ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் !

முதல் 1,000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டப்படிப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மருத்துவ ஆணையின் விதிகளை திருத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

“உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று (07) கலந்துகொண்டிருந்த போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய அதிபர், அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளை நினைவுகூர்ந்த அதிபர், அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதிபர் அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு !

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது பதவி விலகல் கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி செயலக தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்  என்கிறார்கள். ஆனால் நாங்கள்  அவரை நம்புகின்றோம்.” – சி.வி விக்னேஸ்வரன்

“ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்  என்கிறார்கள். ஆனால் நாங்கள்  அவரை நம்புகின்றோம்.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை (28) இடம்பெற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்கு 13வது திருத்தம் செயற்படுத்தப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மாகாண சபைகளிடமிருந்து மத்திக்குப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பல சுற்றுச் சந்திப்புக்களை மேற்கொண்டோம்.

நாம் சந்திப்புகளில் ஈடுபட்டபோது ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார் என சிலர் கூறினர். ஆனால், நாங்கள் சில விடயங்களை அவர் ஊடாக செய்விக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்களை அவ்வாறு மீள வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சம்மதித்தார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்ற நிலையில், இக்குழுவை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவரின் பொறுப்பை செயற்படுத்துபவர்களும் குழுவை நியமிக்கவில்லை.

13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவும் கரிசனையாக உள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவும் தங்களாலான அழுத்தத்தை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலையான அரசாங்கம் ஒன்றின் ஜனாதிபதியாக இல்லாத நிலையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

அவ்வாறு முட்டுக்கட்டை போடுபவர்களுடன்  மாகாண அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பில் பேசியிருக்கிறோம். இனிமேலும் பேசவுள்ளோம்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்வாரா, செய்ய மாட்டாரா என்ற விவாதங்களை தாண்டி, தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக பறிக்கப்பட்ட அதிகாரங்களையாவது அவர் மூலம் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“இலங்கையில் அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அரசாங்கத்தினால் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நேற்று (08) நடைபெற்ற நூற்றாண்டு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

“ஜோசப் பிரேசர் வைத்தியசாலை என்பதை விட நூற்றாண்டை கடந்துள்ள நிறுவனம் என்று கூற முடியும்.  பிரேசர்கள் ஸ்கொட்லாந்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற தலைமுறையை சேர்ந்தவர்கள்.  அங்கிருந்துதான் ஜோசப் பிரேசரும் இலங்கை வந்தார்.

பிரித்தானியர்கள் இலங்கைக்கு தேயிலை தொழிலை அறிமுகப்படுத்திய காலத்தில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராக இருந்தார். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் பிடகந்த தோட்டத்தை மையமாகக் கொண்டு தோட்டத் தொழிலை நடத்திச் சென்றார். இறுதியாக அவர் இலங்கையிலேயே உயிர் நீத்தார்.  ஏனைய தோட்ட உரிமையாளர்களுக்கு மாறாக அவரும் அவரது மனைவியாரும் இலங்கையில் ஓர் அடையாளத்தை பதித்துவிட்டு சென்றனர்.

இந்நாட்டுக்கு அவர் சேவையாற்றியுள்ள அதேநேரம் நாட்டை கட்டியெழுப்பவும் பங்களிப்புச் செய்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலில் இலாபம் ஈட்டிய ஏனைய நூற்றுக்கணக்கான தோட்ட உரிமையாளர்களுக்கு மத்தியில் அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த நாட்டிற்காக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலையை விட்டுச் சென்றுள்ளனர்.

உண்மையில், இந்த மருத்துவமனை நிறுவப்பட்டபோது, இந்த பகுதி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வீடுகளும் அதிகளவில் இருக்கவில்லை என்பதால் அரச ஊழியர்கள் அனைவரையும் இவ்விடத்தில் தங்க வைப்பதற்கான முயற்சிகளும் காணப்பட்டன.

அதேபோல் பொலிஸ் நிலையமொன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக ஜோசப் பிரேசர் வைத்தியச்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வேறு முயற்சிகள் காணப்படவில்லை.

