பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்
பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்பட மாட்டாது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.
தற்போது பாதாள உலகத்தவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேரில் 15 பேர் பாதாள உலகத்தோடு தொடர்பானவர்கள் இருவர் மட்டுமே தமிழர்கள்.
2.3: இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரங்களிடம் சொல்லி நான் உங்களுக்கு பிச்சை போடுகிறேன் எனப் பாராளுமன்றத்தில் குவினார் அர்ச்சுனா. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காதபடியால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தாகத் தெரிவித்தார் பொன்னம்பலம் கஜேந்திர குமார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனும் இக்கோரிக்கையை வைத்தார். உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முன்னுக்குத் தள்ளுகின்றனர் தமிழ் தேசியவாதிகள்.
2.4: இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது, அரசாங்கமானது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் அதனையே குறிப்பிடுகின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றார்.
இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இனிமேல் அனுமதிக்கப்படாது. அதேவேளை, புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.