பழைய கள்ளை புதிய மொந்தையில் பரிமாறும் விந்தன் !
ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னம் தென்னிலங்கைக்காக காசு பெற்று களமிறங்கியது என்கிறார் கட்சி தாவிய விந்தன். இவர் ஊரறிந்த இரகசியத்தை பரகசியமாக்கினார். இந்த விடயம் ஏற்கனவே தேசம்நெற்றில் பலதடவை வெளிவந்துள்ளது.
ரெலோ அமைப்பிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட விந்தன் கனகரட்ணம் என்பவர் அண்மையில் தமிழரசுக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாக பார்க்கப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு கை தூக்கி ஆதரவு கொடுத்ததை விந்தன் கடுமையாக விமர்சிக்கின்றார். என்பிபி அரசாங்கம் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. அப்படியிருக்க வெறுமனே வடக்குக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு கை தூக்கிய செல்வம் எம்பி தமிழ் மக்களுக்கு தூரோகம் இழைத்துவிட்டதாகவும் விந்தன் குற்றம் சாட்டினார்.
மேலும் விந்தன் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தை பயன்படுத்தி தேர்தல் அரசியலுக்காக பத்து கோடி வரை பிரபல தென்னிந்திய பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சுபாஸ்கரனிடமிருந்து பெற்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். ரெலோவால் வெளியேற்றப்பட்ட விந்தன் கோபத்தில் கட்சியின் உள் இரகசியங்களை எல்லாம் பகிரங்கப்படுத்துகிறார் என ரெலோ வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவதாக கூறப்படுகிறது.