எனது பாட்டனார் பாட்டிக்கு சிரிபா வீதியில் காணியொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்.  அங்கு எனது அம்மா அடிக்கடிச் சென்று வருவதை கண்டிருக்கிறேன். 1950 களில் அது வெற்று இடமாக காணப்பட்டது. இந்த வீதியில் இரண்டு அல்லது மூன்று வீடுகளை மாத்திரமே காணக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறானதொரு வைத்தியசாலை இல்லாததையிட்டு ஆண்கள் பொறாமை கொள்வர். ஆண்களுக்கு இவ்வாறானதொரு வைத்தியசாலை இதுவரையில் கிடைக்கவில்லை. மறுமுனையில் அது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பதோடு, நானும் நோயாளர்களை பார்க்க பல தடவைகள் இந்த வைத்தியசாலைக்குச் சென்றுள்ளேன். எவ்வாறாயினும் இவ்வாறானதொரு வைத்தியசாலை எமக்கு கிடைத்திருப்பதையிட்டு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்த நிறுவனம் நன்றாக பராமரிக்கப்பட வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதற்கு வைத்தியசாலையின் தலைவர் சுமலை விட பொருத்தமான எவரும் இருக்க முடியாது.  ஜோசப் பிரேசர் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார். நம்மிடம் உள்ள வளங்களை கொண்டு என்ன செய்ய முடியும் என்பதற்கு அவர் சிறந்த உதாரணமாவார்.

இலங்கையில் உள்ள இவ்வாறான வைத்தியசாலைகள் எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் தேவையான சேவைகளை வழங்க முடியும். இதன் வடிவமைப்பைப் பார்க்கும் போது, இது ஹோட்டலா, வைத்தியசாலையா என்று கேள்வி எழும். நீங்கள் இங்கு வந்து பார்க்கும் போது நோயாளர்களை பார்க்க வந்திருக்கிறோமா, வார இறுதி விடுமுறையை கழிக்க வந்திருக்கிறோமா என்ற கேள்வி ஏற்படும். வைத்தியசாலையில் சேவைகள் இவ்வகையிலேயே உயர் தரத்தில் காணப்பட வேண்டும்.

இந்நாட்டுக்கு வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக வரவழைப்பதற்கு மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர் தரத்தில் காணப்பட வேண்டும். அவ்வாறான சேவைக்கு இந்த வைத்தியசாலையே உதாரணமாகும். எமது சுகாதார கொள்கை தொடர்பில் நாம் மீளச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்நாட்டி வைத்தியசாலை கட்டமைப்பு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன.   பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

அதனால் நாட்டிற்குள் அதிகளவில் வைத்தியர்களை உருவாக்க வேண்டியுள்ளது.  அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

தெற்காசியாவின் தொழில்நுட்ப நிறுவனமான (SAITM) இனை மொறட்டுவ வைத்தியசாலைக்கு கையளித்துள்ளோம். அதேபோல் இன்னும் பல மருத்துவ பல்கலைக்கழகங்களை நாட்டில் ஆரம்பிக்க முடியும் என நம்புகிறோம். வைத்தியர்களை அதிகளவில் உருவாக்குவதற்கு அதனை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.

இலங்கை வைத்தியர்கள் இல்லாமல் ஐக்கிய இராச்சியம் தனது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து, நாங்கள்  ஐக்கிய இராச்சியத்தின் வைத்தியசாலை கட்டமைப்பை நாமும் நடத்திச் செல்கிறோம் என்று கூறினால் தவறாகாது.

உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டும். மேலும், அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.

அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு மருத்துவக் காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.  அப்போது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்குச் செல்வதா அரச வைத்தியசாலையை நாடுவதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்.

இந்த நாட்களில் நானும் ஒரு வைத்தியரை போலவே செயற்படுகிறேன். மரணத்தின் இறுதி தருவாயிலிருக்கும் நோயாளியை சுமந்துச் செல்லும் அதேநேரம் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

திறந்த பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாடு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களும் அபிவிருத்தி அடையலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டுக்கு முன்னேற்றம் கிட்டாது.

