போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் வாக்குவாதம் – சிறுவனைத் தரையில் அடித்த தந்தை கைது !

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது சிறுவனைத் தனது கணவர் தரையில் அடித்து காயப்படுத்தியதாகப் பெண் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார் .
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது , சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 7 வயது சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது .
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகாமையில் 15 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் – 2 வருடங்களாக நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல்!

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் மற்றும் 15 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றுடன், பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் மற்றும் பெண் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

51 வயதான சந்தேக நபர் ஒருவரும் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் வாடகை வீட்டில் சுமார் 2 வருடங்களாக பாரியளவில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இந்த போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் 1 கிலோ 60 கிராம் ஹெரோயின் மற்றும் 49 இலட்சம் ரூபா பணத்துடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!

யுக்திய நடவடிக்கையை மேலும் வெற்றிகரமாக செயற்படுத்தும் வகையில், போதைப்பொருள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அழைப்பாளரின் அடையாளத்தை அடையாளம் காண முடியாத வகையில் இந்த இலக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  போதைப்பொருள் விருந்து – 27 இளைஞர்கள் கைது !

ஹோமாகம மாகம்மன ஆடம்பர வீடமைப்புத்  தொகுதியில் மகளிர் தினத்தன்று இடம்பெற்ற  பிறந்தநாளை முன்னிட்டு போதைப்பொருள் விருந்து நடத்திய 27 இளைஞர்களில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து இளைஞர்கள் மற்றும் பணத்தை பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று யுவதிகள் கெஸ்பாவ  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 6 பேரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான்  இஷாரா ஜெயக்கொடி உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவார்.

சந்தேக நபர்களான பெண்களின் சமூக நோய் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் யுக்திய விசேட நடவடிக்கை – இரகசிய தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய ) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

071 859 88 00 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ காவல்துறை  நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற இரு அதிகாரிகள் கைது !

போதைப்பொருள், சிகரெட், பீடிகள் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலையின் தொழிற்கல்வி ஆலோசகர் மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

 

விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களிடமிருந்து 110 மில்லி கிராம் போதைப்பொருள் , 2 பிடிகள் , ஒரு சிகரெட் பெட்டி , சிறிய கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைதானவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் கைது !

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

 

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவராவார்.

 

இவர் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் இதுவரை பட்டம் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

கண்டி, கண்ணொரு பிரதேசத்தில் ஹாஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடத்திலிருந்து 15 கிராம் நிறையுடைய ஹாஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இவர் கண்டி, முறுத்தலாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சோதனையின் போது இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது !

வவுனியாவில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16,00 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று வியாழக்கிழமை (21) இரவு வவுனியா பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் தலமையில் திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள டயர் திருத்தக வியாபாரநிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து, அதனை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களது வீடுகளும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டருந்தது.

 

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் போதை மாத்திரை பாவனை – இராணுவப் புலனாய்வுப் பிரிவு

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, அனுராதபுரத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த மருந்தகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வாங்குவதற்காக பாடசாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் பணம் ஈட்டியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் மத்தியிலும் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தம்மிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 130க்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.