தையிட்டி விகாரை

தையிட்டி விகாரை

உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்தால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் கொகக்குவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று ஏப்ரல் 18இல் தெரிவித்தார்.

நேற்று ஏப்ரல் 17இல் யாழுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ், சிங்களக் கட்சிகள் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து விலத்திக்கொண்டால் அப்பிரச்சினையை தன்னால் இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இக்கருத்து குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரல் 18இல் யாழ் கொக்குவில்லில் பத்திரிகையார் சந்திப்பை ஏற்பாடு செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தாங்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவதற்குத் தயார் எனத் தெரிவித்தார். அச்சந்தர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவும் ஏனைய சிங்களத் தலைவர்கள் போன்ற மோசமான இனவாதியே எனவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார்.

‘வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். உள்ளுராட்சி சபைகளிலும் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிப்பார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகச் சந்திப்பில் ஏப்ரல் 18இல் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எமக்கு வாக்களித்த மக்களை நாங்கள் ஒரு போதும் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தார். நாட்டில் இனவாதம் மதவாதம் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே என அவர் வலியுறுத்தினார்.

தையிட்டி விகாரை விவகாரம் நேர்மையாக அணுகப்படும்: புத்த சாசன அமைச்சு !

தையிட்டி விகாரை விவகாரம் நேர்மையாக அணுகப்படும்: புத்த சாசன அமைச்சு !

 

யாழ்ப்பாணம்-திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், சிலர் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சித்து வருவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாண திஸ்ஸ விகாரை பற்றி நிறையச் செய்திகள் இருந்தாலும், அந்த விகாரை தொடர்பான தகவல்களும் எங்கள் தலையீடுகளும் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. ஓர் அரசாங்கமாக, திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினையில் தேவையான நேர்மையான தலையீட்டை நாங்கள் எடுத்துள்ளோம். திஸ்ஸவிகாரை தொடர்பில் அப்பகுதி மக்கள் எங்களைச் சந்தித்தனர். அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் எங்களைச் சந்தித்தார். அவர்களுடன் நாங்கள் சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.

 

……………………..

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

“எமது நிலம் எமக்கு வேண்டும்“ – மீண்டும் தையிட்டி !

 

யாழ் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம் பௌர்ணமி நாளான நேற்றையதினம் இடம்பெற்றது. காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில்இ கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை பாதுகாப்பு”, “காவல்துறை அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

தொடரும் தையிட்டி விவகாரம் சிறிதரனோடு கை கோர்க்கின்றார் மகிந்தவின் மதனவாசன் !

யாழ்-தையிட்டி பகுதியில் விகாரை கட்டவென காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. ஆகவே அங்கு விகாரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது. இதனை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் ஏற்றுக் கொள்வாரா?. காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன? என பாராளுமன்றில் எம்பி சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இவ் விடயம் தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்று பதிலழித்தார்.

இதேவேளை இன நல்லிணத்திற்காக யாழ் தையிட்டி விகாரையை அகற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு என்கிறார் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன்.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ ரவிகரன்

கேள்வி: ‘தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ தி ரவிகரன் பதில்

 

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா? எனத் தேசம்நெற் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பா உ துரைராசா ரவிகரன், “விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே அதனைத் தடுத்திருக்க வேண்டும்” எனத் தேசம்நெற்க்கு பதிலளித்தார். தான் யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றும் இதற்கு மேல் தான் ஏதும் சொல்லவிரும்பவில்லை என்றும் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் வன்னியில் வன இலாக்கா மற்றும் தொல்லியல் திணைக்களம் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்றது எனறும் 2009 இல் அவர்களிடம் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது இரண்டு மடங்காக நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர்களை கொண்டுள்ளனர் எனவும் தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் தாங்கள் தொடர்ச்சியாக குருந்தூர்மலை புத்தர் விகாரை தொடர்பில் சட்டரீதியாகப் போராடியதாகவும் அதற்காக தனக்கு வன்னியில் உள்ள ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர்கள் பணத்துக்காக அல்லாமல் இலவசமாக வந்து வழக்குகளை வாதாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் பா உ ரவிகரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோ ஏனைய சட்டத்தரணிகளோ தையிட்டி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவி;ல்லை என்ற குற்றச்சாட்டை வைக்கவில்லை. போராடாமல் எதனையும் அடைய முடியாது என்பதை பா உ ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !

