::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

நடைபெறவுள்ள தேர்தலில் சுய உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ் மக்கள் வாக்கை பயன்படுத்த வேண்டும் – பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன்

election_cast_ballots.jpgநடை பெறவுள்ள ஊவா மாகாண சபைத்தேர்தலில் தமது சுய உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் வாக்கை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டுமென பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

அதனையடுத்து, “எடு என்றால் எடுக்கவும் போடு என்றால் போடவுமாக’ இருந்த எமது தமிழினத்தின் நிலை மாறி வரலாற்றில் இடம்பெற்ற அகிம்சை வழிப்போராட்டங்களால் அதாவது மலையகத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் தாக்கங்களால் எமக்கு பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பன கிடைத்தது.

இதில் தமிழ் மக்கள் குறிப்பாக வாக்கு எனும் பலத்தை சரியான முறையில் பயன்படுத்துகின்றார்களா? என்றால் அது இல்லை. அதன் விளைவாகவே எமது தமிழினத்தின் சுய உரிமைகளை மற்றவரிடம் கேட்டுப்பெறும் அவசியம் ஏற்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளை சிறுபான்மையினருக்கே உரித்தாக்குவதற்குத்தான் கொண்டுவரப்பட்டது. இன்று அது விரிவாக்கப்பட்டு நாட்டின் எல்லோருக்கும் உரித்துரிமையாகிவிட்டது.

தமிழ் மக்கள் தொடர்பான முடிவுகளையோ தீர்மானங்களையோ எடுக்கும் அதிகாரம் வேறு எவருக்கும் வழங்காமல் அதனை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். இன்று முழு உலகமுமே இலங்கைத் தமிழர் நிலை பற்றி அவதானித்துவரும் நிலையில், எமக்கிடையிலான ஒற்றுமையை இலங்கைக்கும் உலகிற்கும் வெளிப்படுத்துவது சமகால தேவையாகும். அதற்காக நாம் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஏனைய இனத்தவர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது சாத்தியமற்றது. ஆனால், தமிழ் வாக்காளர்கள் ஏனைய இன வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதில் ஒருபோதும் பின் நின்றதில்லை. இதுவே உண்மைநிலை.

எனவே, தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அதாவது, தமிழர்களின் சுயஉரிமையை பாதுகாக்கும் ஆயுதமாக தமது வாக்கை எமது மக்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிப்பதன் மூலம் எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வகையில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன், வழுக்கள் ஏற்படாதவாறு சரியான முறையில் வாக்களிக்க வேண்டியதும் அவசியமாகும்.

இவை அனைத்தும் சுயநல அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து எமது மைந்தர்களே இம்மண்ணை ஆளக்கூடியவாறு ஊவா மாகாணசபைத் தேர்தலில் செயல்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் தொடர்பாக ஆராய இன்று விசேட கூட்டம் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_cast_ballots.jpgஊவா மாகாண சபை மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியா உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவும் கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டத்தில் வாக்களிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்., வவுனியா தேர்தலில் பசப்பு வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாது – அமைச்சர் ரிஷாட்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தாத பட்சத்தில் அது ஒரு வரலாற்றுத் தவறாகவே கணிக்கப்படும் என மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம், மலீஹாபுரம் மீள் குடியேற்றத் திட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பதியுத்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் பதியுத்தீன் தனதுரையில் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த ஒவ்வொரு மகனும் தமது மண்ணை நேசிப்பவனாக இருந்தால் தமது மீள் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால், தமது பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருந்தால் அரசுக்கு எதிராக செயற்படவே முடியாது.

மாறாக சில சுயேச்சைக் குழுக்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வாக்காகவே அமையும். ஆகவே ஜனாதிபதியும், அரசும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாழ்படுத்தி விடவேண்டாம். அதிகமான போர் வீரர்களை பலி கொடுத்து தாயக மண்ணை மீட்டுக்கொடுத்தமைக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் எமக்கு ஆதரவு இல்லையே என்ற பழிச் சொல்லுக்கு வழிவகுத்து விடாதீர்கள்.

இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து உலக மக்களும் உன்னிப்பாக எம்மை அவதானி த்துக்கொண்டிருக்கின்றார்கள். பதிவு செய்யப்பட்டுள்ள 6200 வாக்குகளில் எத்தனை வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று தமிழ்ச் சமூகம் சிங்கள சமூகம் என்பன ஜனாதிபதிக்கு பின்னே அணி திரண்டு நிற்கின்றன. ஜம்இய்யத்துல் உலமாக சபையினர் கூட அண்மையில் ஜனாதிபதிக்கு பாராட்டு விழா நடாத்தியுள்ளனர். இப்படியிருக்கும்போது ஏன் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மட்டும் ஜனாதிபதிக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க முடியாது.

இன்று கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்தவர்களாக நிம்மதியுடன் வாழும் நிலை ஏற்பட ஜனாதிபதி வழி வகுத்துள்ளார். அதேபோன்று எமது சுதந்திரமான மீள் குடி யேற்றமும் இடம்பெற்று எமது இளம் சமுதாயத்தினர் மகிழ்வுடன் வாழவேண்டுமானால் அனைத்து மக்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது தாயக மண்ணை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு எமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்றார்.

