டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நீட்சியாக இந்தமுறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம். எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

மீண்டும் பாராளுமன்றம் போகாமல் ஓயமாட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

 

உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருடங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லை. ஆனாலும் அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றுவதனூடாக மட்டுமே எதிர்கால அரசியல் செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதில் ஈபிடிபி எவ்வளவுதூரம் வெற்றிபெறும் என்பது மே 6இல் தெரியவரும்.

தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !

தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !

 

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக உள்ளதாக அதன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று கூறிய பன்னீர்செல்வம். கடந்த காலங்களைப்போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் இருந்தும் தமது கட்சி பின்வாங்க வில்லை என்ற கருத்துப்பட தெரிவித்தார்.

 யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

 

யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலைவாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப வடக்கு, கிழக்குக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி கோரியுள்ளது.

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிதிகள் சீரான முறையில் ஒதுக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது.

வடக்கை பொறுத்தவரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவற்றுள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை. ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்கள் நடத்தவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்களுடைய காணிகள் மக்களுக்கே சொந்தம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி மாத்திரமன்றி கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த அடிப்படையில், காணி உரிமையாளர்களின் அமைதி வழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோர் அங்கத்துவம் வகித்து ஆட்சிக்கு கொண்டு வந்த நல்லாட்சி அரசு காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. நல்லாட்சி அரசில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் விகாரை திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியவர் அப்போதைய புத்தசாசன அமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆவார். இந்த ஆயிரம் விகாரை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கான ஆதரவை வழங்கியதுடன் குறித்த நல்லாட்சியில் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என குறிப்பிட்ட பா.உ சிறிதரனும் கைகோர்த்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் நல்லாட்சி அரசில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சராக செயலாற்றிய டக்ளஸ் தேவானந்தா அடுத்து பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச அரசிலும் அமைச்சராக பணியாற்றினார். எனினும் அண்மையில் ஏற்பட்ட என்.பி.பி அலையில் காணாமலாக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தனது கட்சியின் அரசியலை நிலைநாட்ட திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல தையிட்டி விகாரையை இடிக்கும் பேரணியில் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம்- டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ், தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன். ஆனால் அனுர வித்தியாசமாக இருக்கின்றார் – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி அனுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்தவர் காத்தார் சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம்.

இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது.

இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன்.

ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர், அவரது அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்.

நாம் வடக்குக்கிழக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சனையை பிரதானமாக முன் வைத்துள்ளோம்.

இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். சிலவேளை இந்தசந்தி்ப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம்.

நாங்கள் இருதரப்புமே ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இருதரப்பிற்கும் உள்ளது.

அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்கமுடியும்.

இதேவேளை எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும் எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

அவர்கள் பாராளுமன்றிலும் பெரும்பாண்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஜனாதிபதித்தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம்.என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியினருக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

 

இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். – ஜனாதிபதி அனுர குமாரவுக்கான வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதை எதிர்பார்க்கின்றோம் என ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம்.

ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதையும் எதிர்பார்க்கிறோம்.

எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

இதுவரை காலமும் எமது நாடாளுமன்ற அரசியலில், தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு” என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.