கைமாறும் தையிட்டி விகாரை: இராணுவத்திடமிருந்து பௌத்த சாசன அமைச்சுக்கு !

யாழ். தையிட்டியில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை விவகாரம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அத்தபத்து, இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இந்த பெயரில் விகாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு நிலம் மட்டுமே உள்ளது. மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த விகாரைகளை நிர்வகிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தையிட்டி எதிரொலி ! யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?

தையிட்டி எதிரொலி !

யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டது ஏன்..? விகாரை கட்டப்பட்டது ஏன்..?

டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மலிங்கத்துடன் ஒரு நேர்காணல் !

 

தையிட்டி விகாரை: பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

தையிட்டி விகாரை: தமிழ் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ! பிச்சைக்காரன் புண்ணை குணப்படுத்த மாட்டான் பா உ அர்ச்சுனா !

 

யாழ். தையிட்டி விகாரை இடித்து அகற்றக் கோரும் போராட்டம் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பேசப்பட்ட அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் பிசுபிசுத்துப் போனதொரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”பௌத்தம் உன் மதம். வழிபடு. தையிட்டி என் மண். வழி விடு !”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையை வழமை போல் வாக்குவாதம் ஏற்பட்டு முறுகலான நிலை தோற்றுவிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என அரகலயா போராட்டத்தில் முன்னின்ற மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விகாரையின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது ஆகவே இந்த விகாரையை அகற்ற முடியாது என பலரும் பல்வேறு கருத்துக்ளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்த பல சட்டவிரோதமான விகாரைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய வழக்கின் மூலம் வீதி அபிவிருத்திக்காக அகற்றப்பட்டிருக்கின்றது.

எனவே அவர்களுக்கு ஒரு நீதி, இங்கிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி என்றால், சிங்களப் பேரினவாதத்தினுடைய ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழருக்கு எந்த ஒரு இடத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நிலைமையும், தமிழ் மக்கள் எந்தவொரு இடத்திலும் தங்களின் பூரண இனச்சுதந்திரத்துடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலையியை ஏற்படுத்துகின்ற சிந்தனையை இது வெளிப்படுத்துகின்றது’’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தையிட்டி விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் அஜித் ரணசிங்க தெரிவித்துள்ளதுடன் இதுதொடர்பாக அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் .

இதேவேளை நேற்றைய தினத்தில் தொடர்ந்த தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்திலும் விகாரையை அகற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களும் கலந்து கொண்ட தலைவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா, பிச்சைக்காரன் காயத்தை குணப்படுத்த மாட்டான். ஏனெனில் அப்போதா தான் அதை வைத்து பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காரன் போலத்தான் பல அரசியல்வாதிகள் தையிட்டி பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருந்தால் தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதற்காகவே அதனை தீர்க்காது தூண்டி விடுகின்றார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார்.

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

 

“ பொதுமக்களை திரட்டி பலாலி திஸ்ஸ மகாராம பௌத்த விகாரையினை சேதப்படுத்த சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டமை” தொடர்பில் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெப்ரவரி 11 ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தமையை உறுதிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். இவ் விவகாரம் தொடர்பில் கூறிய அவர், தான் ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்கும்படியே கூறியதாகவும், விகாரையை இடிக்க வாரீர் என சமூக வலைத்தளங்களூடாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் எனவும், இவ் விடயம் தெரிந்ததும் தான் தனது உத்தியோக பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாக இதனை மறுத்ததாகவும் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டு விகாரை உடைப்பை தொடக்கி வைத்தில் இருந்து அவருடன் சமீப காலத்தில் பயணிக்கும் எம்பிமார்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் என எல்லோரும் விகாரை உடைப்பை வழிமொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பொலிஸ் முறைப்பாடோ அல்லது நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளோ கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பொலிஸார் தையிட்டி விகாரை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.