மோசடி இடம் பெறும் வாக்கு சாவடிகளை இரத்துச் செய்க – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

election_cast_ballots.jpgமோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையாளர் தலைமையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின்போதே தேர்தல் ஆணையாளர் மோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் அப் பகுதிகளுக்கு பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கூறியதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

நீதியானதும் நேர்மையானதுமான முறையிலும் வாக்காளர்கள் சுமுகமாக வாக்களிக்கும் வகையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர் இச் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான வாகன மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், பணியாளர்கள் என்பன குறித்தும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் 17 வாக்களிப்பு நிலையங்கள்

election_cast_ballots.jpgயாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழ்வோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் பதினேழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 6242 பேர் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியதையடுத்து இவர்களுக்கு கொத்தணி வாக்குச்சாவடிகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் 324 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டக்குளி சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பவிலியன் ஒவ் பிளசரணங்கர விளையாட்டு மைதானத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கம்பஹா மாவட்டத்தில் வாழும் 849 வாக்காளர்கள் வாக்களிக்க சென்பீற்றர்ஸ் முஸ்லிம் மகாவித்தியாலயம், தளுவ கொட்டுவ சென் அன்ரனிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 320 பேருக்கு கெனமுல்ல ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும். புத்தளம் மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 4550 பேருக்கு இம் மாவட்டத்தில் ஏழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவர்களுக்கு புளிச்சங்குளம் சமத்பாறுக் மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா பாத்திமா தேசியபாடசாலை, தில்லையடி மகாவித்தியாலயம் பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலப்பிட்டிய அலக்ஸா தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் நூற்றி இருபது வாக்காளர்களுக்கு இங்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகொல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் சிறார் பாடசாலை, நச்சன்டுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இதேவேளை, குடாநாட்டில் தென்மராட்சி கைதடி, கொடிகாமம் நலன்புரி நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும். வெளி மாவட்டங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களில் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் யாழ். மாநர சபை வாக்காளர் வாக்களிக்க எழுபது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணம் தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அசம்பாவிதங்களோ இல்லை.

election.gifவவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தபால் மூலவாக்களிப்பு: வாக்குச்சீட்டுகள் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நகர சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித் தவர்களில் தெரிவான 183 பேருக்குரிய வாக்குச் சீட்டு க்கள் நேற்று புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதென மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27ம், 28ம் திகதி களில் நடைபெறுமெனவும் அவர் சொன்னார்.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள வவுனியா நகர சபைத் தேர்தலுக்குரிய வாக்கு சீட்டுக்கள் வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சீட்டுக்கள் வைக்கப் பட்டுள்ளதென மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலுக்கு வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்களை தேர்தல் ஆணையாளர் கொழும்புக்கு அழைத்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ராஜகிரியவில் உள்ள தேர்தல் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு யாழ்., வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் இவர்களுக்கு வழங்கப்படும் என தெரியவருகின்றது. நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பிரசார வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளன. பல்வேறு வகையான சுவரொட்டிகள் நகரில் காட்சி தருகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆனாலும் கட்சிகளிடையே ஆர்வம் காணப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கே நடைபெறும் முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான தேர்தல் இதுவாகும். வவுனியா நகர சபைக்கு 135 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். ஆனால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 11 ஆகும்.கட்சியினரிடையே ஆர்வம் காணப்பட்ட போதிலும் வாக்காளர் மத்தியில் சோர்வு தன்மை அவதானிக்கப்படுகின்றது.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில்!

election.gifஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தபால்மூல வாக்குப் பதிவு எதிர்வரும் 27ஆம்,  28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இத்தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான வாக்காளர் அட்டைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஊவா மாகாணத்துக்கு மொத்தம் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 21 பேர் பதுளை மாவட்டத்திலிருந்தும் 11 பேர் மொனராகல மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுவர்.

யாழ், வவுனியா மற்றும் ஊவா தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டை 15இல் அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்ப ஏற்பாடு

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கும், ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்புகள் எதிர்வரும 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக யாழ். மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 473 விண்ணப்பங்களுள் 335 ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்தார்.

சரியான தகவல்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தபால்மூல வாக்களிப்பை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி யாழ். கச்சேரியில் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவிருப் பதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை வவுனியா நகரசபைத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள 197 விண்ணப்பங்களுள் 183 விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சரியான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்14 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக சுமார் 500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்களும் நடாத்தப்படவுள்ளன.  எதிர்வரும் 07ஆம் திகதி சிரேஷ்ட தலைமை அலுவலகர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 8ஆம் திகதி கிராம அலுவலகர்கள் மற்றும் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற் சிகள் நடத்தப்படுமெனவும் 09ஆம் திகதி பிரதம கணக்கீட்டு மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான பயிற் சிகள் வழங்கப்படுமெனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.

மேலும் பதுளை மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற 17 ஆயிரத்து 418 விண்ணப்பங்களுள் 16 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உதவித் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.