பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

பாடசாலைக்கு செல்வதாக கூறி காதலனுடன் சென்ற சிறுமி வன்புணர்வு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக கூறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.

 

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கலாச்சார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாணவியை காதலன் வன்புணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாணவியை காணவில்லை என்று தயார் காவல்துறையினரிடம் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய தேடுதல் நடத்திய காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டுள்ளார்.

 

அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன் போது அவர் காதலனால் வன்புணரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் பெண் ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயதுடைய அதிபர் கைது !

இளம் பெண் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 60 வயதுடைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர் 22 வயதுடைய இளம் ஆசிரியையை விசேட கடமையின் காரணமாக பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

பின்னர், உரிய அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆசிரியர் நேற்று மதியம் பாடசாலைக்கு வந்தார்.

ஆசிரியை தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியில் செல்ல தயாரான போது சந்தேகநபரான அதிபர் அவரை கட்டிப்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், அந்த ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்று மினுவாங்கொடை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து, இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டார். பின்னர், இளம் ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சந்தேகத்திற்குரிய அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாழில் போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை பார்த்துக்கொண்ட கொடூரம் நமது சமூகத்தில் தான் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே அதிகரித்லு வருகின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை இந்த போதைப்பொருள் பாவனை மிகத் தீவிரமடைந்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள் மற்றும் ஊசி போதைப்பொருள் பாவித்ததால் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறை கலாச்சாரத்தையும் தூண்டிவருகிறது.

இளைஞர்களிடையே வேகமெடுக்கும் இந்த போதைப்பொருள் பாவனையை தடுக்க வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை. அன்றாடம் செய்திகளில் நாம் காணும் – இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள ” யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ்போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வீடொன்றில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் (11.09.2022) இன்று தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் வெளிப்பாடே இந்த சம்பவமுமாகும். வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள்.

ஆனால் இது நாம் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க – போதைப்பொருள் அற்ற சமூதம் ஒன்றை உருவாக்க நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என யாருமே சிந்திப்பது கிடையாது. இந்த சுயநல மனோநிலையின் வெளிப்பாடே யாழில் நடந்து கொண்டிருக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களின் நீட்சியும் – பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சியுமாகும்.

இந்த போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை. இது தொடர்பில் யாழ்ப்பாண பகுதியில் உள்ள பொலிசாரும் – பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போதும் நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.