டயானா கமகே

டயானா கமகே

சுற்றுலா பயணிக்கு 800 ரூபாய்க்கு வடை – உணவக உரிமையாளர் கைது !

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே குறித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் சுற்றுலா பயணி ஒருவருக்கு 1900 ரூபாய்க்கு கொத்து விற்பனை செய்ய முயற்சித்த உணவக உரிமையாளர் ஒருவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாச பெற்றுள்ளார் – அமைச்சர் டயானா கமகே மனுத்தாக்கல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை மற்றும் பதவிகளை வகித்து வருவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஊடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததுடன், சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களாக நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக டயானா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரிடமிருந்து சத்தியக் கடதாசியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை சவால் செய்ய ரஞ்சித் மத்தும பண்டார மேற்கொண்ட நீதித்துறை நடவடிக்கையையும் தனது மனுவில் ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

, ஒரு கட்சி உறுப்பினர் மற்றொரு கட்சியின் உறுப்பினராக இருந்தால், அவர் அல்லது அவள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் அத்தியாயம் 3 இன் பிரிவு 3 (3) குறிப்பிடுகிறது

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவருமே ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை வைத்திருப்பதும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிப்பதும் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை வழங்குமாறு டயானா கமகே நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மனுவை பரிசீலித்ததன் மூலம் மேற்படி பதவிகளில் இருப்பவர்களை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

டயானா கமகே பிரித்தானிய பிரஜை – இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கடிதத்தில் திருமதி கமகே 2004 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளார். அவர் 521398876 என்ற இங்கிலாந்து கடவுச்சீட்டை வைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருப்பினும், அவர் ஜனவரி 24, 2014 அன்று N 5091388 என்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற முடிந்தது. அவர் நவம்பர் 5, 2018 அன்று இராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுள்ளார். அதை நிரூபிக்கும் ஆவணத்தை அவர் சமர்ப்பிக்காததால், புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது. அவர் தனது இங்கிலாந்து குடியுரிமையை விட்டுவிட்டார்” என கட்டுப்பாட்டாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திருமதி கமகே அனுப்பிய விசா விண்ணப்பங்களின் ஆவணங்களையும் கட்டுப்பாட்டாளர் இணைத்துள்ளார்.

அப்போது அவையில் இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எம்.பி கமகேவின் கடவுச்சீட்டு விவகாரத்தை நாடகமாக்க வேண்டாம் என தெரிவித்தார். நீங்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு கட்சியை வழங்கியவர் திருமதி கமகே. எனவே அவரது கடவுச்சீட்டு விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கஞ்சா வளர்ப்பு இலங்கையின் கலாச்சாரத்திற்கு எதிரானது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் கஞ்சா செடி வளர்ப்பை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக அதிகளவு லாபமிட்ட முடியும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

அதே போல மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது அந்நியச் செலாவணியை கொண்டு வரும் என்றாலும், இலங்கையின் கலாசாரத்திற்கு எதிரானது என்பதால், இந்த பிரேரணைக்கு உடன்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சாவை பயிரிடுங்கள் – டயானாவுக்கு ஹர்ஷ டி சில்வா பதில் !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல எனவும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரை கருவாடு காய வைக்கும் இடம் என குறிப்பிட்ட டயானாவின் கருத்து தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதிருப்தி!

மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு. எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

புதிதாக இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை ஓர் களியாட்ட இடமாகவும், குறிப்பாக தன்னை சிறு வயதில் கருவாடு காய வைப்பதற்கு மன்னாரிற்கு அனுப்ப உள்ளதாக தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

அவரது கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மன்னார் மாவட்டம் மிகவும் கலை, கலாச்சார பண்புகள், கடல் வளம், விவசாய வளம் அனைத்தோடு பொருந்தியதாக அமைந்துள்ளது.

தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது. தற்போதைய உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த காலங்களை விட இம்முறை உயர்ந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன.

எனவே மன்னார் மாவட்டத்தின் கலை கலாச்சார பண்புகள் தெரியாமல், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்கள் முன் கதைப்பது கண்டிக்கத்தக்க விடயம் என்பதோடு, இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கிய ஜனாதிபதி அதனை பரிசீலிக்க வேண்டும்.

குறித்த பெண் சில காலங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தார்.

நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசி இருந்தார்.

அவருடைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஜனாதிபதிக்கு மேலும் 2 ஆண்டுகள் வழங்கப்பட வேண்டும்.” – டயானா கமகே

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

கொவிட் -19 நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை. எனவே ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், எனவே தமக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.