முல்லைத்தீவு

முல்லைத்தீவு

‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ – முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!

நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக ‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது.

வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி, அந்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணிகளின் உரிமையாளர்கள் தமது காணியின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர், அந்த காணிகளை விடுவித்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்துக்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து ஜனாதிபதிக்கான தபால் அட்டையை அனுப்புவதற்கான பணிகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள மக்களை இணைத்து இவர்களினூடாக தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்தே, தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என்கிறார் பேராசிரியர் ராஜ் சோமதேவ!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபனால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.

 

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

 

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

486 காெக்கேன் போதை மாத்திரைகளுடன் 20 வயது நபர் முல்லைத்தீவில் கைது !

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் குறிித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் , இவரிடம் இருந்து 486 காெக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர் நேற்றைய தினம் (08) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” – துரைராசா ரவிகரன் விசனம் !

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” என  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28,626 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பானது 2415 சதுர கிலோ மீற்றர் தரையாகவும், 202 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர்ப் பிரதேசமாகவும் காணப்படுகிறது.

இதில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் 222006 ஏக்கர், 36.72 சதவீதமான நிலம் வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 167484 ஏக்கர் 30.37 நிலப்பரப்பை வனவள திணைக்களம் மேலதிகமாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது காடு பேணல் சட்டத்தின் கீழ் ஒதுக்கக்காடுகளாக மீண்டும் 42,631 ஏக்கர் 7.15 சதவீதமான நிலப்பரப்பை வனவள திணைக்களம் கோரியுள்ளது. அவ்வாறு குறித்த நிலப்பரப்பும் வனவள திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.

மிகுதி நிலப்பரப்பில் பெரும்பகுதியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியமணல் திணைக்களம், படையினர் உள்ளிட்ட தரப்பினர் ஆளுகை செய்கின்றனர்.

குறிப்பாக வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில், மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைக்காக சுமார் 50,000 ஏக்கர் காணி தேவை எனவும், அவற்றை விடுவித்து தருமாறு மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் முறையான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், வேறு திணைக்களங்கள் காணிக் கோரிக்கை முன்வைக்கும்போதும், குடியேற்றங்களுக்காக காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் காணிகளை விடுவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருக்க காணி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

நீண்ட காலமாக இவ்வாறு மேய்ச்சல் தரைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோதிலும் இதுவரை மேய்ச்சல் தரைக்குரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அந்த வகையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் குடியிருக்க காணி இல்லாததோடு, கால்நடைகளுக்கும் மேய்ச்சல் தரைக்கான காணிகள் இல்லை என்கிற நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.

சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் முல்லைத்தீவில் கைது !

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவரே நட்டாங்கண்டப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார், காடழிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் காடழிப்பிற்கு பயன்படுத்திய மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

 

சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 68 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிசார், இருவர் மீதும் அரச காணியை அத்துமீறி பிடித்தல் மற்றும், பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கைளை முன் வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதேவேளை இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார், குறித்த வழக்கை வரும் 08ம் மாதம் 09ம் திகதி மாங்குளம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை!

முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கொள்ளையர்களால் பொல்லால் தலையில் தாக்கப்பட்ட 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு பொலிஸார், தடயவியல் பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேகநபர்களின் தடயங்கள் தொடர்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சிங்கள மயமாக்கப்படும் தமிழரின் பூர்வீக விவசாய நிலங்கள் – முல்லைத்தீவில் 180 சிங்கள் குடும்பங்களை குடியமர்த்த முயற்சி !

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் காவல் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு 180 சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதிபரின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இன்று(3) கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு முன்னாள் வடமாகாணசபை துரைராசா ரவிகரன் மற்றும், காணிகளுக்குரிய தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களான கெக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத கட்டுமானம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் 30.03.2023 அன்று இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கு இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணைகளை 30.03.2023 அன்று மீளவும் விசாரணை மேற்கொள்வதற்கு தவணையிட்டுள்ளார். இதன் போது, முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட் பிரசாந் ஆகியோர் இன்று வழக்கு தொடுநர்கள் சார்பில் முன்னிலையாகினர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.  சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்டறிந்த பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

நீதிமன்ற கட்டளையையும் மீறி தமிழர் பகுதியான குருந்தூர்மலையில் கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது. இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது . இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர் மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும் போது பூரண மடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமான வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபடும் இராணுவ, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மலையடி வாரத்தில் தங்கியிருப்பதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுமியின் சடலம் – முல்லைத்தீவில் சோகம் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் ஒரு கை உடலில் இருக்கவில்லை என கூறப்படும் நிலையில், அதனை விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, நேற்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

இதேவேளை, நேற்று அந்த பகுதியில் இராணுவத்துடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, சடலம் காணப்படவில்லையென்றும், இரவோடு இரவாகவே சிறுமியின் சடலம் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலத்தை மீட்ட பொலிசார் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், முல்லைத்தீவு பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.