்த நினைவு.

    இல்லையா?

    Reply