13-வது அரசியல் சட்ட திருத்தம்

13-வது அரசியல் சட்ட திருத்தம்

இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. – து.ரவிகரன்

இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார்.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியை செய்ய முடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

 

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

 

எமது மதத்தை அழித்து பௌத்த மதத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல். பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம். எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராட வேண்டிய காலம் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தீர்வு தான் கிடைக்கவில்லை.

 

மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒரு வருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று. எனவே வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

 

சர்வதேசம் பாராமுகமாக இருக்க கூடாது. இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 வது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம்.

 

எமது நிலத்தை முழுவதுமாக பறித்து விட்டால் நாங்கள் என்ன எங்கயும் ஓடுவதா?. இலங்கை தமிழன் ஆண்ட பூமி எனவே எமக்கான தீர்வை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் தரத்தான் வேண்டும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே இதற்கு எதிராக எமது குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்றார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். – அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தும் இந்தியா!

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

 

நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

“இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் – நீதி – கௌரவம் – சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கின்றது.

 

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தை அடைய மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது உதவும்’ என்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்ததது ஏன்.? – இந்தியா விளக்கம் !

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.