::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இன்று நள்ளிரவுடன் பிரசாரப் பணிகள் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை யாழ். மாநகரசபை,  மற்றும்  வவுனியா நகரசபை, ஆகியவற்றுக்கான இந்தத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றன.

நள்ளிரவுக்குப் பின்னர் கட்சிகளோ,  சுயேச்சைக் குழுக்களோ பிரசாரங்களில் ஈடுபடக்கூடாதென்றும், இதனை மீறிச்செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

ஊவாவில் ஊவா மாகாண சபைக்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 21 உறுப்பினர்களையும் அதேபோல் மொனராகலையில் இருந்து 11 உறுப்பினர்களும் என மொத்தமாக 32 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கென 23 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 600 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களில் இருந்து 32 பேரை தெரிவுசெய்வதற்கு 8 இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் 814 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ன.

யாழ். மாநகரசபை

இங்கு போட்டியிடுகின்ற 4 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக் களில் 23 பேரை தெரிவு செய்வதற்கென 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரு இலட்சத்து 417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக 67 வாக்களிப்பு நிலையங்களும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா நகரசபை

வவுனியா நகரசபையைப் பொறுத்தட்டில் இங்கு 11 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 5 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களில் இருந்து 135 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை,  இங்கு 24 ஆயிரத்து 626 பேர் வாக்களிப்பதற்காகத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 18 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரதான கட்சிகளும் இத் தேர்தலுக்கான தத்தமது இறுதி பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ஊவா மாகாண சபைத் தேர்தலும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றன. இதற்கான பிரசார நடவடிக்கைகளுக்கான காலம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதாகத் தேர்தல்கள் திணைக்களம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கமையவே அனைத்துக் கட்சிகளும் தத்தமது இறுதி பிரதான பிரசார கூட்டங்களை இன்று நடத்தத் தீர்மானித்துள்ளன.

இதன் பிரகாரம் ஊவா மாகாண சபைக்கான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பதுளையில் நடைபெறவுள்ளது.  இதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரதான பிரசாரக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பசறையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், ஜே.வி.பி.யின் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம்  வெளிமடவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான இறுதி பிரசாரக் கூட்டங்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாசையூரிலும் சுண்டுக்குளியிலும் நடத்தவுள்ளது. அத்துடன், வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசாரக் கூட்டம் இன்று கற்குளியில் நடைபெறவுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐ.தே.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவுள்ளன.

இதேநேரம், இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதால் அதன் பின்னர் தேர்தல் பிரசாரங்களைச் செய்யும் வகையிலான ஊடகங்களுடனான விவாதங்களைக் கூட அரசியல் கட்சிகள் நடத்துவதில்லையென்ற இணக்கப்பாடு இம்முறை எட்டப்பட்டிருப்பதாக மேலதிகத் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமனசிறி தெரிவித்தார்.

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது

election000.jpgதென் மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாகாண சபையின் பதவிக் காலம், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையிலேயே நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தவிர,  ஏனைய 7 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே அந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு,  அவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன்,  அதில் 6 மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசனம் ஒன்றையேனும் பெறாத கட்சிகளின் விருப்புவாக்குகள் எண்ணப்பட மாட்டாது – தேர்தல்கள் திணைக்களம் தீர்மானம்

election000.jpgதேர்தல் வாக்களிப்பின் போது,  ஓர் ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகளை எதிர்காலத்தில் எண்ணாமல் விடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய தேர்தல்களிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்களில்,  கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளை எண்ணியதன் பின்னர் அவற்றுக்குக் கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். அதற்கு பின்னரே சகல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.

எனினும் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படமாட்டாது.

மொத்த வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்னும் 5 தினங்களில் வாக்களிப்பு – 909 வேட்பாளர்கள் களத்தில்; 66 பேர் தெரிவு செய்யப்படுவர்

election_cast_ballots.jpgஊவா மாகாணசபை, யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தச் சபைகளுக்கு 66 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 909 பேர் போட்டியிடுகின்றனர்.

யாழ்.மாநகர சபை தேர்தலில் 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 174 பேர் போட்டியிடுகின்றனர். மாநகரசபையின் மொத்த வாக்காளர் தொகை 1,00,417 ஆகும். 67 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரசபை தேர்தலில் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 6 அரசியல் கட்சிகள், 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 135 பேர் போட்டியிடுகின்றனர். நகர சபையின் 24,626 பேர் 18 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் மொத்தமாக 8,75,456 வாக்காளர்கள் 814 நிலையங்களில் வாக்களிக்கவுள்ள நிலையில் 32 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 600 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 7 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 21 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 432 பேர் போட்டியிடுகின்றனர். 9 தொகுதிகளிலுள்ள 574,814 பேர் 507 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 9 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 168 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 தொகுதிகளைச் சேர்ந்த 3,00,642 பேர் 307 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபை மற்றும் யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 25,360 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊவாவில் 75 சதவீதமும் வவுனியா நகரசபை மற்றும் யாழ். மாநகரசபையில் 75 வீதமும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதை தாம் மதிப்பிட்டுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பு நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்ற நிலையில் தேர்தல் தினத்தில் இதே சூழ்நிலையை பாதுகாப்பதற்கு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தொடர்ந்து முன்வரவேண்டுமென கேட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 4,388 பேர் யாழ்.மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம்.நபீல் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் வாக்களிப்பதற்கு அங்கு 6 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இரு வாக்குச் சாவடிகளும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாஷருக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அம்மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் 29 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தெரிவித்ததுடன், இதில் தாக்குதல் சம்பவங்கள் 15 இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