அதன்படி இலங்கையில் தேயிலை செய்கைக்கு அப்பால் சென்ற ஒருவராக ஜோசப் பிரேசரை கூறலாம். இலங்கையில் கோப்பிக்கான கேள்வி குறைந்து, தேயிலை செய்கை அதிகரித்த காலத்தில் அவரும் முன்னேறி நாட்டிற்கும் ஒரு வைத்தியசாலையை விட்டுச் சென்றுள்ளார். தற்காலத்தில் சுமல் பெரேரா போன்றவர்களுடன் இணைந்து இந்தத் துறையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் – 19 வயதுடைய நபர் கைது !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தமது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் எப்பாவல, மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக செயற்பாடுகள் விரைவில்..” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி மாநாடு இன்று (04) நிறைவடையவுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம் என்றும் அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அறிவுருத்தினார்.

தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும், மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன, இந்த மாநாட்டின் வாயிலாக நீதித் துறையினர், கொள்கை தயாரிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வியாபாரத் துறையினர் மத்தியிலான கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அத்தோடு ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம். மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர், சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து 75 வருடங்களின் பின்னர் அபிவிருத்தி அடைந்த இலங்கை தொடர்பிலான எதிர்பார்ப்புகள் தற்போது முதல் முறையாக ஏற்பட்டுள்ளதென தெரிவித்த தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பைசர் முஸ்தபா யுத்தம் மற்றும் தவறான பொருளாதார கொள்கைகள் என்பனவே பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

அதனால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்க சகலரும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த ஜயவர்தன, இந்நாட்டின் பொருளாதாரத்தைப பலப்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கணகேஸ்வரன், பைசர் முஸ்தபா மற்றும் சந்தக ஜயசுந்தர உள்ளிட்டோர் மேற்படி முக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டனர்.

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் ,உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இந்நாட்டு சட்டத்துறையின் முக்கியஸ்தர்களும் வியாபார நிறுவனங்களின் உயர் முகாமைத்துவ குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்கள் !

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் வாக்களிப்பதைக் கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் வாக்காளர் செல்வாக்கு இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் பணிபுரிபவர்கள் மற்றும் விசேட வசதிகள் தேவைப்படுபவர்களுக்கும் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு சட்ட வரைவு ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தகைய விதிமுறைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஜப்பானிடம் மன்னிப்பு கோரிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

ஜப்பானின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் (LRT) இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் நேற்று (25) டோக்கியோவில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரின் உடன்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களை நிறுத்தவோ அல்லது ரத்துச் செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

ஜனாதிபதியை ஜப்பான் பிரதமர் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், ஜப்பானிய பிரதமரின் உதவிக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும்  இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

 

“தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்துள்ளது.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது எனவும் ஏனைய போர்கள் தொடர்வதாகவும் தோன்றுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வளையம் பற்றிய முறைசாரா கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது பாதுகாப்பு தரப்பில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட 1000 உணவுப் பொதிகள் பற்றிய தகவல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரிய போராட்டத்தின் அச்சத்தைத் தூண்டியதாகவே பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

இதனடிப்படையில் வன்முறையை சமாளிக்க படையினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் மீண்டும் ஒரு போராட்டத்திற்கான சூழ்நிலை இல்லை என்பதால் சுமார் 72 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு பலப்படுத்தல் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது.

பாதுகாப்பு ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் உணவு கொள்வனவு அடிப்படையில் மதிப்பீடுகளை மேற்கொள்வது அசாதாரணமானது அல்ல.

பிரிவினைவாதப் போரின் போதும் வடக்கில் உள்ள வெதுப்பகங்களை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்த வரலாறுகள் உள்ளன.

அசாதாரண அளவு ரொட்டிகள் தயாரிக்கப்படும் போது அவர்களின் கவனம் தூண்டப்படும். இதனால், தாக்குதல் நடக்கலாம் என்ற சந்தேகம் படையினர் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு வந்ததாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.