ஜீவன் தொண்டமான்

ஜீவன் தொண்டமான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தூக்கி எறிந்தது போல என்னையும் தூக்கி எறிந்து விடாதீர்கள்- ஜீவன் தொண்டமான்

நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை மக்கள் தூக்கி எறிந்தவாறு தம்மை மக்கள் தூக்கி எரியாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கிய புதிய ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் (16) நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் 1350 ரூபாய் அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவை அதிகரிக்குமாறு சம்பள நிர்ணய சபையில் நாங்கள் கோரிக்கையை முன்வைத்த போது அதனை நிராகரித்தது தற்போதய ஜனாதிபதியுடைய கட்சியான தேசிய மக்கள் சக்தி.

விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன் அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கி நான் குரல் கொடுத்திருக்கின்றேன் எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 30 சுயாதின கட்சிகள் உருவாகியுள்ளன.

 

எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதி நிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நான் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராமகிருஷ்ணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராமேஸ்வரன் உதயகுமார் போன்ற அநேகமான பெயர்கள் காணப்படும்.

 

ஆனால் தற்போது ரவிந்திரன் என்பவருடைய பெயரும் காணப்படும் அவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளர் அவர் யார் புரொடொப் தோட்டபகுதியில் முகாமையாளராக இருந்து மக்களை தாக்கி தொழிற்சாலையில் அடைத்து வைத்திருந்தவர்.

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தான் சென்று அம் மக்களை விடுவித்தோம் அவர் போன்ற ஒருவருக்காக மலையகத்தில் சிலர் கொடியினை உயர்த்தி கொண்டு ஆதரவு வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

தனக்கு கிடைத்த வளங்களை வைத்து மாத்திரம் வேலை செய்ய முடியுமே தவிர வளங்களை உருவாக்க முடியாது நாடு வங்குரோத்து அடைந்த போது கூட மலையகத்தை பொறுத்தவரையில் இரண்டு சம்பள உயர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

 

ஆரம்பகாலம் முதல் நான் சொல்லி வருவது எம்மிடம் இருப்பது 10000ம் வீடுகள் ஆனால் 10000ம் வீடுகளை வைத்து ஆறு அரசியல்வாதிகள் ஒன்றறை இலட்சம் பேரை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்குகளுக்காக ஒரு தவறான வதந்திகளை பரப்பாது கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளும் இல்லாமல் போயுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

“சம்பள பிரச்சினையை தீர்க்க கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும்.” – ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் அரசியல் நோக்கம் காரணமாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது.” – ஜீவன் தொண்டமான்

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்ட நிறுவனங்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்ட நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கரபத்தனை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை நிர்வாகம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சில தோட்டங்களில் 10 முதல் 12 கிலோ கொழுந்து பறிப்பதே கடினமாக செயல். இந்நிலையில் 20 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதனை நாம் ஏற்கவில்லை.

துரைமாரை இறக்கி கொழுந்து பறிக்க சொன்னோம், அவர்கள் எவ்வளவு பறிக்கின்றார்களோ அவர்களைவிட அதிகமாக 2 கிலோ பறித்து தருவதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. கொடுப்பனவுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே, எமது போராட்டம் தொடரும். கடந்த ஒரு வருடமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவில்லை.

மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம். அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கின. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில்  நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.

அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.