15 சம்பவங்கள் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மொனராகலையில் 7, வவுனியாவில் 4, யாழ்ப்பாணத்தில் 3 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் சட்டவிதிகளை மீறிய சம்பவங்கள் 7 இடம் பெற்றுள்ள நிலையில் அச்சுறுத்தல் தொடர்பில் 3 சம்பவங்களை பதிவு செய்துள்ளோமெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் 1998 இல் இடம்பெற்றது. 1998 க்கு பின்னர் இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களும் 2003 வரை விசேட ஆணையாளரின் கீழ் இருந்தன.

ஊவா மாகாண சபை மே 28 ஆம் திகதி கலைக்கப்பட்டது.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்தில் ஆறு வாக்குச் சாவடிகள்!

election_fingercolur.jpgயாழ் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும்  மக்களில் 4388 பேர் யாழ். மாநகரசபைத் தேர்தலில்  வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம். நபீல் தெரிவித்துள்ளார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி,  பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம்,  கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர்பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

யாழ்.மா.ந தேர்தல்: புத்தளத்தில் வாக்களிக்க 4388 பேர் தகுதி

election_cast_ballots.jpgயாழ்.  மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்சமயம் புத்தளம் மாவட்டத்தில் வதியும் இடம்பெயர்ந்த மக்களில் 4388 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. ஏ. எம். நபீல் தெரிவித்தார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ‘ஏ’, ‘பீ’ என்ற இரு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்-அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச் சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

election_cast_ballots.jpgயாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன. தபால் மூல வாக்களிப்பிற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதோடு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க பதுளை மாவட்டத்தில் 16,054 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 8,899 பேரும் தகுதி பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 335 பேரும் வவுனியாவில் 183 பேரும் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர்.

ஊவா மாகாண சபை மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது தெரிந்ததே.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்தாலும் தமிழரின் அபிலாசைக்கான போராட்டம் முடியவில்லை – இரா. சம்பந்தன்

images-r-sam.jpgவடக்கே நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வெளிப்படுத்தப்போகிறார்களென்று சர்வதேச சமூகமும் தென்னிலங்கையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சனிக்கிழமை நண்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  கண்டி வீதியில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது;

இந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று அரசு கூறிவருகிறது.  அத்துடன், நாட்டில் எதுவித பிரச்சினைகளும் இல்லை. சகலரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் எனவும் அரசு கூறிவருகிறது.  எமது மக்களைப் பொறுத்தவரை சரித்திர ரீதியாக இந்த நாட்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எமது உரிமைக்காகவே போராடியும் வருகிறோம்.

குறைந்தது சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு முறையான இந்தக் கோரிக்கையை நாம் நீண்டகாலமாகவே விடுத்துவருகின்றோம்.  எமது சுயநிர்ணய உரிமையை,சரித்திர ரீதியாக நாம் வாழ்ந்து வரும் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். நடைபெற்ற ஆயுதப்போராட்டமானது நீண்டகால போராட்டத்தின் ஒரு அங்கமே. அந்த போராட்டம் முடிவடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைக்கான போராட்டம் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

எம்மை பொறுத்தவரையில் எமது அபிலாசைகள் பூர்த்தி அடைந்து ஒரு அரசியல் நிலைமை ஏற்பட்டால்தான் நாம் இந்த நாட்டில் சம உரிமையுடன் கௌரவத்துடன் சுயமரியாதையுடன் வாழ முடியும். அதனால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு தற்போது வவுனியா நகரில் வாழ்கின்ற மக்களையும் யாழ். மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களையும் சார்ந்தது.

நாம் யாரையும் எதிர்க்கவில்லை, வெறுக்கவில்லை இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களையும் நேசிக்கின்றோம். சகோதரர்களாக கருதுகின்றோம். ஆனால் எமக்கு இந்த நாட்டில் சமத்துவம், சம உரிமை, பாதுகாப்பு வேண்டும். இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் நாம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். என்றார்.

வவுனியா தேர்தல் : த.வி.கூட்டணி – இரு சுயேச்சை குழுக்கள் ஈபிடிபியை ஆதரிக்க முடிவு

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்புடன் முன்னர் கூட்டுச் சேர்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளை, அரசின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இணைத்தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. த.வி.கூ. நிர்வாகச் செயலாளர் ஜீ.வி.சகாதேவன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி வன்னி/கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் இந்த முடிவை அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.