நான் எந்த நாட்டுக்கும் தப்பித்துப் போகப் போவதில்லை! ஈஸ்டர் குண்டுதாரிகளை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்!” – பிள்ளையான்: “அசாத் மௌலான தனக்கும் குடும்பத்துக்கும் விஸா எடுப்பதற்கு விட்ட ரீல்களை வைத்துக் கொண்டு படங்காட்ட வேண்டாம். ஈஸ்டர் குண்டுதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்” என்று தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று தேசம் ரியூப்பில் வெளியாகியுள்ள இக்காணொலியில், “இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்ற மௌலவியை சிறையிலிருந்த 500 வரையானவர்களில் ஒருவராக கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவர்களுடைய அதிதீவிரவாதத்தை அவர்களிடமே கண்டித்து இருக்கிறேன்” என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.
“அசாத் மௌலானா விசா எடுப்பதற்காகவும் பணத்திற்காகவும் சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத்துப் புலிகளுக்காகப் புனைந்த கதை தான் அது. ரிஎம்விபியினது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சுவிஸில் உள்ள யாழ்பாணத்து புலிகள் தமிழ் தேசியம் தமிழரசுக் கட்சி செய்த சதி தான் இது” எனவும் பிள்ளையான் குற்றம்சாட்டினார். “யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்களுக்கு ஒப்பாக நான் முப்பதினாயிரம் வரை வாக்குகளைப் பெற்றவன். என்னிலும் பார்க்க பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு எல்லாம் குறைந்த வாக்குகளே கிடைத்தது. இந்த நெருக்கடியிலும் மட்டக்களப்பு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.
“ரிஎம்விபி யும் பிள்ளையானும் இந்த வீழ்ச்சியில் இருந்து நிச்சயம் மீள எழுவோம் எனத் தெரிவித்த பிள்ளையான் 16 வயதிலேயே போராடப் போய் எத்தனையோ அனுபவித்துவிட்டோம் இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிடமாட்டோம். ஜனாதிபதி அனுரா தேர்தலில் என்னைத் தோற்கடிக்க என்னை விசாரணைக்கு அழைத்தார்;. அவர் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றும் அந்த நீண்ட நேர்காணலில் பிள்ளையான் தெரிவித்தார்.